in ,

தாய் மண்ணே வணக்கம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“ஹலோ!” சிரித்தபடியே எதிரே வந்தவர்க்கு கை காட்டிவிட்டு நடந்தாள் பிரபா.

நாயைக் கூட்டிக் கொண்டு வாக் போனவர் இவளைப் பார்த்து சிரித்து விட்டுப் போனார்.

காலை வேளை என்றாலும் சில்லென்றிருக்கும் இந்த காற்று சுகமாகத்தான் இருக்கிறது. சிலிர்த்துக் கொண்டாள் அவள்.காற்று மட்டும் தானா? இங்கு எல்லாமே சுகம்தான்.சௌகரியம் தான். A to Z என்பார்களே !அதுமாதிரி எல்லா வசதிகளும்  நிறைந்திருக்கிறது. எதைச் சொல்ல ! எதை விட!

குறிப்பாக பஸ் பயணம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.நெரிசலே இல்லாத வசதியான இருக்கைகளும், ஜம்மென்று உட்கார்ந்து பாட்டு கூட கேட்டுக் கொண்டு போகலாம். தானியங்கி கதவுகள்.

கார்ட் ஸ்வைப் பண்ணி விட்டு அமர்ந்து கொள்ளலாம். டிக்கெட், டிக்கெட் என்று கண்டக்டர் எப்போது வருவாரோ என்ற பதட்டம் கிடையாது. சில்லறை இருக்கிறதா என்ற பிரச்சினை கிடையாது. எத்தனை கிடையாது கள்!

நிமிர்ந்து உட்கார்ந்து மூச்சு விட்டுக் கொண்டாள் பிரபா. சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள் அவள். பச்சைப் பசேலென்று எத்தனை மரங்கள்! அழகாக இலைகளைக் கத்திரித்து விட்ட சின்ன சின்ன செடிகள்.அற்புதமாக இயற்கையை பாதுகாக்கிறார்கள்.

சுற்றிலும் நீர் வளம் நிறைந்த நாடு.அதனாலேயே நிறைய போட் சவாரி களை பார்க்கலாம். சின்னதும் பெரியதுமாக நிறைய சிற்றோடைகள் கால்வாய்கள் என்று கூட சொல்லலாம்.

வந்த புதிதில் அவளுக்கு மலைப்பாக இருந்தது. பார்க்க பார்க்க பிரமிப்பாகவும் இருந்தது. வீடுகள் அமைந்திருந்த விதமே அவளுக்கு வியப்பாக இருந்தது. எப்படி ஃப்ளான் பண்ணுகிறார்கள்!

தெருவுக்கும்  வீட்டுக்கும் குறைந்த பட்சம் இரண்டு அடி தூரமாவது இருக்கும். கார் பார்க்கிங் கார் போக என்று தனி பாதை. ஒரு வீட்டுக்கு இவ்வளவு சௌகரியமா என்று நினைக்கத் தோன்றும்.

ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பூச்செடிகள் விதவிதமான ரோஜாக்கள் தலையாட்டிக் கொண்டிருக்கும் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ மலர்கள்.

குழந்தைகளுக்கென்று ப்ளே ஏரியா பார்த்து பார்த்து அமைத்திருக்கிறார்கள் அலுவலகத்திலும் நிறைய பேர் அவளுக்கு தெரிந்தவர்கள் இருந்தார்கள் .அதனால் மொழி பிரச்சனை இருக்கவில்லை. டச்சு மொழி புரியாது என்றாலும் செய்கையிலும் ஆங்கிலத்திலும் சமாளித்து விடுவாள்.

அவளும் வசந்தும் இரண்டு மாதத்துக்கு ஒரு முறை எங்காவது பிளான் பண்ணிக் கொண்டு போவார்கள். நிறைய நண்பர்கள் வேறு! எல்லோரும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான். கலகலப்பும் சிரிப்புமாக வளைய வருவார்கள்.

மாதம் ஒருமுறை யார் வீட்டிலாவது சேர்ந்து சாப்பிடுவார்கள் அம்மாவைத்தான் அடிக்கடி தேடும். .ஆனால் இப்போதுதான் பேசுவதற்கு எல்லா வசதிகளும் இருக்கின்றனவே!

போன வாரம் கூட வீடியோ சாட் பண்ணும்போது எல்லோரையும் பார்த்தாளே! சரோ கூட அன்று வந்திருந்தாள்.

‘கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ளடி’ என்று பரிகசித்தாளே!அவளுக்கு என்ன தெரியும்! இங்குள்ள வசதிகள் வந்து பார்த்து அனுபவித்தால் தானே தெரியும்! அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமடி! மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.

எல்லோருமாக சேர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது இந்த டாபிக் வரும் .இந்தியா! அதிலும் குறிப்பாக தமிழ்நாடு எப்படி இருக்கிறது! பாவம் மக்கள் இங்கே வாழும் மக்களுக்கும் அவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்?

இங்கே உள்ள ஒரு வீட்டில் அவர்கள் 10 குடித்தனங்கள் வைத்து விடுவார்கள். கார் போக மட்டும் தான் சாலை சரியாக இருக்கும் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் ஏதாவது ஒரு பூக்கடை காய்க்கடை முளைத்து விடும். யாரும் கேட்கவும் முடியாது .

இங்கு அப்படி இல்லை .எல்லாவற்றுக்கும் பயப்படுவார்கள். சில கண்டிப்பான உத்தரவுகள் இருக்கின்றனவே. வீடுகளிலுள்ள குப்பைத் தொட்டிகளில் கூட நம்பர் போட்டு தப்பாக ஏதாவது போட்டால் போட்டோ பிடிக்கப்பட்டு அபராதம் செலுத்த வேண்டும்.

மக்களே கூடிய வரை சரியாகத்தான் நடந்து கொள்வார்கள். ஒழுங்கும் கட்டுப்பாடும் அதிகம். எங்கேயும் குப்பையை பார்க்க முடியாது.

ஆனால் நம்மூரில் பைக்கில் போகும்போது ஹெல்மெட் போடவே எவ்வளவு கெஞ்ச வேண்டியிருக்கிறது !எல்லாம் ஒரு அணுகுமுறைதான் .சட்டம் அதன் வேலையைச் செய்யும் என்ற பயம் இங்கு இருக்கும்.

அதை மீற முடியாது. உன்னால் என்ன செய்ய முடியும்! என்ற திமிர்த்தனமான பேச்சு இங்கே கிடையாது. அதனால் நாடு சுத்தமாக இருக்கிறது .சைக்கிள்களுக்கு தனிப்பாதை.

சின்னப் பையன்கள் கூட தைரியமாக செல்லலாம். நாய்களுக்கு கூட தனியாக ஒரு வழி அமைத்திருக்கிறார்கள்..

நம் நாட்டில் ஏன் இப்படி கட்டுப்பாடு இல்லை! சட்டங்கள் சாதாரணமாக மீறப்படுகின்றனவே.!

ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களையும் அபிப்ராயங்களையும் பரிமாறிக் கொண்டார்கள்.

ராகவ் சொன்னான். “எங்கே  சட்டம் வேலை செய்யுது! பணம் தான் வேலை செய்கிறது! இருப்பவர்கள் வசதியாகவும் இல்லாதவர்கள் வறுமையிலும் வாடுவதுதான்  நம் நாட்டு நிலைமை.”

“வசதியானவர்கள் நல்ல வீடு கார் என்று எல்லாவற்றையும் நன்றாக  நிறைவாக அனுபவிப்பார்கள், மற்றவர்கள் பஸ்ஸில் ட்ரெயினிங் நெரிசலுக்கிடையில் பயணம் செய்வார்கள்.”

“அதனால்தான் பாதிப்பேர் பாரினில் செட்டில் ஆகி விடுகிறார்கள். நம்முடைய மக்களும் பலர் பொருளாதாரத்தில் நன்றாகத்தான் இருக்கிறார்கள். “

“ஏர்போர்ட்டில் பார் ! எத்தனை பெற்றவர்கள் அவர்கள் பிள்ளைகளை தேடி வருகிறார்கள் !

நமக்கும் ஆசை இருக்கிறது நம் பெற்றோர்கள் இதையெல்லாம் பார்க்க வேண்டும் என்று. அவர்களும் இங்கு வந்த சந்தோஷமாக இருந்துவிட்டு போகிறார்கள்.”

“எத்தனை அரசியல்வாதிகள் செல்வந்தர்கள் இப்படி பயணம் மேற்கொண்டிருப்பார்கள்!”

 “ஏன் அவர்களுக்கெல்லாம் நம் நாட்டுக்கு என்று எதுவும் செய்யத்தோன்றுவதே இல்லை?”

 ராம் கேட்க அருண் பதில் சொன்னான்.

“எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தின் மீது பழி போடுவது நமக்கு வழக்கமாகிவிட்டது.”

ராம் சொன்னான்.

“ஔவையார் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘வரப்புயர’ என்று மன்னனைப் பாடினாராம் அவர். வயல்களில் கரையை உயர்த்தும் போது   தேக்க வைக்கும்  நீர் பெருகும். அப்படி நீர் பெருகும் போது வளம் அதிகமாவதால் நெல் உயரும் ,அதாவது விளைச்சல் அதிகமாகும் . அப்படி விளைச்சல் அதிகமானால்  குடிமக்கள்  நிலைமையும் உயரும், குடிமக்கள் உயரும் போது இயல்பாகவே மன்னன் வாழ்வும் உயரும், சிறப்பாகும், என்று சொன்னாராம்.”

“இது இப்போ எதுக்கு சொல்றே!”

“இல்லே ! வளர்ச்சிங்கிறது அடிமட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். கல்வியோ, பொருளாதாரமோ  முதல் நிலையிலிருப்பவர்கள் உயர்த்தப்படும் போது இயல்பாகவே தானாகவே மற்ற துறைகளும் உயரும் என்பது என்னுடைய கருத்து.”

“கட்டுப்பாடு, சட்டம் எல்லாம் ஒரே மாதிரியாக சாமான்யனிலிருந்து சரித்திரம் படைப்பவன் வரை ஒரே மாதிரியாக இருந்தால் நம் நாடும் சிறப்பாக மாறிவிடும்.”

“நிறைய பேர் சீர்திருத்தங்கள் செய்து கொண்டு தானிருக்கிறார்கள். பல இளைஞர்கள் ஏழை எளியவர்களுக்கு வசதி செய்துதருகிறார்கள். கல்வி , சமுதாய முன்னேற்றத்துக்கும் உதவுகிறார்கள்.

அயல்நாடுகளில் வசிக்கும் நம்முடைய சகோதரர்கள் ஒன்று சேர்ந்து நிறைய ஆக்கப் பணிகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

வெளியே தெரியவில்லை என்றாலும் நம் நாடும் முன்னேறிச் கொண்டுதானிருக்கிறது.

இருட்டு இருட்டு என்று பழிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியாவது ஏற்றி வைக்க முயற்சி செய்யலாம்! “

‘வெல் ஸெட்!’ என்று  அனைவரும் கை தட்டினார்கள் .

பிரபா பூரிப்பாக உணர்ந்தாள். எங்கிருந்தாலும் நம் நாடு என்பது தனி தானே!

எத்தனை இளைஞர்கள் நம்நாட்டிலிருந்து சென்று நம்முடைய கலாச்சாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

‘பூமியிலிருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!”சாந்தி நிலையம்’ படப்பாடல் அவள் நினைவு அலைகளில் எதிரொலித்தது.

எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. தங்கள் அனுபவங்களை சிறுகதையாக எளிய வடிவில், சிறப்பான வடிவமைப்பு.
    மேலும் இன்னும் பல (சிறு)கதைகள் அமைய வாழ்த்துக்கள்

தொடு வானம் தொடும் தூரம்தான்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்

26 வயதினிலே! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்