எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“எங்கே வாழ்க்கை தொடங்கும்! அது எங்கே எவ்விதம் முடியும்! இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது!”
“என்ன மறுபடியும் சோர்ந்து போயிட்டே!” கேட்டபடி வந்தாள் பாரதி.
“நினைவுகள் விடமாட்டேன் என்கிறது .சுழற்றி சுழற்றி அடிக்கிறது.”
கண்களில் நீருடன் ஏறிட்டுப் பார்த்த சந்திராவை திகைப்புடன் பார்த்தாள் பாரதி
“இன்னுமா நீ மனசை போட்டு கசக்கிக்கிட்டு இருக்கே. கண்ணன் மறைந்தது எல்லோருக்குமே வருத்தம்தான் . சகோதர பாசம் இருக்கத்தான் செய்யும். அதுக்காக இப்படியா?
“அவன் சின்ன வயசிலிருந்தே எல்லாத்திலும் வேகமாக இருப்பான். ஸ்கூலில் படிக்கும்போது சைக்கிள் , அப்புறம் ஸ்கூட்டர், புல்லெட் அதுக்கு அப்புறம் கார் எல்லாமே ஸ்பீட் தான். அப்படி பார்த்தவன் கடைசியிலே ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாகி கஷ்டப்பட்டு போனான் என்ற வேதனை. கண்ணதாசன் சொன்ன மாதிரி யார் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிவதே இல்லை! எத்தனை சுழல்கள் ! “
நினைவுகளின் தாக்கத்தில் பெருமூச்சு விட்டாள் அவள். மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் பாரதி.
கான்ஸர் என்ற கொடிய நோயுடன் போராடிய அவள் சகோதரன் மறைந்து விட்டான் என்பதை அவளால் இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பதை புரிந்து கொண்டாள் .
உண்மையிலேயே இந்த நோய் மிக கொடிய ஒன்றுதான்.இதை வெற்றி கொள்ள மிக சிலராலேயே முடிகிறது. நோயின் துவக்கத்திலேயே துவண்டு போய் விடுபவர்களும் உண்டு. கீமோ, ரேடியேஷன், மருந்து, மாத்திரை என்று சகலமும் வியூகம் அமைத்து உடலை மட்டுமில்லாது. மனதையும் ஒரு வழியாக்கிவிடும்.
இந்த பிடியிலிருந்து வெளியே வருபவர்கள் மிக குறைவு. பயமும் பதட்டமும் சேர்ந்து கொண்டு உடல் வலியுடன் மனவலியும் சேர்ந்து கொள்கிறது. கூடுதலாக மருத்துவ செலவும் உறவினர் நட்புக்களின் ஆதங்கங்கள் அறிவுரைகள் எல்லாம் சேர்ந்து கொள்கின்றன.
எங்கே தவறு செய்கிறோம் என்று உணர முடிவதில்லை. எப்படி சரி செய்யப் போகிறோம் என்றும் புரிவதில்லை. தொலைவில் எங்கோ ஒன்றிரண்டு பேரை விரட்டிக் கொண்டிருந்த இந்த கொடிய நோய் பக்கத்தில் வந்து பல பேரைச் சுற்றி வளைத்து வாயில் போட்டுக் கொள்கிறதே.
நோயாளிகளும் மருத்துவர்களும் பாவப்பட்டவர்கள் தான். தினமும் வேதனைப்படும் நோயாளிகளையும் அவர்களை சுற்றி வரும் உறவுகளையும் பார்த்து சலிக்காமல் ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறதே.அவர்களுடைய மனதுக்கும் சிந்தனைக்கும் ஒரு வடிகால் வேண்டாமா?
அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக பாரதி குரல் கொடுத்தாள்.
“இந்த நியூஸ் பாரு! “பிரபல பாடகியின் மரணம் குறித்து செய்தி வந்து கொண்டிருந்தது.
சந்திரா அதிர்ந்து போனாள்.
“எதுவும் நிரந்தரமில்லை! அதை யாரும் உணர்வதும் இல்லை” பொலபொலவென்று கண்ணீர் விட்டாள் அவள்.
‘இறைவன் படைப்பில் எல்லாமே அற்புதம். பார்த்து பார்த்து செதுக்கி தான் அனுப்புகிறான். ஒவ்வொரு உறுப்புக்கும் பணி உண்டு. செவ்வனே நடக்கும் வரை பிரச்சினை இல்லை. சேதமாகும் போது அவை படும் பாடு, இருந்த இடமே தெரியாமல் இருந்த இதயம் வலிக்கும் போது மனது குமுறுகிறது இது நாள் வரை அதன் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்தோம் என்று யோசிப்பதில்லை.’
“இதயம் மட்டுமா! கண்கள் காதுகள் எல்லாவற்றையும் தான் படுத்தி எடுக்கிறோம். யாருமே வருமுன் காக்க வேண்டும் என்று உணர்வதில்லை. உணரும் போது காலம் கடந்து விடுகிறது.”
“அப்படி சொல்ல முடியாது. இன்றைக்கு பலர் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்த்தால் உன்னால் உணரமுடியும் “.
‘மற்றவர்கள்’ திருப்பிக் கேட்டாள் அவள்
“நாம் என்ன செய்யமுடியும்! உடலையும் மனதையும் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அனுபவப்பட்டவர்களுக்கே தெரிவதில்லையே!. நம்மிடம் இருக்கும் அத்தனையும் வைரக்கற்கள் என்று தெரியாமல் அலட்சியப்படுத்துகிறோம். அணிகலன்களிலும் கடைகளிலும் காட்டும் அக்கறையை உங்கள் உடல் மீதும் காட்டுங்கள் என்று யார் சொல்வது? நம்மால் முடிந்தவரை நாம் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டலாம்.தெரிந்தநட்புகளுக்கு உறவுகளுக்கு சொல்லுவோம்!”
‘மறைந்த என் சகோதரன் நினைவுக்கு அஞ்சலியாக இதை செய்யப் போகிறேன்.’
சொல்லிவிட்டு எழுந்த சந்திராவின் உடலும் மனமும் வெகுவாக திடப்பட்டிருந்தது.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings