இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அண்ணாகிட்ட என் சந்தேகங்களை கேக்க ஆரம்பிச்சேன், யாரும் சொல்லாமலேயே படிக்க ஆரம்பிச்சேன், புரிய ஆரம்பிச்சது. ராஜு அண்ணனுக்கு ஆச்சரியம், இப்பல்லாம் தலைல குட்டறது இல்லை, என் முதல் டெர்ம் மார்க்கை பாத்துட்டு, செல்லமா தலைல குட்டினான், கன்னத்தை கிள்ளி முத்தமிட்டான், என் தங்கையாச்சேனு பெருமை வேற.
எங்க முசுடு சயின்ஸ் மிஸ் சரளா டீச்சர் கூட எனக்கு தனி கவனம் கொடுத்தாங்க.எனக்கே சந்தேகம் என்னால கூட நல்லா படிக்க முடியறதேனு. நாட்கள், மாதங்கள்னு ஓடறது. அனுவல் டேல மேடைல கூப்பிட்டு ஸ்கூல் டாப்பர்னு பரிசு கொடுத்ததை நம்ப முடியலை.
என்னை விட நூருன்னிசாவுக்கு ரொம்ப பெருமை.தன் வீட்டுக்கு திரைபோட்ட சைக்கிள் ரிக்ஷால கூட்டிண்டு போனா.அவளோட அம்மா, அப்பா, அண்ணன்மார்கள் எல்லோருமே என்னிடம் பிரியமாக பழகினார்கள்.
எங்க நூருன்னிசாவுக்கு உன்னை மாதிரி தோழி கிடைச்சதுல எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமை என்றார்கள். அன்பை பொழிந்தார்கள், பரிசுகளை கை கொள்ளாது திணித்தார்கள். அவர்களுக்கு தெரியல்லை நூருன்னிசா இல்லைன்னா எனக்கு படிப்புல இவ்வளவு ஆர்வம் வந்திருக்காதுன்னு.
எப்படி இத்தனை மாற்றம் என்னுள் எனக்கே தெரியலை, பள்ளி இறுதி ஆண்டு பரிட்சையில் மாநில அளவில் தரவரிசை பட்டியலில் பெயர் வந்ததும், அம்மா ஆசைப்படி மதுரை மெடிகல் காலேஜ்ல இடம் கிடைத்ததும். அம்மா உக்கார வச்சு திருஷ்டி சுத்திப் போட்டா.
அண்ணா என்னைத் தூக்கி சக்கரமா சுத்தறான். அப்பா கட்சிக்காரங்ககிட்டயெல்லாம் பீத்திக்கறார். அக்கா ஶ்ரீரங்கம், திருச்சினு ஊர்ஊரா மாத்தல்ல போய் வேலை பாக்கறா, ஆடிட் ஜெனரல் ஆபீஸ் வேலையாம். கல்யாணம் பண்ணிண்டு எங்கே வேணா சுத்துடினு அம்மா, அப்பா ரெண்டு பேரும் சொல்றா, கேட்டாதானே.
நான் எம்.பி்.பி.எஸ் மூணாவது வருஷம் வரப்ப செல்வி அக்கா மதுரை வந்தா, கூட வேலை பாக்கறவர்னு கூட. இவர் பிரகாஷ் இவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்றா. அம்மாவுக்கு ஷாக், அக்காவை தனியா கூப்பிட்டு , “ஏண்டி வயசானவரா இருக்காரேடி 45 வயசு இருக்கும் போலயே”
“இல்லைம்மா 38 வயசுதான் ஆறது, நம்மவாதான்,பாவம் ஒரே ஒரு பெண் குழந்தையை வச்சிண்டு கஷ்டப் படறார்.
“அடிப்பாவி அது வேறயா, ரெண்டாம் கல்யாணமா, உனக்கு என்னடி குறை ஏன் இப்படி போய் விழுந்தே”
“அவர் நல்லவர் எனக்கு பிடிச்சிருக்கு, என் கூட வேலை பாக்கறார். மெட்ராஸ்ல செட்டில் ஆகப் போறோம்.”
“எங்க சம்மதம் கேக்க வந்தாப்பல தெரியலையே, உன் முடிவை சொல்லன்னா வந்திருக்கே. எப்ப கல்யாணம் எங்கே கல்யாணம் சொல்லு அட்சதை போட்டு வாழ்த்திட்டு போறோம்.”
அப்பா ஒண்ணும் பேசாம எழுந்து போயிட்டார். அண்ணாதான் அந்த ஆளோட சாத்வீகமா பேசினான். பிரகாஷ் உண்மைல மிக நல்ல மனிதர், UPSC ரேங்க்ல உயர்ந்த பதவில இருக்கறவர்.
முதல் மனைவி ஒரு பெண் குழந்தையை கொடுத்துட்டு பிரசவத்துலய போய் சேந்துட்டா. குழந்தையை கஷ்டப்பட்டு இவர்தான் வளர்க்கறார், ஒரு விதவை அக்கா கூட இருக்கா உதவிக்கு. இவ்வளவும் துருவித் தெரிஞ்சுண்டது அண்ணாதான்.
அப்பறம் என்ன, அக்காவுக்கு மதுரை மீனாட்சி கோவில்ல சிம்பிளா ஒரு கல்யாணம், பெரிய அளவுல பாண்டியன் ஹோட்டல்ல ரிசப்ஷன்.அந்த குழந்தை அனுஷா ஒரு அழகான பொம்மை. 3 வது படிக்கறதாம் என்ன ஒரு புத்திசாலித்தனம். இப்பவே இங்லீஷ்ல பொளந்து கட்றது. அக்காவுக்கு அவ மேல ரொம்ப பிரியம். இப்படியாகத்தானே எங்க குடும்பத்துல ஒரு பெண் இன்ஸ்டன்ட் அம்மாவாக செட்டில் ஆயிட்டா.
ஒரு பொண்ணுன்னா காதல் வலைல எப்பவவாது விழுந்துடணும்ன்றது எழுதப்படாத விதியோ என்னவோ தெரியலை (ஆண்களுக்கும் கூட இதே விதிதானோ தெரியலை)
சில பேரு இந்தக் காலத்தில் தைரியமா ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் கடைசி வரை சொல்லாமல் மனதிலேயே வைத்துக் கொண்டு பெற்றோர் சொன்ன வரனை கட்டிக் கொண்டு இறுதி மூச்சு வரை ரகசியப் பெட்டகத்தில் வைத்து அவ்வப்போது அசை போடுகிறார்கள்.
எனக்கும் அந்த நாள் வரத்தான் செஞ்சது.
இன்டெர்ன்ஷிப் செய்யறப்ப, சீனியர் சவுந்தரபாண்டியனை பாத்தவுடனே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சு. அவன் எம்.டி. எர்ஸ்கின் ஹாஸ்பிடல்ல மகப்பேறு வார்டில் முதல் கேஸ் எனக்கு, கைடிங் டாக்டர் சவுந்தரபாண்டியன்.ஒரு சீனியர் நர்ஸ் உதவிக்கு.
பேஷண்ட் நிறைமாச கர்ப்பிணி, 20 வயசு பொண்ணு, இப்பவோ அப்பவோனு ஆனா டெலிவரிவலி மட்டும் வராம இழுக்கறது. மஞ்சக்காமாலை வேற.தவியா தவிக்கறா சொல்லத் தெரியாம.சரியான வெயில் காலம், முதக் கேசே இப்படியா தரணும்.அந்த பேஷண்டை விட எனக்குதான் பயம் ஜாஸ்தி.
டாக்டர் சவுந்தரபாண்டியன் ரவுண்ட்ல வரப்ப கூடவே நடப்பேன், நல்ல உயரமா, சிவப்பா, கம்பீரமான ஆண்மகன்,ஆனா சரியான முசுடு சிரிப்பே முகத்துல பாத்ததில்லை. கடுவன் பூனை மாதிரி மூஞ்சியை வச்சிண்டு ஒவ்வொரு பெட்டா சுத்தி, ரிபோர்ட் அட்டையை மட்டும் பாத்துட்டு டிரீட்மெண்டை எழுதுவான்.
சில வார்த்தைகள் மட்டும் முத்தாய் உதிரும்.பூரா பூரா பெண்கள் வார்டு, ஆனா தவறான பார்வை எப்பவும் கிடையாது, ஜூனியர் பெண்களையோ இல்லை நர்சையோதான் விட்டு பரிசோதனை செய்யச் சொல்வான்.
“மிஸ் பத்மஜா இந்தப் பெண்ணுக்கு டிரிப்ஸ் ஏத்துங்க, மக்னீஷயம் கம்மியா இருக்கா லேப் டெக்னீஷியனை செக் பண்ணச் சொல்லுங்க, வார்டுக்குள்ள கொஞ்சம் நடக்கட்டும், இவங்க ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லி ஃபுட்டோட பப்பாளி, பைனாப்பிள் ஃபுரூட்ஸ் கொடுக்கச் சொல்லுங்க. நர்சை விட்டு வயித்துல லேசா ரெண்டு பக்கமும் ஜாஸ்தி அழுத்தாம கீழ் நோக்கி மசாஜ் பண்ணி விடுங்க, நாளைக்குள்ளே டெலிவரி பெயின் வரணும், இல்லைன்னா இன்ஜெக்ஷன் போட்டுதான் லேபர் பெயின் வரவழைக்கணும்” கடகடனு சொல்லிட்டே நடந்த அழகை ரசிச்சேன்.
“பெட் நம்பர் 7, இது மூணாவது டிரைமஸ்டர் தெரியும் தானே 2 டேஸ்ல லேபர் பெய்ன் வரலைன்னா இவங்களுக்கு உடனே ஆபரேஷன் பண்ண டீன் கிட்ட சொல்லிடுங்க, நான் ரெண்டு நாள், மெட்ராஸ் மெடிகல் கான்பரென்ஸ் போறேன்.”
ஒவ்வொரு பெட்டா பாத்துட்டே, குறிப்புகளை அந்த கிளிப் போட்ட ஷீட்ல எழுதின வேகம். இதை பாத்து ரசிக்கதான் தோன்றியது எனக்கு.
மெதுவா, மெதுவா என் மனசுல கள்ளம் புகுந்தது.ஆனா நான் பெண்ணாச்சே இந்த முசுடுகிட்ட நானா எப்படி போய் சொல்றது. வேலை தவிர வேற பேச்சே கிடையாது, அதுவும் முகத்தை பாத்து பேசறதே கிடையாது.
என்னை சரியா கவனிச்சிருப்பானா தெரியலை. மத்த ஆண்கள் எல்லாம் என் ஒரு புன்னகைக்கு ஏங்குவது எனக்கு தெரியும். ஆனா இந்த மக்கு டாக்டருக்குதான் ஒரு பெண் தனக்காக காத்திருப்பது தெரியல்லை.
தீபாவளி டைம்ல 3 நாள் நான் வர முடியாது அக்கா வீட்டுக்கு மெட்ராஸ் போறேன்னு பெர்மிஷன் கேட்டேன் இவன் கிட்ட.
“என்னது 3 நாள் வரமாட்டயா, நான் என்ன பண்றது?”
என் முகத்தை இப்பதான் நேரா பாக்கறான்.
“ஏன், நான் ஒரு சாதாரண இன்டெர்ன், நிறைய லேடி டாக்டர்ஸ் இருக்காங்களே”
“இதுதான் உன் பதிலா”
“புரியலை நீங்க சொல்றது, நான் லீவ்தானே கேட்டேன்”
“எனக்கு பெண்கள்கிட்ட ஜாஸ்தி பெர்சனலா பேசி பழக்கமில்லை”
“அதுக்கு?”
“இல்லை வீட்ல வயசாகுது மேரேஜ் பண்ணிக்கோனு பேரண்ட்ஸ் பிரஷர் கொடுக்கறாங்க”
எனக்கு இப்ப கொஞ்சம் புரிய ஆரம்பிச்சது, திருடன் இவனுக்கும் மனசுல ஆசை இருக்கு, ஆனா சொல்லத் தைரியமில்லை. சரி அவன் வழிலயே கேம் விளையாடலாம்னு என் சிரிப்பை மறைச்சிண்டு,
“ஆமாம் நல்லதுதானே சொல்றாங்க, பொண்ணு பாக்க ஆரம்பிங்க”
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings