in , ,

வாராயோ வெண்ணிலாவே (பாகம் 1) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

காலை வேளை. மருதமலையின் முகடுகளை முட்டியபடி வெண்மேகங்கள் வானில்  அலைஅலையாய்  தவழ்ந்து கொண்டிருந்தது.

வடவள்ளியே கோவை நகரிலிருந்து தூரம் என்ற நிலை மாறி, மருதமலையின் அடிவாரம் வரை குடியிருப்புகள் ஆகி விட்டதால் மலையிலிருக்கும் யானைகளும், காட்டுப்பன்றிகளும், மயில்களும் ஊருக்குள் அவ்வப்போது வந்து போவது சகஜமாகியிருந்தது.

காலை நேரமென்பதால் ஆங்கங்கே மயில்களின் அகவல் இனிமையாக கேட்டுக் கொண்டிருந்தது. சில்லென்று பனித்துளி  முகத்திலடித்துச் செல்வது போல ஈரப்பதம் கலந்த காற்றடித்துக் கொண்டிருக்க, தலைக்கு குளித்த கையோடு தலைக்கட்டை அவிழ்த்தபடியே  மொட்டை மாடிக்கு வந்த மைதிலி, ஈரழைத் துண்டை உதறி கம்பியில் உலர்த்திவிட்டு கூந்தலின் நுனியை முடிந்தவள் இரு கரம் கூப்பியபடி மருதமலையைப் பார்த்தவாறே “ஆண்டவா, முருகா…..எல்லாரும் நன்னாயிருக்கணும். காப்பாத்துப்பா” என்று  கடவுளை வேண்டிக்கொண்டு  கைகளை கன்னத்தில் போட்டுக் கொண்டு அன்றைய நாளை இனிதே ஆரம்பித்தபடி கீழே வந்தாள்.

சமையலறையிலிருந்து  பால் பாத்திரத்தை எடுத்து வந்து வாசல் சுற்றுச்சுவரின் மீது வைத்து விட்டு வெள்ளிக்கிழமை மணக்கோலத்தைப் போட்டவள், வாசன் கதவில் சொருகி வைத்திருந்த தினசரி நாளிதழை எடுத்துக்கொண்டு வந்து  ஹால் டீபாயின் மீது வைத்து விட்டு சமையல் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

வாக்கிங் ஸ்டிக்குடன் தன் நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு வந்த கணவன் ரகு பால்கனியில் உட்கார, ‘எந்த ராஜா எந்த பட்டணத்துக்குப் போனாலும் இவரோட வேலை மட்டும் குறையில்லாம நடக்கணும். எப்படித் தானோ?’ என்று மனதில் நினைத்துக் கொண்டே கலந்த முதல் டிகாக்க்ஷன் காஃபியைக் கையில் கொண்டு வந்து கொடுத்தாள் மைதிலி.

எதுவும் பேசாமல் கையில் காஃபியை வாங்கிக் கொண்ட ரகு, கையிலிருந்த நாளிதழ் செய்திகளுக்குள் மூழ்கிப் போனான்.

“பெரியவனுக்கு  இன்னைக்கு பரிட்சை. சின்னவன் ட்யூஷன் கிளம்பணும். பொண்ணு காலேஜூக்கு போகணும்-ங்கற எந்த சிந்தனையும் இல்லாமல் இவரை மாதிரி ஒரு பத்து நிமிஷம் என்னால உட்கார முடியறதா? ம்‌….. எல்லாத்துக்கும் ரொணம்(யோகம்) வேணும்’ என்று தனக்குத் தானே முனகிக் கொண்டே திரும்பியவளிடம்

‘நீயும் தான் பத்து நிமிஷம் பேப்பரைப் படிக்கலாமே?” என்றான் ரகு.

“காலங்காத்தால பேப்பரை படிச்சுட்டு இருந்தா என்ன காரியம் ஆகும்?” என்றவளிடம்

“பொம்மனாட்டிகள் வாழ்க்கைல எட்டு வருஷத்தை சமையலறையிலயே தான் கழிக்கறேளாம். ஆராய்ச்சியே சொல்றது” என்றான் ரகு.

“ஆமாமா. உண்மைதான். அந்த ஆராய்ச்சி பண்ணினவரும் அவர் பொண்டாட்டி கைல சாப்ட்டூட்டு  தான் அந்த ஆராய்ச்சியைப் பண்ணீண்டு இருப்பார். அங்க போய்க் கேட்டா தான, அந்த பொண்ணோட கஷ்டம் தெரியும்” என்றவள்,

“பட்டனைத் தட்டினா சாதம் தட்டுல  வந்து தானா விழற மாதிரி எதாவது டெக்னாலஜி இருந்தா தேவல. அப்பறம் நிம்மதியா நானும் தேமேன்னு இங்கயே உங்களோட உட்கார்ந்துண்டு இருப்பேன்” என்றாள்.

“அதுவும் வந்துடும். எல்லாம் இன்னும் கொஞ்ச காலம் தான். வரப்போற காலத்துல கிச்சன்’ங்கற கான்செப்ட்டே இருக்கப் போறதில்ல. எல்லாம் கம்யூனிட்டி ஃபுட் தான். யாரும் சமைக்க வேண்டாம். அபார்ட்மெண்ட்-லயே சாப்பிடறதுக்குன்னு பொதுவா ஒரு பெரிய அறை இருக்கும்.  சமைக்கறவா அங்கயே  இருப்பா. மூணுவேளையும் டிபன், சாப்பாடு, காஃபி, டீனு எல்லாம் தயாரா மேஜை மேல இருக்கும். அவா அவா நேரத்துக்கு  வேணுங்கறத அங்கயே  போய் எடுத்து சாப்பிட்டுக்க வேண்டியது தான்” என்றார் ரகு.

“நல்லது தான். அப்ப, இந்த காலத்து பொண்ணுகளுக்கும்  சௌரிகயம் தான். எங்களை மாதிரி சமையலறைக்கு உள்ளயே அடைஞ்சு கிடக்கணும்னு அவசியமில்லாம, நன்னா வேலை செஞ்சு கை நெறைய நாலு காசு சம்பாதிக்கலாமே” என்றவள்,

“என்ன  ஒன்னு, ஊட்டறதுக்கு தான் மிஷின் இன்னும் கண்டுபிடிக்கல. போற போக்கைப் பார்த்தா அதுவும் வந்துடும் போல இருக்கு. கம்ப்யூட்டர்ல வேலை செஞ்சுண்டே  ஊட்டற மிஷினுக்கு ஒரு மெசேஜைத் தட்டிவிட்டா, அந்த மிஷினே  அம்மா ஊட்டற மாதிரி ஒவ்வொரு வாயா அழகா ஊட்டி விட்டுடுமோ என்னவோ? அப்படி வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல. எது எப்படியிருந்தாலும் ஏகாதசி, துவாதசி, அமாவாசைனு என்னை மாதிரி வெளிய சாப்படாம இருக்கறவாளுக்கு தான் பாடா இருக்கப் போறது” என்று  விடாப்பிடியாகப் பேசியவளை

“காலங்காத்தால ஆரம்பிச்சுட்டயாம்மா. அப்பா ஒன்னு சொன்னா, நீ ஒன்னு சொல்லணும்னே கங்கணம் கட்டீண்டு இருப்பயா? கொஞ்சம் பேசாம உன் வேலையைத் தான் பாரேன்” என்றான் கார்த்திக்.

“கல்யாணமானதுலருந்து வாயை மூடீண்டு தான்டா இருக்கேன். எங்கிட்ட தான் உங்க அப்பா உட்கார்ந்து பேசறது கூட இல்லயே. சரி.  உங்ககிட்டயாவது உட்கார்ந்து நாலு வார்த்தை நன்னா பேசுவாராக்கும்னு பார்த்தா அதுவுமில்ல. ஸ்கூல் எப்படி போறது, உங்க ப்ரெண்ஸ் எப்படி இருக்கான்னு எதாவது கேக்கலாமே. அதுவுமில்ல. ஆனா, எங்கிட்ட நன்னா விதண்டாவாதம்  மட்டும் பேசத்தெரியும். எப்பவும் காலைல பேப்பர், நேரத்துக்கு சாப்பாடு, ஆஃபீஸ், சாயங்காலம் வந்தா தன்னோட ரூம்ல புத்தகத்தைக் படிக்கறதுன்னு இப்படியே இருந்தா எப்படி சொல்லு?” என்றவளிடம்,

“அது தான் நீ ஒருத்தியா எங்க மூணு பேரையும் சமாளிக்கறயே. அது போதாதா” என்றான்.

“அது தான…. எத்தனை இருந்தாலும் நீ உங்க அப்பா பக்கம் தான நிப்ப. ஒன்னும் பண்ண முடியாது. அதே ரத்தம். சரி, சரி…. ரஞ்சு காலேஜுக்கு கிளம்பீட்டா. அவளை சித்த பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு வந்ததுக்கப்பறம் அண்ணாவும்,  தம்பியுமா சாப்ட்டூட்டு ஸ்கூலுக்கு போவேளாம்” என்றாள் மைதிலி.

ராமர் பச்சை நிறத்தில் புடவையும், ஊதா நிற ப்ளவுஸூம் போட்டுக் கொண்டு, வீட்டில் பூத்திருந்த செண்பகப்பூ நான்கினை சேர்ந்தாற் போல தொடுத்து அழகாய்ப் பின்னிய  கூந்தலின் நடுவே வைத்துக் கொண்டு நெற்றியில் சந்தனமும், அழகாய் அளவில் சிறிதாய் வட்டமான சாந்துப் பொட்டுடன் சிலையாய் வந்து நின்றாள் ரஞ்சனி.

“கிளம்பீட்டயா ரஞ்சு. இந்த டிரஸ்ல எத்தனை லட்சணமா இருக்க தெரியுமா?. எங்கண்ணே பட்டுடும் போல இருக்கு. இந்த வருஷத்தோட உன்னோட எம்.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி படிப்பும் முடியப் போறது. ஆனா, உன்னைப் பத்தி உங்க அப்பா யோசிக்கற மாதிரியே தெரியலயே ரஞ்சு” என்று மைதிலி புலம்ப ஆரம்பிக்க

“காலங்காத்தால இந்த பேச்சு உனக்கு ரொம்ப அவசியமாம்மா? உங்க ரெண்டு பேருக்கும் எப்பவுமே தீராது. என்னவோ பண்ணுங்க. எனக்கு பஸ்ஸூக்கு நேரமாச்சு. முதல்ல என் டிபன் பாக்ஸைக் குடு. ஏழரை மணி பஸ்ஸை விட்டுட்டா அப்பறம் அடுத்த பஸ்ஸூக்கு அரைமணி காத்துண்டு கால் கடுக்க நிக்கணும். அப்பறம் காலேஜுக்கு லேட்டாயிடும்” என்றவள் மைதிலி கொடுத்த இரண்டு தோசையை அரக்க பரக்க சாப்பிட்டுவிட்டு மதியத்துக்கு  வாங்கிக் கொண்டவள் அரக்கபரக்கக் கிளம்பினாள்.

“அம்மா, வீட்டுக்கு வந்தவுடனேயே ஸ்கூலுக்கு கிளம்பணும். முதல் பிரியர்டே எனக்கு டெஸ்ட்  இருக்கு. அதனால, கிருஷ்ணாவை சீக்கிரமே கிளம்பச் சொல்லு” என்ற  கார்த்திக் சைக்கிளில் ரஞ்சனியைப்  பேருந்து நிறுத்தத்தில்  விட்டு வரச் சென்றான்.

“கிருஷ்ணா, சீக்கிரம் குளிச்சிட்டு வாடா. கார்த்திக்கு இன்னைக்கு முதல் பிரியர்ட்டே டெஸ்ட் இருக்குன்னு வேற சொன்னான்” என்று குளித்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவுக்கு   அம்மா குரல் கொடுக்க

“எப்படியும் அறுபது மார்க் தான் வாங்கப் போறான். என்னவோ பெருசா நூறு மார்க் வாங்கற மாதிரி. வரேன் வரேன்” என்று அனாயாசமாக  உள்ளிருந்தே பதிலளித்தான் கிருஷ்ணா.

“தேவையில்லாம  பேசாதடா கிருஷ்ணா.  அடுத்தவனை சொல்றதுக்கு முன்ன நீ முதல்ல ஒழுங்கா ஸ்கூலுக்குப் போய் முன்னேற வழியைப் பாரு” என்று சிறிது கோபத்துடன் சொன்னார்  ரகு.

“நீங்க பையனை எதுவும் சொல்லாதீங்கோ. அவன் ஏதோ விளையாட்டா சொல்றான். அதைப் போய் பெருசா எடுத்துண்டு” என்றவளிடம்

“எல்லாமே விளையாட்டுன்னு எடுத்துக்காத. நீ சின்னவனுக்கு ரொம்ப செல்லம் குடுக்குற. நல்லதுக்கில்ல. வெறும்படிப்பு மட்டும் வாழ்க்கையில்ல. நீயே ஒருநாள் புரிஞ்சுப்ப” என்றார் ரகு.

குளியலறையில் இருந்து வெளியே வந்த கிருஷ்ணா அப்பாவிடம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகச் சென்றான்.

‘போதும். போதும். பொறுப்பு வர காலத்துல வரட்டும். ரொம்ப பொறுப்பான பையன்னு எங்கப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சு மட்டும் நான் என்ன சுகத்தைக் கண்டேன்’ என்று  தன் வாழ்க்கையையே நினைத்துப் பார்த்துக் கொண்டாள் மைதிலி.

ரகு கோவையில் ஒரு பிரபலமான மில்லில் கணக்காளராக வேலை செய்து வந்தார். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் குணம் கொண்டிருப்பவர், வீட்டில் மனைவி குழந்தைகளிடம் அதிகம் பேச மாட்டார்.

கலகலப்புக்கு கொஞ்சமும் குறைவில்லாத மைதிலிக்கு நேரெதிர் குணம் கொண்ட கணவன் ரகுவை நினைத்து திருமணமான புதிதில் மைதிலி நிறைய முறை வருத்தப்பட்டதுண்டு.

நான்கு அண்ணன் தம்பிக்களுக்கு இடையே ஒரே செல்லப் பெண்ணாக வளைய வந்த மைதிலிக்கு, புகுந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு ஆதரவு அவள் மாமியார் தான்.

“என்ன பண்றது மைதிலி. குழந்தைங்க அவாஅவா தாத்தா, மாமா, அத்தை குணத்தைக் கொண்டு வரும்னு சொல்லுவா. உங்க மாமனார் கலகல பேர்வழி. ஆனா, ரகு என்னோட மாமனார் குணத்தைக் கொண்டிருக்கான். சின்ன வயசுல இருந்தே யார்கிட்டேயும் அதிகம் பேச மாட்டான். வீட்டுக்கு யாராவது வந்தாக் கூட வாங்கோன்னு ஒரு வார்த்தை சொல்றதோட சரி. நானும் சொல்லி சளைச்சாச்சு. அப்பறம் அவாஅவா பிறவிகுணம்னு ஒன்னு இருக்குமே. அதை யாரால மாத்த முடியும் சொல்லு. நீதான் அவனை புரிஞ்சு நடந்துக்கணும்” என்பாள் மாமியார் செல்லம்மா.

இப்படித்தான் தலைதீபாவளிக்கு தன் பிறந்த வீட்டுக்குக் கூட்டிப் போக வேண்டும். தனக்காக கணவன் ஒரு பட்டுப் புடவை வாங்கித் தரவேண்டும் என்று ஆசை ஆசையாகக் காத்திருந்தாள் மைதிலி.

ஆனால், தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்காததால் நேரம் கிடைக்கும் போது ஊருக்குப் போகலாம் என்று மைதிலியிடம் சமாதானம் சொன்ன ரகு, அம்மாவிற்கும்,  மைதிலிக்கும்,  தன் தங்கை கல்யாணிக்குமென மூன்று காட்டன் புடவைகளை வாங்கிக் கொண்டு வந்து மைதிலியிடம் கொடுத்தான்.

ஆசை ஆசையாக பைகளை வாங்கிப் பிரித்தவள் உள்ளே இருந்த காட்டன் புடவைகளைப் பார்த்ததும் பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி அதை  அப்படியே தன் மாமியாரிடம் கொடுத்துவிட்டு உள்ளே  சென்று விட்டாள்.

சூழ்நிலையைப் புரிந்து கொண்ட செல்லம்மா, “ஏண்டா ரகு, உனக்கு கொஞ்சமாணும் இருக்கா. இது உன் தலை தீபாவளி. எனக்கு எதுக்கு புதுப்புடவை? உன் பொண்டாட்டிக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துத் தரணும்னு தோணலையா உனக்கு. அதுவுமில்லா அவ பொறந்தாத்துக்கு போகணும்னு அவளுக்கும் ஆசை இருக்காதா. ஆஃபீஸ் வேலையைக் காரணம் காட்டிப் போகலண்ணா உன் மாமனார் மாமியார் வீட்டுல உன்னை என்ன நினைப்பான்னு கொஞ்சமானும் யோசிச்சுப் பார்த்தயா. மச்சினன்மார் என்ன நெனைப்பா? இந்த சொந்தமெல்லாம் காலம்பூரா நம்மோட வரப்போற பந்தம்டா. கொஞ்சம் அவ  இடத்துல இருந்தும் யோசிச்சு பாரு” என்றாள்.

“எதுவும் தெரியாம இல்லம்மா. வீட்டுல கல்யாணியை வச்சுண்டு மைதிலிக்கு மட்டும் பட்டுப்புடவை எடுத்தா நன்னா இருக்குமா? நீயே கேக்கலண்ணாலும் உனக்கு ஒரு புதுப்புடவை எடுக்காம இருப்பேனா? எனக்கு உண்மையாவே ஆஃபீஸ்ல வேலை அதிகமா இருக்கும்மா. நேத்து சாயங்காலம் தான் வேலை பண்றவாளுக்கு போனஸ் குடுக்க பேங்க்லருந்து பணம் எடுத்துண்டு வந்தது. இப்ப வரைக்கும் பணத்தை பட்டுவாடா பண்ணீட்டு தான் வரேன். அவாளும் தீபாவளி கொண்டாட வேண்டாமா? மீதிப் பணத்தை நாளைக்கு பட்டுவாடா பண்ணச் சொல்லி நாளைக்கு மட்டும் ஒரு நாள் லீவு போட்டுட்டு வந்துருக்கேன். இதுக்கு மேல என்னைப் புரிஞ்சுக்கறவா புரிஞ்சுக்கட்டும். புரியாதவாளப் பத்தி நான் கவலைப்படப் போறதில்ல” என்றான் ரகு.

ரகுவின் பேச்சில் இருந்த நியாயம் செல்லம்மாவுக்குப் புரிந்தது. ஆனால் பதிமூன்று வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட மைதிலிக்குப் புரிய வாய்ப்பில்லை என்பதையும் புரிந்து கொண்டவள் எதுவும் பேசாமல் அமைதியானாள்.

மைதிலியின் பதினேழு வயதில் முப்பது வயதுடைய ரகுவிற்கு திருமணமானது. திருமணமான புதிதில் தாம்பத்தியத்தில் நாட்டமில்லாமலும், விளையாட்டுத்தனமாகவும் இருந்த மைதிலி மீது, ரகுவிற்கு முதலில் கோபமே வந்தது. பிறகு அவளின் வயதிற்கே உண்டான விளையாட்டுத்தனத்தில் இருக்கிறாள் என புரிந்து கொண்டான் ரகு.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தொடர்ந்து வரும் நிழல் (சிறுகதை) – மலர் மைந்தன், கல்பாக்கம்

    அரூபன் (பயணம் 3) – சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு