எழுத்தாளர் விடியல் மா.சக்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“வாழ்க்கையின் நெருக்கடி ஒரு மனிதனை எந்த எல்லைக்கெல்லாம் தள்ளுது பாத்தீங்களா சாமி” என்று மிக விரக்தியுடன் சொல்லிக் கொண்டிருந்தான் நிரஞ்சன். அதைக் கேட்டுவிட்டு கண்களை மூடியபடி இருந்த கலேந்திரசாமி,
“நிரஞ்சன், கவலப்படாத எதாச்சும் நல்ல வழி பொறக்கும்” என்று அழுத்தமாகச் சொன்னார்.
சாமி என்று நிரஞ்சனால் அழைக்கப்பட்ட அவர் சாமியார்களுக்கென்று நீண்ட தாடி, சடையான முடி என்ற வழக்கமான அடையாளங்களுடன் சாதாரணமாக இருந்தார். இடுப்பில் ஒரு காவி வேட்டி வெற்றுடம்புடன் கண்களில் ஒளிபொருந்திய தீட்சண்யத்துடன் இருந்தார்.
“அடப்போங்க சாமி, இந்த மாதிரி வசனமெல்லாம் பலதும் கேட்டாச்சு. அட்வைஸ் பண்றதுங்கறது இனிப்பு சாப்பிடற மாதிரி, ஆனா அதன்படி நடந்து காட்டறதுங்கறது பாவக்காய் சாப்பிடற மாதிரி”
“ஆமா நிரஞ்சன் நீ சொல்லறது சரிதான், அட்வைஸ் பண்றது இனிப்பு மாதிரிதான் ஆனா அதன்படி நடக்குறது பாவக்காய் மாதிரி கசப்புதான். இதுல ஒரு சூட்சுமம் இருக்கு, இனிப்பா சொல்லப்படுற அட்வைஸ் கேட்கறதுக்கு பாவக்காயா கசந்தாலும் உடம்புக்கு அதானே நல்லதுங்கறத புரிஞ்சுகிட்டா வாழ்க்கையை ஜெயிச்சுடலாமே”
“சாமி தத்துவமெல்லாம் நல்லாதான் சொல்றீங்க, ஆனா எனக்கு எதுவும் நல்லது நடக்குறதில்லையே சாமி எல்லாமே கெட்டதாதான நடக்குது”
“நீ எத கெட்டதுனு சொல்ற? “
“என்ன சாமி இப்படி ஒரு கேள்வி எனக்கு எப்ப நல்லது நடந்துச்சுங்கிறீங்க? “
“நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலியே? “
“இப்ப நடந்துட்டு இருக்கிற எல்லாத்தையுந்தான் சொல்றேன்”
“அப்படீனா? “
“சாமி நடக்குற எல்லாத்தையுந்தான் சொல்றேன். இப்ப பாருங்க நேத்து வரைக்கும் நான்தான் மேனேஜர் ஆகப்போறேன்னு நம்பிட்டு இருந்தேன், ஆனா வேற ஒருத்தனுக்கு அது கெடைச்சுருக்கு. இது போலத்தான் எல்லா விஷயங்களிலும் எனக்கு நல்லது நடக்கிறதில்லையே”
“அதுக்கு எதாச்சும் காரணம் இருக்கும் நிரஞ்சன். காரணம் இல்லாம இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நடக்கிறதில்லை”
“என்ன சாமி நீங்க பிரபஞ்சம், காரணம்னு சொல்றீங்க. எனக்கு இப்ப முப்பது வயசு முடியப் போகுது இந்த கம்பெனிக்கு வந்து ஆறு வருசம் ஆச்சு. நான் சேர்ந்த புதுசுல உற்பத்தி குறைவா இருந்துச்சு. வெறும் முப்பது டன் தான் இப்ப நூறு டன் உற்பத்திக்கு உயர்த்தி இருக்கேன். என்ன உபயோகம் சாமி, அதனால் தான் சாமி மனசு சரியில்லன்னு இங்க வந்தேன்…. ஒரே குழப்பமா இருக்கு சாமி. கடவுள்னு ஒருத்தன் இருக்கானாங்கற நம்பிக்கையே போச்சு சாமி” என்று புலம்பலுடன் கூறினான்.
கலேந்திரசாமி ஒரு பெரிய மூச்சை உதிர்த்து விட்டு, “நிரஞ்சன்!, இன்னும் ஒரு வாரத்தில் உன்னோட வாழ்க்கையே மாறப் போகுது அது தெரியாம இப்படி புலம்பாத எதையுமே நேர்மறையா சிந்திக்கக் கற்றுக் கொள்” என்று சொன்னார்.
“எப்படி சாமி நேர்மறையா எடுக்கறது. தோ நான் லவ் பண்ற பொண்ணு ப்ரியா, ஆனா அவ ஒரு பெரிய பணக்காரனோட மகள், அதுவே எனக்கு நேத்துதான் தெரியும். எவ்வளவு ஆசையோட இருந்தேன் தெரியுமா அவளைக் கல்யாணம் செய்து நல்லபடியா வாழனுன்னு, ஆனா அவ ஒரு பெரிய பணக்காரனோட பொண்ணுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் பயமா இருக்கு சாமி. அவளை எப்படி நல்லபடியா வாழவைக்கப் போறோம்னு ”
“உன்னோட நல்ல மனசுக்கு நீ நெனைக்கிறபடியே நடக்கும் நிரஞ்சன் தைரியமா போய்ட்டு வா ” என்று கலேந்திரசாமி சூசகமாக கூறினார்.
“என்னமோ சாமி நான் வர்றேன்” என்று கூறிவிட்டு கலேந்திரசாமியுடன் விடைப்பெற்றுக் கொண்டு குழப்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டான் நிரஞ்சன். கலேந்திரசாமி ஒரு மர்மமான புன்னகையுடன் அவன் போவதையே பார்த்தார்.
ஒரு வாரம் கழிந்திருந்தது ஞாயிறு என்பதால் அன்றைய நாள் காலை மணி எட்டு ஆகியும் எழாமல் படுத்து உறங்கிக் கொண்டிருந்த நிரஞ்சனை தட்டி எழுப்பினாள் அவனது அம்மா சரசுவதி.
“டேய் தம்பி எழுந்திருடா உன்னோட ஆபிஸிலிருந்து போன் வந்திருக்கு” என்று சொன்னதும் உடனடியாக கைப்பேசியை வாங்கி பேசினான்.
அடுத்த பதினைந்து நிமிடங்களில் காலைக்கடனை முடித்து, குளித்து நீட்டாக புறப்பட்டுச் சென்றான். ‘முதலாளி எதுக்கு வரச்சொல்லி இருப்பாரு, ம்ம்… அதுவும் ஆபீஸ்க்கு வரச் சொல்லாம பக்கத்துல இருக்குற ஒரு சாதாரண ஓட்டலுக்கு வரச் சொல்லியிருக்காறே என்ன சொல்லப் போறாரோ தெரியல போய் பார்ப்போம்’ என்று போகும் வழியில் தனது மனதிற்குள் ஆலோசித்தபடியே அவர் சொன்ன ஓட்டல் முன்னாடி தனது டூவீலரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான். ஓட்டல் முகப்பில்
‘சரசுவதி’ என்ற பெயர் பலகையைப் பார்த்தபடியே உள்ளே நுழைந்து சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கே உள்ள கடைசி டேபிளில் அவனது முதலாளியான அடைக்கலம் அமர்ந்திருந்தார்.
“சார் வணக்கம் … என்ன சார் விசயம், இங்க வரச்சொல்லி இருக்கீங்க? ஆபீசிலயே பேசி இருக்கலாமே சார்” என்று பணிவாகக் கேட்டான்.
“இது ஆபீஸ்ல பேசற விசயம் இல்லியே நிரஞ்சன், அதான் இங்க வரச்சொன்னேன். சரி உட்காருங்க ஏன் நிக்கிறீங்க” என்றார் அவனது முதலாளியான அடைக்கலம்.
“இல்ல சார் பரவாயில்லை”
“அட உட்காருங்க நிரஞ்சன்” என்று அவர் வலியுறுத்திச் சொல்லவும் தயங்கியபடி எதிராக உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.
