இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஜூலை 4 அதிகாலை 4 மணி.
தூக்கம் கலைந்ததில் சிறுநீர் கழிக்க எழுந்தேன். அடிவயிற்றில் சின்ன வலி இருந்தது. மாதவிடாய் காலத்தில் ஏற்படுவது போல் பிறப்புறுப்பில் வலி இருந்தது.
ஒன்பது மாதத்தில் இப்படி ஒரு வலியே ஏற்பட்டது இல்லை. இன்று இந்த வலியை உணர்வது வித்தியாசமாக இருந்தது.
வலி பொறுத்து கொள்ளும் அளவில் தான் இருந்தது. அதனால் வீட்டில் யாரையும் தொந்தரவு செய்ய வில்லை.
நானும் படுக்கையில் சென்று அமைதியாக படுத்துக் கொண்டேன். ஆனால் தூக்கம் வரவில்லை.
ஒரு வேளை எனக்கு பிரசவ வலி ஆரம்பித்து விட்டதா.. முப்பத்தி ஒன்பது வாரங்கள் ஆகிறது. இப்பொழுது முதுகும் அடிவயிறும் பிறப்புறுப்பிலும் வலி படர்ந்து இருந்தது.
ஒரு வழியாக எனக்கும் வலி வந்துவிட்டது. சந்தோஷத்தில் தூக்கம் வரவில்லை. என் உள்ளுணர்வு குழந்தையை வெகு விரைவில் நான் காணப் போகிறேன் என்றது.
ஜூன் மாதத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனே. ஜூன் முடிந்து நாளே நாட்களில் வலி எடுக்கிறது.
நினைப்பதெல்லாம் நடக்குமா.. குழந்தை தயாராகி வெளியே வர நான்கு நாட்கள் கூடுதலாக தேவைப்பட்டிருக்கிறது.
இந்த மாதத்தில் இந்த நாளில் தான் பிறக்க வேண்டும் என நாமே நிர்ணயக்கக் கூடாது என்பதை புரிந்து கொண்டேன். எந்த நாளாக இருந்தால் என்ன எந்த மாதமாக இருந்தால் என்ன எல்லா நாளும் நல்ல நாள் தான். தானாக கிடைக்கும் நாள் தான் மிகச் சிறப்பு நாள்.
மணி ஏழு ஆனது.
அம்மா எழுந்து சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தார்.
“ம்மா”
“சொல்லு கவி.. வாக்கிங் போலையா நீ”
“லேசா கீழ வலிக்குது மா”
“எப்படி வலிக்குது?”
“தூரம் ஆனா வலிக்குற மாதிரி இருக்கும்மா”
“கொஞ்ச நேரம் பாக்கலாம்.. வலி நல்லா வருதான்னு”
நான் மீண்டும் படுத்துக் கொண்டேன். வலி மெல்ல மெல்ல அதிகரிப்பது போல் இருந்தது.
“கவி இன்னிக்கு செக்-அப் போணும் ரெடியா?” ஆதி அலைபேசியில் அழைத்து விசாரித்தார்.
“லைட்டா பெயின் இருக்கு.. என்ன பண்ணலாம்?”
“பிரசவ வலியா?”
“தெரில.. ஆனா இந்த மாதிரி ஒன்பது மாசத்துல வலிச்சதே இல்லை அப்படி வலிக்குது”
“பெட்டர் ஹாஸ்பிடல் போய்ட்டே வந்தர்லாமா?”
“எனக்கும் தெரில ஆதி, போறதுனா போலாம்”
மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தோம்.
கர்ப்பப்பை வாய் ஒரு விரல் அளவிற்கு விரிவடைந்து இருப்பதாக கூறினார்கள். மீண்டும் பிறப்புறுப்பில் கை வைத்து சோதித்து விட்டு. ஏற்கனவே இருந்த வலி மேலும் அதிகரித்தது.
வயிற்றில் ஒரு இயந்திரத்தின் பெல்ட்டை கட்டினார்கள். என். எஸ். டி டெஸ்ட் என்றார்கள். வலி பதிவாகிறதா குழந்தையின் இதயத்துடிப்பு எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பரிசோதிக்க வேண்டி செய்வதாக கூறினார்கள்.
“வலி நல்லாவே ரெகார்ட் ஆகுது.. ஹார்ட் ரேட் நல்லாருக்கு.. உங்களுக்கு டைலேஷன் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. எப்போ வேணா அட்மிட் ஆகலாம்.. இப்போவே அட்மிட் ஆகறீங்களா?”
“வீட்டுல ஒரு டைம் கேட்டுட்டு வரோம் மேம்” என்று கூறிவிட்டு வெளியே வந்த ஆதி அத்தையை அலைபேசியில் அழைத்தார்.
“இன்னிக்கு செவ்வாய்கிழமையா இருக்கு நாளைக்கு சேருங்க” மறுமுனையில் அத்தை கூறியது என் காதில் விழுந்தது.
“ம்மாஆ அவளுக்கு வலி இருக்கு.. ரொம்ப முடியாம போய்ட்டா என்ன பண்றது..”
“வலி இருக்குன்னா சேர்ந்துக்கலாம், நானும் வரட்டா”
“இரும்மா கவியினியாள கேட்டுட்டு சொல்றேன்” இணைப்பை துண்டித்தார்.
“கவி நீ சொல்லு என்ன பண்ணலாம்?”
“நானும் அம்மாகிட்ட சொல்லல.. வீட்டுக்கே போலாம்.. ரொம்ப முடிலனா வரலாம் இல்லை நாளைக்கே வர்லாம்”
“ஓகேயா கவி”
“லைட்டா தான் வலி இருக்கு ஆதி, பாத்துக்கலாம்”
இருவரும் வீட்டிற்கு வந்தோம். அம்மாவிடம் நடந்ததை கூறினோம்.
“இன்னும் நல்லா வலி வரணும் கவி.. நீ நிக்கற நடக்கறல்ல.. நல்ல வலி வந்தா அதெல்லாம் முடியாது..”
“அப்போ கொஞ்ச நேரம் பாக்கலாம் மா”
“ஹாஸ்பிடல் திறந்து தான இருக்கும்.. எந்நேரம் வலி வந்தாலும் போலாம்ல”
“போலாம் அத்தை”
“அப்புறம் என்ன மாப்ள, வலி நல்லா பிடிக்கட்டும்” என்றார்
மதிய உணவை சாப்பிட்டு முடித்துவிட்டு கை கழுவ எழுந்தேன். கீழே கால் வைத்த இடத்தில் இரத்தம் சொட்டியது. இரத்தத்தை பார்த்ததும் உடல் ஏதோ செய்ய பயத்தில் அம்மாவை அழைத்தேன். அம்மாவும் பயந்து கொண்டே என் அருகே வந்தார்.
“இரு பதறாத ஒன்னும் இல்லை.. அங்க கை வெச்சு பாத்தாங்களா?”
“ஆமாம்மா”
“அதுல கூட உதிரம் போகும்”
ஒன்பது மாதங்களாக காணாத சிவப்பை கண்டு பயந்து தான் விட்டேன். நாப்கின் வைத்து கொண்டு வந்தேன்.
“பேசாம ஹாஸ்பிடல் போலாமா?” ஆதியும் பயத்தில் கேட்டார்.
“ரொம்ப உதிரம் போனா போகலாம்.. கை வெச்சதுக்கு கூட கொஞ்சம் வரும்பா” வழக்கமாக பயப்படும் அம்மா இன்று தைரியமாக என்னை தேற்றினார்.
ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பரிசோதித்தேன். ஒரு பத்து பதினைந்து சொட்டுக்கள் வந்திருக்கும். நேரம் ஆக ஆக வலி நன்கு அதிகமானது. எதுவும் செய்ய முடியாமல் ஒருக்களித்து படுத்துக் கொண்டேன்.
சூரியன் மறைந்தது. நாளை சூரியன் வரும்பொழுது நான் என்ன நிலையில் இருக்கப் போகிறேனோ தெரியவில்லை.
முகம் கழுவிக் கொண்டு வர கழிவறைக்கு சென்றேன். நாப்கின் முழுவதும் நனைந்து இருந்தது. எனக்கு சற்று பயம் அதிகரித்தது.
அம்மாவிடம் கூறினால் இன்னும் வலி வரட்டும் என்று சொல்வாரா? ஏன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பயப்படுகிறார். வலி வராமல் சேர்ந்தால் அறுவை சிகிச்சை செய்து விடுவார்களோ என பயப்படுகிறாரா?
இதுதான் இந்த கால மருத்துவம் நமக்கு கொடுக்கும் தைரியமா? இதனால் தான் பல ஆன்லைன் வகுப்புகள் பிரசவத்தை பற்றி பாடம் எடுக்கிறார்களா?
அதையும் முழுதாக ஏற்க முடியாதே. ஒவ்வொருவர் உடலும் ஒவ்வொரு மாதிரி. பொதுவான காரணங்கள் என நினைத்து ஆபத்தில் தள்ளப்பட்டு விட்டால்? குழந்தைக்கு எதாவது ஆகிவிட்டால்?
இப்பொழுது என்ன செய்வது சுகப்பிரசவம் ஆக இன்னும் வலி வர காத்திருக்கவா? இல்லை மருத்துவரின் கண்காணிப்புக்குள் செல்லவா?
“தண்ணி வைக்கறேன் குளிச்சிட்டு சாப்டுட்டு கிளம்பு” அம்மா என் கலவையான உணர்வுகளை புரிந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்வதே பாதுகாப்பாக இருக்கும் எனக் கருதி தயாராகி கிளம்பச் சொன்னார்.
வெதுவெதுப்பான நீரில் குளிக்க சுகமாக இருந்தது. இடுப்பு வலி கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.
அம்மா இட்லி சுட்டு வைத்திருந்தார். இட்லி சாப்பிடச் சாப்பிட வயிற்றில் இருந்த குழந்தை உதைத்தது. இனி இந்த உணர்வை எண்ணி நான் ஏங்கி போவேனே. என்னதான் வெளியில் வந்து என்னை உதைத்தாலும் உள்ளே விளையாடும் இந்த தாய்மை உணர்வை அனுபவிக்க முடியாமல் வாடுவேனே.
“எதாவது சாப்டணும்னு ஆசைப்பட்ரியா கவி?”
“ஏன் மா இன்னிக்கு தான் எனக்கு கடைசி நாள் மாதிரி கேக்கற”
“வாய மூடு டி.. குழந்தை வயத்துல வெச்சிட்டு என்ன வார்த்தை சொல்ற”
“சும்மா சொன்னேன் மா”
“ஆசைப்பட்டு சாப்டாம விட்டா குழந்தை வெளிய வர அடம் பிடிக்கும்னு சொல்லுவாங்க அதுக்கு தான் கேட்டேன்”
“கவி என்ன வேணும் கொத்து பரோட்டா வாங்கிட்டு வரவா?” ஆதி கிண்டலாக கேட்டார்.
“எனக்கு இரண்டு இட்லியே போதும் அதுவே சாப்பிட முடில”
“பொறுமையா சாப்பிடு போலாம்”
“நீங்களும் கவியும் முன்னாடி போங்க.. அம்மா கூடவே வரக் கூடாதுன்னு சொல்லுவாங்க.. நான் கொஞ்ச நேரத்துல வந்தட்றேன்.. நைட்டி வேறென்ன வேணும்னு சொல்லுங்க.. நானே எடுத்துட்டு வரேன்.. நீங்க எதுவும் எடுத்துட்டு போக வேணாம்”
என்னென்ன வேண்டுமோ எல்லாவற்றையும் அம்மாவிடம் எடுத்துக் கொடுத்தேன். நேரம் இரவு எட்டு மணி.
அம்மாவும் அப்பாவும் பிரசவத்திற்கு என்னை வழி அனுப்பி வைத்தனர். சாமி கும்பிட்டு விட்டு திருநீறு வைத்து விட்டார் அப்பா. அம்மாவும் ஆசீர்வாதம் செய்துவிட்டு கை பிடித்து தைரியம் சொன்னார்.
வெளியில் கிளம்பினோம். என்னால் வாசலைத் தாண்டி செல்ல முடியவில்லை. மீண்டும் உள்ளே ஓடி வந்தேன்.
“ம்மா நான் போகல எனக்கு பயமா இருக்கு..” பிரசவ பயமென்றால் இதுதானோ!
“என்ன ஆச்சு கவி”
“பயமா இருக்கு என்னன்னு தெரில.. நான் இங்கயே இருக்கேன் நான் எங்கயும் போகல”
“ஏன்டி அழற.. அதெல்லாம் ஒன்னும் இல்லை பயந்துகாதா”
என் அம்மா எவ்வளவு கூறியும் எனக்கு தாங்க முடியவில்லை. கண்களில் இருந்து நீர் பெருகி வழிந்தது.
பத்து நிமிடங்கள் என்னை அமர வைத்து கை பிடித்து என்னை தேற்றி தண்ணீர் கொடுத்து குடிக்கச் சொன்னார்கள். அழுது முடித்து தண்ணீர் குடித்ததில் சற்று தெளிவடைந்தேன்.
“நாங்க முன்னாடி போறோம்.. சீக்கிரமா வந்துடுங்க” என்றேன் ஏதோ தைரியம் வந்தவள் போல்.
“வரோம்.. நீ தைரியமா கிளம்பு.. பேரனோட வா” அம்மா இப்படி கூறியதும் எனக்கு வெட்கச் சிரிப்பு வந்தது.
இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து பரிசோதனைக்கு செல்வது போல இயல்பாகத் தான் சென்றேன்.
திரைப்படத்தில் வருவது போல வலி தாங்காமல் கத்திக் கொண்டே என்னை யாராவது பிடித்துக் கொண்டு பிரசவத்திற்கு அழைத்து செல்வார்கள் என்று கற்பனை செய்திருந்தேன். ஆனால் நிகழ்வில் அப்படி இல்லை. ஒவ்வொருவர் பிரசவமும் ஒவ்வொரு விதம்.
மருத்துவனைக்குள் செல்லும் பொழுது நேரம் இரவு ஒன்பது மணி.
“நல்லா நட, உக்கார்ந்து உக்கார்ந்து எழுந்திரி… அப்போதான் சீக்கிரம் பிரசவம் ஆகும் டாக்டர் அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க” அங்கே இருந்த சுத்தம் செய்யும் அக்கா கூறினார்.
மருத்துவரின் வீடு பக்கத்தில் தான், எந்நேரம் ஆனாலும் செவிலியர்கள் அழைத்ததும் வந்து விடுவார்.
பத்து மணிக்கு மேல் வந்தார். என்னோடு சேர்ந்து இன்னொரு பெண்ணும் வந்திருந்தார். அவரும் லேசான வலி என்றார். மருத்துவர் வந்ததும் எங்கள் இருவரையும் பரிசோதித்தார்.
என்னோடு வந்த பெண்மணிக்கு என்ன சொன்னார்கள் தெரியவில்லை அவர் கிளம்பி விட்டார். இன்னும் நாள் இருக்கிறது என்று அவர் கணவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார். பிறப்புறுப்பில் கை வைத்து சோதித்தார்.
“காலைல இருந்து வலில இருக்கிங்க.. ஆனா டைலேஷன் சுத்தமா இல்லை”
“என்ன பண்றது மேம்?”
“பல்ப் இண்டக்சன் பண்லாம்.. உங்க ஹஸ்பண்ட்கிட்ட கேட்டுட்டு வாங்க.. 4 செண்டி மீட்டர் பால் வெப்போம்.. கர்ப்பப்பை வாய் விரிவடைய விரிவடைய தானா பால் விழும்.. வெச்சிட்டா பதினஞ்சு மணி நேரம் வெயிட் பண்ணிட்டு அப்புறம் என்ன பண்றதுனு சொல்றேன்”
“அவர்கிட்ட கேட்டுட்டு வந்தட்றேன் மேம்”
“தாராளமா”
ஆதியிடம் கேட்டேன்.
“ஹாஸ்பிடல்னு வந்தாவே இப்படி எதாவது பண்ணுவாங்கன்னு தான் வீட்டுலயே இருக்கலாம் சொன்னேன்” அப்பொழுது உள்ளே வந்த அம்மா கூறினார்.
“ம்மா பின்ன சும்மாவா படுக்க வெப்பாங்க.. அவங்க ப்ரொசிஜர் பண்ணணும்ல”
“ஆமா அத்தை.. அவங்க சொல்றது சரியாதான் இருக்கும்.. எதுக்கும் நான் என்னன்னு விசாரிச்சிட்டு வரேன்”
ஆதியும் நானும் அறைக்குள் நுழைந்தோம்.
“மேம் இப்போ இந்த பால் வெச்சா நார்மல் டெலிவரி ஆயிடுமா?”
“நிறையவே வாய்ப்பு இருக்கு.. ஆனா உறுதியா சொல்ல முடியாது என்ன வேணாலும் ஆகலாம்.. கடவுள் கைல தான் இருக்கு குழந்தை எப்படி வரணும்னு”
ஆதி சில நிமிடங்கள் யோசித்து விட்டு சம்மதித்தார்.
ஆதியை வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு என்னைப் படுக்கச் சொன்னார்கள். செவிலியர் ஒருவர் என் பிறப்புறுப்பை சுத்தம் செய்தார். பின் மருத்துவர் வந்தார். அவர் கைகளுக்கு உறை அணிவதை பார்க்கும் பொழுதே பதட்டம் ஏற்பட்டது.
“கத்தேடர் போட்றேன்.. ப்ளீடிங் லாம் அதுல போய்டும்” என்றவர் எனக்குள் கை விட்டார்.
நான் வீச்சென்று கத்தினேன். கால்களை உதைத்தேன்.
“கால் ஆட்டாத.. கத்தாம படு” மருத்துவருடன் உதவிக்கு இருந்த பெண் திட்டினார்.
என்னால் வலியே தாங்க முடியவில்லை. நான் கால் ஆட்டுவதை நிறுத்திக் கொண்டு கையில் போர்வையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு வலியை பொறுத்துக் கொண்டேன்.
“பல்ப் வெச்சிடேன், கீழ விழுந்ததும் சொல்லுங்க நர்ஸ் கிட்ட.. எப்போ வலி அதிகமானாலும் வேறெதாவது பிரச்சனைனாலும் கூப்டுங்க.. நான் உடனே வந்துருவேன்”
“இப்போ நான் தூங்கலாமா இல்லை என்ன பண்றது மேம்”
“இதோட நீங்க எல்லாமே பண்ணலாம்.. வாக் பண்ணுங்க உக்கார்ந்து எழுந்திரிங்க.. அதுக்காக ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேணாம்.. கொஞ்ச கொஞ்ச நேரம் தூக்கம் வந்தா தூங்குங்க.. அப்போ தான் புஷ் பண்ண எனர்ஜி இருக்கும்”
“ஓகே மேம்”
“ஐ.வி லைன் கைல போடுவாங்க.. இன்ஜெக்சன் ஒன்னு போகும்.. அப்புறம் ஸ்டாப் பண்ணிடுவாங்க.. நீங்க அதோடயே நடக்கலாம் எல்லாம் பண்ணலாம்” என்று கூறியவர், செவிலியரை அழைத்து மருந்தின் விளக்கங்களை கூறிவிட்டு எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையில் என்னை காத்திருக்கச் சொன்னார்.
கையில் நரம்பு வழியே மருந்து இறங்க அடியில் பந்து போல் ஏதோ முட்ட கீழே வடியும் இரத்தம் பையில் சேர என் உடல் என் கட்டுப்பாடின்றி யாரோ நெரிப்பது போல் எனக்கு வித்தியாசமாக இருந்தது.
சில நிமிடங்கள் சோர்வில் படுத்திருந்தேன். பின் எழுந்து கீழே நின்றேன்.
“கைல இருக்கிறது டிஸ்டர்ப்பா இருக்கு.. எனக்கு கொஞ்சம் நடக்கணும் ஆதி”
அவர் செவிலியரை அழைத்தார்.
“அப்படியே நடங்க எட்ற தூரம் வரைக்கும்”
“அதோட நடக்க கஷ்டமா இருக்கும். கொஞ்ச நேரம் எடுத்து விடுங்க”
“கொஞ்ச நேரம் வேணா எடுக்கறேன்.. அப்படியே நடங்க உக்கார்ந்து எழுந்திரிங்க” என்றார்.
நானும் நடந்தேன் உட்கார்ந்து எழுந்தேன்.
வீட்டில் தோப்புக் கரணம் போடும் பொழுது வலி இல்லாமல் இருந்தது. ஆனால் இன்று கீழே உட்காரும் பொழுது வலி உள்ளே குத்துவது போல் இருந்தது. மீண்டும் எழுந்திரிக்கவும் முடியவில்லை. படுக்கையில் இருந்த கம்பியை பிடித்து எழுந்தேன். வயிறு கணத்து வலித்தது.
என்னை தாங்கிப் பிடித்து நின்று கொண்டிருந்த ஆதியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை பார்த்தேன்.
“ஆதி என்னாச்சு.. நான் நல்லாதான் இருக்கேன். ஏன் அழறீங்க”
“கஷ்டமா இருக்கு கவி”
“நம்ம குழந்தைக்காக தான… பையன் வந்தான் சரி ஆயிடும்”
“பொண்ணுன்னு சொல்லிட்டு இருந்த.. இப்போ பையனா”
“ஹாஹா அப்பப்ப மாறிப்பேன்” என்று வெளியில் சிரித்துக் கொண்டே கூறினாலும் உள்ளே வலியில் தவித்துக் கொண்டிருந்தேன்.
அம்மாவும் அத்தையும் உடன் இருந்து என்னைத் தேற்றினார்கள். விடியும் வரை நடப்பதுமாய் உட்கார்ந்து எழுவதுமாய் அவ்வப்போது குட்டி தூக்கம் போடுவதுமாய் இருந்தேன்.
“உலகத்தின் வழியெல்லாம்
வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வலியை தாண்ட
பிறந்த அக்கினி சிறகே
எழுந்து வா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா”
பாடலை பாடிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் அமுதினி.
“விடிய விடிய நடந்தியாம்.. உன்னால முடியும் கவி”
“இல்லை என்னால முடில”
“ஏன்டி இப்படி சொல்ற.. உனக்காக நான் இட்லி கொண்டு வந்துருக்கேன் சாப்ட்டு தெம்பா நட”
சாப்பிட்டு முடித்து கை கழுவுவதற்கும் மருத்துவர் உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது.
“கவியினியாள்”
“மேம்”
“என்னாச்சு?”
“வலி இருக்கு மேம்”
“அப்புறம் ஏன் இன்னும் பால் வர்ல”
“தெரில”
“ரெண்டு மணி நேரம் கழிச்சி வரேன். நல்லா நடங்க”
“ஓகே மேம்”
“படி ஏறி இறங்குங்க.. எப்போ போறிங்களோ அப்போ ட்ரிப்ஸ் ஸ்டாப் பண்ணுவாங்க”
“பண்றேன் மேம்”
மேலும் இரண்டு மணி நேரம் என்னால் முடிந்ததை செய்தேன். ஆதி அம்மா தங்கை அத்தை என அனைவரும் எனக்கு துணையாக இருந்தனர்.
பாடல்கள் போட்டும் பேச்சு கொடுத்தும் ஆதியும் அமுதினியும் வலியை மறந்து என்னை இயல்பாக்க முயற்சித்தார்கள். அம்மாவும் அத்தையும் எனக்காக பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
“கவியினியாள் ஏன் இன்னும் பால்ல விடாம பிடிச்சிட்டு இருக்கீங்க”
“வரமாட்டிக்குது மேம்”
“என்ன பண்ணா வலி அதிகமா இருக்கோ அதை பண்ணுங்க.. சீக்கிரம் ப்ராஸஸ் ஆகும்” என்று கூறிவிட்டு வயிற்றின் மேல் கை வைத்து சோதித்து பார்த்து விட்டு கிளம்பினார்.
மீண்டும் முயற்சித்தேன். பல முயற்சிகள் செய்தும் பலன் கிடைக்கவில்லை. பந்து விழவில்லை சில மணி நேரம் கழித்து வந்த மருத்துவரே கை வைத்து நீக்கினார்.
குழந்தை தலை தெரிகிறதா என்று சிறிது நேரம் காத்திருந்து பார்க்கலாம் என்று கூறிவிட்டு நடைபயிற்சி மற்றும் சில பயிற்சிகளை செய்து கொண்டிருக்கச் சொன்னார்.
“ஒரு மணி ஆகுது காலைல சாப்ட்டது பழம் எதாவது சாப்பட்றீயா?”
“வேணாம் மா”
“வெறும் வயிறா இருந்தா தெம்பு எப்படி வரும் எதாவது சாப்பிடு.. சாப்பாடு குழம்பு பொரியல் கூட இருக்கு”
“கொஞ்சம் கொஞ்சம் தட்ல போடு வரேன்”
எழுந்து கை கழுவ முயலும் பொழுது பட்டென்று ஒரு சத்தம். காலில் இருந்து நீர் வழிந்தது.
ஆம், பனிக்குடம் உடைந்து விட்டது. அதோடு சேர்ந்து என் நம்பிக்கையும் கரைந்து ஓடியது. உடனே ஆதி வெளியே ஓடிச் சென்று செவிலியரிடம் சொல்ல மருத்துவரும் உள்ளே வந்தார்.
“கலர் கிளீயரா தான் இருக்கு.. குழந்தை மோஷன் எதும் போகல.. பயப்பட வேண்டாம்.. எதுக்கும் ஒரு என்.எஸ்.டி கிராஃப் செக் பண்ணிரலாம்” என்றார் மருத்துவர்.
வயிற்றில் மீண்டும் பெல்ட்டை கட்டி படுக்க வைத்தார்கள். பனிக்குடம் உடைந்ததில் வலி இரட்டிப்பானது. பெல்ட்டை கட்டிக் கொண்டு ஒரே இடத்தில் கால் நீட்டி படுக்க முடியவில்லை.
“அய்யோ அம்மா வலிக்குதே”
“அய்யோன்னு சொல்லாத கண்ணு முருகா முருகான்னு சொல்லு.. இல்லை இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கோ”
“முடிலைங்க அத்தை”
“வலி பிடிக்க ஆரம்பிச்சிருக்கு கொஞ்சம் தாங்கிக்கோ மா”
“அம்மா முடில.. கீழ ரொம்ப வலிக்குது.. அம்மாஆஆஆ” உரத்து கத்த ஆரம்பித்தேன்.
கால்களை உதைத்தும் கைகளை ஆட்டியும் பல்லை கடித்துக் கொண்டு கத்தினேன்.
சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்த மருத்துவர் இயந்திரத்தில் பதிவாகி இருந்த இதயத்துடிப்பை கண்டார்.
“வலி அதிகமாகுதா.. ஆனாலும் டைலேஷன் பெருசா இல்லையே.. குழந்தையோட இதயதுடிப்பும் அவ்வளவா நல்லா இல்லை.. இது ரிஸ்க் ஆயிடுமோன்னு தோணுது.. பேசாம ஆபரேஷன்னே பண்ணிரலாமா? நமக்கு குழந்தை நல்லபடியா பொறக்குறது தான் முக்கியம்.. என்ன கவியினியாள்?”
“ஆபரேஷனா?” திகைத்துப் போனேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings