எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த கட்டிடத்தின் உள்ளே போலீஸ் வேன் வந்து நின்றதும், அங்கே ஒரே பரபரப்பு. அப்பார்டமெண்ட்டின் மூன்று தளங்களிலிருந்தவர்களும் கீழே இறங்கி வந்து விட்டனர்.
“என்ன ஆச்சு! என்ன ஆச்சு? “
ஒருவருக்கொருவர் பரபரப்பாக கேட்டுக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் வாய் திறந்தார்.
“இங்கே ரஞ்சனி யாரு?”
அவள் முன் வந்தாள். ‘நான்தான்.’
கண்ணீரும் கம்பலையுமாக நின்ற அவளை அப்போதுதான் எல்லோருமே நன்றாகப் பார்த்தனர்.ஒருவருக்கொருவர் கேள்விக்குறி களை பரிமாறிக் கொண்டிருக்கும் போதே அவள் பேசினாள்.
“என் பெண்தான் இன்ஸ்பெக்டர் காணோம்.. மூன்று மணிக்கே வருகிறேன் என்று சொன்னவள் இன்னும் காணவில்லை. அவளுடைய செல்லுக்கு அடித்தாலும் பதில் இல்லை”.
‘உங்கள் பெண் எங்கே வேலை பார்க்கிறாள்?”
‘அவள் பத்தாவது படிக்கிறாள் சார்’.
புருவத்தை சுருக்கினார் இன்ஸ்பெக்டர்.
‘பத்தாவது படிக்கிற பெண் கையில் செல்போனா? பள்ளியில் அனுமதி உண்டா?’ அவள் ஒரு நிமிடம் திகைத்தாள் பின் தொடர்ந்தாள்.
“ஸ்கூல் நேரத்தில் உபயோகிக்க மாட்டாள் சார். மற்றபடி ஏதாவது அவசரம் என்றால் யூஸ் பண்ண”
“சரி இதை பிறகு கவனிக்கலாம். முதலில் உங்கள் பெண் காணாமல் போனதற்கு யாரையாவது சந்தேகப் படுகிறீர்களா? வேறு ஏதாவது பின்னணி உண்டா?
“தாமதமே இல்லாமல் அவள் பதிலிறுத்தாள். ‘சந்தேகமே இல்லாமல் ராஜா தான் சார்.’
‘ராஜாவா ! யார் அவன்? ‘
‘எங்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மென் சார். குடித்துவிட்டு சதா வம்புதான் செய்வான். முந்தா நாள் கூட என் பெண்ணோட ஒரே தகராறு’
சுற்றி நின்ற அத்தனை பேரும் திடுக்கிட்டனர்.
‘சார் ராஜா செய்திருக்க மாட்டான் .அவன் நல்லவன் சார்.’
முதல் தளத்துக்காரர் குரல் கொடுக்க மற்றவர்களும் ஆமோதித்தனர்.
ரஞ்சனி ஆவேசமாக குறுக்கிட்டாள்.
‘குடிப்பான் தானே! அப்புறம் என்ன? சார் பொய் சொல்றவங்களை கூட மன்னிச்சுடலாம். அட! திருடர்களை கூட போனால் போகிறது வயிற்றுப்பிழைப்புக்காக திருடுகிறார்கள் என்று சொல்லி விடலாம்.ஆனால் குடியை எப்படி சார் நியாயப் படுத்துவீர்கள்! அவன் குடிகாரன் சார். என் பெண்ணை எங்கே வைத்திருக்கிறானோ தெரியவில்லை.சீக்கிரம் கண்டுபிடித்து கொடுங்கள் சார் ப்ளீஸ்!’
அவள் இறைஞ்சுவதை பார்த்து மற்றவர்கள் மலைத்துப் போயினர்.
இன்ஸ்பெக்டர் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டார். சுற்றியிருந்தவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும் திகைப்பும் அவரை யோசிக்க வைத்தன.
ஒரு முடிவுக்கு வந்தவராக லேடி இன்ஸ்பெக்டரை அழைத்தார் அவர்.
“இவர்களுடன் போய் அந்தப் பெண்ணின் அறையை கொஞ்சம் சோதனை செய்யுங்கள். நான் இவர்களுடன் பேசிவிட்டு வருகிறேன்.”
அவர்கள் மேலே ஏறிச் சென்றதும் அங்கிருந்த ஒருவரை அழைத்தார்.
“உங்களுடைய அசோசியேஷன் செக்ரட்டரியை பார்க்க வேண்டும்.”
“நான் தான் சார்”, முன் வந்தார் வெங்கட்.
“சார், நான் பேங்கில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். நானும் என் மனைவியும் தான் இங்கிருக்கிறோம்.”
“ஓகே !நீங்கள் சொல்லுங்கள் .அந்த ராஜா எப்படிப்பட்டவன்? “
“நல்லவன் சார். இந்த அம்மா சொல்றதிலே ஒரு பர்சன்ட் கூட உண்மை இல்லை .”
“அப்புறம் எதற்காக அவன் மீது பழியை போடணும்!”
“சார் ! அந்தப் பொண்ணு பத்தாவது தான் படிக்குது என்றாலும் தினமுமே லேட்டாகத்தான் வரும். அடிக்கடி விலையுயர்ந்த டிரஸ் போட்டு போகும். ஸ்கூல் போற பெண் யூனிபார்ம் கிடையாதா என்று நாங்கள் எல்லோருமே கேட்போம். அதற்கு அது பர்த்டே பார்ட்டி, ஃப்ரெண்ட்ஸ் கெட்டுகெதர் என்று ஏதாவது சொல்லும்.”
‘அந்த ராஜாவைப் பார்க்க வேண்டுமே! அவன் வீடு எங்கே இருக்கிறது தெரியுமா? அவன் எங்கிருக்கிறான் என்று பார்த்து விடலாம். இதில் எது உண்மை என்று தெரிந்துவிடும்.’
“செல்லில் கூப்பிட்டாலே போதுமே !”என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சுரேஷ் முன் வந்தான்.
“எனக்குத் தெரியும் சார் அந்த அண்ணன் வீடு.”
“எப்படி தெரியும் !”என்று கேட்டார் அவர்.
“ஒரு முறை ப்ளே கிரவுண்டில் விளையாடிவிட்டு வரும்போது அடிபட்டு விட்டது. பக்கத்திலிருந்த அவர்தான் ஓடி வந்து உதவி பண்ணினார். சைக்கிளில் வீட்டிலும் கொண்டு வந்து விட்டார்.”
“ரொம்ப நல்லவன் சார்.ஒருமுறை என் புடவை பாக்கெட் ஆட்டோவில் தவற விட்டதை சரியாக கொண்டு வந்து கொடுத்தார். இத்தனைக்கும் அவன் அப்போது தான் புதிதாக சேர்ந்திருந்தான்”
மற்றவர்களும் வாய்ப் பூட்டு கழன்றதைப் போல பேச ஆரம்பித்தார்கள்.
‘எந்த வீட்டிலே எந்த பிரச்னை என்றாலும் உடனே வந்து உதவுவான் சார். காஸ் சிலிண்டர் மாற்ற ட்யூப் லைட் போட என்று எல்லா வேலையும் அத்துப்படி. சார், அது தவிர ஒருதரம் லிஃப்ட் நின்று இரண்டு பேர் மாட்டிக்கொண்ட போது கூட சமயோசிதமாக பக்கத்து டீக்கடையில் இருந்த லிஃப்ட் உதவியாளர்களை பார்த்து கூட்டி வந்தான்”
‘ஓ! ‘என்று அவர் புருவங்கள் உயர்ந்தன.
“அது மட்டுமில்லை சார். எங்கள் கார் பார்க்கிங்கில் தெரியாதவர்கள் வண்டியை உள்ளே விடவே மாட்டான். எவ்வளவோ பேர் அவனுக்கு தனியாக ரூபாய் கொடுக்கிறேன் என்று சொன்ன போதும் மறுத்துவிட்டான். ஃப்ளாட் காரர்களுக்கு சொந்தக்காரர்கள் என்றால் சொல்லுங்கள் என்று ஒரே போடாக போட்டு விடுவான்.”
“இத்தனை சொல்கிறீர்கள்! ஆனால் அந்த அம்மா குடிகாரன் என்று சொல்கிறார்களே!”
“குடிப்பான் தான் சார். ஆனால் இவங்க சொல்றது மாதிரி மெகா குடிகாரன் இல்லை. யார்தான் சார் குடிக்கவில்லை. ஆட்டோக்காரன் வண்டி ஓட்டும் போதே ஃபுல் லோடில்தான் வருகிறான். அதிக பணம் கேட்டு தகராறு வேறு பண்ணுவான். ஒருதரம் இறங்கறதுக்கு முன்னாலேயே வண்டியை எடுத்துவிட்டான்”.
‘ஸோ நீங்கள் குடியை நியாயப்படுத்துகிறீர்கள் அப்படித் தானே ! ‘அவர், அவர்களைப் பேச விட்டு விஷயங்களை சேகரித்தார். எங்கே தப்பு நடந்திருக்கிறது என்று தெரிய வேண்டுமே!
“அப்படியில்லை சார்! நாங்கள் யார் நியாயப்படுத்த? நம்ம சொல்லி யாராவது கேட்பார்களா? நாம்தான் ஒதுங்கிப் போக வேண்டியிருக்கிறது. கவர்ன்மென்ட் ஸ்கூல் வாசலில் எப்போதும் குடிகாரர்கள் போட்டு விட்டு போகும் பாட்டில்கள் கிடக்கும். அதை கூட நாங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும்.”
ஒரு டீச்சர் சொல்ல மற்றவர்களும் ஆமோதித்தனர்.
“முன்பு எல்லாம் குடிக்கிறவங்க தங்களை மற்றவர்கள் பார்த்து விடுவார்களே என்று பயப்படுவார்கள். இப்போ நாம் தான் அவர்களைப் பார்க்கவே அசிங்கப்பட வேண்டி இருக்கிறது. சுயநினைவே இல்லாமல் உடை கலைந்து கண்ட இடங்களில் தாறு மாறாய் படுத்துக் கொண்டு.”
ராஜாவைக் கூட்டிக்கொண்டு சுரேஷ் வரவே அவர்கள் பேச்சு தடைப்பட்டது.
“நீதான் ராஜாவா! இங்கே அனு என்ற பெண்ணைக் காணோமாமே! உனக்கு ஏதாவது தெரியுமா?” அவன் யோசித்தான்.
“பக்கத்திலேயே அந்தப் பொண்ணோட க்ளாஸ்மேட் வீடு இருக்கு சார். நான் போய் கூட்டி வரேன்.”
“அவள் வந்து இன்னிக்கு ஸ்கூலே கிடையாதே!” என்றதும் அவர் திடுக்கிட்டார்.
அவள் எங்கே போயிருக்க முடியும்? நிஜமாகவே யாராவது கடத்தியிருப்பார்களா? அவள் அம்மா ஒருவரைக் கை காட்டுகிறாள். அவனோ இங்கே தான் இருக்கிறான். அவருடைய போலீஸ் மூளை கேள்விகளை கேட்டது.
“சார்! ஒரு விஷயம்”, என்று குறுக்கிட்டான் ராஜா.
“அந்தப் பொண்ணு அனு அடிக்கடி ஒருத்தன் கூட ஸ்கூட்டரில், காரில் வந்து இறங்கும். அதை சொல்லப் போய் தான் அந்த அம்மா என்கிட்ட சண்டைக்கு வந்தது. எதுக்கும் இருக்கட்டும்னு இரண்டு வண்டி நம்பரையும் நோட் பண்ணி வைத்திருக்கிறேன்.” இன்ஸ்பெக்டர் துள்ளினார்.
“சீக்கிரம் கொண்டா! “
அவன் கொண்டு வந்த நம்பரை வைத்து தன் டிபார்ட்மெண்ட் ஆட்களுக்கு சரமாரியாக உத்தரவுகளை பிறப்பித்தார்.
“பயப்பட வேண்டாம். சிறிது நேரத்தில் அனு எங்கே இருக்கிறாள் என்று தெரிந்துவிடும்”.
பதட்டமான சூழ்நிலை மாறி கொஞ்சம் சகஜமானார்கள் எல்லோரும்.
சொன்ன மாதிரியே அந்த காரை ட்ரேஸ் அவுட் செய்து அந்த இளைஞனையும் அனுவையும் கூட்டி கொண்டு வந்து விட்டனர்.
வழக்கமான செல்லில் படம் பிடித்து பயமுறுத்தும் அந்த கேவலமான நாடகம்தான் அங்கே அரங்கேறியிருக்கிறது.
ஏதோ நல்ல காலம், அந்தப் பெண்ணை அவன் எதுவும் செய்வதற்கு முன் கண்டுபிடித்து விட்டார்கள்.
மழையில் நனைந்த கோழி மாதிரி வெட வெடத்துக் கொண்டு நின்ற அவளைக் கடுமையாக பார்த்தார்.
“பத்தாவது படிக்கும்போதே செல்லா என்று அப்போதே சந்தேகப்பட்டேன். கொஞ்சம் கூட அறிவே கிடையாதா?”
அவள் தலை குனிந்து நின்றாள். எல்லோர் முன்பும் அவமானப்பட்டு நிற்கும் அவலம் முகத்தை தூக்க முடியாமல் செய்தது.
ரஞ்சனியைப் பார்த்து சீறினார் அவர்.
“பொறுப்பில்லாமல் பெண்ணை வளர்த்து விட்டு அடுத்தவன் மேல் பழியைப் போடப் பார்த்தாயே!”
அவள் ஏதோ சொல்ல முன் வந்தாள்.
அவர் தடுத்தார்.
“போதும் ! உன் வீட்டை செக் பண்ணினவங்க வந்து ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க. வீடாவே இல்லை. சந்தைக்கடை மாதிரி ஒரே குப்பை என்று. எப்போதும் செல்லும் சீரியலும் தான் வாழ்க்கையா? இன்று ஸ்கூல் இல்லை என்பது கூட உனக்கு தெரியவில்லை. பெத்தவங்க அலட்சியமாக இருந்து விட்டு கடைசியில் எங்களுக்குத்தான் தலைவலி.”
அவர் கோபம் அடங்கவே இல்லை. “யாரோ ஒருவர் மீது பழி சொன்னால் அவனைப் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விட்டாய்! அவனை பழி தீர்க்கும் நேரமா இது! உன் பெண்ணை காப்பாற்றியதே அவன்தான். அவன் மட்டும் அந்த நம்பரை நோட் பண்ணி வைத்திருக்கா விட்டால் இன்னும் எவ்வளவு நேரம் போயிருக்குமோ! அதற்குள் இவள் எந்த நிலைமைக்கு ஆளாகியிருப்பாளோ!”
படபடவென்று பொரிந்த அவர் ‘நாம் கிளம்பலாம்’ என்று அவரது ஆட்களுக்கு உத்தரவிட்டார்.
‘கிளம்பு ! நீயும் தான்’ என்றார் ராஜாவைப் பார்த்து.அவன் திடுக்கிட்டான்.
‘நான் என்ன செய்தேன்!’
‘என்ன செய்தாயா? வேலை நேரத்தில் குடிக்கிறது தப்பில்லையா! இவங்க எல்லாம் உனக்கு நல்ல பேர் கொடுத்ததால் நீ தப்பித்தாய். இல்லைன்னா உன்னைத்தான் முதலில் உள்ளே தள்ளியிருப்போம்.மயிரிழையில் தப்பித்து இருக்கிறாய் ! பார்த்து நடந்து கொள்” என்று அவன் தோளில் தட்டி விட்டு.எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை புரிந்தார்
“உங்களால்தான் இந்த கேஸ் சீக்கிரம் முடிக்க முடிந்தது!”
அவர் அந்த வேனில் ஏறியதும் அது அந்த காம்பவுண்டை விட்டு வேகமாக வெளியேறியது. சுற்றி நின்று கொண்டிருந்த எல்லோரும் ரஞ்சனியையும் அனுவையும் துச்சமாகப் பார்த்துவிட்டு அவரவர் வீடு நோக்கி நடந்தார்கள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings