எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அப்போ நான் கிளம்பட்டுமாங்க?”
“சரி சாரு, வேணுங்கறதெல்லாம் எடுத்து வச்சிட்டியா?”
“எடுத்து வச்சிருக்கேன். எதுவும் மறக்கலேன்னு நினைக்கறேன்.”
“சரி, மருந்தெல்லாம் நேரத்துக்குப் போட்டுக்கோ. ஒழுங்கா சாப்பிடு. இங்கே செய்யற மாதிரி, வேலை பண்ற கவனத்துல சாப்பிடற நேரத்தைத் தள்ளிப் போடாதே. காலைல, மதியம் நைட் எல்லா வேளையும் நேரத்துக்கு சாப்பிட்டுட்டு, மறக்காம மருந்து போட்டுக்கோ. அப்பப்போ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ சாரதா.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க கவனமா இருங்க. ஆஃபீஸ்க்கு சரியான நேரத்துக்குக் கிளம்பிப் போங்க. அதுக்குள்ள உங்களுக்கு சாப்பிடறதுக்கு எல்லாம் செஞ்சு எடுத்துட்டுப் போங்க. எல்லா நாளும் வெளில சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காது.”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சாரதா. இட்லியும், தயிர்சாதமும் பண்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகுது.”
“சரிங்க, நம்ம கமலாகிட்ட சொல்லியிருக்கேன். அவ காலைல நீங்க ஆஃபீஸ்க்கு கிளம்பறதுக்குள்ள வந்து எல்லா வேலைகளையும் செஞ்சுட்டுப் போயிருவா. வேணும்னா சாயந்தரமும் ஒரு முறை வந்து பாத்திரம் எல்லாம் கழுவிக் கொடுத்துடுவா.”
“நான் மேனேஜ் பண்ணிக்கறேன் சாரு. நீ என்னைப் பத்தியே யோசிச்சுட்டு, உனக்குத் தேவையானதை எடுத்துக்க மறந்துடாதே மா.”
“எனக்கு என்னங்க பெருசா தேவை இருக்கப் போகுது? ஏதாவது தேவைன்னா நம்ம பையன் வாங்கித் தருவான். ஆனா நீங்கதான் இங்கே தனியா சிரமப்படுவீங்க. எனக்குக் கவலை எல்லாம் அதுதான். உங்களுக்கு என்ன, என்னோட தொல்லை விட்டாப் போதும்னு நிம்மதியா இருப்பீங்க. உங்க இஷ்டத்துக்கு இருக்கலாம். நான் இருந்தாலாவது நீங்க சாப்பிடறதுல, தூங்கறதுலன்னு எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ணிட்டே இருப்பேன். ஸ்வீட் சாப்பிடக் கூடாது, ரொம்ப நேரம் நைட் முழிச்சுட்டு மொபைல் பார்க்காதீங்க, வெளில சாப்பிடாதீங்க, நைட் கண்ணாடி போடாம டூ வீலர் எடுத்துட்டுப் போகாதீங்க, இப்படி ஒவ்வொண்ணுக்கும் கட்டுப்பாட்டு போட்டுகிட்டே இருப்பேன். நான் கிளம்பிட்டா உங்களுக்கு அந்தத் தொந்தரவு எல்லாம் இல்லாம, உங்க இஷ்டத்துக்கு ஜாலியா, நிம்மதியா இருக்கலாம். அதனால என் மனசுல இருக்கற வருத்தமெல்லாம் உங்களுக்குப் புரியாது. எனக்கு ஊருக்குக் கிளம்பறதுக்கே இஷ்டமில்ல.”
“என்ன சாரு நீ, இப்படி எல்லாம் பேசினா எப்படி? நீ என்ன வேணும்னேவா என்னை விட்டுட்டுப் போறே? மருமக மாசமா இருக்கா. அவளுக்குக் கொஞ்சம் ஒத்தாசைக்கு வேணும்னு பையன் கூப்பிடறான். நம்ம குழந்தைகளுக்கு நாம செய்யாம, வேற யார் செய்வா? எனக்கு ஆஃபீசுக்கு லீவு போட முடியாது. இல்லேன்னா நானும் கிளம்பி வந்துடுவேன். அதுவுமில்லாம நான் எந்த விதத்துலயும் இப்போ உதவி செய்ய முடியாது. நீ போனேன்னா, அவளுக்கு என்ன சாப்பாடு பண்ணிக் கொடுக்கணும், எப்படி கவனிச்சுக்கணும் எல்லாம் பார்த்துப்பே. அதனாலத்தானே போறே. அதனால நீ கவலைப்படாம போய்ட்டு வா.”
“ஆமாங்க, உங்களை விட்டுட்டுப் போறது ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், நம்ம விஜயா மாசமா இருக்கறதாலத் தானே என்னை வரச் சொல்லி சந்துரு கூப்பிடறான். அவளுக்கு இந்த சமயத்துல கூட இருந்து நாம தானே உதவி பண்ணணும். நம்ம வீட்டு வாரிசை சுமந்துட்டிருக்கா. அவளை கவனமா பார்த்துக்கணும். எல்லாப் பொறுப்பும் மூளைக்குத் தெரிஞ்சாலும், மனசுக்கு உங்களை விட்டுட்டுப் போற பிரிவுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு.
கல்யாணமாகி இவ்வளவு வருஷத்துல, எங்க அப்பா அம்மா வீட்லகூட உங்களை விட்டுட்டு நான் இப்படி ஒரு மாசம், ரெண்டு மாசம் எல்லாம் இருந்தது இல்ல. பிரசவத்துக்குப் போனப்ப மட்டும்தான் அங்கே அவ்வளவு நாள் இருந்திருக்கேன். அதுக்கப்புறம் முதல்முறையா இப்படி உங்களை இவ்வளவு நாள் விட்டுப் பிரிஞ்சு இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க.”
வார்த்தைகளை முடிக்கும் முன்பே, சாரதாவின் கண்களில் கண்ணீர் உருண்டோடியது. வார்த்தைகள் தடுமாறின.
“என்ன சாரு இது, சந்த்ரு என்ன நினைச்சுப்பான்? எதுக்கு இப்போ அழறே? இவ்வளவு வருஷம் பசங்க நம்மகூட இருந்துட்டாங்க. அதனால உனக்கு இப்படிப் பிரிய வேண்டிய சூழ்நிலை அமையல. இப்போ அவசியப்படறதாலத் தானே போறே. கண்ணை மூடி, கண்ணைத் திறக்கறதுக்குள்ள நாட்கள் பறந்துடும். சனி, ஞாயிறு டைம் கிடைக்கும் போது நானும் அங்கே வரேன். தேவையில்லாம மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. நிம்மதியா போயிட்டு வா.”
“சரிங்க, நான் நிம்மதியா, சந்தோஷமா கிளம்பறேன். உங்களுக்கு இதுல கொஞ்சம்கூட வருத்தம் இல்லையா? நான் இவ்வளவு சொல்றேன், எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு, உங்களைப் பிரிஞ்சு எப்படி இருக்கப் போறேன்னு எல்லாம் சொல்றேன். ஆனா நீங்க திரும்பத் திரும்ப, இதெல்லாம் சாதாரணம், நம்ம குழந்தைகளுக்காகத் தானே செய்யறோம். தைரியமா இரு, சந்தோஷமா இருன்னு இப்படியே சொல்லிட்டிருக்கீங்க.”
“என்ன சாரு இப்படிக் கேக்கறே? உன்னை மாதிரி நான் வெடிச்சு அழ முடியுமா சாரு. நீ இல்லாத இந்த வாழ்க்கையை என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியல. அதை நான் சொன்னா உனக்கு இன்னும் கஷ்டமா இருக்கும். ஏற்கனவே நீ கலங்கிப் போயிருக்கே. என்னோட கலக்கத்தையும் நான் கொட்டினா, எப்படி நீ அதைத் தாங்குவே சாரு. அந்தக் கலக்கத்தோட அங்கே போய் எப்படி நீ நிம்மதியா இருக்க முடியும்?
நம்ம வாழ்க்கைல இந்தக் கட்டத்தை எல்லாம் கடந்து வந்துட்டோம் சாரு. இப்போ நம்ம பிரிவைப் பெருசா எடுத்துகிட்டா, சந்துரு எங்கே போவான்? நம்மகிட்ட தானே உதவி கேட்கறான். அதுவும் ஒரு ரெண்டு மாசம். அதுக்கப்புறம் விஜயா அவங்க வீட்டுக்குப் போயிடுவா. ரெண்டே மாசம்தான். கவலைப்படாதே.
இந்த ரெண்டு மாசமும் நீ மகன், மருமககூட நல்லா சந்தோஷமா இருந்துட்டு வா. ஆனா எனக்கு இந்த ரெண்டு மாசம் ரெண்டு யுகமாத்தான் கழியும். நீ இல்லாம நான் எங்கேயும் போனதுகூட இல்லையே சாரு. இந்த வீடு உயிர்ப்போட இருக்கறதுக்கு நீதானே அஸ்திவாரம். வீடு முழுக்க உன்னோட பேச்சு, சிரிப்பு, உன்னோட கைமணம், உன்னோட நினைவுகள் எல்லாம் நிறைஞ்சிருக்கு. அதை எல்லாத்தையும் மனசார ரசிச்சுகிட்டு, இந்தப் பிரிவை நானும் கடந்து வர முயற்சி பண்றேன். உன் பிரிவால நான் கஷ்டப்படறதை நினைச்சு நீ அங்கே அழுதுட்டு இருக்கக் கூடாது இல்லையா. அதனாலத்தான் அதைச் சொல்லாம உள்ளேயே வச்சுட்டிருந்தேன். நீ சொல்ல வச்சுட்டே.”
கலங்கிய கண்களுடன் சாரு கணவரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
“உங்க மனசு எனக்குத் தெரியும்ங்க. ஆனா இந்த அழுத்தத்தை நீங்க உள்ளேயே வச்சுகிட்டு சிரமப்படக் கூடாது இல்லையா. என்கிட்ட சொல்லிட்டா உங்க மனசு லேசாகும். அதைச் சொல்ல வைக்கறதுக்குத்தான் நான் இவ்ளோ பேசினேன். உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா.”
தன் அப்பா அம்மாவின் இந்த உரையாடலைக் கேட்டு கலங்கிப் போனான் சந்துரு.
‘அடடா, இந்தக் கோணத்துல யோசிக்கவே இல்ல. விஜயா கர்ப்பமா இருக்கான்னு சொன்னதும், அவங்க அம்மா அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறதாச் சொன்னாங்க. ஆனா விஜயாவைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது அப்படிங்கறதால அவளை நான் அனுப்பல. அதனாலத் தான் அம்மாவை உதவிக்குக் கூட்டிட்டுப் போலாம்னு யோசிச்சேன். விஜயாவோட அப்பாவைத் தனியா விட்டுட்டு வரதுக்கு அவங்க அம்மாவும் யோசிச்சாங்க. ஆனா நான், அம்மாவைப் பிரிச்சு கூட்டிட்டுப் போக யோசிச்சிருக்கேனே.
இப்போ அம்மாகிட்ட அப்பா சொன்ன அதே வாக்கியத்தைத்தான் நான் விஜயாகிட்ட சொன்னேன். நீ இல்லாம, உன்னைப் பிரிஞ்சு வாழற வாழ்க்கையை என்னால யோசிச்சுக்கூட பார்க்க முடியல விஜயா. பிரசவத்துக்கு நீ அங்கே போகும்போதே நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல. அவ்வளவு தூரம் வேற. கிட்டத்துல இருக்கற ஊரா இருந்தாக்கூட அடிக்கடி வந்து பார்த்துக்கலாம்னு விஜயாகிட்ட சொன்னேன். ஆனா அப்பா அம்மா பிரிவைப் பத்தி நான் கவலைப்படலையே. எவ்ளோ சுயநலமா யோசிச்சிருக்கேன்.’
மனதுக்குள் அனைத்தையும் அசை போட்ட சந்துரு, அம்மாவின் கவலையையும், அப்பாவின் கலக்கத்தையும் எண்ணிப் பார்த்து, தன் திட்டத்தை மாற்றினான்.
“அப்பா, அம்மா இங்கேயே இருக்கட்டும். நான் கிளம்பிப் போய் நாலு நாள்ல விஜயாவை இங்கே கூட்டிட்டு வரேன். நான் வர்க் ஃப்ரம் ஹோம் கேட்டுக்கறேன். வாரத்துல ரெண்டு நாள் மட்டும் ஆஃபீஸ் போகணும். இங்கேயிருந்து கிட்டக்க தானே, நான் போய்ட்டு வந்துடுவேன். அம்மா, நீங்க கவலைப்படாம இங்கேயே இருங்க. உங்க மருமகளை இங்கேயே அழைச்சுட்டு வரேன். நீங்க பார்த்தக்கோங்க.”
மகனின் புரிதலிலும், கணவரின் காதலிலும் திளைத்து நின்றாள் சாரு. காதலுடன் கணவரைத் திரும்பிப் பார்க்க, இப்போது அவரின் கண்களில் கண்ணீர்.
“நீ …. இல்லாம….. நான் எப்….படி…. சாரு…..”
“என்னங்க இது, அதான் சந்துரு ப்ளானை மாத்திட்டானே, அப்புறம் என்ன.”
“நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக் கொண்டே
வாழும் காலம் எல்லாம்
ஒன்றாக வாழலாம்.”
சந்துருவின் மொபைலில் விஜயாவின் அழைப்பிற்கான ரிங்க்டோன் ஒலிக்க, சூழ்நிலைக்கு சரியான பின்னணி இசையாக அமைந்தது.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings