in ,

வரமாய் வந்த பிசாசு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

     “ட…மா…ர்.

     சத்தம் கேட்டு சீரியஸாய்க் கதை எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர் திவாகர் நிமிர்ந்தார்.

     ஜன்னலின் கண்ணாடி உடைந்து துண்டுகள் வீட்டிற்குள் சிதறி கிடந்தன. கோபத்துடன் எழுந்து ஜன்னல் அருகே சென்று உடைந்த ஜன்னல் கண்ணாடி ஓட்டை வழியே பார்த்தார்.

     வெளியே எல்.கே.ஜி. படிக்கும் அவரது ஒரே மகன் பாபு கையில் கிரிக்கெட் மட்டையுடன் போர்டிக்கோவில் நின்று கொண்டிருந்தான்.

      “ராஸ்கல்… உன்னோட குறும்புக்கு ஒரு அளவே இல்லையாடா?” என்று கத்தியபடி வேகமாக வெளியே வந்து பாபுவைத்  “தர…தர”வென்று வீட்டிற்குள் இழுத்துச் சென்று முதுகில்  “பளார்… பளார்” என்று இரண்டு வைத்தார்.

     பையனின் கதறல் கேட்டு தாய் மைதிலி ஓடி வந்தாள். “ஐயையோ… எதுக்கு பையனை இப்படி அடிக்கிறீங்க?”.

     பாபுவை திவாகரின் பிடியிலிருந்து விடுவித்தபடி கேட்டாள் மைதிலி.

     “முன்னாடி ரூம் ஜன்னல் கண்ணாடியைப் போய்ப் பார்” என்றார் திவாகர் எரிச்சலுடன்.

     “சரி… சரி… விடுங்க!… குழந்தைதானே?”.

     “என்னது?… குழந்தையா இது?… பிசாசு குட்டிப் பிசாசு!” என்ற திவாகர் மனைவியை பார்த்து ‘வாடாமலர்’ பத்திரிகை எடிட்டர் மூணு தடவை ஃபோன் பண்ணிட்டார். அடுத்த இஷ்யூவுக்கான தொடர்கதையின் அத்தியாயம் இன்னும் வரலைனு… அதை எழுதி அனுப்புறதுக்குள்ளார… இந்த பிசாசால இத்தனை ரகளை!… மனுஷன் எப்படி இத்தனை ஆர்ப்பாட்டத்திற்கு நடுவுல எழுத முடியும்?…” சொல்லியவாறே சென்று மீண்டும் அந்த தொடர்கதையின் அத்தியாயத்தைத் தொடர்ந்தார் திவாகர்.

     “ப…டா…ர்”.

     மீண்டும் ஒரு சத்தம்.  “என்ன ஆச்சு பாபு?… என்ன பண்ணி வெச்சே?” கத்தியபடி எழுந்து வந்த திவாகர் கண்டது தரையில் நொறுங்கிக் கிடந்த பூ ஜாடி.

     “தெரியாமக் கைபட்டு விழுந்துடுச்சுப்பா!… அடிக்காதப்பா… அடிக்காதப்பா” பாபு பயத்தில் நடுங்கினான்.

     அடிக்கப் போன திவாகர் அவன் கெஞ்சலில் பரிதாபப்பட்டு நிறுத்திக் கொண்டு, சமையலறையைப் பார்த்து,  “மைதிலி… இங்கே வந்து பாரு உன்னோட அருமை மகன் பண்ணி வைத்திருக்கிற காரியத்தை!” என்றார் கத்தலாய்.

     வந்து பார்த்தவள்,  “அச்சச்சோ… பையனா இவன்?… ரெட்டை வாலு” என்றபடி அவனை இழுத்துச் சென்று போர்ட்டிகோவில் அமர வைத்தாள்.

     திவாகர் மீண்டும் தொடர்கதையை விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.

பாபுவின் குறும்புகள் அவ்வப்போது இம்சைப்படுத்திக் கொண்டே இருந்தன. அவன் எதையாவது உடைப்பதும், திவாகர் போய்த் திட்டி விட்டு வருவதும் தொடர்கதைக்கு நடுவில் வாடிக்கையாய் நடந்து கொண்டேயிருந்தன. ஆனாலும், திவாகரின் கதையோட்டம் தடைப்படாமல் ஓடிக் கொண்டேயிருந்தது.

     மறுநாள் வங்கியில் காத்திருந்த திவாகரின் மொபைல் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தார்.

     மைதிலி.

“ஊரிலிருந்து அம்மா…. அதான் உங்க அருமை மாமியார் வந்திருக்கிறார்கள்!… நானும் பாபுவும் அம்மா கூட ஊருக்குப் போகப் போறோம்!”.

     “என்ன திடீர்னு?”

“பாபுவுக்குத்தான் எக்ஸாம் முடிஞ்சு ஒன்றரை மாதம் லீவு விட்டாச்சல்ல?”

     “அப்படியா?… எல்.கே.ஜி.க்குக் கூடவா எக்ஸாமா?”.

     “அதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகுது?… எப்பப் பார்த்தாலும் கதை… தொடர்கதை… நாவல்…. இதுதானே தெரியும்?..”

     “சரி… நீங்க கிளம்புங்க பார்த்து… பத்திரமா போயிட்டு வாங்க!” என்றார் திவாகர்

     வீடு திரும்பிய திவாகருக்கு அங்கிருந்த அமைதி சந்தோஷத்தைத் தந்தது.  “ஆஹா… எழுதித் தள்ளலாமே?”

      “வாடாமலர்” பத்திரிக்கைக்கான தொடர்கதையின் அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தார்.

     சிந்தனையே ஓடவில்லை. அரை மணி நேரமாகியும் ஒரு பக்கம்தான் எழுத முடிந்தது. “என்ன ஆச்சு எனக்கு? கற்பனை வளம் குன்றிப் போச்சா?…” தலையை பிய்த்துக் கொண்டார்.

     நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரவு இரண்டரை மணிக்கு முடித்த அந்த அத்தியாயத்தை  “வாடாமலரு”க்கு மெயிலில் அனுப்பி வைத்தார்.

     மூன்று வாரங்கள் கழிந்து வாடாமலர் இதழின் எடிட்டர் லைனில் வந்தார். “ஹலோ மிஸ்டர் நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க… வீட்ல ஏதாவது பிரச்சனையா?  இல்லை… வெளியில் ஏதாவது பிரச்சனையா?” எடிட்டர் கேட்டார்.

      “இல்லையே… ஏன் கேக்குறீங்க?”

      “மூன்று வாரமா உங்க தொடர்கதைல விறுவிறுப்பேயில்லை, தொய்வு விழுந்து விட்டதாகவும், மொக்கை போடுவதாகவும்… நான் சொல்லவில்லை வாசகர் கடிதங்கள் சொல்லுது!… ஒண்ணு ரெண்டல்ல நாற்பது கடிதங்கள்!… மெயிலிலும் அதேதான்… போனிலும் அதேதான்!”

“ஓ… காட்!… என்னாச்சு எனக்கு?” மனசுக்குள் கேட்டுக் கொண்ட திவாகர்,  “ஸாரி சார்… நான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கறேன்!” என்றார் சோகமாய்.

     “நோ ப்ராப்ளம் திவாகர்…. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு… வெளியூர் எங்காவது போயி மனசை ரிலாக்ஸ் பண்ணிட்டு… அப்புறமா கண்டின்யூ பண்ணுங்க!”  ஃபோனை வைத்தார் எடிட்டர்.

     “என்ன ஆச்சு எனக்கு?” திவாகர் மூளையைக் கசக்கினார்.  “ஒண்ணும் புரியவிலையே?”.

     ஒரு மாதத்திற்குப் பிறகு, மாலை வீடு திரும்பிய திவாகர்,  “ஹாய் பாபு… எப்படா ஊரிலிருந்து வந்தே?”  மகனை அணைத்துக் கொண்டார்.

      “நான் அப்பவே வந்துட்டேன்!” என்றது  எல்.கே.ஜி மழலை.

      இரவு.

      திவாகர் தொடர்கதையின் அடுத்த வார அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தார்.

      “டொ….ம்” சத்தமும் “அய்யோ… அய்யோ” அலறலும் கேட்க, எழுந்தோடினார் திவாகர். பாபு மொட்டைமாடிக்கு செல்லும் மாடிப்படிக்கட்டின்  கீழ்ப்படியில் கிடந்தான். நெற்றியில் எலுமிச்சம் பழ அளவிற்கு புடைப்பு.

      “ஆரம்பிச்சிட்டியா?.. கர்மம் பிடித்தவனே… நாலு வாரமா நிம்மதியா எழுதிக்கிட்டிருந்தேன், மறுபடியும் குட்டிப் பிசாசு வந்துருச்சு!” திட்டியபடியே மகனைத் தூக்கியெடுத்து ‘நறுக்’கென்று கிள்ளினார் திவாகர்.

     மொட்டை மாடியிலிருந்து வேகமாய் வந்த மைதிலி திவாகரின் கையிலிருந்து பாபுவைப் பிடுங்கி,  “என்னங்க நீங்க?.. பாவம் அது ஏற்கனவே அடிபட்டுக்கிச்சு நீங்க வேற கிள்ளுறீங்க!” என்றாள்.

     “நான் எழுதுவதற்குத் தொந்தரவு பண்ணினா… சின்ன குழந்தைன்னு கூடப் பார்க்காமல் கிள்ளுவேன்… அடிப்பேன்!”

“டேய்… நீ வாடா… என் கூட!” பாபுவைக் கையோடு மொட்டை மாடிக்கு கூட்டிச் சென்றாள் மைதிலி.

     திவாகர்  “வாடாமலர்” தொடர்கதையைத் தொடர்ந்தார்.

     கதை எழுதும் திவாகரைத் தொந்தரவு செய்ததும், அதற்கு பரிசாக திவாகரின் அடிகளை பெறுவதும் பாபுவின் அன்றாட கடமைகளில் ஒன்றாக மாறியது.  பாபுவின் தொந்தரவுகளுக்கு இடையிலும் வாடா மலருக்கு தொடர்கதையின் அத்தியாயங்களை தவறாமல் அனுப்பி கொண்டிருந்தார் திவாகர்.

      “வாடாமலர்” பத்திரிக்கை ஆஃபீஸ்.

      “வாங்க மிஸ்டர் திவாகர் வாங்க!” எடிட்டர் வரவேற்றார்.

      “சார்!… ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட தொடர்கதைல தொய்வுன்னு வாசகர்கள் அபிப்பிராயப்படுறாங்கன்னு சொன்னீங்க!… இப்ப என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” கேட்டார்.

     “திவாகர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துட்டாரு”ன்னு தொடர்ந்து கடிதங்கள் வருதுப்பா!… ஆமா என்னாச்சு திடீர்னு மூன்று வாரம் கதை விழுந்துடுச்சு?… அப்புறம் திடீர்னு விறுவிறுப்பாயிடுச்சு… என்ன சமாச்சாரம்?”

     “அதான் சார் எனக்கே புரிய மாட்டேங்குது!” என்ற திவாகர் எழுந்து விடை பெற்றார்.

     அன்று இரவு மைதிலியிடம் எடிட்டரை சந்தித்ததையும், பேசியதையும் திவாகர் சொல்ல,

      “பேருதான் பெரிய எழுத்தாளர்!… இந்தச் சின்ன விஷயம் கூட புரியலை!” என்றவள், “அங்க பாருங்க… அமைதியாய்த் தூங்கறான் பாருங்க உங்க பையன் பாபு… அவன்தான் இத்தனை மாற்றங்களுக்கும் காரணம்!”.

     நெற்றியை சுருக்கினார் திவாகர்.

     “புரியலையா?…  தினமும் நீங்க எழுதுறப்ப அவன் உங்களை எத்தனை தொந்தரவு பண்றான்… அந்த தொந்தரவும் அதனால உங்களுக்கு வர்ற கோபமும்தான் உங்க எழுத்தையே வளப்படுத்துது!…. மூணு வாரம் அவன் இல்லாமல் நீங்க அமைதியா உட்கார்ந்து எழுதின அத்தியாயமெல்லாம் தொய்வு!… மறுபடியும் அவனோட தொந்தரவு வந்ததுக்கப்புறம் மீண்டும் விறுவிறுப்பு. ஆக, உங்க பையன்தான் உங்களோட கிரியா ஊக்கி!”.

      “கிரியா ஊக்கி?”.

      “தனக்கு எந்த ரசாயன மாற்றமும் ஏற்படாமல் மற்ற பொருட்களின் ரசாயன மாற்றத்தை தூண்டி விடக் கூடிய ஒரு பொருளுக்குப் பெயர்தான் கிரியாஊக்கி!”.

     திவாகர் விழிக்க.

     “நான் சயின்ஸ் படிச்சவ அதனால அந்த சயின்ஸ் முறையிலேயே சொல்றேன்.  “ஒரு சேர்மம் எத்தகைய வினை வேதி மாற்றத்திற்கும் உட்படாமல் ஒரு வேதி வினையின் வேகத்தை மாற்றினால் அதற்கு கிரியாஊக்கி” என்று பெயர்!”.

திவாகர் தன் தலையை தானே குட்டிக் கொண்டார்.  “இந்த மரமண்டைக்கு இது கூடப் புரியலை பாரு!”.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதுதான் விதியோ… இறைவன் சதியோ (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    உயிரைத் தந்துவிடு (அத்தியாயம் 8) – தி.வள்ளி, திருநெல்வேலி.