எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“டண்… டண்… டண்… டண்…”.
மதிய உணவுக்கான பள்ளிக்கூட மணி அடித்ததும், “எப்படா மணி அடிக்கும்?” என்று காத்திருந்த குழந்தைகள் வகுப்புகளிலிருந்து புற்றீசல் போல் வெளியே வந்தனர்.
வந்ததும் வராததுமாய் ஆங்காங்கே மரத்தினடியில் இருவர்… மூவர்… நால்வர் என்ற அளவில் கும்பல் கும்பலாய் அமர்ந்து தங்கள் டிபன் பாக்ஸ்களை திறந்து, அம்மா அடைத்துக் கொடுத்திருந்த உணவுகளை உண்ணத் துவங்கினர்.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் ராமுவும், மூன்றாம் வகுப்புப் படிக்கும் அவன் தங்கை ப்ரியாவும் சற்றுத் தள்ளியிருக்கும் ஒரு மரத்தடியில் அமர்ந்து உணவருந்தத் துவங்கினர்.
பிறக்கும் போதே தாயை இழந்து விட்ட ப்ரியா தன் அண்ணன் ராமுவின் அன்புத் துணையுடனும், தங்களுக்காக அதிகாலையில் எழுந்து சமைத்துக் கொடுத்து விட்டு அவசர அவசரமாக அலுவலகத்திற்குப் பறந்து செல்லும் தந்தையின் அரவணைப்பிலும் தாயில்லாக் குறையை மறந்து வாழ்ந்திருந்தாள்.
“அண்ணா… நேத்திக்கு நீ லீவு போட்டுட்டு வீட்டிலேயே இருந்துட்டே… மதியம் நான் சாப்பிடும்போது அந்தக் குமார் குரங்கு வந்து என்னோட டிபனுக்குள்ளார மண்ணை அள்ளி போட்டுட்டு ஓடிடுச்சு!… நல்ல வேளையா நான் அப்ப சாப்பிட்டு முடித்திருந்தேன்!… இல்லேன்னா பட்டினி தான் கிடந்திருக்கணும்!” ப்ரியா அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள்.
“சரி.. சரி… இன்னைக்கு தான் நான் இருக்கேனல்ல?.. அப்புறம் ஏன் பயப்படுற?.. அவன் வந்தால் நான் சமாளிக்கிறேன்!” ராமு ஆறுதல் கூறினான்.
“ஆமாம்…. நீ இப்படித்தான் சொல்லுவே… ஆனா அவன் வந்து ரகளை பண்றப்ப நீ பயந்திட்டு பேசாம இருந்திடுவே!”
“அவன் பெரிய பணக்கார வீட்டுப் பையன்… அவன் கூட நமக்கெதுக்கு பிரச்சினை?”
“அதுக்காக அவன் என்ன செஞ்சாலும் பொறுத்திட்டு இருக்கணுமா?” ஆவேசமாகக் கேட்டாள் சிறுமி.
அவள் கேட்டு வாய் மூடவில்லை அந்தக் குமார் வந்து சேர்ந்தான். பணத்திமிர் என்பது பச்சைக் குழந்தையாய் இருக்கும் போதே அவன் ரத்த்த்தில் ஏறி இருந்ததால் கண்ணில் கண்டவர்களையெல்லாம் துச்சமாய் மதிக்கும் புத்தி நன்றாக ஊறி இருந்தது.
உடன் படிக்கும் அத்தனைக் குழந்தைகளையும் ரகளை செய்வது அவன் வேலை. யாராவது அவனுக்கெதிராக ரிப்போர்ட் செய்தால் எந்த பலனும் இல்லாதபடி செய்வது அவன் பெற்றோரின் வேலை.
ராமுவும், பிரியாவும் சற்றுத் தள்ளி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்டவன் நேரே அங்கு வந்தான்.
“என்னடா பரதேசிப் பயலே!… இன்னைக்கு களியா?… இல்லை பழைய சோறா?” எகத்தாளமாய் கேட்டான்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த டிபன் பாக்ஸை இருவரும் மூடி விட்டு எழுந்தனர்.
அவர்களின் அச்செய்கையால் கோபமான குமார் திடீரென்று ப்ரியாவின் சடையை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடலானான். ப்ரியாவும் வலி தாங்காமல், கத்திக் கொண்டே அவன் கூட ஓடினாள்.
ஒரு கட்டத்தில் அவன் சட்டென சடையை விட்டதும், ப்ரியா மண்ணில் விழுந்து “ஓ”வென்று அழலானாள்.
கோபமுற்ற ராமு வேகமாய்ச் சென்று குமாரைப் பிடிக்க முயன்ற போது, உணவு வேளை முடிந்ததற்கான பள்ளி மணி ஒலித்தது. அனைவரும் தத்தம் வகுப்புக்கு போக முனைந்தனர். ராமுவும் ப்ரியாவைச் சமாதானப்படுத்தி அவளுடைய வகுப்புக்கு அனுப்பி விட்டு, தன்னுடைய வகுப்பை நோக்கி நடக்கலானான்.
மனசுக்குள் அந்தக் குமாரின் மேல் ஏகக் கோபம் வந்தது. கூடவே தன்னால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே… என்கிற வருத்தமும் மேலோங்கியது.
பரிதாப மனசு தன் தாயை நினைத்துப் பார்த்தது. “அம்மா நீ மட்டும் இருந்திருந்தால் உன்கிட்ட வந்து, “அம்மா… என்னை அந்த குமார் சடையைப் பிடித்து இழுத்தான்!”னு சொன்னா… நீ நேர்ல வந்து அவனை அதட்டியிருப்பே!… பாவம் ப்ரியாக் குட்டி… என்கிட்டச் சொல்றா… என்கிட்டச் சொல்லி என்ன பிரயோஜனம்?… நான் என்ன செய்வேன்?” மனம் வேதனையில் அழுதது.
இரவு உணவு அருந்தி முடித்த பின், தந்தை வெளித்திண்ணையில் படுத்துறங்க, உள்ளே படுத்திருந்த ப்ரியா பக்கத்தில் படுத்திருந்த அண்ணனை உசுப்பி, “அண்ணா… நாளைக்கு எனக்கு பள்ளிக்கூடம் போகவே பயமா இருக்குண்ணா!… அந்தக் குமார் குரங்கு என்னைய அடிக்கும்!”
“ப்ரியாக் குட்டி… நீ பயப்படாதே… இனிமேல் நான் பழைய மாதிரி இருக்க மாட்டேன்!… முடிவு பண்ணிட்டேன்… அவன் மட்டும் உன்னைத் தொடட்டும்… அவனை என்ன செய்கிறேன் பார்?” ராமு வீரம் வந்தவன் போல் பேசினான்.
தன் தங்கை எந்தக் காரணத்தைக் கொண்டும் அவனைக் கண்டு பயப்படவே கூடாது, என்கிற எண்ணத்தில், இனிமேல் குமார் ரகளை செய்தால் அவனைக் கண்டிப்பாக அடித்து நொறுக்க வேண்டும் என்கிற உத்வேகம் அந்தத் தாயில்லாச் சிறுவனின் நெஞ்சில் தோன்றியது.
தங்கையைத் தட்டிக் கொடுத்தபடியே தூங்க வைத்தவன், தான் எப்போது தூங்கினோம் என்பதே தெரியாமல் தூங்கி காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டான்.
சமையலறையில் வேலையாயிருந்த தந்தைக்கு உதவியாக தானும் சில வேலைகளைச் செய்தான். ஆனாலும், மனதினுள் “இன்னிக்குப் பள்ளிக்கூடத்தில் என்ன நடக்குமோ?… ஏது நடக்குமோ?” என்கிற அச்சமே திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.
“எப்போதும் போல… அமைதி காத்து விடலாமா?” என்று தோன்றினாலும் தன் தங்கைக்குப் பாதுகாப்பு தருவது தன் கடமை என்பதை அந்தச் சின்ன உள்ளம் நினைத்தது.
அன்று வழக்கம் போல மதிய உணவு வேளையில் குமாரை எதிர்பார்த்தபடி ராமுவும் ப்ரியாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
தங்களைக் கடந்து செல்லும் குமாரின் நண்பர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அந்தக் குமார் இன்றைக்கு பள்ளிக்கு ஏனோ வரவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது.
“அப்பாடா…” இருவரும் நிம்மதி அடைந்தாலும் “இன்னிக்கு இல்லேன்னா… நாளைக்கு வராமலா போவான்?… வந்து ரகளை பண்ணாமலா போவான்?” என்கிற அச்சமும் இருந்து கொண்டேயிருந்தது.
மணி அடித்ததும் வகுப்புக்களை நோக்கி நடந்தனர்.
தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேல் அந்தக் குமார் பள்ளிக்கு வராமலேயிருக்க, “ஒருவேளை இந்த ஸ்கூல் வேண்டாம்னு… வேற ஸ்கூலுக்குப் போயிட்டானோ?” நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாயிருந்தது.
பதினோராம் நாள் மதிய உணவு வேளையில், சற்றுத் தள்ளியிருக்கும் மரத்தடியில் ஒரு மாணவனின் அழுகுரலும், தொடர்ந்து சிறுவர் சிறுமியர் எழுப்பும் “ஹேய்ய்ய்ய்” என்ற கூச்சலும், சிரிப்பொலியும் கேட்ட வண்ணமிருந்தது.
“மொட்டை தலையா… ஆணியடிக்கவா?”
“மொட்டையாண்டிக்கு அரோகரா!”.
“மொட்டை… மொட்டை… மோரு குடி!”
போன்ற கோஷங்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க, ராமுவும் ப்ரியாவும் எழுந்து சென்று பார்த்தனர்.
அங்கே மொட்டையடித்துக் கொண்டு வந்திருந்த யாரோ ஒரு மணவனைத்தான் அந்தக் கூட்டம் கிண்டல் செய்து கொண்டிருந்தது.
கூட்டத்தின் நடுவில் தலையை கவிழ்த்தவாரு அமர்ந்து, குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்த மாணவனின் அருகில் சென்று, அவன் தலையை ஆதரவுடன் தடவி கொடுத்தான் ராமு.
மெல்ல நிமிர்ந்து பார்த்த அந்தச் சிறுவன் குமார்தான் என்று தெரிந்ததும், கிண்டல் செய்து கொண்டிருந்த மற்றவர்களை விரட்டியடித்தான் ராமு.
பின்னர் குமாரைத் தனியே அழைத்துச் சென்று, சற்று தள்ளியிருந்த மரத்தடியில் அமர வைத்தான்.
.
“குமார்… என்ன நடந்தது… ஏன் பத்து நாளா வரலை?… என் கிட்டே சொல்லு!… தயங்காமச் சொல்லு!” ராமு அன்பொழுகக் கேட்டான்.
“வந்து… எங்கம்மா பத்து நாளைக்கு முன்னால செத்துப் போச்சு!… அதுக்காக என் தலையை இப்படி மொட்டை அடிச்சு விட்டுட்டாங்க!… அதைப் பார்த்து இவங்கெல்லாம்….” மேற்கொண்டு பேச முடியாமல் வாய் விட்டு அழுதான் குமார்.
“என்ன குமார்… ஒரு ஆம்பளைப் பையன் இப்படியா அழுவாங்க?… இங்க பாரு… எங்க ரெண்டு பேருக்குமே அம்மா இல்லை… செத்து ரெண்டு வருஷம் ஆச்சு… இவள் அழறாளா?… இல்லையே சின்னப் பொண்ணே அழாமல் இருக்கும் போது நீ அழலாமா?” ஒரு தாயைப் போல் ஆறுதல் வார்த்தையென்னும் கைகளால் அவன் மனதை நீவி விட்டான் ராமு.
அவன் மனம் அறியும் அந்த குமாரின் மனம் படும் வேதனையின் வீரியத்தை.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings