இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
நான் யார் தெரியுமா, தெரியாதா. சரி சொல்றேன். எங்க ஊர் மதுரை. என் பேர் தெரியுமா, அதுவும் தெரியாதா. என் பேர் ஆர்.பத்மஜா.
ஆமாம் பெரிய கிளியோபாட்ரானு முனகாதீர்கள், பொறுமையா நான் சொல்றதை கேளுங்க .முழுசா சொல்லவா சுருக்கிச் சொல்லவா? முழுசாவே சொல்றேன் உலகத்துல பொண்ணுங்கன்னா என்ன கஷ்டம்னு அப்பதான் புரியும். பிடிக்கலைனா நாலு திட்டு திட்டிட்டு பாதில கழண்டுக்கங்க, சரியா?
நான் பிறக்கறப்ப அம்மாவோட அம்மா, பாட்டிதான் வீட்லயே பிரசவம் பாத்தாங்களாம். பாட்டி எப்பவும் சொல்வாளாம் பொண்ணா பிறக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கணும், தேவதை தேவதைனு சொல்றாளே, ஒவ்வொரு பொண்ணும் தேவதைதாண்டி. பிறக்கறதுல இருந்து அடுத்தவாளை சந்தோஷப்படுத்தவே பாடு படறவா அவாதான், முதல்ல தன்னை பெற்றவர்களை, கூடப் பிறந்தவாளை, நட்புக்களை, கணவனை, தன் குழந்தைகளை, இப்படி கடைசி வரை எல்லாரையும்..
பாட்டிக்கு என்னவோ தான் பெரிய Gynaecologistனு நினைப்பு. குடும்பத்துல யாருக்கும் பிரசவ வலின்னா இவங்ககிட்ட ஓடி வந்துடுவாங்களாம். சேலம் ரெண்டாவது அக்ரகாரத்துல இருந்த பெரிய வீடு கிட்டத்தட்ட பிரசவ ஆஸ்பத்திரிதான்.
தாத்தா சம்பாரிச்சதுல பாதி இந்த பிரசவத்துக்கு வர சொந்தக்களுக்கு வடிச்சுக் கொட்றதுலயே ஆயிடும்னு எல்லாரும் சொல்வா. வருஷத்துல நாலு பிரசவமாவது பாக்கலைன்னா பாட்டிக்கு நிலை கொள்ளாதாம். அந்தக் காலத்துலதான் ஒரு கட்டுப்பாடும் இல்லையே, பாட்டிக்கு குறை வைக்காம ஏதாவது ஒண்ணு வயித்தை தள்ளிண்டு குடும்பத்தோட வந்து நிக்குமாம்.
இதனால பாட்டிக்கு என்ன பிரயோஜனம் தெரியலை. ஏதோ ஒரு மனதிருப்தியா இருக்குமோ, ஜாஸ்தி போனா குழந்தைக்கு பேர் வச்சு புண்யாஜனம் செய்றப்ப பாட்டியை கூப்பிட்டு ஒரு புடவை வச்சிக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிப்பா. அதுலயே பாட்டிக்கு உச்சி குளுந்துடும். வச்சுக் கொடுக்கற புடவைன்னே அந்தக் காலத்துல கிடைக்கும். அது கட்டிக்க உதவாது, குழந்தைக்கு தூளி கட்ட, கிழிச்சு பீ, மூத்திரம் துடைக்கதான் உதவும்.
அந்த பாட்டியும் இல்லை தாத்தாவும் இல்லை இப்ப, பாவம் என் ஒரே மாமா அவ்வளவு பெரிய வீட்ல தனியா இருக்கார்.
என் கதை சொல்றேன்னு பாட்டி கதை சொல்லிட்டிருக்கேன் பாருங்க. எங்கப்பா ராமபத்திரன் மதுரைல பெரிய சிவில் லாயர். அம்மா பர்வதம் டிகிரி படிச்சிருக்கா, ஆனாலும் ஹவுஸ் ஒய்ஃப்தான்.
எனக்கு முதல்லே ஒரு அக்கா செல்வராணி, அப்பறம் அண்ணன் ராஆஆஆசேந்திரன் எப்பப் பாரு தலைல குட்டுவான் கடங்காரன். நான் படிச்சா என்ன படிக்காட்ட இவனுக்கென்ன.
செல்வி அக்கா நல்லா படிக்கும், அண்ணாவும்தான் எப்பவும் முதல் ரேங்க். அதுக்காக நானும் அப்படி இருக்கணுமா என்ன, படிப்புல அவ்வளவு அக்கறை இல்லை, சுமாராதான் படிப்பேன் (அண்ணா,மக்குப் பிளாஸ்திரின்பான்) எங்கம்மா மாதிரி நான் நல்ல சிவப்பு, முடி கருகருன்னு நீளமா தொங்கறதை பாத்து வீட்டுக்கு வர சொந்தங்கள் கூட தடவிப் பாக்கும், என் பிரெண்ட்ஸ்லாம் நான் ரொம்ப அழகுன்னுவாங்க. அப்பல்லாம் ஜாஸ்தி எனக்கு தெரியாது.
வைகை ஆத்தை ஒட்டி இருக்கற அக்ரகாரத்துல பெரிய வீடு எங்க வீடு. கம்பி கிரில் வச்சு ரெண்டு பக்கம் திண்ணை. முன்னால அப்பாவோட ஆபிஸ் ரூம், அப்பறம் ரெண்டு ரூம், ஒரு சமையலறை, ஸ்டோர் ரூம், கொல்லைப் பக்கம் கிணறு, துணி துவைக்கற கல்லு, குளியலரை, டாய்லட், மூணு தென்னை மரம், கம்பளிப் பூச்சிகள் குடியிருக்கும் முருங்க மரம், அவரைக் கொடி, கருவேப்பிலை செடி, பவளமல்லி, முல்லைனு சொல்லிண்டே போகலாம். அந்த துவைக்கற கல் மேல உக்காந்து புஸ்தகம் படிக்கறது, கனவுலகத்துல சஞ்சரிக்கறது எனக்கு பிடிக்கும்.
சின்ன வயசு எப்படிப் போச்சுன்றது அவ்வளவு முக்கியமில்லை, என்னை மாதிரி பெண்களுக்கே 13 வயசுக்கு மேலேதான் வாழ்க்கைல பல சம்பவங்கள், திருப்பங்கள், அதிர்ச்சிகள், சந்தோஷங்கள், பொய், பித்தலாட்டம் எல்லாம் வரும் போல. தன் உடல் வளர்ச்சியின் ரகசியங்கள், இதை யாரிடமும் பகிர்ந்துக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.
முதல்ல செல்வி அக்காதான் கேட்டாங்க என்னடினு. அக்காதான்னாலும், பயம், வெட்கம் சொல்ல, ஓவென்று அழத்தான் தெரிஞ்சது. அரவணைத்துக் கொண்ட அக்கா, “இதுதானே நடந்தது, எல்லா பெண்களுக்கும் நடக்கறதுதான் நீ வயசுக்கு வந்துட்டே, போ தனியா இரு நானே அம்மாகிட்ட சொல்றேன்.”
அந்த டயத்துல அம்மா நிறைய புத்திமதி சொன்னா, “இனிமே கண்டபடி பசங்க கூட எல்லாம் விளையாடக் கூடாது, பேசக் கூடாது, ஆண்கள்கிட்ட பேச வேண்டிய அவசியம் வந்தா தள்ளி நின்னு பேசணும், எருமை மாடு மாதிரி உரசிண்டு நிக்கக் கூடாது.”
நான் போம்மானு ஓடிப் போயிட்டேன். செல்வி அக்கா என்னை விட ஏழெட்டு வயசு பெரியவ, அவ அவ்வளவு ஒண்ணும் சொல்லலை. ரொம்ப பேசினா அவ ரகசியம் ஒண்ணு எனக்கு தெரியுமே அப்பாகிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்னு பயம் அதான்.
உங்ககிட்ட மட்டும் சொல்லவா, அப்பாவோட ஜூனியர் ராகவன் சார் இருக்காரே அவர் வந்து அப்பப்ப ஒரு கவர் கொடுத்து அக்காகிட்ட தரச் சொல்வார். அதை அப்படியே அக்காகிட்ட கொடுத்துடுவேன் , இப்பதான் தெரிஞ்சது அதெல்லாம் லவ் லெட்டர்னு.
அப்பா இல்லாதப்ப ஆபீஸ் ரூம்ல அக்காவை அந்த ராகவன் சார் கட்டிப் பிடிச்சண்டதை நான் பாத்துட்டேன். அக்கா பதறிப் போய் “அப்பா, அம்மா கிட்ட ஏதும் உளறிடாதே இவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னா”
இன்னொரு நாள் ஆபீஸ் ரூம்ல அப்பாகிட்ட கையெழுத்து வாங்கப் போனா அப்பா இல்லை ராகவன் சார்தான் இருந்தார். “ஏய் குட்டி இங்கே வா”ன்னார். பக்கத்துல போனேன் என்னனு. என் கையை பிடிச்சு இழுத்து மடில உக்கார வச்சிண்டார், இறுக்கி கட்டிப் பிடிச்சிண்டார் அக்காவை கட்டிண்ட மாதிரி.
அக்காவோட நான் நெருக்கமா இருந்ததை யார்கிட்டயும் சொல்லலைதானேன்னார். இல்லைன்னேன். என் சமத்துக் குட்டினு என்னை கட்டிண்டு கன்னத்துல முத்தம் கொடுத்தார். எனக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. அவர் பிடில இருந்து எந்திரிக்கப் பாத்தேன் அவர் கைகள் இன்னும் இறுகின கண்ட இடத்தையும் தொட ஆரம்பிச்சவுடனே உதறிண்டு எழுந்து ஓடிட்டேன்.
அன்னிக்கு ராத்திரி அக்காகிட்டே “ராகவன் சாரை கல்யாணம் பண்ணிக்காதேக்கா அவர் என்னையும் கட்டிப் பிடிச்சிக்கறார், கண்ட இடத்தை தொடறார், அம்மா சொல்லி இருக்கா ஆண்கள் யாரையும் தொட்டுப் பேசக் கூடாது, தொட விடக் கூடாதுனு”
செல்வி அக்கா ஏன் அப்படி அழுதானு எனக்குத் தெரியலை. மறுநாள் கொல்லைப் பக்கம் வெந்நீர் அடுப்புல நிறைய காகிதங்களை போட்டு எரிச்சிண்டிருக்கா கண்ணெல்லாம் கலங்கி இருக்கு சிவப்பா பயமா இருக்கு.
அம்மா என்னடி ஆச்சுனு கேட்டதுக்கு ஈர விறகு கண் எறியறதுன்னா. அஞ்சாறு நாள் அதே மாதிரி இருந்தா. அப்பறம் ஶ்ரீரங்கத்துல போஸ்டிங்னு போயிட்டா, என்ன போஸ்டிங், என்ன வேலைனு அப்ப எனக்கு புரியலை. ராகவன் சாரும் பிராக்டீசை விட்டுட்டு போயிட்டார்.
இப்ப 8வது வகுப்புல நான். இஷ்டமில்லாமதான் போவேன் ஸ்கூலுக்கு. ஜானகி டீச்சரை மட்டும் பிடிக்கும், கலகலப்பா பாடம் நடத்துவாங்க. எனக்கு நெருங்கின தோழினு யாரும் இல்லை.நான் அழகு, மண்டைக்கனம் பிடிச்சவனு நினைச்சு பழக மாட்டேன்றாங்க.
இந்த வருஷம்தான் நூருன்னிசா நல்லா வந்து ஒட்டிக்கறா, எனக்கும் அவளைப் பிடிக்கும். சிவப்பா, அழகா இருந்தா படிப்பாளினு நினைச்சுட்டா போல. எல்லா சந்தேகமும் என்கிட்ட கேப்பா. இவளுக்காகவே கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சேன்.
இந்தத் தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings