இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“வாங்க சார்” என்றார் சிவசரண், அறைவாசலில் நிழலாடியதைக் கண்டதும்.
சக்கர நாற்காலியின் க்றீச் க்றீச் கேட்க ஆரம்பித்தது. “என் வீடு, என்னை நீங்க வரவேற்கறீங்க! சாதாரணமா வாங்க, உட்காருங்கன்னு சொல்லுவாங்க! என்னை அப்படிச் சொல்லத் தேவையில்லை, இல்ல? ஏற்கெனவே உட்கார்ந்துதான் இருக்கேன் – த எடர்னல் சிட்டர்! சாதாரணமா துக்கம் நடந்த வீட்டில் வாங்கன்னு சொல்ல மாட்டாங்க! நீங்க சொல்றீங்க! ரொம்ப நல்லா இருக்கு எல்லாம்!” – க்றீச்சுக்குப் பொருத்தமாக ஒரு க்றீச் குரல்.
“ஐ அம் சாரி, மிஸ்டர் விஷ்ணுகுமார்! புத்திர சோகம் பெரிசுதான், ஆனா…” சிவசரண் ஆரம்பிக்க, “வெயிட் வெயிட்! பொதுவா ஒரு துக்கம் நடந்திருக்குன்னு சொன்னேனே தவிர, எனக்கு நடந்திருக்குன்னு நான் சொல்லவே இல்லையே! எனக்குக் கோபம் இருக்கு, அது இன்னும் உள்ளே தீயா எரிஞ்சுக்கிட்டிருக்கு! ஆனா எனக்குள் சோகத்தீ எரியவே இல்லை, புரிஞ்சுக்குங்க” என்றார் விஷ்ணுகுமார்.
அவருடைய சிவந்த கண்களை உற்றுப் பார்த்த சிவசரண் ‘இவர் என்ன மனிதர்?’ என்று யோசித்தார். “என் மகனுக்காக ஏற்கெனவே அழுதாயிற்று, இனி அழ ஒன்றுமில்லை” என்று சொன்ன காமாட்சியம்மா, தன் தம்பி இறந்ததில் பெரிதாகத் துக்கமில்லாத சம்பத் மற்றும் தன் தம்பி சொன்ன வார்த்தைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும் ஷீலா எல்லோரும் அவர் மனதில் ஊர்வலம் போக, ‘இது என்ன குடும்பம்?’ என்ற வெறுப்பும் அவர் மனதில் அலையாடியது.
“ஏன்?” என்றாள் தன்யா ஒற்றைச் சொல்லாக.
சிவசரண் உட்பட அந்த அறையில் இருந்த எல்லோருமே திடுக்கிட்டார்கள்.
“எ… என்ன?” என்று தடுமாறினார் விஷ்ணுகுமார்.
“சார், நான் என்ன கேட்கிறேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். உங்க உள்ளத்தில் எரிகிற கோபத்தீக்கு என்ன காரணம்னு கேட்கறேன்” என்றாள் தன்யா.
“என்ன இது கேள்வி? என் மகன் என்னை எதிர்த்துக்கிட்டு… வீட்டைவிட்டுப் போய்…”
“டீனேஜில் இருந்த தன்னுடைய மகன் செய்துட்ட ஒரு தப்புக்காக, முப்பது வயதில் திரும்பி வந்திருக்கும் மகனைத் தண்டிக்கற அப்பாவை நான் பார்த்ததே கிடையாது! அதுவும், உங்களோடெல்லாம் ஒற்றுமையாக, பாசமாக வாழணும்னு ஆசையோடு வந்த மகனை!” என்றாள் தன்யா மெதுவான குரலில்.
“ஆமா! பாசம்! ஒற்றுமை! இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா அந்த ராஸ்கலுக்கு? வந்ததிலிருந்து என் காலுக்குக் கீழே கண்ணிவெடி வைக்கறான்!”
காமாட்சியம்மாள் சொன்ன அதே வார்த்தைகள்.
“வந்தவுடனே என்பது சரியா? அவர் உங்க காலில் விழுந்து வணங்கத்தான் வந்தாராமே? அதேபோல அவர் மேல் இருக்கற கோபத்தை அவர் கல்யாணம் பண்ணிக்கிட்ட பெண் மேல காட்டறது, இதெல்லாம் நியாயமா சார்? மிலிட்டரி ட்ரெயினிங் இதுதானா?”
“ஏய்! மிலிட்டரியைப் பத்திப் பேசாதே!” மூச்சு வாங்கியது விஷ்ணுகுமாருக்கு. மௌனம் சாதித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
“சின்ன வயசில் செஞ்ச தப்பாம்! அந்த வயசிலேயே ஒரு பொண்ணை ஏமாற்றினவன் அவன்! உங்களுக்கு என்ன தெரியும்? இந்த ராஸ்கலையும் ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்குதுன்னா, அதுவும் குணங்கெட்ட பொண்ணாயிருக்கணும், அல்லது உலகமே தெரியாத அப்பாவியா இருக்கணும். சினிமாவில் நடிக்கற பொண்ணு, அவ யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க!”
விஷ்ணுகுமார் சீறி முடித்த சரியான அந்த விநாடியில் உள்ளே நுழைந்த ஒரு முதியவரின் காதுகளில் அந்தப் பேச்சு விழ, தடுமாறி மயங்கி விழப் போன அவரை ஒரு கான்ஸ்டபிள் தாங்கிக் கொண்டார்.
“இந்தாங்க… என்னாச்சு உங்களுக்கு? யாரு நீங்க?” என்று கேட்டவாறே அவரை ஒரு ஒற்றை சோபாவில் அமர்த்தினார் கான்ஸ்டபிள். தர்மாவும் பதறி எழுந்து வாட்டர் பாட்டிலை எடுத்து அவருக்குத் தண்ணீர் பருகுவித்தான்.
“சார், சார்… சுகவனம் சார் தானே நீங்க?” என்று கேட்டான்.
சுகவனம் மெதுவாகக் கண்களை மலர்த்தினார். “ஆமா தம்பி, உங்களைத் தெரியலியே?” என்றார் பலவீனமான குரலில்.
“சார், நான் தர்மா, ஜெயக்குமாரோட நண்பன். ஒருமுறை அவன் வீட்டுக்கு நான் வந்திருந்தப்போ உங்களைப் பார்த்திருக்கேன்” என்றான் தர்மா.
“அப்…படியா?” என்றவர் சற்று நிமிர்ந்து அமர்ந்தார்.
“என் மாப்பிள்ளை இறந்துட்டதா எனக்குச் செய்தி கிடைச்சுது, பதறி அடிச்சுக்கிட்டு இங்கே ஓடி வந்தேன். இங்கே, என் பொண்ணு மயங்கிக் கிடக்கறா! டாக்டர் பார்த்துட்டு, அவ கர்ப்பமா இருக்கறதா சொல்றாரு! அவளுடைய துரதிர்ஷ்டம் என் நெஞ்சைப் பிளந்தாலும், இந்த விஷயத்தை இந்த வீட்டுப் பெரியவங்ககிட்டச் சொல்லணும்னு வந்தா… இவரு… இ… இவரு…” சுகவனத்திற்குத் தலைசுற்றியது போலும், தலையை மார்பில் கவிழ்த்துக் கொண்டு குலுங்கினார்.
“நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்? என் பொண்ணு, என் மாப்பிள்ளைன்னு சொல்றாரே, இவர் யாரு? இவருக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்? கல்யாணத்துக்கு முன்னாடி இவரோட தானே அவ இருந்தா? சொந்த வீட்டை விட்டுட்டு வந்தாளா இல்லையா?”
சுகவனம் காதைப் பொத்திக் கொண்டார்.
தர்மா மெதுவாக எழுந்தான். விஷ்ணுகுமாரையே பார்த்தான். “சார், உங்களைப் பற்றி ஜெயக்குமார் எங்கிட்ட பேசியிருக்கான். அப்போ எல்லாம் நான் உங்களைப் பற்றி ரொம்ப உயர்வா நினைச்சிருக்கேன். தன் மேலே குழந்தைகளுக்கு என்ன கோபம் வந்தாலும், தன் குழந்தைகளை இருபத்துநாலு மணிநேரமும் தாங்கி, அவங்களுக்காகவே யோசிச்சு அவங்களுக்காகவே வாழற ஒரு ஆதரிச அப்பான்னு உங்களை நினைச்சுப் பெருமைப்பட்டிருக்கேன். ஏன், ஜெயக்குமாரோட உங்களுக்காகச் சண்டையே போட்டிருக்கேன்…
ஆனா நான் பண்ணினது தப்புன்னு எனக்கு இப்போதான் புரியுது. என்ன மனுஷன் சார் நீங்க? உங்க மகன் ஆயிரம் தப்புப் பண்ணியிருக்கலாம், அதுக்காக இன்னொரு பொண்ணைக் குற்றம் சொல்ற உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? இங்கே அழுதுக்கிட்டுக் கிடக்கறாரே, இவரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா? போகட்டும், உங்க மகனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்போ வாழ்வைத் தொலைச்சுட்டு நிற்கறாளே, அந்தப் பாவப்பட்ட பெண்ணைப் பற்றி ஏதாவது தெரியுமா?
அவ நினைச்சிருந்தா பெரிய கோடீஸ்வரனா பார்த்துக் கல்யாணம் பண்ணியிருக்க முடியாதா? உங்க மகனோட ஸ்டெர்லிங் கேரக்டருக்கு மயங்கி அவனைப் பண்ணிக்கிட்டா! அவனைத்தான் சின்ன வயசிலேயே யாரோ பொண்ணை ஏமாற்றிட்டான்னு சொல்லிக்கிட்டிருக்கீங்க!
சினிமா உலகில இருக்காங்கன்னாலே, இப்படித்தான் இருப்பாங்கன்னு நீங்களா நினைச்சுக்கறது, அதை வெச்சு அவங்களை வார்த்தைகளால் வதைக்கறது! அந்தச் சேற்றிலும் சில தாமரைகள் பூத்திருக்கு! உங்க மகனையே உங்களுக்குத் தெரியலை, மற்றவங்களைப் பற்றி என்ன தெரியப் போகுது? ஒரு டிக்டேட்டர் காம்ப்ளக்ஸை வளர்த்துக்கிட்டு, அதுவே வளர்ந்து சாடிஸ்டா ஆகிட்டீங்க! நீங்க ஏன்…” அவன் இயல்புக்கு மீறிய கோபத்துடன் பேசிய தர்மா, இந்த இடத்தில் சட்டென்று நிறுத்திவிட்டான்.
“சொல்லு தம்பி, ஏன் நிறுத்திட்ட? சொல்லுப்பா! டிக்டேட்டரா ஆரம்பிச்சு, சாடிஸ்டா மாறி, இப்போ கொலைகாரரா ஆகிட்டீங்கன்னுதானே சொல்ல வந்தே? சொல்லு, அதையும் கேட்டுக்கறேன்! இந்த ஊர்ல இதுவரை என்னைத் தலைநிமிர்ந்து பார்த்து யாரும் ஒரு வார்த்தை கேட்டது கிடையாது! உன் ஃப்ரெண்டைப் பெற்ற பாவத்தினால…”
“விஷ்ணுகுமார் சார்!” என்று அழைத்தாள் தன்யா. அவள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்திருக்கிறாள், இங்கே நிகழ்ந்த உணர்ச்சிமயமான பேச்சுகளை அவள் அவ்வளவாகக் கவனிக்கவில்லை என்றே தோன்றியது.
விஷ்ணுகுமாரின் கோபம் கொதிநிலையை அடைந்திருந்தது என்றாலும் தர்மாவின் பேச்சுக்குப் பின் அவர் ஓரளவு வெட்கமும் அடைந்திருந்தார். இந்நிலையில் தன்யாவின் குரல் அவருக்கு ஒரு விடுதலை உணர்வையே கொடுத்திருக்க வேண்டும்.
“சொல்லு” என்றார்.
“உங்க கோபத்திற்கு முக்கியமான காரணம், ஜெயக்குமார் உங்களை மதிக்காததோ, இந்த வீட்டைவிட்டு ஓடிப் போனதோ, சினிமாவில் சேர்ந்ததோ, நடிகை ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதோ இல்லை. அவர் ஒரு பெண்ணைக் காதலிச்சு ஏமாற்றிட்டார் என்பது தான் உங்க கோபத்திற்குக் காரணம், இல்லையா? இது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்த உண்மையா? ஏன் கேட்கறேன்னா, ஜெயக்குமாருடைய கேரக்டர் பற்றி எங்களைப் போன்ற நண்பர்களோ, அவர் சார்ந்த இண்டஸ்ட்ரியோ வெச்சிருக்கற இம்ப்ரஷன் வேற! அதுக்குத் தகுந்தபடிதான் அவரும் நடந்திட்டிருக்கார் இதுவரை!”
விஷ்ணுகுமார் நீண்ட பெருமூச்சிழுத்தார். “நிச்சயமா தெரியும். அந்தப் பெண்ணையே எனக்குத் தெரியும். அவ… ஜெயக்குமாரோட படிச்சா!” என்றார்.
“ஐ ஸீ. அவர் சென்னைக்குப் போனபோது, அவரோட ஓடிப் போனாளா? அப்புறம் பிரபலமானதும் கழட்டி விட்டுட்டாரா?” என்று கேட்டார் சிவசரண்.
விஷ்ணுகுமார் பல்லைக் கடித்து, தலையை மட்டும் ஆட்டினார்.
“அப்போ அந்தப் பெண் ஒரு முக்கியமான சஸ்பெக்ட் ஆச்சே சார்! அவ யாருன்னு சொல்லுங்க!” என்றார் சிவசரண் பரபரப்பாக.
“சொல்ல முடியாது!” என்றார் விஷ்ணுகுமார் உறுதியாக.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings