எழுத்தாளர் ராதா பாலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாயிலில் அழைப்பு மணிச் சத்தம் விடாமல் அடிக்க சற்று எரிச்சலுடனும், கோபத்துடனும் கண் விழித்தான் மாதவன்!
‘சே! எங்கே போய்த் தொலைஞ்சா இவ?’
எரிச்சலுடன் எழுந்து சென்றவன், கதவைத் திறந்து பால் பாக்கெட்டுகளை வாங்கி வந்தான். சமையலறை சென்று பார்க்க அங்கு சரளா இருபதற்கான அறிகுறியே இல்லை. வீடு முழுவதும் தேடியவன், ‘சரளா எங்கே போயிருப்பாள்?’ என்ற கேள்விக்குறியுடன் பல் தேய்த்து டிகாக்ஷன் போட்டுவிட்டு மணியைப் பார்த்தான்.
திடுக்கிட்டான். மணி ஆறு. தினமும் இதே நேரத்துக்குப் பாதி சமையல் முடித்திருப்பாள் சரளா.
எட்டாம் வகுப்பு படிக்கும் வசந்தின் அறையில் அலாரத்தை நிறுத்தி அவனை எழுப்பினான். கல்லூரியில் படிக்கும் ஸ்வேதாவையும் எழுப்பினான்.
“ஹாய் டாடி! குட் மார்னிங்! என்ன இந்த நேரத்தில் நீங்க, அம்மா எங்க?”
“அதைத்தான் நான் உங்கிட்ட கேட்கிறேன். உங்கம்மா எங்க போனா? எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலியே?”
ஸ்வேதா அவள் பங்குக்கு வீடு முழுக்கத் தேடிவிட்டு வர, ‘அம்மா இல்லை’ என்ற உண்மை பளாரென்று முகத்திலடித்தது.
“பக்கத்துக் கோயிலுக்கு போயிருப்பாளோ… இன்னிக்கு வெள்ளிக்கிழமை கூட இல்லையே?”
“ஏன் டாடி? உங்களுக்கும் அம்மாவுக்கும் சண்டை ஏதாவது…?”
“சே! அதெல்லாமில்லை. இரண்டு, மூன்று நாளாக ஏதோ உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டிருந்தா…”
வாசலில் காய்கறிக்காரியின் குரல். என்ன வாங்குவது? எதைச் சமைப்பது? ஒன்றும் புரியவில்லை. வாசலுக்கு வந்தாள் ஸ்வேதா.
“என்ன கண்ணூ! அம்மா இல்லையா?” ஸ்வேதாவிடம் கீரைக் கட்டைக் கொடுத்தாள்.
“எவ்வளவு காசு?”
“அதெல்லாம் அம்மாகிட்ட வாங்கிக்கிடறேன். காலைல அம்மா கையால போணி செஞ்சா கூடை நிமிஷமா காலியாகிவிடும் கண்ணு.”
‘அட! அம்மா மேல இவளுக்கு எவ்வளவு நம்பிக்கை’.. ஸ்வேதாவிற்கு வியப்பாக இருந்தது.
மணி எட்டாகிவிட்டது. மாதவனுக்கு ஒரே குழப்பம். “எங்கே போய் விட்டாள் இவள்?” என்று யோசிப்புடனேயே குளித்தான்.
“ஸ்வேதா! ஃபிரிட்ஜில் தோசை மாவு இருந்தால் எடுத்து தோசை வார்க்கிறாயா?”
மாதவன் சொல்ல, ஸ்வேதா தோசை வார்க்கும் முயற்சியில் இறங்கினாள். ஒரு தோசை கூட சரியாக வராமல் கிண்டிப் போக, அம்மா மெல்லிதாக சூடாக வார்த்துப் போட்ட தோசை ஞாபகம் வந்தது.
“ஸ்வேதா! நீ இன்னைக்கு காலேஜ் போக வேண்டாம். அம்மா எப்படியும் மத்தியானம் வந்து விடுவாள். வந்ததும் எனக்குப் போன் செய்.”
டியூஷனிலிருந்து வந்த வசந்தும் ஏதோ பிரட்டை சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டான்.
எல்லோரும் சென்றதும் ஸ்வேதாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஏதாவது சமைக்கலாமென்றால் துவரம் பருப்புக்கும், கடலைப் பருப்புக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை.
சரளா அவ்வப்போது அவளை சமையலில் உதவ அழைப்பாள். ஆனால் ஸ்வேதா அதைக் காதிலேயே போட்டுக் கொண்டதில்லை!
சென்ற வாரம் நடந்த சம்பவம் ஸ்வேதாவுக்கு நினைவு வந்தது. அன்று விடுமுறை. டி.வியில் ஏதோ நிகழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள் ஸ்வேதா!
“ஸ்வேதா! கொஞ்சம் உள்ளே வந்து ஹெல்ப் பண்ணு. இந்த சப்பாத்தியைப் போட்டு எடு. எனக்கு ஒரே ஃபீவரிஷாக இருக்கு. உடம்பு முடியவில்லை. ப்ளீஸ், ஸ்வேதா!”
“போம்மா! இந்த வேலைக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதே. லீவில் கூட நிம்மதியாய் டி.வி. பார்க்க முடியவில்லை. நான் என் ஃப்ரெண்ட் ஜோதி வீட்டுக்கு வேற போகணும்.” என்று மாலை ஐந்து மணிக்கு சென்றவள் இரவு எட்டு மணிக்குத்தான் வந்தாள்.
ஏதோ மாத்திரையைச் சாப்பிட்டு படுத்திருந்த சரளா, ஸ்வேதாவிற்கு சாப்பாடு போட எழுந்து வந்தாள்.
சப்பாத்தியையும், சட்னியையும் ஸ்வேதாவின் தட்டில் பறிமாறினாள்.
“ஏம்மா! வேறு ஏதாவது சப்ஜி செய்யக் கூடாதா? இந்தச் சட்னி யாருக்கு வேணும்!”
“எனக்கு உடம்பு சரியில்லை ஸ்வேதா!”
கோபத்தோடு ஒரு சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்தவள், “அம்மாவுக்கு உடம்புக்கு என்ன? சாப்பிட்டாளா?” என்று கூடக் கேட்கவில்லை.
“சே! நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்? பாவம் அம்மா! தனக்கு உடம்பு சரியில்லாததைச் சொன்ன போதும் நான் எப்படிப் பேசி விட்டேன்? அந்தக் கோபத்தில் தான் அம்மா எங்காவது போய் விட்டாளா!
எந்த வேலையும் செய்யத் தோன்றாமல் சோர்வாகப் படுத்த ஸ்வேதா, அப்படியே தூங்கி விட்டாள். வேலைக்காரி அஞ்சலையின் குரல்தான் எழுப்பியது.
“ஏம்மா கண்ணு! காலேஜ் போகலையா? அம்மா எங்க போயிட்டாங்க? என்னாண்ட கூட சொல்லலியே?”
“ம்…ம்…! நாளைக்கு வருவாங்க. இன்னிக்கு எதுவும் பாத்திரம் இல்ல. நாளைக்கு வா.” சுள்ளென்று விழுந்தாள் ஸ்வேதா.
‘அம்மா மகாலட்சுமியாட்டமா எப்படி சிரிக்க சிரிக்க பேசுவாங்க. அவங்களுக்கு இப்படி ஒரு மக!’ முணுமுணுத்துக் கொண்டே சென்றாள் அஞ்சலை.
மாலை பள்ளியிலிருந்து திரும்பிய வசந்துக்கு அம்மா இல்லாத வீடு வெறுமையாகத் தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் காபியும் கையுமாக நிற்கும் அம்மா எங்கே போயிருப்பாள்?
கேண்டீனில் சரியாகச் சாப்பிடாமல், வயிறு பசியில் கபகபத்தது. ஸ்வேதா கொடுத்த பிரட்டை சிரமப்பட்டு உள்ளே தள்ளியவனின் மனம் அம்மாவின் ஞாபகத்தில் தவித்தது.
இரண்டு நாட்கள் முன்பு மாலை சரளா, அவனிடம் மளிகை சாமான் லிஸ்ட்டைக் கொடுத்து அருகிலிருந்த கடைக்குப் போய் வரச் சொன்னாள்.
“போம்மா! நான் விளையாடப் போறேன். நீ வீட்டில் சும்மாதானே இருக்க. நீ போய் வாங்கி வந்துக்கோ.” சொல்லியவன் நிமிடத்தில் சிட்டாய்ப் பறந்து விட்டான்.
‘பாவம் அம்மா! நான் திரும்பி வந்தபோது நல்ல ஜூரத்தில் படுத்திருந்தாளே… அந்தக் கோபத்தில் தான் என்னை விட்டுப் போயிட்டாளா… ஸாரிம்மா! சீக்கிரம் வந்துடு ப்ளீஸ்!’
அம்மா நினைவில் அழ ஆரம்பித்துவிட்ட வசந்தை தேற்ற முடியாமல் தானும் கேவினாள் ஸ்வேதா!
மாலை வந்த மாதவனுக்குச் சரளா வராதது அதிர்ச்சி தந்தது. இரவு ஏதோ ஒரு ஓட்டலில் சாப்பிட்டு வந்த மூவரின் மனமும் சரியில்லை.
‘சரளா எங்கே போயிருப்பாள்?’ என்ற கேள்வி மாதவன் மனத்தை வண்டாய்க் குடைந்தது.
மறுநாள் மாதவன் இருந்த மன நிலையில் அவனால் அலுவலகம் செல்ல முடியவில்லை.
ஓட்டல் சாப்பாடு ஒரே நாளில் அலுத்து விட, தனக்குத் தெரிந்த சமையலை மிகக் கஷ்டப்பட்டு செய்தான். சாப்பிட்ட போது குழம்பின் அதிக காரமும், கத்தரிக்காய் ரோஸ்டின் அதிக உப்பும், சாப்பாட்டை உள்ளே இறங்க விடவில்லை! நாவுக்கு ருசியாக வேளை தவறாமல் சமைத்துப் போட்ட சரளா நினைவு வந்தது.
வீட்டின் ஒவ்வொரு அறையிலும் சாமான்களும், துவைக்க வேண்டிய துணிகளும் தாறு மாறாகக் கிடந்தன.
ஓரளவு எல்லாம் சரி செய்தவன், திடீரென்று நினைவு வந்தவனாக சரளாவின் பீரோவில் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று ஓடிப் போய்த் தேடினான். அவன் கைககளில் ஒரு டைரி தான் கிடைத்தது.
‘அட! சரளாவுக்கு டைரி எழுதும் பழக்கம் கூட உண்டா?’ ஆவலும், அவசரமுமாய்ப் பிரித்தான்! தனது ஏக்கங்களை, உணர்ச்சிகளை, எண்ணங்களை வார்த்தையில் வடித்து வடிகால் தேடியிருந்தாள் அவன் மனைவி!
நான்கு நாட்கள் முந்தைய தேதியில் கண்களை ஓட்டினான்.
‘எனக்குக் கல்யாணமானது முதல் மாமியாரிடம் கஷ்டப்பட்டேன். எந்தச் சுவையான, வித்தியாசமான நிகழ்ச்சிகளும் இல்லாமல், என்னுடன் பேசவும், சிரிக்கவும் கூட அம்மாவின் உத்தரவை எதிர்பார்க்கும் கணவருடன் நான் ஜடமாய் வாழ்ந்த காலம் அது. உள்ளம் நிறைய ஏக்கங்களையும், வருத்தங்களையும் தேக்கிக் கொண்டு உதடுகளால் மட்டுமே சிரித்த நாட்கள் அவை… ஆனால் அம்மாவின் மறைவுக்குப் பின்னாவது அவர் என்னைப் புரிந்து கொள்வார் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டேனே? அவர் என்ன… என் குழந்தைகள் கூட என் ஆசைகளை, தேவைகளை, மனவருத்தங்களைப் புரிந்து கொள்ளவில்லையே! மொத்தத்தில் இந்த வீட்டில் மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போல நானும் ஒரு நடமாடும் எந்திரம். அன்புக்கு ஏங்கும் என்னை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?’
படித்த மாதவன் மனதில் வெகுநாட்களுக்குப் பின் அன்பும், பரிதாபமும் கூடவே ஒரு திகிலும் சரளாவின் மேல் ஏற்பட்டது. ‘இந்த மனவருத்தத்தில் ஏடாகூடமாக ஏதாவது முடிவுக்கு….? சே! அப்படியெல்லாம் ஆகக் கூடாது!’
நான் சரளவுக்கு அன்பாக ஆசையாக எதைச் செய்திருக்கிறேன்? அவளுடன் மனம் விட்டுப் பேசியது கூட இல்லையே? இந்தப் பதினெட்டு வருடத்தில் அவளுக்கு ஒரு முழம் பூ கூட வாங்கித் தந்ததில்லை. சே! அவளும் ஆசாபாசமுள்ள மனுஷி என்பதை எப்படி மறந்தேன்? ஐயோ! சரளா! இதனால் எல்லாம்தான் நீ என்னை விட்டுப் போய் விட்டாயா?’
சென்ற வாரம் அவள் உடம்பு சரியில்லை என்ற போது கூட ‘உனக்கு வேறு வேலை இல்லை’ என்று எரிந்து விழுந்தேனே தவிர, அவள் மனதிற்கு இதமாக நான்கு வார்த்தை கூட சொல்லவில்லையே? சே! நான் எவ்வளவு சுயநலவாதியாகி விட்டேன்.
எழுத்தாளர் ராதா பாலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings