in ,

உயிர்ப்புத் திருநாள்! (சிறுகதை) – இரஜகை நிலவன

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

துபாயிலிருந்து மூன்று முறை தொலைபேசி அழைப்பு வந்து விட்டது. விக்டர், மருத்துவமனையிலிருந்து அலுவலகத்துக்கு வந்து, தன் மேசையிலிருந்த குறிப்பைப் பார்த்து, உடனடியாக துபாய்க்குத் தொடர்பு கொண்டான்.

“விக்டர் பேசுகிறேன். சேவியர் அறையிலே இருக்கிறாரா?” என்று கேட்டான்.

“அண்ணா… சேவியர்தான் பேசுகிறேன். பெல்லாவுக்கு இப்போது எப்படி இருக்கிறது? என்றைக்கு வீட்டுக்கு அனுப்புவதாக டாக்டர் சொல்லியிருக்கிறார்?” என்று கேட்டான், சேவியர்.

“இப்போது பரவாவில்லை. உன்னை நினைத்து, செபங்களிலே நேரத்தைக் கழித்து பல வேளைகளில் சாப்பிடாமல் இருந்திருக்குகிறாள். அதனால் குடல் புண் வந்து மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள். நாளை அல்லது நாளை மறுநாள் வீட்டுக்குத் திரும்பி விடுவாள். பெல்லாவுக்கு விசா என்னாயிற்று? இந்த ஆண்டு எப்படியாவது, அவளை துபாய்க்கு அழைத்துக் கொண்டு போய் விடலாமென்று சொல்லிக் கொண்டிருந்தாயே?”

“விசா அநேகமாக நாளை மறுநாள் வந்துவிடும் என்று நினைக்கிறேன். இந்த நேரம் பார்த்து, அவளுக்கு உடல்நலம் இப்படியாகி விட்டது. எப்படியாவது, இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழாவிற்கு, அவளை துபாய்க்கு அழைத்து விடலாம் என்று நினைத்திருந்தேன். முடியாமல் போய் விடுமோ என்று வருத்தமாக இருக்கிறது.”

“சேவியர், துபாயை விட்டுவிட்டு இங்கு வந்து ஏதாவது வேலை பார்க்க முயற்சி செய்யக் கூடாதா?”

“ஆசைதான். இந்த அளவுக்கு வருமானம் வராதே. இன்னும் ஐந்தாண்டு இங்கு சம்பாதித்து விட்டு ஒரேயடியாக ஊருக்கு வந்துவிடலாமென்றுதான் பல்லைக் கடித்துக் கொண்டு தனிமையில் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். மணமாகி எட்டு ஆண்டாகியும் இன்னும், இருவரும் சேர்ந்து உயிர்ப்புத் திருவிழா கொண்டாடியதில்லை. இந்த ஆண்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம் என்று ஆசையோடு இருந்தேன், அவளுக்கு உடல்நிலை இப்படி… ஏன்தான் இறைவன் என்னை இப்படிச் சோதிக்கிறானோ தெரியவில்லை.”

“சரி… சரி. எல்லாம் நல்லபடி நடக்கும். வீணாக மனதை அலட்டிக் கொள்ளாதே. உன் மனைவியின் உடல்நிலையைப் பற்றி அடிக்கடி தெரியப்படுத்துகிறேன்” என்று தொலைபேசியை வைத்துவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டான் விக்டர்.

கொஞ்ச நேரம் முகட்டு வளையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த விக்டர், “இவன் மனைவிக்கு வயிற்றிலே புற்றுநோய் என்று மருத்துவர் என்னிடம் மட்டும் சொல்லி, என்னை நிலைகுலையச் செய்து விட்டார். பெல்லாவிடமோ சேவியரிடமோ, நான் இதைப் பற்றி எப்படிச் சொல்வது? மருத்துவர் இது தொடக்க நிலைதான். எப்படியும் சரி செய்து விடலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அது எவ்வளவு பலிக்கும் என்றுதான் புரியவில்லை” என்று கைகளைப் பிசைந்து கொண்டான்.

அப்போது தொலைபேசி அழைக்க, “நான் விக்டர் பேசுகிறேன்” என்றான், ஒலி வாங்கியை எடுத்தவாறு.

“விக்டர்… நான் டாக்டர் ஜோசப் பேசுகிறேன். உங்கள் தம்பி மனைவி பெல்லாவுக்கு உடல்நிலை கொஞ்சம் மோசமாக இருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு வர முடியுமா?” என்று கேட்டார்.

“பெல்லாவுக்கு என்ன செய்கிறது?” கொஞ்சம் பதைப்போடு கேட்டான், விக்டர்.

“நான் ஒரு புதிய மருந்து கொடுத்தேன். மூச்சு விடத் திணறுகிறாள். என் அணுகுமுறை சரியாக இருந்தால் பெல்லாவிடமிருந்து புற்றுநோயை விரட்டி விட முடியும். ஆனால், எதிர்பாராமல் இப்படி மூச்சுவிடத் திணறுவதைப் பார்த்ததும்… எதற்கும் நீங்கள் மருத்துவமனைக்கு வருவது நல்லது” என்று போனை வைத்தார், மருத்துவர்.

கொஞ்சம் குழப்பத்தோடும், கொஞ்ச பதைபதைப்போடும் மருத்துவமனைக்கு வந்தான், விக்டர்.

பெல்லாவை நேரடிக் கண்காணிப்புப் பிரிவு அறைக்கு மாற்றி, வேறு வேறு சோதனைகளில் ஈடுபட்டிருந்தார் மருத்துவர்.

இவனைப் பார்த்ததும் அம்மா ஓடிவந்து, “என்னப்பா, பெல்லா திடீரென்று மூச்சு விடத் திணறிட்டாளே… ஏதாவது பிரச்சினையா?” என்று விக்டரின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

“நான் டாக்டரைப் பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொன்ன விக்டர், மருத்துவரிடம் வந்தான். “பெல்லா என்ன நிலையில் இருக்கிறாள்?” என்று கேட்டான்.

“சோதனைக் கட்டத்தைத் தாண்டவில்லை. செயற்கை சுவாசம் கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். முயற்சி செய்கிறோம்” என்று உதட்டைப் பிதுக்கு விட்டுச் செல்ல “ஐயோ…” என்றவாறு தலையைப் பிடித்துக் கொண்டவன், அருகில் அம்மா இருப்பதை உணர்ந்து கண்ணிரைத் துடைத்துக் கொண்டு மெதுவாக வெளியே வந்தான்.

திரும்பவும் சாயங்காலம் அலுவலகம் வந்த போது, தொலைபேசியில் சேவியர் “அண்ணா! பெல்லாவுக்கு விசா கிடைத்துவிட்டது. பெல்லாவை எவ்வளவு சீக்கிரம் அணுப்பி வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி வையுங்கள். விசாவும், விமான டிக்கெட்டும் அனுப்பியுள்ளேன்” என்றான்.

“அது வந்து..” கொஞ்சம் சோகம் முட்டிக் கொண்டு வர, ‘இவனிடம் எப்படி சொல்வது? இவன் மனைவியின் நிலையை இவனிடமே சொன்னால் எப்படி’ என்று நினைத்தவன் “சரிப்பா” என்று போனை வைத்தான்.

உடனே மருத்துவரிடமிருந்து தொலைபேசி வந்தது. *ஆச்சரியம், விக்டர்! உங்கள் தம்பி மனைவி ஆபத்தை தாண்டிவிட்டாள். சீக்கிரமே நீங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்லலாம். எனது சோதனை வெற்றி” என்றார், மகிழ்ச்சியுடன்.

“நன்றி டாக்டர். மிக்க நன்றி. ஈஸ்டருக்குள் பெல்லாவை துபாய்க்கு அனுப்பி வைக்கச் சொன்னான், சேவியர். கர்த்தர் மனமிரங்கி அவன் மன்றாடுதல்களை கேட்டு விட்டார். பெல்லாவிடம் உயிர்ப்புப் பெருநாளுக்கு கணவனிடம் போகிறாள் என்றும் மகிழ்ச்சியைச் சொல்லுங்கள்’ என்று குதூகலத்துடன் கூறிய விக்டர், மருத்துவமனைக்குக் கிளம்பினான்.

எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காதலின் ஆதாரம்! (சிறுகதை) – இரஜகை நிலவன்

    உன் காலடியில் என் கனாக்கள் (கட்டுரை) – இரஜகை நிலவன்