in ,

என் மாணவன் அல்லவா? (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்  

ஆகஸ்ட்-15.

அந்த சிறைச்சாலையின் உள் மைதானம் களை கட்டியிருந்தது.  திரும்பிய திசையெல்லாம் தேசியக் கொடிகள்…. மூவண்ணத் தோரணங்கள்… கொடிகள்…. என அமர்க்களம்  விரவியிருக்க ஒலி பெருக்கிகள்  “பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம்” பாடிக் கொண்டிருந்தன.  கைதிகள் வார்டன்கள் அதிகாரிகள் என்று வித்தியாசமின்றி அனைவர் நெஞ்சிலும் தேசியக் கொடி குண்டூசி உதவியுடன் உட்கார்ந்திருந்தது.

“இன்னிக்கு கொடியேத்த வரப் போற வி.ஐ.பி. யாருன்னு தெரியுமா?” கைதி எண் 332 கேட்க

“யாரு… எவளாவது சினிமா நடிகையா?” 543 திருப்பிக் கேட்டான்.

“அதுதான் இல்லை… இந்த வருஷம் வரப் போறவரு…. ஒரு… சாதாரண… பள்ளிக்கூட வாத்தியார்”

“என்னது? இஸ்கூலு வாத்தியா?”543 ‘பக..பக’வெனச் சிரித்தான்.

“சிரிக்காதப்பா… அந்த  வாத்திகிட்டப் படிச்ச பல பேரு இப்பப் பெரிய… பெரிய ஆளுங்களா… பெரிய…. பெரிய பதவில இருக்காங்களாம்… மனுசன் நேர்மையின் மறுபிறப்பாம்… ஒழுக்கத்தில் ஒண்ணாம் நெம்பராம்… தன் வாழ்க்கையையே ஆசிரியப்பணிக்கு அர்ப்பணிச்சிட்டு…. கல்யாணமே பண்ணிக்காம வாழ்ந்திட்டிருக்காராம்.. எல்லாத்துக்கும் மேல ஜனாதிபதி கையால நல்லாசிரியர் விருது வாங்கியவரப்பா… நம்மள மாதிரி இல்ல…”

வரப்போகும் வி.ஐ.பி.யின் வளமான வரலாற்றைக் கேட்ட 543 அதற்கு மேல் பேச இயலாமல் தன் வாயைச் சாத்திக் கொண்டான்.

சரியாக 10 மணிக்கு வந்து சேர்ந்த ஆசிரியர் சாரங்கபாணியை ஓடோடிச் சென்று வரவேற்ற காவல்துறை அதிகாரிகளில் பலர் அவரிடம் பயின்ற மாணவர்களே.

பொலிவான முகத்தில் பெருந்தன்மைப் புன்னகையுடன் அந்த வரவேற்பினை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் கம்பீரமாய்க் கொடியேற்றி கருத்தாழமிக்க உரையாற்றி அமர்ந்தார்.

தொடர்ந்து பேசிய பல அதிகாரிகள் தங்கள் உரையில் தவறாமல் ஆசிரியரைப் புகழ்ந்து விட்டு தாங்கள் அவரிடம் படித்தவர்கள் என்கிற விஷயத்தை பூரிப்புடன் சொல்லி மகிழ்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாய் கைதிகளுக்கு இனிப்பு வழங்கினார் ஆசிரியர் சாரங்கபாணி. முகமலர்ச்சியுடன் ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்தபடி இனிப்புகளை வழங்கிய ஆசிரியர் அடுத்து தன் முன் கை நீட்டி நின்ற அந்த இளைஞனைப் பார்த்ததும் அதிர்ந்தார்.

“நீ…. நீ…. ஆனந்தன்தானே?”

“இன்னாது… ஆனந்தனா?… அது செரி… பெருசு காலைலேயே மப்பு ஏத்திக்கிட்டு வந்திடுச்சு போல…. பெருசு…. நம்ம பேரு சேகரு… ஆனந்தனில்ல”

“இல்ல… நீ பொய் சொல்றே…. உடுமலைப்பேட்டைக்குப் பக்கத்துல கோமங்கலம்தானே உன் சொந்த ஊரு… உங்கப்பா பாத்திரக்கடை தேவராஜன்தானே?… நீ கோமங்கலம் கவர்மெண்ட் ஹை ஸ்கூலில்தானே படிச்சே?”

அவன் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அலட்சியமாக எங்கோ பார்க்க, “என்னப்பா வயசான எனக்கே ஞாபகமிருக்கு… உனக்கு இல்லையா?… ஒன்பதாம் வகுப்புல உனக்கு வகுப்பாசிரியரா இருந்தேனே?… படிப்பே ஏறாத உன்னை பாஸ் பண்ண வைக்கறேன்னு சொல்லி மற்ற ஆசிரியர்கள்கிட்ட சவால் விட்ட என்னை பரிட்சைக்கே வராம ஓடிப் போயி மூக்கறுத்தியே நீ….. மறந்திட்டியா?”

“ச்சே.. என்னடா இது பெரிய ரோதனையாப் போச்சு… த பாரு பெருசு…. நீ சொல்ற ஆளு நானில்ல… போதுமா?” என்று திட்டவட்டமாய் மறுத்து விட்டு “வந்தமா… கொடிய ஏத்துனமா… போனமா….ன்னு இல்லாம ஆனந்தனாம்… உடுமலைப்பேட்டையாம்… ஒம்பதாம் வகுப்பாம்… ச்சை…”முனகிக் கொண்டே சென்றவன் திரும்பி வந்து ‘ஏம் பெருசு… பேச்சுக் குடுக்கற மாதிரிக் குடுத்து நைஸா ஸ்வீட் குடுக்காம அனுப்பறியே…. நியாயமா?” சிரித்தபடி கேட்டான்.

அவன் சிரிப்பதைக் கண்டு மற்ற கைதிகளும் கோரஸாய்ச் சிரிக்க, ஜெயிலர் தன் கர்ண கடூரக் குரலில் அதட்ட, சிரிப்பொலி சட்டென்று அடங்கியது.

“மன்னிச்சிடுப்பா… பேச்சு வாக்குல மறந்துட்டேன்..” சிறிதும் கூச்சமில்லாமல் ஒரு கைதியிடம் வெகு யதார்த்தமாக மன்னிப்பு கேட்ட ஆசிரியரின் பெருந்தன்மை, அங்கு நின்றிருந்த அனைவரையும் வியக்கச் செய்தது.

“என்ன சார்… நீங்க போய் இவன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு… அவன் ஒரு சாதாரண கைதி…” சாரங்கபாணி ஆசிரியரின் முன்னாள் மாணவரான ஜெயில் சூப்பரின்டென்டண்ட்  கேட்க

“இல்லப்பா அவனைப் பார்த்தா என்கிட்ட படிச்ச மாணவனாட்டமே தெரிஞ்சுது… அதான் கேட்டேன்… இல்லேங்கறான்…. ஒருவேளை நான்தான் ஞாபகப்பிசகா பேசறனோ..ன்னு… எனக்கே சந்தேகம் வருது”

“இருக்க முடியாது சார்…. அவன் நிச்சயமா உங்ககிட்ட படிச்ச மாணவனா இருக்க முடியாது… ஏன்னா உங்ககிட்ட படிச்ச மாணவர்களெல்லாம் இன்னிக்கு எவ்வளவு உயர் நிலைல… பட்டம் பதவிகளோட பெரிய பெரிய மனிதர்களா வாழ்ந்திட்டிருக்காங்க… அதனாலதான் சொல்றேன்… இவன் உங்க ஸ்டுடண்ட் இல்லை” ஜெயில் சூப்பரின்டென்டண்ட் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

தொடர்ந்து அதைப் பற்றி விவாதிக்க விரும்பாமல் மற்ற கைதிகளுக்கு “மள…மள”வென்று இனிப்பு வழங்கி விட்டு விடைபெற்றார் ஆசிரியர் சாரங்கபாணி.

ஒரு மாதத்திற்கு பிறகு தபால்காரன் எறிந்து விட்டுப் போன இன்லண்டு கவரை எடுத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்த சாரங்கபாணி ஆசிரியர் அதன் பின்பக்கத்தில் அனுப்பியவர் பற்றிய குறிப்புக்கள் ஏதுமில்லாததால் குழப்பத்துடனே பிரித்தார்.

 “அன்புக்கும்… பெரும் மதிப்பிற்கும் உரிய ஆசிரியர் அவர்களுக்கு

மத்திய சிறையிலிருந்து ஆனந்த சேகர் எழுதுவது. முதலில் என்னை மன்னியுங்கள். நீங்கள் சொன்ன கோமங்கலம் பாத்திரக்கடை தேவராஜனின் மகன் ஆனந்தன் நானேதான்.  பள்ளிக்காலங்களில் மட்டும்தான் நான் ஆனந்தன் என்கிற நாமகரணத்தோட திரிந்தேன்… அதற்குப் பிறகு என் பெயரின் பின் பகுதியிலுள்ள சேகரே எனது பெயர் என்றாகிவிடடது. இப்போது ஒப்புக்கொள்வதை அன்றே ஒப்புக் கொண்டிருக்கலாமே! என்று நீங்கள் நினைக்கலாம்!

ஆனால் ஒரு காரணமாகத்தான் நான் அன்று ஒப்புக்கொள்ளவில்லை. ஜனாதிபதி கையால் நல்லாசிரியர் பட்டம் பெற்று…பெரிய பெரிய அதிகாரிகளை…டாக்டர்களை…  இன்ஜினியர்களை… உருவாக்கின  இந்த ஆசிரியரிடம் பயின்ற ஒரு மாணவன்   திருடனாகியிருக்கிறான்… ஜெயில் பறவையாக  திரிகின்றான் என்கிற அவப்பெயர் உங்களுக்கு வர நான் காரணமாகலாமா?

என்   சக கைதிகளெல்லாம்  உங்களைப்   பூஜிக்கும் அளவுக்கு பேசும் போது…    “இல்லை…. திருடனான நானும் ..இவரிடம் பயின்று வந்தவன்தான் ” என்று சொல்லி அவர்கள்  மத்தியில் உங்களுக்கிருந்த உயர்ந்த மதிப்பு  குறைந்திடக் காரணமாகலாமோ? நான்? அப்படி என்னை நான் அடையாளம் காட்டினால்… உங்களுக்குக் கிடைத்த நல்லாசிரியர் விருதே அர்த்தமில்லாமல் போய்விடுமே. ஆகவேதான்   அன்னிக்கு நான் அந்த மாதிரி பேசினேன்; மறுபடியும் கேட்டுக் கொள்கிறேன்….என்னை மன்னிச்சிடுங்க!

இப்படிக்கு

அன்று ஆனந்தன் என்று அழைக்கப்பட்ட

இன்று சேகர் என்று அழைக்கப்படும் ஆனந்தசேகர்.

கடிதத்தைப் படித்து முடிக்கையில் சாரங்கபாணி ஆசிரியரின் விழியோரத்திலிருந்து ஒரு கணணீர்த்திவலை உருண்டோடி தரையில் விழுந்து தெறித்தது.

தன்னிடம் பயின்று உயர்நிலையடைந்த மாணவர்கள் சேர்த்து கொடுத்த பெருமைக் கோபுரம் சரிந்து விடாமலிருக்க தன்னையே அடையாளம் மறைத்துக் கொண்டு தன் ஆசிரியரின் கௌரவம் காப்பாற்றிய அந்தக் கைதியை  எண்ணி அவர் மனம் பெருமிதத்தால் விம்மியது

“என்ன இருந்தாலும் என் மாணவனல்லவா?” என்று வாய்விட்டுச் சொல்லி  மகிழ்ந்தார்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                      

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சொத்துக்கு சொத்தாக (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    குணமென்னும் குன்றேறி..! (சிறுகதை) – முகில் தினகரன், கோவை