“நிரஞ்சன் நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, நேரிடையாவே விசயத்துக்கு வர்றேன்”
“சொல்லுங்க சார் ” என்ற நிரஞ்சனுக்கு அவர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற பதட்டம் நிறைந்திருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான். அவன் இதயம் எதிர்பார்ப்புடன் துடித்தது. அவனது முதலாளியான அடைக்கலம் தீவிரமான முகபாவத்துடன் அவனைப் பார்த்தார்.
“நிரஞ்சன், கடந்த ஆறு வருடங்களா நீங்க கடினமா உழைத்து வர்றீங்க என்பது எனக்குத் தெரியும், நிறுவனத்திற்கு உங்கள் பங்களிப்பு கவனிக்கப்படாம போகல்லை. நீங்க கம்பெனிக்கு வரும் போது இருந்த 30 டன் உற்பத்தியை 100 டன்களாக உயர்த்தியுள்ளீர்கள், அது சிறிய சாதனையல்ல.”
நிரஞ்சனின் பதட்டம் கலைய ஆரம்பித்தது, அதற்கு பதிலாக பெருமை மற்றும் சாதனை உணர்வு வந்தது.
“ஆனா, நிரஞ்சன்.. ” என்று அவர் முற்றுப்புள்ளி வைக்கவே நிரஞ்சனுக்கு மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டது.
“அப்படி இருந்தும் மேனேஜர் பதவியை உங்களுக்கு கொடுக்காம புதுசா வந்த பார்தீபனுக்கு கொடுத்தது உங்களுக்கு வருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன்”
“இல்ல… இல்… இல்ல சார் அப்படி எதுவும் இல்ல”
“நிரஞ்சன் பார்தீபன் என்னோட நண்பரோட பையன் அதனால அவனுக்கு மேனேஜர் பதவியை கொடுக்க வேண்டியதா போச்சு வேற வழி இல்ல” என்று கூறிவிட்டு அவர் நிரஞ்சனின் முகபாவனையை கூர்ந்து கவனித்தார்.
நிரஞ்சனின் முகத்தில் ஒரு நிராசை ஒளிந்து இருந்ததை அவர் கவனித்துக் கொண்டார். பிறகு மீண்டும் அவரே பேசலானார்,
“நிரஞ்சன், உங்களை இந்த நிறுவனத்தின் ‘நிர்வாக இயக்குநர்’ பதவிக்கு உயர்த்த முடிவு செய்துள்ளேன். உங்களுக்கு ஆட்சேபனை எதுவுமில்லையே” அவர் அவ்வாறு சொன்னவுடன்
நிரஞ்சனின் கண்கள் இன்ப அதிர்ச்சியில் விரிந்தன. அவன் கேட்டதை அவனால் நம்பவே முடியவில்லை.
“சார், இதை என்னால நம்பவே முடியல ஆனா அந்த பதவியில் நீங்….நீங்க இருக்கீங்களே” என்று அவன் கூறிவிட்டு தடுமாறினான்.
அடைக்கலம் சிரித்துக்கொண்டே நிரஞ்சனின் தோளில் கை வைத்தார்.
“இல்ல, நிரஞ்சன், இனிமே அந்தப்பதவியில் நான் இல்லை உங்களை நியமித்த பிறகு நான் ஓய்வெடுக்கப் போகிறேன். அதுமட்டுமல்ல நிரஞ்சன், நீங்க மட்டும் தான் அதற்குத் தகுதியானவர். இதை நீங்க பலமுறை நிரூபித்துள்ளீர்கள், மேலும் பெரிய பொறுப்புகளை ஏற்கும் திறன் உங்களுக்கு இருப்பதாக நான் நம்புகிறேன்”
நிரஞ்சனின் மனம் ஆகாயத்தில் உள்ள மேகத்தில் மிதப்பது போல் உணர்ந்தான். அவனுடைய சந்தேகங்கள் மற்றும் அச்சங்கள் அனைத்தும் அந்த நொடியில் கரைந்து போனது.
அப்போது சாமியார் காலேந்திரசுவாமியுடன் நடந்த உரையாடல் அவனது நினைவுக்கு வந்தன, ‘உன்னோட நல்ல மனசுக்கு நீ நினைத்தபடியே உன்னோட வாழ்க்கை மாறப் போகிறது’ என்ன ஒரு தீர்க்கதரிசனம்’ அந்த அதிசய நிகழ்வை அவனால் அப்பவும் நம்ப முடியவில்லை.
“நன்றி சார்” என்று சொன்ன நிரஞ்சன் குரலில் நன்றியுணர்வு நிரம்பியது,
“என்னை இவ்வளவு தூரம் நம்பியதற்கும் நன்றி”
அடடைக்கலம் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றார்,
“வெல்கம், நிரஞ்சன் நீங்க அதுக்கு தகுதியானவர். ம்ம்… பை தி பை நாளைக்கு இது சம்பந்தமா நம்ம அலுவலகத்தில் ஒரு சின்ன பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கேன். அங்க உங்களோட இந்த பதவி உயர்வைப் பற்றி அறிவிக்கப் போறேன். ஓகே உங்களோட புதிய பயணத்தைத் தொடங்குங்க வாழ்த்துகள்.” என்று சொல்லிவிட்டு நகர்ந்த அடைக்கலம் பின் மீண்டும் அவன் அருகில் வந்து அன்பான புன்னகையுடன் சொன்னார்,
“நிரஞ்சன், உங்களுக்கு இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு. அதை நாளைக்கு பார்ட்டியில் சொல்றேன் ஓகே ‘பை’ “
என்று கூறிவிட்டு அவர் வெளியே சென்றார் அவருடன் கூடவே நடந்து அவரது வாகனம் வரை சென்று அவரை வழியனுப்பி விட்டு பிறகு மீண்டும் அவனது டூவீலரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வந்த அவன் அம்மாவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி மகிழ அவளும் அவனை வாழ்த்தி மகிழ்ந்தாள்.
அடுத்தநாள் அவனது அலுவலகம் காலையிலேயே கலை கட்டியிருந்தது. பார்ட்டியை மற்ற அலுவலக ஊழியர்களிடம் முன்னரே அறிவித்திருந்த காரணம் அனைவரும் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர். எதற்காக இந்த பார்ட்டி என்று புரியாது, ஆனால் அனைவரும் அதற்குண்டான ஒருங்கிணைப்புகளை செய்து வைத்திருந்தனர்.
சரியாகக் காலை பதினோரு மணிக்கு அடைக்கலத்தின் படகு போன்ற கார் உள்ளே வந்து நின்ற நிலையில் அதிலிருந்து அடைக்கலம் இறங்கினார். அனைத்து ஊழியர்களும் அசெம்பிளி ஆகி இருந்தனர்.
அடுத்து பத்து நிமிடங்களில் மரியாதை நிமித்தமாக நிரஞ்சனை அழைத்து ‘புதிய நிர்வாக இயக்குநர்’ பதவியை அறிவித்தார் அடைக்கலம். அனைவரும் அதை ஆமோதித்து கை தட்டினார்கள்.
நிரஞ்சனின் மனசு அடுத்ததாக இவர் என்ன சர்ப்ரைஸ் சொல்லப் போகிறாரோ என்ற பதட்டத்துடன் காத்திருந்தான்.
“என்ன நிரஞ்சன் ஒரே டென்சனா இருக்கீங்க போல” என்று அடைக்கலம் கேட்டதற்கு நிரஞ்சன் சிரிதாக சிரித்தான்.
“அனைத்து அன்பர்களுக்கும் எனது வணக்கம், நமது நிறுவனத்திற்கு புதிய ‘நிர்வாக இயக்குநராக’ நிரஞ்சனை நியமித்ததை நீங்க எல்லோரும் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னொன்றையும் நான் அறிவிக்க இருக்கிறேன். அதையும் நமது நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் ஏற்றுக் கொள்வார் என்று நம்பியே அறிவிக்கிறேன், ஏனெனில் இந்த முடிவை அவரோடு முன்கூட்டி அறிவிக்காமல் எடுத்த முடிவாக இருந்தாலும் அவர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று கூறிவிட்டு நிரஞ்சனை பார்த்தார் அவனோ என்ன சொல்லப் போகிறாரோ என்ற பதட்டத்தோடு தலையை வணங்கி ஆமோதிப்பது போல காட்டினான். அடைக்கலம் மீண்டும் பேசலானார்,
“நிரஞ்சன் எனக்கு ஒரு பொண்ணு இருக்கான்னு தெரியுந்தானே, அவளுக்கு இப்ப கல்யாண வயசு ஆகுது, அவளுக்கு தகுந்த மாப்பிள்ளையை தேடிக்கிட்டு இருந்தேன். என் பொண்ணுக்கு உங்களை விட சிறந்த யாரையும் என்னால் மாப்பிள்ளையாக நினைக்க முடியவில்லை.” என்று கூறிவிட்டு நிரஞ்சனின் முகத்தை கூர்ந்து பார்த்தார்.
நிரஞ்சனின் கண்கள் மீண்டும் அதிர்ச்சியில் விரிந்தன. இது அவன் எதிர்பார்க்கவே இல்லை. தர்ம சங்கடத்தில் நெளிந்தான்.
ஏற்கனவே இவன் விரும்பும் ப்ரியாவுக்கு என்ன பதில் சொல்வது? மேலும் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் முதலாளியிடம் எப்படிச் சொல்வது? அவரது பொண்ணை எப்படி மறுப்பது? என்று பல குழப்பங்களுடன் நெளிந்தான்.
“சார் நான்… என்ன சொல்றதுன்னே தெரியல” என்று தடுமாறினான்.
“நிரஞ்சன் உங்களிடம் நான் இதைப் பற்றி முன்கூட்டியே சொல்லியிருக்கனும் ஆனா நான்… இருப்பினும் நீங்க இதை ஏத்துப்பீங்கன்னு நம்பித்தான் முடிவு எடுத்தேன். நீங்க உடனடியா சொல்லனுங்கிற அவசியம் கூட இல்ல, உங்க அம்மாகிட்ட கலந்து பேசிட்டு சொல்லுங்க ஓகே” என்று அவர் கூறி முடித்தார்.
நிரஞ்சனோ அவருக்கு எப்படி, என்ன பதில் சொல்வது என்று தடுமாறினான்.
“நிரஞ்சன்! நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடியா இருப்பீங்க. எம்பொண்ணு ஒரு அற்புதமான பெண், அவளை உங்களுக்கு பிடிக்கும். அதுமட்டுமில்ல உங்களோட பணிவு மற்றும் நீங்க ஒரு கடின உழைப்பாளி என்று அவளிடமும் முன்பே சொல்லியிருக்கேன். அதனால அவளுக்கும் உங்களைப் பிடிக்கும். அத்துடன் உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சிகளுக்கும் நீங்கள் இரண்டு பேரும் தகுதியானவர்கள்.என்று நான் கருதுகிறேன்”
நிரஞ்சனின் மனம் துடித்தது. அவன் முதலாளியின் பெண்ணை இதுவரை சந்தித்ததில்லை, ஆனால் அவள் அழகானவள் மற்றும் அன்பானவளும் கூட என்று கேள்விப்பட்டிருக்கிறான். என்ன செய்வதென்று அறியாமல் தவித்தான்.
“சார் , நான்…உங்கள் வாய்ப்பை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறேன் என்று…… ,” என்று அவரிடம் தயங்கித் தயங்கி சொல்ல முயன்றான்.
அப்போது அலுவலகத்தினுள்ளில் நிரஞ்சன் காதலிக்கும் ப்ரியா வந்து கொண்டிருந்தாள். அவளைக் கண்டவுடன் ‘ப்ரியா எப்படி இங்க? ‘ என்ற குழப்பத்துடனும் பதட்டத்துடனும் நின்றான்.
நிரஞ்சனின் காதலி ப்ரியா நேராக அவனது முதலாளியின் அருகில் சென்றாள் நிரஞ்சனோ அதைக் கண்டு ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் நின்றான். அவள் அருகில் வந்ததும் அடைக்கலம் அவளைப் பார்த்து,
“வாம்மா ப்ரியா, நிரஞ்சன் இவதான் என் பொண்ணு” என்று அறிமுகப்படுத்தினார்.
அந்த சமயத்தில் ப்ரியாவும் நிரஞ்சனைப் பார்த்து கண் சிமிட்டி புன்முறுவலுடன் நின்றாள். நிரஞ்சனுக்கு மொத்த உடலும் பஞ்சு போல மிதந்து சொர்க்க லோகம் செல்வது போல இருந்தது.
‘அப்படியென்றால் நான் காதலித்த ப்ரியாதான் நம்ம முதலாளியோட பொண்ணா’ என்று அவன் மனதிற்குள்ளாகவே கேட்டபடி மகிழ்ச்சியில் திக்குமுக்காட நின்றான்.
அப்போது ப்ரியா அருகில் வந்தாள், “என்ன நிரஞ்சன் நம்ப முடியல இல்ல, எங்கிட்ட அப்பா வந்து உங்களைப் பற்றி சொல்லி உங்களைத்தான் கல்யாணம் செய்துக்கனுன்னு சொன்னப்ப எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல, அப்படி குழப்பத்துல இருந்தப்பதான் அப்பாவோட லேப்டாப்பில் ஒரு வீடியோ கால் அழைப்பு வந்தது. அதில் பேசிக் கொண்டிருந்தது நீங்க! எனக்கோ ஒரே அதிர்ச்சி வீடியோ கால் கட் ஆனதும் அப்பாகிட்ட நீங்க யாருன்னு கேட்டப்பதான் அப்பா சொன்ன நிரஞ்சனும் நான் காதலிக்கிற நிரஞ்சனும் நீங்கதான்னு புரிஞ்சுது. அப்புறம் என்ன உடனே அப்பாக்கிட்ட ஓகே சொல்லிட்டேன், என்ன ஓகே வா எம்.டி சார்” என்று கேலியாக பேசி விவரம் முழுவதும் சொன்னாள்.
அப்போது அடைக்கலம், “என்ன நிரஞ்சன் சர்ப்ரைஸ் எப்படி இருக்கு? ” என்று கேட்டார் சிரித்துக் கொண்டே.
“மிகப் பெரிய சர்ப்ரைஸ் சார் அம்மாகிட்டயும் இந்த மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்துக்கனும் சார் ரொம்ப சந்தோசப்படுவாங்க”
“இன்னும் என்ன ‘சார்’ மாமான்னு தைரியமா சொல்லுங்க” என்று ப்ரியா சொல்ல அதற்கு மறுப்பு தெரிவித்தான் நிரஞ்சன் .
“ப்ரியா அதெல்லாம் வீட்டில்தான் இங்க எப்பவுமே எனக்கு முதலாளிதான் அதனால் ‘சார்’னுதான் கூப்பிடுவேன்” என்று அவன் சொல்லவும் அனைவரும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை இரசித்தனர்.
நிரஞ்சனும் அடைக்கலம் மற்றும் ப்ரியா மூன்று பேரும் சிரித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் ஒரு கார் வந்து நின்றது . அதிலிருந்து கலேந்திரசாமி இறங்கினார். அடைக்கலம் அவரைப் பார்த்தவுடன் பதறியடித்துக் கொண்டு எழுந்து அவரை வரவேற்றார்
“அட, சுவாமி! நீங்களா? என்ன ஒரு சர்ப்ரைஸ் நான் உங்களை எதிர்பார்க்கவே இல்லை எத்தனை வருடம் ஆச்சு உங்களை பார்த்து வாங்க வாங்க” என்று அன்புடனும் பணிவுடனும் வரவேற்றார்.
காலேந்திரசுவாமி சிரித்துக் கொண்டே, “ஆமா அடைக்கலம் ரொம்ப வருசம் ஆச்சு ஆனா தங்களுடைய பணிவும் தாராள மனசும் இன்னும் மாறவே இல்லை அதற்கு சாட்சி இப்ப நடக்கும் நிகழ்வுதான்” என்று கூறினார். அதைக்கேட்ட அடைக்கலம்,
“ஆமா சாமி நீங்க வந்த சமயமும் நல்ல சமயம்தான் இவர்தான் எனது மாப்பிள்ளை” என்று நிரஞ்சனை அறிமுகப் படுத்தினார்.
நிரஞ்சன் கலேந்திரசாமியைப் பார்த்ததும் அவனது ஆர்வத்தை அடக்க முடியாமல் அவரது காலில் விழுந்து வணங்கி, “சாமி நீங்க ஒரு தீர்க்கதரிசி சாமி நீங்க அன்னைக்கு சொன்னீங்களே என்னோட நல்ல மனசுக்கு நான் நினைக்கிறபடி நடக்குன்னு ஆனா இப்ப நான் நினைச்சதுக்கும் மேலயே எல்லாம் நல்லபடி நடந்துருச்சு சாமி?” என்று கண்ணீர் மல்க கைகளை கூப்பியபடி சொன்னான்.
அதைக் கண்ட அடைக்கலம் நிரஞ்சனிடம், “நிரஞ்சன் உங்களுக்கும் கலேந்திரசாமியைத் தெரியுமா ரொம்ப நல்லதா போச்சு போங்க” என்றார்.
“ஆமா சார் எனக்கும் இவர் ஒரு குரு சொல்லப் போனா என்னோட வாழ்க்கையைப் பற்றி சகலமும் தெரிஞ்சு வச்சிருக்கிறவர்” என்றான் நிரஞ்சன். அவர்கள் பேசியதைக் கேட்டு விட்டு கலேந்திரசாமி ஆழ்ந்த மூச்சு விட்டுக் கொண்டு பேசத் தொடங்கினார்,
“நிரஞ்சன்! அடைக்கலம்! ரெண்டு பேருக்குமே நான் பலமுறை சொல்லியிருக்கேன் இந்த கடவுள் ஒரு விசித்திரமானவர் எதை? எங்க? எப்படி? எப்ப? செய்யனுன்னு அவருக்கு நல்லாத் தெரியும் அதேபோல அதை எப்போது மீண்டும் ஒன்னு சேர்க்கனுன்னும் தெரியும்” என்று ஒரு பீடிகையுடன் பேசினார். அதைக் கேட்ட இருவரும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கலேந்திரசாமி ஒரு சின்ன புன்னகையுடன் மீண்டும் பேசத் தொடங்கினார்.
“உண்மையில் கடவுளின் விளையாட்டு ஒரு வினோதமானதுதான் இல்லையென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பு போட்ட ஒரு முடிச்சை சரியான நேரத்தில் அவிழ்த்து முடிக்கிறாரே”
“சாமி நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியல” என்று கேட்டார் அடைக்கலம்.
“ஆமா அடைக்கலம் முப்பது வருடங்களுக்கு முன்னாள் உங்க மனைவிக்கும் உனது தங்கைக்கும் ஒரே நேரத்தில் ஒரே ஆசுபத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தீர்களே ஞாபகம் இருக்கா? “
“நல்லா ஞாபகம் இருக்கு சாமி இப்ப அதுக்கு என்ன”
“ஹா ஹா ஹா ஹா அடைக்கலம் அன்று ஆசுபத்திரிக்கு ஒரு யோகா தெரப்பி செய்வதற்கு நானும் வந்திருந்தேன்”
“ஓ…. அப்படியா சரி இப்ப அதுக்கு என்ன? “
“அன்னைக்கு பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த உங்க மனைவி சுமதியையும் உங்க தங்கை சரசுவதியையும் நான் வலி குறைய ஹீலிங் தெரப்பி கொடுத்தேன் அதன் பிறகு இருவருக்கும் குழந்தை பிறந்தது ஆனா துரதிர்ஷ்டம் உங்க மனைவி இறந்து போனாள்”
“ஆமா சாமி”
“உங்க மனைவி இறக்கும் முன்பு டாக்டரிடம் ஒரு இரகசியம் சொல்லிவிட்டு இறந்து போனாள்”
“என்னது இரகசியமா? “
“ஆமா இரகசியம் தான் அன்னைக்கு உன் மனைவிக்கு ஆண்குழந்தையும், உனது தங்கைக்கு பெண்குழந்தையும் பிறந்தது “
“என்ன சாமி சொல்றீங்க என் மனைவிக்கு பெண்குழந்தை தான் பிறந்தது அவதான் ப்ரியா “
“இல்ல அடைக்கலம் உங்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை தான் ஆனால் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு உன் தங்கையின் கணவர் அவருக்கு பெண் குழந்தை பிறந்தால் உனது தங்கையை டைவர்ஸ் செய்து விடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதை உனது மனைவியும் உன் தங்கை இருவரும் கேட்டு விட்டனர். உன் தங்கை பிரசவ வலியைக் காட்டிலும் கணவர் சொன்னதுதான் மிகப்பெரிய வலியாக உணர்ந்தாள். அதன் பிறகு சிறிது நேரத்தில் குழந்தைகளும் பிறந்தது சுமதி தனக்கு ஆண் குழந்தையும் சரசுவதிக்கு பெண் குழந்தை பிறந்ததையும் அறிந்து கொண்டாள்.
அந்த சமயத்தில் டாக்டரிடம் சொல்லி இரண்டு குழந்தைகளையும் இடம் மாற்றச் சொல்லி விட்டு இறந்து போய்விட்டாள். இந்த உண்மையை டாக்டர் என்னிடம் சொல்ல நான் டாக்டரிடம் இதெல்லாம் இறைவனின் விளையாட்டு நடப்பது நடக்கட்டும் என்று சொல்லி சம்மதித்தேன். அதன் பிறகு உன்னிடம் சண்டை போட்டு உன் தங்கையை அழைத்துக் கொண்டு அவர் வெளியூருக்கு சென்று விட்டார், உன் தங்கையின் கணவர். வெளியூருக்கு சென்று இரண்டு வருடங்களிலேயே உன் தங்கையின் கணவர் நோய்வாய்பட்டு இறந்தும் போனார்.
எதேச்சையாக அந்த ஊருக்குச் சென்ற என்னிடம் உன் தங்கை அவர்களைப் பற்றிய உண்மையை உன்னிடம் சொல்லக் கூடாது என சத்தியம் வாங்கிக் கொண்டாள். அதனால் நானும் இதுவரை அதை யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஒன்று இருப்பது எதற்கு என்கிற தத்துவப்படி அவர்கள் இருக்கும் ஊருக்கு வந்த நீ ஒரு நிறுவனத்தை தொடங்க அந்த நிறுவனத்திலேயே நிரஞ்சன் வந்து சேர்ந்து இந்த அளவுக்கு முன்னேறி உன் மாப்பிள்ளை ஆகும் அளவுக்கு உயர்ந்துள்ளான். அப்படியே அவனது அப்பாவைப் போலவே கடின உழைப்பாளி என்று நிரூபித்து விட்டான் பார்த்தாயா அடைக்கலம்” என்று ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார் கலேந்திரசாமி.
அதே சமயத்தில் அந்த ஆபீஸுக்கு தன் மகன் நிரஞ்சனின் பதவியேற்பு விழாவை காணுவதற்கு சரசுவதி வந்தாள். முப்பது வருடங்களுக்கு முன்பு விதிவசத்தால் பிரிந்த குடும்பம் அன்று ஒன்று சேர்ந்தது. அடைக்கலமும் சரசுவதியும் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
“நிரஞ்சன் இப்ப சொல்லு உனது வாழ்க்கை மாற்றத்தை தீர்மானிப்பது நீயா இல்லை இந்த பிரபஞ்சத்தை கட்டி ஆளும் இறைவனா” என்று கேட்டார் கலேந்திரசாமி.
நிரஞ்சனின் வாழ்க்கை அவன் நினைத்ததை விட மேலாக மாறியதும் அதற்கு காரணம் தான் அல்ல என்பதையும் அனைத்தையும் ஆட்டி வைப்பது ‘கடவுளே’ என்பதையும் உணர்ந்து கொண்டான்.
எழுத்தாளர் விடியல் மா.சக்தி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings