இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஆழ்ந்த மாலை உறக்கம். எப்பொழுது தூங்கினோம் இது காலையா மாலையா என்ன நிகழ்ந்தது என்று எதுவும் புரியாமல் எழுந்து அமர்ந்தேன்.
காலையில் எழுந்து மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் ஏற ஐயன் சுக்ரோஸ் எனப்படும் நரம்பில் செலுத்தும் ஊசியை போட்டுக் கொண்டு வந்தேன்.
ஒரு பாட்டில் இறங்க இரண்டு மணி நேரம் ஆனது. சற்று சோர்வினை ஏற்படுத்தியது இரத்த ஊசி. முடிந்ததும் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டு உறங்கினேன்.
நன்கு உறங்கி எழுந்தும் தெளிவு ஏற்படவில்லை. நேரம் பார்த்தேன் ஆறு இருபது.
அம்மா வீட்டில் இருக்கும் எனக்கு ஆதி இரண்டு முறை அலைபேசியில் அழைப்பு விடுத்திருந்தார்.
“சொல்லு ஆதி போன் பண்ணிருக்க”
“வாக்கிங் போலாமா கவி”
“கொஞ்சம் டையர்டா இருக்கு”
“ஒரு நாள் விட்டா அப்புறம் தள்ளித் தள்ளிப் போகும்.. வா கொஞ்ச தூரம் மட்டும் நடந்துட்டு வரலாம்”
ஆதி சொல்வதும் சரியெனப்பட்டது.
முகம் கழுவிக் கொண்டு கொஞ்சம் நீர் மட்டும் அருந்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டோம்.
எங்கள் தெருவில் இருந்து சாலைக்கு வந்து பின் பக்கத்து தெருவில் நுழைந்து வீட்டிற்குச் செல்லவே அரைமணி நேரம் ஆகிவிடும்.
பொறுமையாக நடந்து வந்தோம். சாலைகளில் கடைகளை வேடிக்கை பார்த்துவிட்டு வீடு திரும்பினோம். வீட்டிற்குள் நுழையும் பொழுது சித்தியின் குரல் கேட்டது.
“கவியினியாள் எங்க வாக்கிங்கா”
“ஆமா சித்தி.. சும்மா இந்த தெருவுல போய்ட்டு பக்கத்து தெருவுல வந்துட்டோம்”
“நட நட அதான் குழந்தைக்கும் நல்லது உனக்கும் நல்லது”
“பசங்க என்ன பண்றாங்க சித்தி”
“ஹாசினி டியூசன் போயிருக்கா கூப்ட போணும்.. இந்த சண்டே நீ பிரீயா”
“ஒன்னும் வேலை இல்லை சித்தி.. வீட்ல தான் இருப்பேன்.. மண்டே தான் ஊருக்கு கிளம்பனும் ஆபீஸ் போகணும்”
“அப்போ சண்டே மூணு சித்தப்பாவும் சேர்ந்து உனக்கு விருந்து போடலாம்னு இருக்கோம் எல்லாரும் வந்துடுங்க”
“இருக்கட்டும் சித்தி எதுக்கு”
“என்ன எதுக்குன்னு கேக்கற.. வான்னு கூப்ட்டா வா.. எங்க பொண்ணு முழுகாம இருக்கா நாங்க செய்யக் கூடாதா”
அவர் சொல்லிக் கொண்டிருந்த நேரம் மற்ற சித்திகளும் வந்தார்கள்.
“கவி என்ன வேணும் உனக்கு”
“உங்க இஷ்டம் சித்தி”
“சொல்லு.. உனக்கு என்ன இஷ்டம்” சித்ரா சித்தி ஆவலாக கேட்டார்.
“எப்படியும் எல்லாரும் ஒரே மாதிரி சாப்பாடு செஞ்சி போட்ருபாங்க.. அதே மாங்காய் சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம்.. வேறென்ன வேணும்” திலகவதி சித்தி மனதில் இருந்ததை கூறினார்.
“கவிக்கு மீன் பிடிக்கும்.. சிக்கன் மட்டன் மீன் செஞ்சரலாமா” ராணி சித்தி எனக்கு பிடித்ததையும் சேர்த்துக் கூறினார்.
“நான் வெஜ் செஞ்சா வேலை அதிகம் சித்தி.. சிம்பிள்லா பணிக்கலாம்”
எல்லோர் குடும்பங்களும் சேர்ந்து செய்யும் பொழுது அசைவம் கட்டுபடி ஆகுமா என்கிற பயத்தில் கூறினேன்.
“அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்.. உனக்கு ஓகே யா”
இப்படி அன்பை பொழியும் பொழுது என்ன சொல்வது சரி என்றேன்.
“ஐயன் ஊசிக்கு ரெண்டு நாள் கொஞ்சம் சோர்வா இருக்கும்.. சண்டே சரியாயிடும் நல்லா சாப்டணும்.. மாப்பிள்ளை உங்களுக்கு என்ன பிடிக்கும்னு கேக்கலன்னு கோச்சிக்காதிங்க” ஆதியிடம் கேட்கத் தொடங்கினார் சித்தி.
“அப்படியெல்லாம் இல்லை அத்தை.. கவியினியாளுக்கு என்ன பிடிக்குமோ அதே செய்ங்க”
“நீங்களும் தான மாப்பிள்ளை அப்பா ஆகப் போறீங்க.. அதுக்கப்புறம் உங்களுக்கு எவ்ளோ பொறுப்பு வந்துடும்.. இப்போவே நல்லா சாப்ட்டுக்கோங்க”
“ஹா ஹா அத்தை அதெல்லாம் கவி எங்களை நல்லா பாத்துக்குவா”
“எங்க பொண்ணு ஆச்சே”
வார நாட்களில் சோர்வாக சென்றது. மருத்துவமனை ஊசி என்று முடிந்தது.
ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியோடு எதிர்கொண்டேன். சித்தப்பா சித்திகளுடனும் அவர்கள் குழந்தைகளுடனும் விருந்து உணவுடனும் கழிக்கப் போகும் மகிழ்ச்சி.
அப்பா அம்மா அமுதினி ஆதி என எல்லாரும் ஒன்று கூடினோம். காலையில் இட்லியும் குடல் குழம்பும். மதியத்திற்கு மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், பொறித்த மீன், அவித்த முட்டை என ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையை செய்து அசத்தி இருந்தார்கள்.
முதலில் மீனைப் பொறித்தவுடன் சூடாக கொண்டு வந்து கொடுத்தார்கள். சாப்பாடு சாப்பிடும் பொழுது மீன் சாப்பிட்டால் அதிகம் உண்ண முடியாது என்பதால்.
மீன் சாப்பிட்டு அரைமணி நேரம் கழித்து பிரியாணி சிக்கன் மட்டனை சாப்பிட்டேன்.
போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பரிமாறிக் கொண்டே இருந்தார்கள்.
சாப்பிட்டு முடித்தப் பின் பொதினா எலுமிச்சை சாறு கொடுத்தார்கள். இறுதியாக அந்த சுவை நாக்கில் ஒட்டி நீடித்தது.
கை கழுவ எழுந்தேன்.
“கவிய பாரு இடது கை ஊனி எழுந்திரிக்கிறா.. அப்போ பையன் தான” என்றார் கடைசி சித்தி
“வயிறு பாத்தா பொண்ணு மாதிரி தெரியுது” என்றார் நடு சித்தி
“உனக்கு இனிப்பு பிடிச்சிருக்கா.. காரமா”
“இனிப்பு தான் சித்தி சாப்படனும் போல இருக்கு”
“அப்போ பொண்ணு தான்” என்றார் முதல் சித்தி.
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை கணித்து கொண்டிருந்தார்கள்.
எனக்கு ஒரு சில நேரம் பையன் எனத் தோன்றுகிறது.. சில நேரம் பொண்ணு தான் என்றும் ஆசை வருகிறது. பார்ப்போம் எதுவாயினும் சரி.
மொட்டை மாட்டிக்கு சென்று சிறிது நேரம் நடந்தேன். உண்டதை செரிக்க தூயக் காற்றை சுவாசித்து உடலிற்கு உதவி செய்தேன்.
மேலே சித்தப்பா குழந்தைகள் மினி கிச்சன் விளையாடுகிறேன் என்று விறகு வைத்து தீ மூட்டி பாத்திரம் வைத்து சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
பார்க்கவே ஆசையாக இருந்தது. குழந்தை பருவம் உண்மையில் எத்தனை இனிமையானது. கவலைகள் அற்ற சிறுபிள்ளை பருவம். அமுதினியும் நானும் அவர்களோடு சேர்ந்து விளையாடினோம்.
“கவி ஆறு மணி ஷோ படத்துக்குப் போலாமா?”
“இல்லை சித்தப்பா வேணாம்”
“உனக்கு பிடிச்ச படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு”
“ப்ரக்னன்ட் ஆன அப்புறம் இன்னும் நான் தியேட்டரே போகல சித்தப்பா”
“கதை தெரியாத படம்னா யோசிக்கலாம் தெரிஞ்ச கதை நீ படிச்ச கதை தான”
“ஆமா சித்தப்பா அதுக்கு பயம் இல்லை.. சவுண்ட் எபெக்ட்டுக்கு குழந்தை பயந்துட்டா”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது முடிலைன்னா பாதில கூட வந்தர்லாம்”
“அப்போ போலாம்னு சொல்றிங்களா”
“அட ஆமா கவி.. ரெடியாகு போலாம்.. ஆதி அமுதினி எல்லாரும் கிளம்புங்க”
வயிற்றில் குழந்தையுடன் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கப் போகிறது?
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings