எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ரம்யா தீவிரமாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள். கண்ட கனவுகள் கானலான போதும் வாழ்க்கை இன்னும் போராட்டத்தை அவளுக்காக வைத்திருக்கிறது என்பது நன்றாகவே புரிந்தது.
“அப்பா! உங்களோட பேசணும் !”
‘எதைப்பத்தி? கல்யாணம் வேண்டாம் அப்படின்னோ இல்லை வேறே ஏதாவது சொல்றதா இருந்தா என்னால் கேட்க முடியாது.”
அடக்கப்பட்ட வெறுப்புடன் அவர் சொன்னார்.
இதுவே அவள் தூக்க மாத்திரையை முழுங்கி விடுவேன் என்று மிரட்டியதால் பேச சம்மதித்திருக்கிறார்.
“அப்பா! என் பக்கத்தில் எந்த தப்பும் இல்லை. அது உங்களுக்கு நல்லாவே புரியும். ஏன்னா என்னை பெத்து வளர்த்தவர். என்னோட மனசு அதிலே இருக்கிற ஆசைகள், லட்சியம், என்னோட நேர்மை, எல்லாமே உங்களுக்கு தெரியும்.
இதெல்லாம் தெரியாத யாரோ ஒருத்தர் அவர் பசுவா, புலியா, இல்லை வேற ஏதாவதா, எனக்கு தெரியாது அவர் மட்டும் என்னை நம்புவார், சுமுகமா குடும்பம் நடத்துவார் என்று என்ன நிச்சயம்? உங்களைப் பொறுத்தவரை ஒரு மாயக்கூண்டில் தள்ளி விடறதோட உங்க கடமை முடிஞ்சுது. எப்படி இவ்வளவு சுயமா மட்டும் யோசிக்கிறீங்க?
இது ஆண்கள் உலகம் ! அவங்க பண்ணுற தப்புகள் வெளியே வரவில்லை ! வந்தாலும் அதை நியாயப்படுத்தி விடுறீங்க.! நாங்க பெண்கள் பார்த்து பார்த்து நடந்தாலும் பள்ளத்தில் விழத்தள்றதுக்கு ஒரு கூட்டமே காத்துகிட்டு இருக்கு. பொது வாழ்வில் இருக்கும் எத்தனை பேர் இந்த பொறியில் மாட்டியிருக்கிறார்கள் தெரியுமா?”
ஒரு நிமிடம் மூச்சு விட்டு விட்டு அவள் மேலே தொடர்ந்தாள்.
“நான் முன்னாடி ஒரு கதை படிச்சிருக்கேன். நிறைய முயல்கள் ஓடி வரும் போது ஒரு பள்ளத்தில் ஒவ்வொண்ணா விழுந்திடுமாம். கடைசியாக வர முயல் பள்ளம் நிரம்பிட்டதால தப்பிச்சுடும். அதுமாதிரி இந்த தலைமுறை அப்படின்னு நினைச்சேன். கால காலமாக அடிமைப்பட்டு எந்த சுதந்திரமும் இல்லாமல் முன்னேறனும் என்று நினைக்கவே முடியாது வஞ்சிக்கப்பட்ட பெண்கள் முன்னேறுவது இன்னும் உங்களைப் போன்ற ஆண்களுக்கு பிடிப்பதில்லை.”
“நான் உன்னை படிக்கவேண்டாம் என்று சொன்னேனா?” ஆத்திரத்துடன் குறுக்கிட்டார் அவர்.
“அப்பா, ப்ளீஸ் உண்மையிலேயே உங்களுக்கு அப்படி நினைப்பு இருந்தால் ஒண்ணுமே இல்லாததை பெரிசாக்கியிருக்க மாட்டீங்க! பார்த்துதான் ஒவ்வொரு அடியும் வைக்கிறோம். ஆனா பள்ளமே இல்லாத இடத்தில் கூட திடீர் திடீரென்று பள்ளம் தோன்றி ஆளை முழுங்கும் என்று தெரிவதில்லையே!”
கலங்கி விட்டிருந்த கண்களை அவள் துடைத்துக் கொண்டாள்.
அவருக்கும் அவள் கூற்றிலிருந்த உண்மை புரிந்தது. எதற்காக நான் இவ்வளவு ஆவேசப்பட்டேன்! இந்த சின்னப்பெண்ணிடம் அதுவும் என் செல்லப் பெண்ணிடம் இவ்வளவு வெறுப்பைக் காட்டினேன்!
அவருக்கு தன் மீதே கோபம் வந்தது. ஆனால் நடந்து முடிந்தவற்றை மாற்ற முடியாதே! வரப் போகும் மருமகன் இந்த மனதை புரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலையும் பிரார்த்தனையும் ஒருங்கே எழுந்தன. அவள் அருகே வந்து கைகளைப் பிடித்துக்கொண்டார்..
“ஸாரிம்மா! நான் அவசரப்பட்டு விட்டேன். ஆனா இனிமே எந்த இடத்திலும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன். முடிந்தால் உன் கனவுகள் நிறைவேற என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். என்ன கமலா ! நீ பேசாம இருக்கிற! சொல்லு! அவளுக்கு தைரியம் சொல்லு! சந்தோஷமா இருக்க சொல்லு!”
கமலா சிரித்தாள் மனம் விட்டு.
“அப்பாவும் பொண்ணும் ஒண்ணாயிட்டீங்க! இனி நான் என்ன சொல்றது!”
‘ஆமாம் அது என்ன முயல்கதை எனக்கு புரியலையே! ‘
“அதுவா!” என்ற ரம்யா “போன நிமிஷம் வரைக்கும் வரிசையா விழுகிற முயல்லே நானும் ஒண்ணு அப்படின்னு நினைச்சேன். இப்போ நான் தப்பிச்சிட்டேன். ஆனா இன்னும் அந்த பள்ளம் நிரம்பலே. என்னை லேசாக இடறிதான் விட்டது. ஆனால் இன்னும் எத்தனை பேர் அந்த குழியில் விழப் போகிறார்கள் என்று தெரியாது. பெண்களுக்கான மாயக்கூண்டுகள் இன்னும் சந்தையில் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை பேர் தப்பிப்போம் எத்தனை பேர் தவறுவோம் என்பது யாருக்கும் தெரியாது. என் வாழ்க்கையில் திருமணம் என்ற கதவு திறக்கிறது .அது மற்ற ஜன்னல்களை திறந்துவிடும் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை !”
சொல்லிவிட்டு மனதிலிருந்து துன்பம் எல்லாம் வடிந்ததால் அழகாக ஒரு புன்முறுவல் பூத்தாள். அவளின் பெற்றோரும் அதில் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings