எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்னம்மா சொல்கிறாள் உன் பெண்!” என்றபடி வந்தாள் புவனா.
“வழக்கம் போலத்தான் அந்த ஊரைப் பற்றி ஒரே புகழ்மாலை.”
“அதுசரி! சந்தோஷமாக இருந்தால் சரிதானே!”
“அதுக்காக இப்படியா! இங்கேயே பிறந்து வளர்ந்தவதானே இவ!”
அவள் குரலில் லேசாக எரிச்சல் எட்டிப் பார்த்தது.
“சரிதாண்டி! உன்னோட தங்கைதானே ! புதிது! கல்யாணம் ஆகிப் போன உடனே ஒரு புது உலகத்தையே பார்க்கிறாள்.”
அம்மா அவளுக்கு பரிந்து கொண்டு வந்தாள்.
சரியாக அந்த நேரம் கூப்பிட்டாள் மாதவி.
“போச்சுடா ! மறுபடியும் ஆரம்பிக்கப் போகிறாள்” என்றபடியே நழுவப்பார்த்தாள் புவனா.
“நீ வருவேன்னு சொல்லியிருந்தேன். அதுதான் கூப்பிடுறா போல!”
‘அக்கா! ‘என்றவளது குரலில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது.
“வீடியோ காலில் வா! இந்த இடத்தை எல்லாம் பாரேன்! “
உண்மையிலேயே பச்சைப் பசேலென்று தான் இருந்தது. தெருக்கள் எல்லாம் விசாலமாக சுத்தமாக வேண்டாத குப்பைகள் எதுவும் இல்லாது அருமையாக இருந்தது.
அவள் சொன்னதை விடவுமே அதிகம்தான்!
“உனக்கு எங்களை எல்லாம் தேடலையா?”
“அதனால்தானே அடிக்கடி கூப்பிட்டு பேசுகிறேன்! “
“எங்கே ! எங்களை பற்றி எங்கே கேட்கிறாய்? சதா உன் ஊர்ப் புராணம் தான்.”
“என்னக்கா ! இங்கே வந்தப்புறம் தான் தெரியுது நம்ம ஊர் லட்சணம்! சுத்தமான காற்று, தண்ணீர் ,தெரு எல்லாமே ஒரு அழகுதான்! “
“சரி ! சமையல் ,சாப்பாடு எல்லாம் எப்படி நடக்குது! சமாளிக்க முடியுதா!”
பேச்சை மாற்றினாள் பெரியவள்.
எப்போதும் போல் வாக் போய்விட்டு வந்து கதவை திறந்தாள் மாதவி.
இந்தியாவில் இருப்பது போலவே சீரியல்கள் சினிமா வீடியோ கால் என்று போவதால் வித்தியாசம் தெரியவில்லை. இரண்டு பேர் வீட்டுக்கும் கூப்பிட்டுப் பேசுவார்கள்.
அன்றைக்கு என்னவோ மிகவும் அலுப்பாக இருந்தது. சொல்லத் தெரியாத ஒரு அசதி. சமைக்கவோ சாப்பிடவோ பிடிக்காமல் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
தன்னிச்சையாக காலண்டரில் பதிந்த கண்கள் வந்து ஆறுமாதமாகிவிட்டதை காட்டியது. ஆறு மாதமா என்று வியந்தவளின் மனம் வேறு ஒரு கணக்கும் போட்டது.
ஆகா! செக் பண்ணாமலே இருந்திருக்கிறேன் என்று அசதியை பொருட்படுத்தாது உடனே செயலில் இறங்கினாள் அவள்.
கர்ப்பம் உறுதி என்றதும் மகிழ்ச்சியுடன் பயமும் வந்தது. அம்மாவை பார்க்க வேண்டும்.அம்மா கையால் சாப்பிடவேண்டும் என்று அடங்காத ஆசை எழுந்தது. உடனே எப்படி அம்மாவால் வரமுடியும்? எத்தனை ஏற்பாடுகள் செய்ய வேண்டும்!
பக்கத்திலிருந்த நண்பர்கள் வந்து பார்த்தார்கள் .அவள் நல்ல நேரம் தமிழ்நாட்டு தம்பதியே பக்கத்தில் இருந்தார்கள். அருண் சொன்னவுடன் வந்து பார்த்து நிறைய பேசி தைரியம் கொடுத்துவிட்டுப் போனார்கள்.
என்றாலும் அம்மா மாதிரி வருமா? அம்மா மடியில் படுத்துக்கொண்டு அளவளாவிக் கொண்டே சாப்பிட்ட அந்த சுகமான நினைவுகள் புரட்டி எடுத்தன. ஃபாரின் ஃபாரின்தான் என்றவளுக்கு தாய் நாட்டு நினைவுகள் புரட்டி எடுத்தன.
கூப்பிட்டதுமே அம்மா புரிந்து கொண்டாள்.
“இப்போ இப்படித்தான் இருக்கும். கொஞ்ச நாளைக்கு சாப்பிடவே பிடிக்காது .. காலையில் லெமன் ஜுஸ் சாப்பிடு.”
உடனே அறிவுரைகளில் இறங்கினாள் .
“போம்மா ! என் கூட வந்திருக்கணும்னு தோணவே இல்லையா? “
“என்னடி பொசுக்குன்னு கேட்டுட்டே! எவ்வளவு தூரத்தில் இருக்கே! பக்கத்திலே இருந்தாலே உடனே வரதுக்கு எவ்வளவு தயார் பண்ணனும்? யோசிப்போம்” ,என்று சொல்லிவிட்டு செல்லை அணைத்தாள் அம்மா.
இரண்டு பேருக்குமே மனது கலங்கிப் போனது. சந்தோஷமான விஷயம்! அதே சமயம் சாதகமில்லாத பல விஷயங்களை மனது சீர் தூக்கிப் பார்த்து அலசியது.
புவனா வந்தவள், “நல்ல விஷயம் தானேம்மா ! நீங்களும் அருண் பேரண்ட்சும் சேர்ந்து முடிவெடுங்க. கல்யாணம் ஆகும் போதே தெரிந்தது தானே! கலந்து பேசுவோம்’ என்றவள் “ஏம்மா !உன் பொண்ணு ஃபாரின் ஃபாரின் அப்படின்னு அவ்வளவு பேசினாளே! இப்போ பார்த்தியா! சுத்தமான காற்றும் தண்ணீரும் மட்டும் போதாது வாழ்க்கைக்கு என்று புரிகிறதா! அம்மாங்கிற பாசமும் பணிவிடை யுகம் பார்த்து பார்த்து செய்யுற அன்பும் எங்கேயும் கிடைக்காது.. இக்கரைகளும் பச்சைதான்னு அவ புரிஞ்சுகிட்டா சரி.”
“ஏய் ! ஏய் ! அவகிட்ட போய் இப்போ இந்த மாதிரி ஏதாவது பேசிடாதே ! சின்னப் பொண்ணு, தனியா வேற இருக்கா!”
பதறிப்போய் பேசிய அம்மாவை பார்த்து “இந்த அன்பு எங்கேயும் கிடைக்காதும்மா!” என்று அவளைக் கட்டிக் கொண்டாள்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings