எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரயில் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டிருந்தது. பயணிகள் எல்லோரும் அவசரமாக தங்கள் பைகளை அடுக்கிக் கொண்டு வழியனுப்ப வந்தவர்களிடம் கடைசியாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிக்னலில் பச்சை விளக்கு எறிய வாசலில் நின்று கொண்டிருந்த தாரா, “சுனில், நான் போவது உங்களுக்கு வருத்தமாக இல்லையா?” என்று கேட்டாள்.
“என்னிடம் என்ன பதிலை எதிர்பார்க்கிறாய் என்பதுதான் எனக்குப் புரியவில்லை” கீழே நின்று கொண்டு ரயில் கதவின் அருகிலிருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு கேட்டான் சுனில்.
“இவ்வளவு நாள் ஏறக்குறைய நான்கு வருடங்கள் பழகி, உனக்கு நான் எனக்கு நீ என்ற நினைவிலேயே சுற்றித் திரிந்து விட்டு, வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியாக வாழ்ந்து எத்தனை குழந்தைகள், எப்படி வீடு, எப்படி வாழ்க்கை என கனவுக்கோட்டை கட்டி விட்டு இப்போது திடீரென்று பிரித்துக் கொண்டு ‘நீ உன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போ. நான் என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொல்லும் போது வலியில்லை உனக்குள்?”
“வலி என்பது நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது தாரா. நம்மை நாம் எந்த ஒரு சூழ்நிலைக்கும் தயார்படுத்திக் கொள்ளும் போது வலி என்னும் பிரச்சினைகளை தாண்டி விடுகிறோம்”
“இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை” அழத் தொடங்கினாள் தாரா.
“ஸ்ஸ்… ஏற்கனவே நமக்குள் போட்ட ஒப்பந்தப்படி தானே பிரிகிறோம். அதன்படி வருத்தப்படவோ, அழவோக் கூடாது என்பது கூட உனக்குப் புரியவில்லையா?”
“சுனில் நான் உன்னுடனே வந்து விடுகிறேன். எங்கேயாவது ஓடிப் போய்…” அழுகை தொடர்ந்து அவளால் பேசமுடியவில்லை.
“ஓடிப் போய்… கூலி வேலையாவது செய். நாம் வாழ்க்கை நடத்தலாம் அப்படித்தானே”.
“ஆம்… நீ ஏதாவது வேலை தேடிக் கொள்ளும் வரை நான் இட்லி, முறுக்கு, வடகம் சுட்டுத் தருகிறேன். விற்று வா அந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தலாம்.”
“எத்தனை முறை உன்னிடம் இந்த மாதிரி சினிமா வசனங்கள் பேசாதே என்று சொல்லியிருக்கிறேன். நடைமுறை வாழ்க்கைக்கு வா. என்றாவது ஒரு காபி போடுவதற்கு சமையலறை பக்கம் போயிருப்பாயா? எழுந்தவுடன் காபி உன்னைத் தேடி வரும் வாழ்க்கையைத் தான் பார்த்திருக்கிறாய்.
நீ சொன்ன மாதிரி வாழ்க்கை கொஞ்ச நாளில் சலித்துப் போய் இந்த சுனிலை ஏன் கட்டிக் கொண்டோம். ஒழுங்காக அப்பா காட்டிய கோடீஸ்வரன் சரத்குமாரையே கல்யாணம் பண்ணியிருக்கலாம் என்ற சபலம் வரும். கோபம் வரும். நமக்கும் பிரச்சினைகள் உருவாகி சண்டை ஏற்படும். வெறுத்துப் போகும்”
“சுனில் நீ ஒரு கோழை. இப்படி. இயலாதவனான உன்னைப் போய் காதலித்ததற்கு நல்ல தண்டனை இது.”
“நீ எவ்வளவு வேண்டுமானாலும் திட்டு. நான் நடைமுறை வாழ்க்கையில் பிராக்டிகலான முறையைத் தேடுபவன். உனக்கு ஏற்ற கணவனாக மாறிட எத்தனையோ முயற்சிகள் எடுத்தேன். முடியவில்லை”
“பொய் சொல்லாதே. நீ உண்மையிலே என்னைக் காதலித்திருந்தால் எடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றியடைந்து பெரிய பணக்காரனாகி என்னைக் கவர்ந்து கொண்டிருப்பாய். நீ உண்மையிலேயே என்னைக் காதலித்தாயா என்று கூட சந்தேகம் ஏற்படுகிறது”
“எவ்வளவு என்னை நீ மட்டந்தட்டி பேசினாலும் நான் உன் மேல் வைத்துள்ள அன்பு குறையப் போவதில்லை தாரா. உனக்கு அந்த சரத்குமார்தான் சரியான துணையாக இருக்குமென்று நான் ஒவ்வொரு நாளாக, கழிந்த மூன்று மாதங்களாக விளக்கிச் சொல்லித் தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம்.
திரும்பவும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் மாதிரி நம் காதல் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. குடிசை, கூலி வேலை, வறுமை எல்லாம் எனக்குச் சர்வ சாதாரணம். ஆனால் உனக்கு எப்போதும் தங்கக் கரண்டியால் சாப்பிட்டுத்தான் பழக்கம் தாரா”.
“என் பழக்கவழக்கங்களை நான் மாற்றிக் கொள்கிறேனே சுனில்”.
பின்னாளிலிருந்து விசில் சப்தம் கேட்க, ரயில் எஞ்சின் ஊளையிட்டது.
சுனிலின் கையைப் பிடித்துக் கொண்ட தாரா, “ப்ளீஸ் சுனில், நாம் பிரிந்து போக வேண்டுமா. அந்த சரத்குமாரும் கோடீஸ்வர வாழ்க்கையும் வேண்டாம். நான் உன்னுடன் வந்து விடுகிறேனே.” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“வாழ்க்கையை மிகவும் எளிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தாரா. போய் வா”
“ப்ளீஸ் சுனில். இந்தக் கோடீஸ்வர வாழ்க்கை எனக்கு நீயில்லாமல் வேண்டாம்” அவள் சொல்லி முடிப்பதற்குள் ரயில் மெதுவாக கிளம்பியது.
“போ தாரா. நம் சந்திப்பு ஒரு கனவாக இருக்கட்டும்”
“உன் மனசு கல்லா சுனில்?”
“கல்லாக ஆக்கிக் கொண்டதால்தான் உன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றி வைக்க முடிகிறது”
ரயில் வேகமாக கிளம்ப ஆரம்பிக்க சுனில் கையசைத்தான். தாரா அவனையே உருவம் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings