in ,

சுடிதார் போட்ட எரிமலை ஒன்று (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

    அது மின் வாரிய ஊழியர்கள் குடியிருப்புப் பகுதி சத்தியமங்கலம் ரோட்டில் இருந்து சுத்தமாய் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருக்கும் அந்த ஏரியாவுக்கு ஒரு நாளைக்கு மூன்றே முறைதான் பஸ் வந்து விட்டுப் போகும்.

     காலை எட்டரை மணி பஸ்ஸைப் பிடிப்பதற்காக எட்டு மணிக்கே பஸ் டெர்மினஸில் வந்து காத்துக் கிடந்தேன் நான்.  அதை மிஸ் பண்ணிட்டோம்ன்னா அடுத்து மதியம் பனிரெண்டரைக்குத்தான் பஸ்.

     நேரம் ஆக… ஆக… ஒருவரொருவராய்ச் சேர கிட்டத்தட்ட இருபது பேர் கூடி விட்டனர்.

     அப்போது என் பார்வை எதிர்ப்புறம் எங்களுக்கு முதுகை காட்டியபடி நின்ற அந்த சுடிதார் பெண்ணின் மீது விழுந்தது.

     “என்னது… எல்லோரும் பஸ்ஸுக்காக இந்தப்பக்கம் நின்னுட்டிருக்கோம்…  அந்தப் பெண் மட்டும் தனியா அந்தப் பக்கத்துல நின்னுட்டிருக்கு… அதுவும் திரும்பி சுவற்றை பார்த்துக்கிட்டு இந்தப்பக்கம் நிற்கிறவங்களுக்கெல்லாம் முதுகைக் காட்டிக்கிட்டு நிக்குது!… நேத்திக்கும் இதே மாதிரிதான் நின்னுட்டிருந்துச்சு… அப்படி என்ன இருக்கு அந்தச் செவுத்துல?” நானும் என் கண்களை தேய்த்துத் தேய்த்து அந்தச் சுவற்றைப் பார்த்தேன்.  

ம்ஹும்… ஒன்றுமே இல்லை.  “அட… அட்லீஸ்ட் ஒரு சினிமா போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தாலும்… சரி… அதைத்தான் பார்க்குது!”ன்னு விட்டுடலாம்… ஆனா… அது வெறும் பிளைன் சுவராய் அல்ல இருக்குது!.. ஏதோ சம்திங் இருக்கு…. என்னவாயிருக்கும்?” யோசித்தேன்.

என் குருவி மூளைக்கு எட்டவில்லை.  “சரி… அந்தப் பொண்ணு கிட்டவே கேட்டுட்டாப் போச்சு!” முடிவு செய்தவனாய் அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றேன்.

     நான் பக்கத்தில் சென்று நின்று, லேசாகக் கனைத்தும் கூட அந்தப் பெண் திரும்பவில்லை. ஒருவேளை செவிடோ?… இல்லை… தெய்வமகன் சிவாஜி மாதிரி மூஞ்சியெல்லாம் கோரமாய் இருக்குமோ?”.

     ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,  “எக்ஸ்க்யூஸ் மி மேடம்!” என்றேன்.

     சட்டெனத் திரும்பியவளை பார்த்ததும் ஒரு கணம் மூச்சுத் திணறிவிட்டேன்.

     அழகுன்னா அழகு… அப்படியொரு அழகு!… உலக அழகிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விடும் அளவுக்கு பேரழகு.

     அப்புறம் ஏன் இப்படி திரும்பி நின்று கொள்கிறாள்?… என் மனம் சஸ்பென்ஸைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது. என் உதடுகள் கேட்டு விடத் துடித்தன.

     எடுத்த எடுப்பில் கேட்டால் சொல்லத் தயங்குவாள், கொஞ்சம் பேச்சுக் கொடுத்து விட்டு அப்புறமாய் கேட்கலாம், என்று முடிவு செய்தவனாய், “மேடம்… வாட்ஸ் த டைம்?” கேட்டேன்.

     கழுத்தைத் திருப்பி என்னை எரித்து விடுவது போல் பார்த்தாளே தவிர பதில் சொல்லவில்லை.

     ஒரு சிறிய அமைதிக்குப்பின்,  “மேடம் பஸ் இன்னும் போகலைதானே? சும்மாவாகிலும் கேட்டேன்.

     என்னை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்,  “ஸ்டுப்பிட்…. பஸ் ஸ்டாண்டுல அத்தனை பேர் நின்னுட்டிருக்காங்கல்ல?… அப்புறமென்ன இப்படியொரு கேள்வி?” எரிமலையாய்க் கக்கினாள்.

     எதிர் வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களெல்லாம் என்னை ஒரு மாதிரியாய்ப் பார்க்க, பேசாமல் திரும்பி விடலாமா? என யோசித்தேன்.
“சரி… இவ்வளவு தூரம் வந்தாச்சு… கேட்காம விடக் கூடாது!”.

      “மேடம் நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க நான் போயிடறேன்!… நீங்களும் எங்களை மாதிரி அதே பஸ்ஸுக்காகத்தான் வெயிட் பண்றீங்க!… அப்புறம் ஏன் எங்களோட வந்து நிக்காம… எங்களுக்கு எதிர்ப்பக்ம் வந்து… எங்களுக்கு முதுகைக் காமிச்சிட்டு நிக்கிறீங்க?… ஏதாவது வேண்டுதலா… இல்லை அந்த சுவர்ல உங்களுக்கு ஏதாச்சும் தெரியுதா?” கேட்டே விட்டே.

     திமிராய்ச் சிரித்தவள்,  “இப்ப நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கறேன்… நீங்க பதில் சொல்லுங்க!… நான் பேரழகியா?… வெறும் அழகியா?.. இல்ல சுமார் ரகமா?” கேட்டாள்.

     “இதிலென்ன சந்தேகம்?… சத்தியமா நீங்க பேரழகிதான்!”. என்றேன்.

     “அதான்… அதனாலதான்… இந்தப்பக்கம் வந்து நிற்கிறேன்!”.

     “புரியலையே?”

     “இப்ப நான் பேரழகி என்பதினால்தான்.. இந்தப் பக்கமா ஒதுங்கி… திரும்பி நின்னுட்டிருக்கற என்னைத் தேடி வந்து என்கிட்ட,  “டைம் என்ன?… பஸ் போயிடுச்சா?”ன்னு அசட்டுத்தனமாய்க் கேட்டு பயங்கரமா ஜொள்ளு விடறீங்க நீங்க!… நெனச்சுப் பாருங்க… இங்கே நிற்கும் போதே… இப்படின்னா அந்தப்பக்கம் வந்து உங்களுக்கு நடுவுல நின்னா… என்னாகும்?… அப்பப்பா ஆளாளுக்கு பார்வையாலேயே பலாத்காரம் பண்ணியிருப்பீங்க!”

தான் ஒரு அழகி என்கிற மமதையில் அவள் அப்படிப் பேசியது என் தன்மானத்தை தூண்ட, “அப்படின்னா… அங்க நிற்கிற ஆம்பளைங்க எல்லாருமே ஜொள்ளு விடற ஆளுங்க!ன்னு சொல்றீங்களா?”. கோபமாய்க் கேட்டேன்.

     “கண்டிப்பா… அதிலென்ன சந்தேகம்?… சந்தர்ப்பம் கிடைக்காததுனால நல்லவங்களா தோற்றமளிக்கிறாங்க… சந்தர்ப்பம் கிடைக்கிற பட்சத்தில் அத்தனை பேருமே எல்லாத்துக்கும் தயாராவாங்க!”

     “பளார்”ரென்று முகத்தில் அறை விழுந்தது போலிருந்தது எனக்கு.  “என்னவொரு திமிரு?… என்னவொரு அகம்பாவம்?… இவளையெல்லாம்….” மனசுக்குள் கருவிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன்.

     நான்கு நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பேப்பர் வேல்யூவேஷன் பணியெல்லாம் முடிந்து ஊருக்கு திரும்பிச் செல்ல அதே பஸ் ஸ்டாண்டில், அதே காலை நேரத்தில் நின்றிருந்தேன்.

     என்னை பஸ் ஏற்றி விட என் மாமாவும் உடன் வந்திருந்தார்.

     அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

     “பட…பட”வென்று பைக்கில் வந்த அந்த இரண்டு இளைஞர்கள் எதிர்ப்புறம் தனியாய் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நோக்கித் தங்கள் பாஇக்கைச் செலுத்த, எனக்கு அது சற்று வித்தியாசமாய்ப்பட்டது.  அப்பெண்ணின் பின்புறம் செல்லும் போது, பைக்கை ஓட்டுபவன் வேகத்தைச் சற்று மட்டுப்படுத்த, பின் புறம் அமர்ந்திருந்தவன் அவள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பின்புறமாய்ப் பற்றியிழுக்க, வண்டியின் வேகம் அதிகரித்தது.

     “தடால்!” என்று தரையில் விழுந்தவள் சுதாரித்து எழுவதற்குள் அவள் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி பைக்கின் பில்லியனில் அமர்ந்திருந்தவன் கைக்குப் போனது. அடுத்த விநாடி பைக் வேகமாக பறந்தது.

     “ஐயோ… என் செயினை அறுத்திட்டுப் போறாங்க!… என் செயினை அறுத்திட்டுப் போறாங்க!” என்று எதிர் திசையில் நின்று கொண்டிருந்த ஆண்களைப் பார்த்துக் கத்தினாள்.  கதறினாள்.

     அவள் கத்தலுக்கு யாரும் எந்தவித ரியாக்ஷனும் செய்யவில்லை.

     நான் என் மாமாவிடம் திரும்பி,  “மாமா உங்க டி.வி.எஸ்- 5ஐ ஸ்டார்ட் பண்ணுங்க… அவங்களைத் துரத்திட்டுப் போய்ப் பிடிக்கலாம்!” என்றேன் பரபரப்பாய்.

      “வேண்டாம் தம்பி… அந்த பொம்பளைக்கு ரொம்ப திமிர்… அவளுக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்” என்றான் ஒருவன்.

     அங்கிருந்தவர் மற்றவ்ர்களும் என்னைத் தடுக்க, நான் யார் பேச்சையும் கேட்காமல் என்னுடைய மாமாவின் டி.வி.எஸ்-50யை நானே எடுத்துக் கொண்டு வேகமாக முறுக்கினேன்.

     என்னுடைய நல்ல நேரமோ, அல்லது அந்த செயின் திருடர்களின் கெட்ட நேரமோ தெரியவில்லை அவர்களுடைய பைக் நடுவழியில் நின்று போக அவர்கள் இருவரும் பைக்கைத் தள்ளியபடி கொண்டிருந்தனர்.

     நான் அவர்களின் குறுக்கே நின்று, இறங்கி அவர்களைத் தாக்க முயல, சட்டென்று தங்களிடமிருந்த அந்தச் செயினை என் மேல் வீசி விட்டு ஆளுக்கொரு திசையில் ஓடினர்.

     திரும்பவும் நான் அந்தப் பேருந்து நிலையத்திற்கு வந்த போது அங்கிருந்தவர்கள்  கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

     அப்போதும் அந்தப் பெண் எதிர் திசையில், சுவற்றைப் பார்த்துத் திரும்பி நின்று அழுது கொண்டிருந்தாள்.

     நான் நேரே அவளிடம் சென்று, என் கையிலிருந்த செயினை கொடுக்க,  “வெடுக்”கென்று பறித்துக் கொண்டவள், அடுத்துக் கேட்ட கேள்வியில் என் முகம்
பேய் அறைந்தது போலானது.

     அவளை முறைத்தபடியே அங்கிருந்து நகர்ந்து என் மாமாவின் அருகில் சென்று நின்றேன்.

     “என்னப்பா?… செயின் மீட்டுக் கொண்டு வந்து குடுத்தியே?… வாங்கிட்டு அவ என்ன சொன்னா?… தேங்க்ஸ் சொன்னாளா?… இல்லை  “ஐ லவ் யூ” சொன்னாளா?” புன்னகையோடு மாமா கேட்க.

     “இதெல்லாம் உன்னோட செட்அப்பா?… எத்தனை கொடுத்தே அந்த ரெண்டு பேருக்கும்?”னு  கேட்டா மாமா” என்றேன்.

     மாமா இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டு, நான் சொன்னதை ஜீரணித்துக் கொண்டார்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தானே தன் தலையில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கூடடையும் பயணத்தில் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை