எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஹால் களை கட்டியிருந்தது. பிறந்தநாள் பார்ட்டி என்பதால் பலூன்களும் பர்த்டே ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு கலகலப்பாக காட்சியளித்தது.
ராம் ஒரு கப் டீயை உறிஞ்சிய படி நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தான்..
ஏழு வயதுப் பையனின் பிறந்த நாள் என்பதால் நிறைய சிறுவர்களும் காணப்பட்டனர். அவர்களுக்காக சாக்லேட்களும் பிஸ்கட்டுகளும் தட்டுகளில் நிரம்பியிருந்தன.கேக் வெட்ட நேரமாகவில்லை என்பதால் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் பேசிக் கொண்டிருந்த பெரியவர்களும் அந்த இடத்தைத்திருவிழாக் கூட்டமாக ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஒரே அலுவலகத்தில் பணி புரிபவர்கள் என்பதால் கேலியும் கிண்டலுமாக உற்சாகம் பொங்கி வழிந்தது.
ராம் சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.எப்போதும் போலவே சுஜி அங்கிருந்தவர்கள் உடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
மனைவியிடம் ராமுக்கு மிகவும் பிடித்த விஷயம் அவளுடைய உற்சாகமான பேச்சு , அளவான ஒப்பனை.மனதுக்குள் ரசித்தவனாக திரும்பியவனை அங்கிருந்த மீன் தொட்டி கவர்ந்தது.
பல வண்ண மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டு நீந்திக் கொண்டிருந்தன.
மீன்களை பார்த்தால் மனஅழுத்தம் குறையும் என்பார்கள்.ஏனோ தெரியவில்லை ராம் மனதில் மாதங்கியின் உருவம் தெரிந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்றாலும் அந்த நிகழ்வுகளை மறக்க முடியவில்லை.
அம்மா அப்பாவுடன் போய்ப்பார்த்த அந்தப் பெண்.
அழகாக இருந்தாள். வசதி , அந்தஸ்து எல்லாமே ஓரளவுக்கு சமமாக இருந்து
அவர்கள் எல்லோருக்குமே மிகவும் பிடித்துவிட்ட நிலையில் அவள் பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்திருக்கிறாள் என்று தெரிய வந்தது..
ஏதோ கல்லூரியில்சேர்க்கும் நேரத்தில் உடல்நலம் சரியில்லாமல் போக ஒரு வருடம் கடந்து விட்டது.அவளும் அத்தனை முனைப்பு காட்டாததால். அப்படியே விட்டு விட்டோம் என்றார்கள்.
‘படிக்காத பெண்ணா! எனக்கு ஒத்து வராது ‘
என்று அங்கேயே மறுப்பு தெரிவித்து விட்டான் ராம். ‘ஒரு டிகிரி கூட முடிக்காத பெண்ணை நான் கல்யாணம் செஞ்சுக்க முடியாது.’
‘படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படத்தின் கதாநாயகியைப் போல் அவன் மனதில் அந்தப்புள்ளி விழுந்து விட்டது.இரு தரப்பு பெற்றோருமே எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ராம் அசையவில்லை. அந்த கோட்டிலேயே நின்றான்.
“என்னோட எதிர்பார்ப்புகளை இந்தப் பெண்ணால் நிறை வேற்றமுடியாது.”
பல விதமான மனிதர்களுடன் பேச பழக வேண்டும்.வேலை பார்க்க வேண்டும் என்றெல்லாம் கோட்டை கட்டி வைத்திருந்தான் அவன்.
மறுபடியும் மறுபடியும் அவர்கள் பேச ,ராம் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். “உங்க பொண்ணு ஒரு தொட்டியிலே வளர்க்கிற மீன் மாதிரி . என்னோடது கடல் மாதிரி உலகம். இதுசரிப்பட்டு வராது.”சட்டென்று முறித்துக் கொண்டுகிளம்பிவிட்டான்.
இன்று வரை அவன் செய்தது சரி என்றே தோன்றுகிறது. சுஜியும் அவன் நினைத்தது போல அமைந்தாள்.வாழ்க்கை சந்தோஷமாக ஓடிக் கொண்டிருக்கிறது.படபட வென்று கேட்ட கைதட்டல் அவன் சிந்தனையை கலைத்தது.கேக் வெட்டியாச்சு போல ! அவன் எழுந்து மற்றவர்களுடன் கலந்துகொண்டான். வந்திருந்த எல்லோருக்கும் சாப்பாடு தயாராக இருந்தது. மாலை நேரம் என்பதால் சிற்றுண்டி, கலந்த சாதம், ஸ்வீட் ,ஐஸ்கிரீம் என்று
அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். சுவை பிரமாதமாக இருந்ததால் ரசித்து சாப்பிட்டார்கள்.
வழக்கம் போலவே யார் கேட்டரிங் என்ற கேள்வி வந்தது.
இது வரை அவர்கள் எத்தனையோ பார்ட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சுவை புதிது.
மெயின் ரோட்டில் புதிதாக ஆரம்பித்திருக்கிறார்கள் .ஸ்வீட்ஸ் தயாரிப்புடன் கேட்டரிங்கும் எடுத்து பண்ணுகிறார்களாம்.
மோகன் சொன்னான். “முதலில் ரொம்ப யோசனையாக இருந்தது. நல்ல வேளை டேஸ்ட் நல்லாயிருக்கு. “
அவன் சந்தோஷப் பட்டுக் கொண்டான்.
எல்லோருடனும் சிரித்து பேசி விடைபெற்று வரும்போது மிகவும் நேரமாகி விட்டது.
ஐடியில் இருக்கும் மக்கள் எப்போதும் இயந்திரமயமாக வேலை செய்து செய்து மிஷினாகவே மாறியிருப்பார்கள்.இப்படி எப்போதாவது கிடைக்கும் நேரங்கள் அவர்களுடைய எனர்ஜி லெவலைக் கூட்டி விடும்.
மறுபடி அவர்கள் மனம் விட்டு பேசமுடிவது இது மாதிரி கொண்டாட்டங்களில்தான்.வயிறு மட்டுமல்லாது மனமும் நிறைந்திருந்தது இருவருக்கும்.
“அந்த ஸ்வீட் நல்லா இருந்தது இல்லை! நமக்கு கொஞ்சம் வாங்கிக்கொண்டு போவோமா!”
அவன் சம்மதித்து வண்டியைத் திருப்பினான்.சொன்ன மாதிரியே சரியான லொகேஷனில் தான் அமைந்திருந்தது.நல்ல கூட்டமும் இருந்தது.
“உனக்கு என்ன ஸ்வீட் வேண்டும்! இப்போ சாப்பிட்டதா? இல்ல வேற எதுவுமா?” கேட்டபடியே உள்ளே சென்ற ராம் திகைத்துப் போய் நின்றான். அடிக்கடி அவன் மன அலையில் வந்து மோதும் அந்த மாதங்கிதான் அங்கே நின்றாள்.அவளுக்கு தன்னை நினைவு இருக்குமோ என்ற சந்தேகத்தில் பேசாமல் நின்றான் அவன்.
“என்ன பாக்குறீங்க ! இது எங்க கடைதான். என்னோட கைப்பக்குவத்தில்தான் எல்லாம் தயாராகிறது.”.
அவன் அயர்ந்து போனான்.
அவனுடைய ஒருமாத சம்பளம் ஒருமணி நேரத்தில் அவள் கையில் கிடைக்கிறது.
பிஸினஸ் என்றால் அப்படித்தான்!
இன்றைக்கு வருவதை வைத்து முடிவு எடுக்க முடியாது. மனம் கணக்கு போட்டது.
ஸ்வீட்ஸ் வாங்கிக் கொண்டு வெளியேறிய ராம் ,’ஒரு நிமிடம் ‘என்றதும் திரும்பினான்.
‘மிஸ்டர், என்னை ஞாபகமிருக்கா! மூன்று வருடத்துக்கே முன்னே பார்த்தோமே!’
“ஆமாம்! நீங்க செட்டில் ஆனது பார்த்து ரொம்ப சந்தோஷம்”
“தாங்க்யூ ! நான் சொல்ல வந்ததே வேற.! என்ன சொன்னீங்க ! தொட்டி மீன் அப்படின்னு ஞாபகமிருக்கா?”
அவன் பேசாமல் நின்றான்.
“நீங்க சொன்னது சரிதான். தொட்டின்னாலும் ஆறுன்னாலும் கடலுன்னாலும் மீன் மீன் தான். கொட்டாங்கச்சி தண்ணீரிலே விட்டா கூட நீந்தத்தான் செய்யும். தன்னம்பிக்கையும் தைரியமும் மட்டும் இருந்தால் போதும்” பெண்களை அவ்வளவு சாதாரணமாக எடை போடாதீங்க!”
அவன் திகைத்துப் போய் நிற்க, அவள் சந்தோஷமாக, வெகுநாட்களாக மனதில் வைத்திருந்த அழுத்தம் நீங்கியவளாக உள்ளே சென்றாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings