எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘சாமி சவுக்கியங்களா’ என்ற சத்தத்தைக்கேட்டு திடுக்கிட்டெழுந்தேன்.
சின்ராசு! கூடவே இடிஇடிக்கும் சத்தம் கேட்டது. ஊரைப்பார்க்கப் போகவேண்டும் என்ற ஆசை கொஞ்ச நாளாகவே உள்ளுக்குள் நச்சரித்துக்கொண்டிருந்தது. நகரவாழ்க்கையின் துரிதத்தை அனுபவித்து சலிக்கத்தொடங்கி ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது.
அரசுப்பள்ளி ஒன்றில் வரலாற்றை கற்பித்துக்கொண்டும், கத்தாரில் நர்ஸாக வேலை செய்கிற மனைவியிடம் வாரம் ஒருமுறை பேசிக்கொண்டும் வாழ்க்கையை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டேன். ஊரில் எனக்கென யாரும் இல்லை. அம்மா அப்பாவின் காலத்திற்குப் பின் பாகம் நடந்தேறி வெவ்வேறு நகரத்தில் குடிபுகுந்தபின் வாட்ஸப் குழுவில் காலை வணக்கமும் இரவு வணக்கமும் இன்னபிற செய்திகள் பரிமாற்றமுமாகத் தொடர்கிறது உறவுகளுடனான தொடர்பு.
இப்போது சின்ராசு வந்திருக்கிறான். ‘திடும்’ என்ற சத்தம் கேட்டு மீண்டும் அதிர்ந்தேன். இடி! நேற்று முதல் இடைவேளை விட்டு வறண்ட இடி கேட்டுக்கொண்டிருக்கிறது, ஆனால் மழையின் சாயலே இல்லை.
எவ்வளவு நேரமாக சாய்வுநாற்காலியில் அமர்ந்திருக்கிறேன்’ தெரியவில்லை. வீட்டின் முன் பாரிஜாத மரம் ஒன்றிருக்கிறது. இந்த வீட்டை மனைவியின் பங்களிப்புடன் வாங்கும்போதே மரமும் இருந்தது. அதைச்சுற்றி காம்பவுண்ட் கட்டப்பட்டது. மரத்தினடியில் பூங்கா இருக்கை போன்ற சிமெண்ட் மேடை இருந்தது.
ஓய்வு நேரத்தில் அதனருகே சாய்வுநாற்காலி போட்டுக்கொண்டு, சிமெண்ட் மேடையில் தேநீர்க் கோப்பையை வைத்துககொண்டு புத்தகமும் கையுமாக அமர்ந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிடும். இன்று தூக்கம் வரவில்லை. அதற்குக் காரணம் சின்ராசு.
அம்மா கைபேசியில் சவுகரியங்களை கற்றுக்கொள்ள விரும்பியதில்லை. பேசுவதற்காக மட்டும்தான் அவளுக்குக் கைபேசி. கடிதத்தில் தான் எழுதியனுப்புவாள். வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூவைப்பற்றியோ, தெருநாய் பிரசவித்தது பற்றியோ ஏதாவது ஒன்று அவளுக்கு அதில் எழுதுவதற்காக கிடைத்திருக்கும். ஆனால் எல்லா கடிதத்திலும் தவறாமல் எழுதப்பட்ட ஒன்றுதான் சின்ராசு பற்றிய விவரங்கள்.
சின்ராசு எங்கள் குடும்பத்திற்க்காக வேலை செய்பவன். எங்கிருந்தோ அப்பா அவனை வீட்டிற்குக் கூட்டிவந்த போது எனக்கு வயது பதினொன்று, அவனுக்கு பத்து. தோட்டவேலை, ஒத்தாசையாக வேலைகள் என்று எந்நேரமும் திரிவான்.
என்னுடன் பள்ளிக்கூடத்திற்கு போக அப்பா கேட்டபோது மறுத்துவிட்டான். நானும் பள்ளியில்லாத நாட்களிலும் பள்ளிவிட்ட பின்பும் அவனுடனே திரிவேன். நாங்கள் ஊரைச்சுற்றி ஓடியும், ஆற்றில் நீந்தியும், தட்டான் பிடித்துப் பறக்கவிட்டும் காலம் கடத்திக்கோண்டிருந்தோம்.
என்னை பேர் சொல்லி அழைக்கவே மாட்டான். ‘சாமி’ என்றுதான் அழைப்பான். என் மேற்படிப்பும் தொடர்ந்து நகரத்தில் கிடைத்த வேலையும் எங்களைப் பிரித்திருந்தது. என்றாவது ஊருக்குச் சென்றால் உற்சாகமாகிவிடுவான். பதின்பருவத்து நட்பை மறக்காமல் கொண்டாடுவான்.
காலத்தின் கட்டாயம்போல் நகரவாழ்க்கையின் வேகஓட்டத்தில் அவனைப்பற்றி தொலைபேசியில் அம்மாவிடம் விசாரிக்கும்படி ஆக்கிவிட்டிருந்தது. இத்தனை காலத்திற்குப் பின் இவன்! ‘ஏன் வந்திருக்கிறான்?’.
அம்மா இறப்பதற்கு முன் வந்த கடிதத்தில் ‘நம்ம சின்ராசு திடீர்னு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான்டா, யாரோ தெருவில சர்க்கஸ் காட்டுறவங்களாம், அங்கிருந்து கூட்டிட்டு வந்துட்டான்’ என்றிருந்தது செய்தி.
ஓரிருமுறை சின்ராசு இங்கு வந்து போனதுமுண்டு. கல்யாணம் ஆனதைப்பற்றிச் சொல்லவும் வந்திருந்தான். வெகுவான வெட்கத்துடன் அவன் பின்னால் மறைந்து நின்றிருந்த அவன் மனைவிக்குப் புடவையும் அவன் கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து வழியனுப்பினேன். அதுதான் நான் அவனைக் கடைசியாகப் பார்த்தது.
கொஞ்சநாட்களில் அம்மாவும் இறந்துவிட்டாள். ஈமக்காரியங்களுக்காக ஊருக்குப் போன போது அவன் அங்கில்லை. எங்கே போனானென்று ஊரில் யாருக்கும் தெரியவில்லை. இப்போது திடுதிப்பென வந்து நிற்கிறான்.
‘வா சின்ராசு. சவுக்கியமா இருக்கியா?’ என்ற என் கேள்விக்கு காத்திருந்தவனைப்போல ‘ என் பொழப்பு இப்படியாயிருச்சே சாமி’ என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது.
அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் பார்க்கும் முன் அவனை உள்ளே அழைத்தேன். உள்ளே சோபாவிற்கு பக்கத்தில் தரையில் சடக்கென உட்கார்ந்துவிட்டான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு ஏதோ பேச இருக்கிறது போல. அவனாகப் பேசட்டும் என்று எண்ணி டீ தயாரிக்க சமையலறைக்குச் சென்றேன்.
டீ போட்டு கொண்டு வந்த போதும் அப்படியே உட்கார்ந்திருந்தான். ‘இந்தா சின்ராசு இந்த டீயக்குடி முதல்ல, அப்புறம் பேசலாம்’ என்றேன். டீயை வாங்கி ஊதி ஊதி வேகமாகக் குடித்து டம்ளரை கீழே வைத்தான்.
மீண்டும் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது. இந்த நகரத்தில் மழை நன்றாகப் பெய்து இரண்டு வருடமாவது இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன். ‘சொல்லு சின்ராசு’ என்றேன் மெதுவாக. நீண்ட தேம்பலுக்குப்பிறகு சொல்ல ஆரம்பித்தான்.
கல்யாணம் முடிந்து ஊரிலிருந்து காணாமல் போனதற்க்கு காரணம், அவன் மனைவி சோதிமணி. நமக்குன்னு வாழ்க்கையும் பொழப்பும் வேண்டாமா என அவள் கேட்டதால் மதுரைக்குப் போனார்களாம். அரிசி மண்டியில் அவனுக்கும், செண்ட் கம்பெனியில் சோதிமணிக்கும் வேலை கிடைத்தது.
நன்றாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கை, சோதிமணி வேலை செய்யுமிடத்தில் கூட வேலை செய்பவன் ஒருவனுடன் ஓடிப்போனதில் நாசமானது. எட்டுமாதக் குழந்தையை இவனிடம் விட்டுவிட்டுப் போயிருந்தாள் சோதிமணி. செய்வதறியாமல் முதலில் திகைத்த சின்ராசு எங்கெல்லாமோ தேடி அவர்களை கண்டுபிடித்தான்.
குழந்தைக்காகவாவது கூட வா என்று கெஞ்சியும் அவள் வரவில்லை. குழந்தையை வளர்க்கச் சொல்லிக் கொடுத்தாலும் வாங்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் எங்கோ ஒரு இல்லத்தில் குழந்தையை விட்டுவிட்டானாம். இத்தனையும் சொல்லிவிட்டு நிறுத்தினான்.
என்னைப் பார்த்தான். பயங்கரமான சத்தத்தில் இடிஇடித்தது. அவன் மேலும் சொல்லப் போவதைக் கேட்க காத்திருந்தேன். ‘என்னய இப்படி தவிக்கவிட்டு அவமட்டும் சந்தோஷமா இருக்கிறத நினைச்சா சோறுதண்ணி இறங்கல சாமி, பச்சக்குழந்தயக்கூட நினைச்சுப் பார்க்காம உடம்பு சுகத்துக்காக போறவள்ளாம் ஒரு தாயா சாமி?’ எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
இடிச்சத்தம் வேறு இடைவிட்டு கேட்டுக்கொண்டிருந்தது. தொடர்ந்தான். ‘அதான் சாமி, ஒரு முடிவு பண்ணிட்டு போய் அவளையும் அவனையும் வெட்டிப்போட்டுட்டு வந்துட்டேன்’. நிறுத்தினான். அதிர்ந்தேன். உடல் நடுங்கியது.
‘என்ன சொன்ன சின்ராசு…’ எனக்கேட்டேன்.
‘ஆமாஞ்சாமி! நேத்து ரெண்டுபேர் கதையையும் முடிச்சுட்டேன். அம்மாகிட்ட சொல்லிக்காம அவ பேச்சக் கேட்டு நன்றியில்லாம ஊரைவிட்டு ஓடினதுக்குத்தான் எனக்கு இந்த தண்டன, என்னம்மோ இத உங்கிட்ட சொல்லிட்டு போலீஸ் போகணும்னு முடிவோடதான் வந்தேன். நான் போலீஸ் டேசன் கிளம்பறேன் சாமி’ சொல்லிவிட்டு விருட்டென எழுந்து வெளியேறி நடந்தான்.
திகைத்து நின்று அவன் சொன்னதை ஜீரணிக்க முயன்றிருந்தேன்.
‘தடத்தடத்தட’ சத்தம் கேட்டது. மழை! நகரத்தில் ரெம்ப நாளாய் பெய்யாத மழை! கனமழை!
எழுத்தாளர் கோவை தீரா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings