எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“உங்க வீட்டுக்கு அந்தப் பொண்ணு வேலைக்கு வந்தாளா? “
“யார்! சந்திராவைக் கேட்கிறீர்களா? அவதான் அவ புருஷனுக்கு உடம்பு சரியில்லை என்று ஃபோன் பண்ணினாளே! ஆஸ்பத்திரிக்கு போறதா சொன்னாளே!”
திவ்யா பதில் சொன்னாள்.
“என்ன உடம்போ ! பாதி நாள் வரதில்லை. சிங்க்கில் பாத்திரம் நிரம்பி வழியுது. யார் தேய்க்கிறது! கொஞ்சம் கூட பொறுப்பில்லை!”
“பாவம்! அவள் என்ன செய்வாள்! வேண்டும் என்றா வராமலிருக்கிறாள்! உடம்பு சரியில்லை என்றால் என்ன செய்ய முடியும்! “
“வந்து வேலையை பார்த்து கொடுத்துட்டு போகலாம் இல்லையா! “
திவ்யா அயர்ந்து போனாள்.
எல்லோருக்குமே சந்திராவின் கஷ்டம் தெரியும். நன்றாக வேலை செய்து கொண்டிருந்தவன் திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் அடைந்து கிடக்கிறான். சிறுநீரகம் பழுதாகி விட்டது . டயாலிசிஸ் செய்யும் நிலைமைக்கு வராமல் இருக்க அவள் போராடிக் கொண்டிருக்கிறாள்.
எந்த நோய் ஏழை பணக்காரன் என்று பார்த்து வருகிறது! எந்த ஆஸ்பத்திரியில் ஏழைக்கு என்று தனியாக பார்க்கிறார்கள்! அதிலும் வார்டுகளில் பணியாற்றுபவர்கள் மனிதாபிமானமே பார்ப்பதில்லை!
திவ்யா அவளுக்கு மருத்துவக் காப்பீடு வாங்கிக் கொடுத்தாள்.
“உங்களுக்கு பிரச்சினை இல்லை. அவ வந்தாலும் வராட்டியும் சமாளிச்சுப்பீங்க ! நான் என்ன பண்றது! மாதா மாதம் கரெக்டா பணம் மட்டும் வாங்கிக்கறா இல்லையா!”
“அப்படி இல்லை! எனக்கும் கஷ்டம் தான்! ஆனா என்ன செய்யமுடியும்? “
“இந்த மாதத்திலிருந்து வராத நாளுக்கு கழிச்சுட்டு கொடுக்கலாம் அப்படின்னு நினைக்கிறேன். மூணாவது வீட்டிலும் அதுதான் சொல்றாங்க. நமக்கு மட்டும் என்ன பணம் மரத்திலா காய்க்கிறது? நீங்கதான் அவளுக்கு நிறைய இடம் கொடுத்து வச்சிருக்கீங்க!”
குற்றம் சாட்டும் தொனியில் பேசினாள் பாகீரதி.
“எத்தனையோ செலவழிக்கிறோம் ! இதில் போய் கணக்கு பார்ப்பானேன்!” அவள் இயல்பான குரலில் சொன்னாள்.
“அது எப்படிம்மா! கணக்குன்னா எல்லாம் கணக்குதான்!” திவ்யா பொறுமையாக பதில் சொன்னாள்.
“அலுவலகங்களில் வேலை பார்க்கிறவங்களுக்கு கூட எல்லா சலுகையும் உண்டு . எத்தனையோ விதங்களில் விடுமுறை எடுக்கத்தானே செய்கிறோம்! அடித்தட்டு மனிதர்களுக்கு மட்டும் இந்த சலுகைகள் கிடைக்கக்கூடாதா!”
“நீங்க இப்படித்தான் பேசுவீங்க! பெரிய தர்மப் பிரபுன்னு நினைப்பு.”
“சாதாரணமாக செய்றதுக்கு எல்லாம் தர்மப்பிரபு முத்திரை குத்தாதீங்க. இது ரொம்ப சின்ன விஷயம். வேலை செய்ய கஷ்டமாயிருக்கு அப்படின்னு சொன்னீங்க அதுசரி! அவ மட்டும் என்ன படுத்து ரெஸ்ட் எடுக்கவா லீவு போடுறா!”
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ! எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருவோம்.”
மறுபடியும் பாகீரதி அழுத்தமாக பேசினாள்.
“நீங்க பிறந்த நாள், கல்யாண நாள் ,அப்ப எல்லாம் தேடிப் போய் இல்லங்களில் சாப்பாடு கொடுக்கிறீங்க. அது நீங்க கொடுக்காட்டியும் வேற யார் வேண்டுமானாலும் கொடுப்பாங்க. ஆனா இவளை மாதிரி ஆளுங்களுக்கு நம்மளை மாதிரி தெரிஞ்சவங்க தான் கொடுக்க முடியும். உண்மையா கஷ்டப் படுறா அப்படின்னு தெரியும்.. தெரியாதவங்க கிட்டே போய் கேட்டா நம்பணும் இல்லையா? அதுவும் வேலை செய்யறதுக்கு தான் கொடுக்கிறோம்.”
அவள் பேசாமல் நின்றாள்.
“என்னம்மா பேச மாட்டேங்கறீங்க! ரொம்ப சாதாரணமான சலுகைகள் தான். நீங்க காசு அடிப்படையில் பாக்குறீங்க. நான் கருணை , மனிதாபிமான அடிப்படையில் பார்க்கிறேன். அவ்வளவுதான்!”.
தீர்க்கமான குரலில் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள் திவ்யா.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings