in ,

திடீர் பிரயாணம் (சிறுகதை) – சுஶ்ரீ

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

நிஜமாப் பாத்தா எனக்கு ஒரு வேலையும் இல்லை கோயமுத்தூர்ல, வீட்ல பெரிய பில்ட்அப்லாம் கொடுத்துட்டு ஒரு டிராவல் பேக்கோட சென்ட்ரல் ஸ்டேஷன் கிளம்பினேன்.

புதுசா நம்ம பிரதம மந்திரி ஆரம்பிச்சு வச்சாரே வந்தேபாரத்னு அதிநவீன டிரெயின் அது எப்படி இருக்குனு பாக்க ஒரு ஆசை. எப்படியோ ரெயில்வேல வேலை பாக்கற வெங்கச்சுவைப் பிடிச்சு ஒரு டிக்கட் வாங்கியாச்சு.

சென்ட்ரல் ஸ்டேஷன் எப்பவும் போல, ஏன் கொஞ்சம் கூடவே இன்னிக்கு கலகலப்பா தெரிஞ்சது. 2A நடைமேடைல வெளிநாட்டு புல்லட் டிரெயினுக்கு கொஞ்சமும் கம்மி இல்லாத கலப்படமற்ற இந்தியத் தயாரிப்பான பளபள ரெயி் துடிப்போட காத்திருந்தது புறப்பட.

என்னோடது சி-4 கோச் 14ம் நம்பர் சீட். ஜன்னல் ஓரம் 13ம் நம்பர்ல ஏற்கனவே இருந்த முதியவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு என் பேக்கை மேலே போட்டுவிட்டு 14ல உக்காந்தேன், சும்மா சொல்லக் கூடாது யூரோப்ல உள்ள EURAIL மாதிரி வடிவமைத்திருந்தார்கள்.

ரெயிலின் அழகை ரசித்து முடிப்பதற்குள் செக்சியாக குரல் கொடுத்த வண்ணம் ரெயில் புறப்பட்டது. ஜன்னலுக்கு வெளியே மரங்கள், கம்பங்கள், கட்டிடங்கள் பாக்கறதுக்கு முன்னால பறந்து போச்சு.

கண்ணை மூடி அந்த வேகத்தை ரசிக்கறப்பவே மொபைல் ஃபோனோட சத்தம் கர்ணகடூரமா, நான் முகத்தை சுளித்துக் கொண்டு 13ம் நம்பர் பெரியவரைப் பாத்தேன். அவர் வாயைத் திறக்காமல் ஒருவிதமாய் பேசியது வினோதமா இருந்தது.

என்ன சொல்றீங்கனு கொஞ்சம் பலமாவே கேட்டேன். ஒரு விரலை நீட்டி உங்க ஃபோன்தான்னார். அவசரமா என் ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்ல இருந்து எதையும் எடுக்க முடியாது, எழுந்து டிரெயின் வேகத்துல தடுமாறி ஒரு வழியா ஃபோனை எடுத்தா ஏதோ ஒரு நம்பர் பிடிவாதமாய் கூப்பிட்டது.

தயக்கத்தோட தான் எடுத்தேன் ஒரு இனிமையான குரல். குரலை வச்சு வயசை கணிச்சா ஒரு 27 இல்லை 28க்குள்ளேதான். எஸ்னு கொஞ்சம் இழுத்து ஸ்டைலா சொன்னேன்.

“சார் நான் உங்க ஃபேஸ்புக் ஸ்நேகிதி சங்கமித்திரை.”

நான் யாரு நட்பு விருப்பம் அனுப்பினாலும் கண்ணை மூடிட்டு ஒத்துக்கற ரகம். அதுவும் பெண்கள் அனுப்பினா …என்ன சொல்ல வந்தேன்னா இந்த சங்கமித்திரை பேர் கேட்ட ஞாபகம் கூட இல்லை.

“ஓ அப்படியா நல்லா இருக்கீங்களா”

“ஆமாம் சார் நல்லா இருக்கேன், உங்க புரொஃபைல் பிக்சர் பாத்தேன், அம்சமா இருக்கீக”

“அது ரொம்ப பழைய ஃபோட்டோ ஹிஹி” ஒரு பொண்ணு வாயால இதெல்லாம் கேட்டா ஒரு திரில்தானே.

டப்னு ஒரு ஃபோட்டோ ஸ்கிரீன்ல வந்தது, ”இது போன மாசம் ஊட்டில எடுத்தது, நல்லா இருக்கா?”

நிஜமாவே நல்லாதான் இருந்தாங்க, கொஞ்சம் நாட்டுக்கட்டை ஆனாலும் செம ஃபிகர்.

“அழகாய் இருக்கீங்க, பழைய தமிழ் நடிகை கனகா மாதிரி”

“ஐய்யே ரொம்பப் புகழாதீங்க வெக்கமா இருக்கு”

பக்கத்துல இருந்த பெரியவர் என்னை ஒரு மாதிரியா பாத்தார்.

இப்ப என்னைப் பத்தி கொஞ்சம் சொல்லிடறேன், நான் ரிடயராகி இப்ப கதை கிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டேன். எனக்கும் ரசிகைகள், ரசிகைகள், மேலும் ரசிகைகள் இருக்காங்க (வயசு 65க்கும் மேலே, இதை என் ரசிகைகளுக்கு சொல்ல வேண்டாம்). மனைவி மக்கள் உண்டு.

நான் 13ம் நம்பர் பெரியவரைப் பாத்து என் சிஸ்டர்னேன். அவர் நம்பின மாதிரித் தெரியலை. முகத்தை வேறு பக்கம் திரும்பிண்டார். சங்கமித்திரை மீண்டும் என் சாம்சங்கில் சம்சரித்தாள்.

“என்ன ஒண்ணுமே பேச மாட்டேன்றீக”

“இல்லை முன் பின் தெரியாத பெண்கள்கிட்ட பேசிப் பழக்கமில்லை அதுதான்”

பெரியவர் நான் பேசறதைக் கேக்கறார் தெரியறது, கேக்கட்டுமே எனக்கு என்ன பயம்.

“நான் மத்த பெண்கள் மாதிரி இல்லை எனக்கு பிடிச்சாதான் பேசுவேன், நான் டைவர்சி, நான் என் அம்மா கூடதான் இருக்கேன் குழந்தைங்க இல்லை தனிதான், இங்கே ஈரோட் ஜங்ஷன் பக்கத்துல சுஸ்மிதா கார்மென்ட்ஸ்ல வேலை பாக்கறேன். சம்பளம் ஜாஸ்தி இல்லை.”

”சரி”

“பாக்க சுமாரா இருந்தாலும் உண்மையா இருப்பேன்”

”சரி”

“என்ன கதையா சொல்றேன், சரி சரிண்டு. வெக்கத்தை விட்டு சொல்றேன் புரியையோ”

“அம்மா சங்கு மாத்திரை, எனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருக்கு”

“அதனால என்ன ஆச்சாம் தாலியா கட்டச் சொல்லுதாக, சரின்னு சொல்லுவீகளா இம்புட்டு யோசிக்கறீக. ஈரோட் பக்கம் வருவீகளா? நம்மது சிறுசா இருந்தாலும் டீசன்டான வீடு, அம்மா கிழவி மட்டும்தான், தொந்தரவு இருக்காது.”

வந்தேபாரத் சேலம் ஜங்ஷனில் பெருமூச்சு விட்டு நின்றது. அந்த சங்கு இன்னும் ஃபோன்ல ஊதிட்டுதான் இருந்தது. நானும் சாதாரண ஆம்பிளைதானே சபலம் தட்டாதா. அடுத்து ஈரோட் ஜங்ஷன்தான் வரப் போகுது.

சங்கு, ”சரி ஈரோட் வந்தா வாங்க பாப்போம் பிடிச்சிருந்தா மேற்கொண்டு எல்லாம் சரியா? நான் வைக்கட்டா யாரோ கஸ்டமர் வாராக”

13ம் நம்பர் பெரியவர் என்னை ஆர்வமாய் பாத்தார், கிழம் நல்லா ஒட்டுக் கேக்கும் போல, கோயமுத்தூர்தானேனு கேட்டார்.

”ஆமாம் அதுக்கென்ன?”

“இல்லை ஈரோட் இன்னும் 15 நிமிஷத்துல வந்துடும், உங்க சிஸ்டர்னு இழுத்தார்” குரல்ல ஒரு கிண்டல் தெரிந்தது. நான் அவரை முறைத்துப் பாத்தேன்.

ரெயிலின் ஒலி பெருக்கி அடுத்து ஈரோட் வருவதை வேணும்னே ஆங்கிலத்துலயும் தமிழ்லயும் மாறி மாறி சொல்லி என்னை சோதித்தது.

ஆனதாகட்டும் பாத்துடுவோம், படபடக்கும் இதயத்துடன் என் பேக்கை மேல இருந்து வாரிக் கொண்டு எழுந்தேன். ஈரோட் பிளாட்பாரம் வந்து டிரெயின் கதவு திறந்து முழுசும் நிக்கறதுக்குள்ளே அவசரமா இறங்கி தடுமாறி நின்றேன்.

கொஞ்ச நேரம் நடைமேடை ஸ்டீல் பெஞ்சில உக்காந்து அசுவாசப்படுத்திக் கொண்டேன். இது நாள் வரை தடுமாறாத மனசு இன்னிக்கு ஏன் இப்படி.

மெதுவா எழுந்திருந்து வெளியே வந்தேன், என் இதயம் வேகமா துடிக்கறதை வெளில இப்ப எல்லாரும் கேப்பாங்களோனு தோணிச்சு. இதோ எதிர்ல தெரிஞ்சது சுஸ்மிதா கார்மென்ட்ஸ்.

ரோடை கிராஸ் பண்ண முடியாம திடீர்னு கால் கனமான மாதிரி இருந்தது. பக்கத்து டீக்கடைல ஒரு மசால் வடை சாப்டுட்டு டீ குடிச்சேன். கண் மட்டும் எதிர்ல இருந்த அந்த கார்மென்ட் கடை மேல. தைரியத்தையெல்லாம் திரட்டிண்டு ரோடை கிராஸ் பண்ணி அந்த கடைல நுழைஞ்சிட்டேன்.

ஒரு சேல்ஸ் கேர்ல் வாங்க சார் ஷர்ட் பேன்ட் முதல் மாடி, அன்டர் கார்மென்ட்ஸ் ரெண்டாவது மாடின்னா. அவ நம்ம சங்கு இல்லை.

நான் ஒண்ணும் சொல்லாம மேலே நடந்தேன், அதோ அங்கே கலர் கலரா டவல் துணிகள் பக்கத்துல சங்கேதான், எனக்கு முதுகைக் காட்டிண்டு ஃபோன்ல பேசிட்டிருக்கா. பக்கத்துல போனேன் அவளோட குலோப்ஜாமூன் குரல் இனிமையாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தது.

எதிர்பக்கம் யாரோ தெரியலை. “நான் மத்த பெண்கள் மாதிரி இல்லை எனக்கு பிடிச்சாதான் பேசுவேன், நான் டைவர்சி, நான் என் அம்மா கூடதான் இருக்கேன் குழந்தைங்க இல்லை தனிதான், இங்கே ஈரோட் ஜங்ஷன் எதிர்ல சுஸ்மிதா கார்மென்ட்ஸ்ல வேலை பாக்கறேன். சம்பளம் ஜாஸ்தி இல்லை. தனி வீடு அம்மா கிழவியும் நானும்தான் சரி சொல்லுங்க”

அதிர்ந்து போன நான் படுவேகமா வெளியேறினேன். சென்னைக்கு அடுத்த ரயில் எப்ப?

எழுத்தாளர் சுஸ்ரீ எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பேசா மடந்தை (சிறுகதை) – சுஶ்ரீ

    தோழா…தோழா.. (சிறுகதை) – கோவை தீரா