in ,

அந்தக் கிணற்றுக்கு மட்டுமே தெரியும் உண்மை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

       வகுப்பு ஆரம்பித்ததிலிருந்தே அந்த மூவரின் செய்கைகளும் கணித ஆசிரியர் பூபதிக்கு சற்று வித்தியாசமாகவே தெரிந்தது. ஒருவன் மற்றவனைப் பார்த்து கண்ணடிப்பதும், பிறகு இருவரும் மூன்றாமவனைப் பார்த்து குறுஞ்சிரிப்பு சிரிப்பதும். சட்டென்று சீரியஸாகப் பாடத்தைக் கவனிப்பது போல் பாசாங்கு செய்வதும், அவரது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்த,  “டேய்… குமார் எழுந்திருடா!… எங்கே இப்ப நான் சொல்லிக் கொடுத்த பார்முலாவை திரும்ப சொல்லு?” கேட்டார்.

     அந்தக் குமார் பேய் முழிமுழிக்க, மற்ற இருவரிடமும் கேட்டார். அவர்களிடமும் அதே முழி.

     “என்ன சமாச்சாரம்?… நானும் அப்போதிருந்தே கவனிச்சிட்டுத்தான் இருக்கேன்!… மூன்று பேரும் ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரித் தெரியுது!… டேய்… என் சங்கதி தெரியுமல்ல?… தொலைச்சுப் போடுவேன் தொலைச்சு… உட்காருங்கடா!” விழிகளை உருட்டிக் கொண்டு அவர் மிரட்ட பயந்து நடுங்கியபடி அமர்ந்தனர் அந்த மூவரும்.

     அதற்குப் பிறகு வகுப்பு முடியும் வரை அவர்களிடம் எந்தச் சலனமும் இல்லை. வகுப்பு முடிந்து வெளியேறிய கணித ஆசிரியர் பூபதி போகிற போக்கில் அவர்களின் நமுட்டுச் சிரிப்பைப் பார்த்தும் பார்க்காதது போல் வெளியேறினார்.  “சம் திங் ராங்!… இவனுக கிட்டே ஏதோ தப்பிருக்கு…”

     வெளியேறியவர் அந்த மூவரும் அமர்ந்திருக்கும் டெஸ்க்கிற்கு பக்கத்திலிருந்த ஜன்னலருகே நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூர்ந்து கவனிக்கலானார்.

     “டேய் அதை எங்கேடா வெச்சிருக்கே?”. ரகு கேட்டான்.

     “சைக்கிள் ஸ்டாண்ட்ல… என்னோட சைக்கிளோட சைடு பாக்ஸ்ல” என்றான் குமார்.

     “சரி நைன்த் ஸ்டாண்டர்டு சுந்தருக்குத் தெரியுமா?” இது ரகு.

     “ம்… சொல்லியாச்சு… சொல்லியாச்சு!… அவன் ஈவினிங் நாலரைக்கு கரெக்டா வந்திடறேன்னு சொல்லிட்டான்”.

     “சரி… எல்லோரும்… எங்கே வரணும்?” கிசுகிசுப்பாய்க் கேட்டான் சுரேஷ்.

     “வேறெங்கே?… வழக்கம் போல ரயில்வே பாலத்துக்குத்தான்.. அங்கதான் யாருமே வர மாட்டாங்க!”.

     பசங்க ஏதோ வேண்டாத வேலை செய்யப் போறானுக… என்பதைப் புரிந்து கொண்ட பூபதி குழப்பமாய் நகர்ந்தார்.

      “என்னவாயிருக்கும்?… ஒன்பதாம் வகுப்புப் படிக்கிற பசங்க என்ன தப்பு செஞ்சிடுவாங்க?… தம் அடிப்பானுகளோ… இல்லை தண்ணி கிண்ணி அடிப்பானுகளோ?… புரியலையே!… சரி எதுவாக இருந்தாலும் சரி…. இன்னிக்கு சாயந்திரம் இவனுகளைக் கையும் களவுமாய்ப் பிடித்து ஹெட் மாஸ்டர் முன்னாடி நிறுத்திடணும்!…”.

     மாலை நாலே முக்கால்.

     அந்த ரயில்வே பாலம் இருக்கும் ஏரியாவில் அவ்வளவாக மனித நடமாட்டமில்லை.

குமார் மட்டும் கையில் ஒரு பெரிய நோட்டுடன் ரயில்வே பாலத்தின் ஓரச் சுவரில் அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் கடா முடாவென்ற சத்தத்துடன் வந்து நின்ற அந்த ஹைதர் காலத்து சைக்கிளிலிருந்து மற்ற மூவரும் இறங்கினர்.

     “ஏண்டா இவ்வளவு லேட்?” எரிச்சலுடன் கேட்டான் குமார்.

     “டேய்… நாங்க மூணு பேரும் ஒரே சைக்கிள்ல ட்ரிபிள்ஸ் வர்றோம்டா… அப்ப மெதுவாய்த்தாண்டா வர முடியும்?” என்றான் ரகு மூச்சு வாங்கியபடி.

     “சரி… சரி… பேசிட்டே இருந்தா யாராவது வந்துருவாங்க… சீக்கிரம் பக்கத்துல வாங்க ஓப்பன் பண்ணலாம்!”.

     முகமெங்கும் ஆர்வம் கொப்பளிக்க, அனைவரும் அருகில் வந்து அமர்ந்ததும் குமார் அந்த பெரிய நோட்டைப் பிரித்தான்.

     உள்ளே…..

     “பள….பள”வென்ற அட்டையுடன் ஒரு புத்தகம்.

     அதுவரை புதர் மறைவிலிருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த கணித ஆசிரியர் பூபதி, தாவி வந்து அந்தப் புத்தகத்தைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தார்.  பேரதிர்ச்சி வாங்கினார்.

     அதில்……

     அரைகுறை ஆடையுடனும்… ஆடையே இல்லாமலும்…. வெளிநாட்டுப் பெண்கள் கலர்ப் படங்களில் சிரித்துக் கொண்டிருந்தனர்.  நடு நடுவில் ஆண் பெண் உறவுப் படங்கள்.

     நிமிர்ந்து அவர்களைப் பார்த்த ஆசிரியரின் விழிகளில் எரிமலைக் குழம்பு கொதித்தது.  “ராஸ்கல்ஸ்… இந்த வேலையைப் பண்ணுவதற்குத்தான் காலையிலிருந்து திட்டம் போட்டீங்களா?”

 
     மாணவர்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது.  சட்டென்று நால்வரும் அவர் கால்களில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தனர்.

     “சார்… சார்… இனிமேல்… இந்த மாதிரி… செய்ய மாட்டோம் சார்!… இந்த ஒரு தடவை எங்களை மன்னிச்சு விட்டுடுங்க சார்… சார்!”.

      “எங்க பேரண்ட்ஸ் கிட்டெ சொல்லிடாதீங்க சார்”

     மாணவச் செல்வங்களின் கண்ணீர்க் கதறலில் எரிமலைக் குழம்பு சற்று குளிர்ந்து போக,  “இத்தோட சரி…. இனிமே இந்த மாதிரி ஏதாச்சும் தவறு செஞ்சீங்க… நேரா ஹெட்மாஸ்டர் கிட்டக் கம்ப்ளைண்ட் பண்ணி… டி.சி. கொடுத்து அனுப்பச் சொல்லிடுவேன்!… அது மட்டுமில்லை… வேற எந்த ஸ்கூல்லேயும் போய்ச் சேர முடியாதபடியும் பண்ணிடுவேன்… ஜாக்கிரதை!… ஏண்டா இந்த வயசுல உங்களுக்கு இதெல்லாம் தேவையாடா?… எங்கிருந்துடா பிடிச்சீங்க… இந்தச் சனியனை?” என்றவர் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தப் புத்தகத்தை ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியிருந்த அந்த பாழுங் கிணற்றினுள் வீசினார்.

     சோகமாய் அதைப் பார்த்த நால்வரும், “சார்…. நாங்க போகலாமா….சார்?”  நடுங்கியபடியே கேட்க.

     “ம்… ஓடுங்க முதல்ல இங்கிருந்து!”. அடிப்பது போல் கையை ஓங்கி விரட்டினார் ஆசிரியர் பூபதி.

     தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று சிட்டாய்ப் பறந்தோடினர் அந்த மாணவர்கள்.

அவர்கள் கண் பார்வையிலிருந்து மறைந்ததும், ஆசிரியர் பூபதி அந்தக் கிணற்றை நோக்கி நடந்தார்.

                               *****
     மறுநாள்.

     அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.

     முன்புற கேட்டருகே வைக்கப்பட்டிருந்த கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த செய்தி, அந்த நான்கு மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

     “நமது பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் திரு பூபதி அவர்கள் நேற்று மாலைஎதிர்பாராத விதமாக ஒரு பாழும் கிணற்றில் விழுந்து இறந்து விட்டார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்”

      அந்தக் கிணற்றுக்கு மட்டுமே தெரியும் உண்மை.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாடக உறவு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    உயர்ந்த பாராட்டு (சிறுகதை) – முகில் தினகரன், கோவை