in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 62) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“இனிப்பு மாங்காய் சாப்ட்டு பாரு”

“என்ன இனிப்பு மாங்காய்யா?”

“ஆமா சாப்ட்டு பாரு”

அக்கா கொண்டு வந்த மாங்காயை ருசித்துப் பார்த்தேன்.

வாயில் வைத்ததும் வெல்லத்தின் இனிப்பு நாவில் இறங்க அதில் கிறங்கும் முன்பே மாங்காயின் புளிப்பு வெளியில் வர உள்ளுக்குள் இறங்க இறங்க புளியின் புளிப்பும் சேர்ந்து சுவையாக இருந்தது.

“ரொம்ப நல்லாருக்கு டி”

“நான் செய்யல எங்க பக்கத்து வீட்டுல ஒரு பாட்டி இருக்காங்க.. அவங்க செஞ்சாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நீ மாசமா இருக்கல்ல வாய்க்கு நல்லாருக்கும்னு கொண்டு வந்தேன்”

“நல்லாருக்கு.. எனக்கு பிடிச்சிருக்கு”

“இன்னும் கூட வீட்டுல இருக்கு.. நான் கொண்டு வரேன் கொஞ்சம் கொஞ்சமா சாப்புடு” 

கர்ப்ப காலத்தில் இப்படி ஒருவர் கை தேர்ந்த உணவினை சாப்பிடும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சிகரமானது.

“இனிமே பாத்ரூம்லாம் போகும் போது தாழ்பாள் போடாம போ” மாங்காயுடன் அறிவுரையும் கொடுத்தார்.

“நான் நல்லாத்தான் இருக்கேன்”

“எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காதுல.. அந்த காலத்துல பாத்ரூம்ல தான் நிறைய பிரசவம் நடந்துருக்கு”

“அச்சோ”

“பயமுறுத்த சொல்லல.. பனிக்குடம் உடஞ்சாலோ எதாவது வலினாவோ வந்து பாக்கணும்ல”

“சரி சரி தாழ் போடாம போறேன்”

முப்பத்தி எட்டு வாரம் மூன்று நாட்கள் ஆனது.

இன்று காலையில் கண் விழிக்கும் பொழுது குழந்தையின் தலை அடி வயிற்றில் முட்டியது. தலை நன்கு கீழே இறங்கி வந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.

நான்கு நாட்கள் கழித்து மருத்துவர் வரச் சொல்லி இருந்தார். இன்றோடு ஆறு நாட்கள் ஆனது.

இன்று வரை குழந்தை சுற்றிக் கொண்டு தான் இருந்தது. மருத்துவமனைக்குச் சென்று இருந்தாலும் எதுவும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.

இன்று தான் என்னால் குழந்தையின் தலை வயிற்றில் இறங்கி வந்திருப்பதை உணர முடிந்தது.

கொஞ்சம் உழைப்பா உழைத்தேன். ஆறு நாட்களாக எல்லா வேலைகளையும் செய்து கொண்டு பல பயிற்சிகளை செய்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டிருந்தேனே.

எனினும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தால் தான் என்னவென்று முழுதாக தெரியும்.

“குட் குட்”

என் வயிற்றை ஸ்கேன் செய்து கொண்டிருந்த மருத்துவர் தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

“குழந்தை இடுப்பு எலும்புக்குள்ள வந்துடுச்சி.. தண்ணி அளவு நல்லாருக்கு.. வெயிட் ஓகே.. எல்லாமே குட்.. வலி வர வெக்கலாமா?”

“இன்னும் டைம் இருக்குல்ல மேம்.. பத்து நாள் வெயிட் பண்ணி பாக்கலாமா?”

“உங்க இஷ்டம் ஒரு வாரம் கழிச்சி வாங்க”

எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. வலி வந்தால் போதும். ஆனால் அது தான் வரமாட்டேன் என்கிறதே!

“பப்பாளி சாப்புடு வலி வரும்”

“அண்ணாச்சி சாப்புடு வலி வரும்”

“தினமுமே கஷாயம் குடி வலி வரும்”

இப்படி சிலர் அறிவுரை கூற மறுபக்கமோ, “இந்த காலத்துல யாருக்கு வலி வருது.. எல்லாம் ஊசி போட்டு தான் வர வெக்கிறாங்க” என்கிறார்கள் சிலர்.

இதையெல்லாம் தாண்டி நமக்கு வலி வரும் என்கிற நம்பிக்கையுடன் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தேன்.

எனக்கு கர்ப்ப காலம் போதும். என் குழந்தையை பார்க்க வேண்டும் என தோன்ற ஆரம்பித்தது. வலிக்கிறதா.. இல்லையா என்று அடிக்கடி கவனிக்கத் தொடங்கினேன்.

“எங்க வலிச்சா அது பிரசவ வலி அத்தை?”

“கீழலாம் வலிக்கும் எனக்கும் சரியா தெரிலயே”

“என்னத்தை ரெண்டு புள்ளை பெத்துருக்கீங்க பிரசவ வலி எப்படி இருக்கும்னு கேட்டா தெரில சொல்றிங்க”

“கீழே எல்லாமே வலிக்கும்.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும்.. அது சரியா சொல்ல முடியாது”

அந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கும் சரியாக புரியவில்லை. ஆனால் தாங்கிக் கொள்ள முடியாத வலியாக ஒன்று எனக்கு வரப் போகிறது.

பொதுவாக வலி என்றால் பயம் தான். ஆனால் இப்பொழுது இந்த வலி எப்பொழுது ஏற்படும் என்கிற ஏக்கம் வந்தது. அதை அனுபவித்து என் குழந்தையை பார்க்க வேண்டும்.

வலி எடுக்க வேண்டும் என்று பிரார்த்தனைகள் செய்யத் தொடங்கினேன். ஆனால் நான்கு ஐந்து நாட்கள் கடந்தும் எந்த வலியும் இல்லை.

வெகு இயல்பாகத் தான் இருந்தேன்.  கடைகளுக்கு சென்று வந்தேன்.  சாயங்காலம் தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டேன். ஒரு திருமண நிகழ்விற்கு சென்று வந்தேன்.

“எப்போ கண்ணு தேதி சொல்லிருக்காங்க?” விஷேசங்களில் தூரத்து சொந்தங்களும் விசாரித்தனர். 

“ஜூலை 11 பெரியம்மா”

“நாள் நெருங்கிடுச்சி.. தைரியமா இரு”

தலையை அசைத்தேன்.

“கடவுளை கும்புட்டுக்கோ.. தாயும் பிள்ளையும் வேற வேற ஆகணும்னா போராடி தான ஆகணும்.. பொறுத்துக்கோ.. கொஞ்ச நேரம் வலி தான்.. அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்”

‘தாயும் பிள்ளையும் வேற வேற ஆகணும்’ என்று அவர் சொன்ன வரிகளின் அர்த்தத்தை ஆழ்ந்து யோசித்து கொண்டிருந்தேன்.

இன்று ஜூன் 30.

இன்றோடு ஜூன் மாதம் முடியப் போகிறது. என் கணவரின் பிறந்தநாள் என் அப்பாவின் பிறந்தநாள் மற்றும் என் அம்மாவின் பிறந்தநாள் கொண்ட மாதம் இது.

கோவிலுக்கு சென்று விட்டு இனிப்பு பலகாரங்கள் செய்து சாப்பிட்டோம் அவ்வளவு தான். ஆனாலும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது அனைவரின் பிறந்தநாட்களும்.

இந்த மாதத்திலேயே என் குழந்தையும் பிறந்தால் எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்.

இன்னும் இந்த நாள் முடிவதற்கு பன்னிரண்டு மணி நேரம் தான் இருக்கிறது. நான் ஆசைப்பட்ட மாதிரி இந்த மாதத்திலேயே பிறக்குமா என் செல்லம்?

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 61) – ரேவதி பாலாஜி

    துடுப்பிழந்த ஓடங்கள் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை