எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த தனியார் ஆஸ்பத்திரி வராண்டாவில் இன்று, வழக்கத்திற்கு மாறாக, கூட்டம் அதிகமாயிருந்தது.
அதே தெருவில் இரண்டு மூன்று மருத்துவமனைகள் இருந்தும், இங்கே மட்டும் கூட்டம் அதிகம் வரக் காரணம்?… டாக்டர் பரமசிவத்தின் கை ராசி. இனிமையான பேச்சு, இயல்பாகப் பழகும் தன்மை, இல்லாதவர்களிடம் கறாராய் பணம் பறிக்காத ஈகைக் குணம்.
ரிசப்ஷனில் அமர்ந்திருந்த வெள்ளுடைப் பெண் தன்னை அணுகி வந்து விபரம் கேட்பவர்களுக்கு மிகவும் பொறுமையாய் சிரித்த முகத்துடன் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
விசிட்டர்ஸ் சோபாவில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் மட்டும் சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, சிலர் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
‘கலி முத்திப் போச்சுங்க!… ச்சே;… இப்படியெல்லாமா ஒரு அக்கிரமம் நடக்கும்?… படிச்சவங்களே இப்படி இருக்காங்களே!” விசிட்டர்ஸ் சோபாவில் அமர்ந்திருந்த அந்தப் பருத்த மனிதர் தன் கருத்தை உடனிருப்பவரிடம் சொல்ல,
‘என்னத்தைப் பண்றது… இப்பத்த ஜனங்க புத்தியே சின்னப் புத்தியாவல்ல போச்சு?… போதாக்கொறைக்கு இந்த டி.வி.யும்… சினிமாவும் வேற… கண்டதையும் காட்டி ஜனங்க மனசைக் கெடுத்து வெச்சிருக்கே!… பாருங்க… இது ஆஸ்பத்திரி இங்க வந்தும் வாய்ல ஈ போறது கூடத் தெரியாம டி.வி. பாக்குற ஜனங்களை என்ன சொல்ல?” மூக்குக் கண்ணாடியைக் கழற்றி தோள் துண்டால் துடைத்தவாறே பதில் சொன்னார் அருகிலிருந்தவர்.
“அது செரி… இப்ப டிரீட்மெண்ட்டுக்கு உள்ளார போயிருக்கற பொண்ணு என்ன ஆகும்கறீங்க?” தன் குரலைச் சற்றுத் தாழ்த்துக் கொண்டு கேட்டார் பருத்த மனிதர்.
“அது எனக்குத் தெரியாதுங்க!… ஆனா அவங்க கொண்டு வந்த சேர்த்திருக்கற ஆஸ்பத்திரி நல்ல ஆஸ்பத்திரி… டாக்டரும் நல்ல கைராசிக்காரர் அதனால விபரீதமா எதுவும் நடக்காதுன்னு தோணுது”
அப்போது, வேக வேகமாக நடந்து வந்த டாக்டர் பரவசிவத்தைப் பார்த்து அங்கிருந்தோரெல்லாம் பவ்யமாய் வணக்கம் சொல்ல, புன்னகையோடு அவர்களைக் கடந்து சென்று தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தார். வேகமாக வந்த நர்ஸிடம் ‘என்னம்மா… என்ன கேசு?” கேட்டார்
‘கார் கதவு லாக் ஆகி…. உள்ளார சிக்கி… மூச்சுத் திணறி… மயக்கமாகி..” அந்த நர்ஸ் தந்தி பாணியில் சொல்ல,
‘ஓ மை காட்!… சரி… பேஷண்ட் ஆணா?… பெண்ணா?” சிகிச்சைக்கான முஸ்தீபுகளைத் துவங்கியவாறே கேட்டார் டாக்டர்.
‘பெண் டாக்டர்”
“ஓ.கே.” என்றவர் ”மள…மள”வென்று கட்டளைகளைப் பிறப்பித்து அவசரமாய்ச் சிகிச்சைகளை ஆரம்பித்தார்.
இருபது நிமிடத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் லேசாய் விழிகளைத் திறந்தாள்.
‘அப்பாடா…” தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டர் பரமசிவம் அங்கே வாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்த அந்த நபரை வினோதமாய்ப் பார்த்தார். ”யார் இவன்?”
நர்ஸ் அருகில் வந்து ‘டாக்டர்… அந்த ஆளுதான் அந்தப் பொண்ணோட புருஷன்” என்றாள்.
டாக்டருக்கு அதிர்ச்சியாயிருந்தது. ‘வாட்?… இவனா?…. இந்தாளா அந்தப் பெண்ணோட புருஷன்?… நம்பவே முடியலையே?… அந்தப் பெண் நல்ல கலரா… பார்க்க படு டீசண்டா இருக்காங்க… காலேஜ் லெக்சரர் மாதிரியிருக்காங்க…… இவன் ‘கரு…கரு”ன்னு… குண்டா… .பாத்தா அந்தப் பெண்ணோட டிரைவர் மாதிரியல்ல இருக்கான்…”என மனதிற்குள் நினைத்தபடியே மெல்ல அந்த நபரின் அருகில் சென்று ‘டோண்ட் வொரி… உங்க வொய்ப் கண் திறந்துட்டாங்க… ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்த பின்னாடி நீங்க அவங்களைக் கூட்டிட்டுப் போகலாம்!…” என்றார்.
‘டாக்டர்… நான் பாவி டாக்டர்…. கட்டின பொண்டாட்டியக் கொல்லப் பார்த்த பாவி டாக்டர்…” தன் முகத்தில் தானே அடித்துக் கொண்டு, கத்தலாய்ச் சொன்னான்.
டாக்டர் ஏதும் புரியாமல் நர்ஸைப் பார்க்க, அவள் ‘வாங்க டாக்டர்… உங்க அறைக்குப் போய் பேசுவோம்” என்று சொல்லி அவரை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள்.
“டாக்டர்… நீங்க தெய்வம் டாக்டர்!… என் மனைவியைக் காப்பாத்துக் கொடுத்த தெய்வம் டாக்டர்” அவன் கத்தலாய்ச் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
அறைக்குச் சென்றதும் ‘என்ன சிஸ்டர்… அந்த ஆளு என்னென்னமோ சொல்றான்… இது போலீஸ் கேஸ் போலல்ல இருக்கு… ஏதாவது பிரச்சினை வந்திடப் போகுது” டாக்டரின் முகம் கடுமைக்குப் போனது.
‘டாக்டர்… உண்மையில் நடந்தது என்ன?ன்னா…. இந்த ஆளுக்கு தன்னை விட தன் மனைவி ரொம்ப அழகா இருக்கறது ஒரு பெரிய பிரச்சினை…. எப்பப் பாரு சந்தேகம்…… எங்கே அவளை வேற எவனாவது கொத்திட்டுப் போயிடுவானோ?ன்னு ஒரு பயம்!”
“திஸ் ஈஸ் நேச்சுரல்!..”
“அதனால வெளிய எங்க கூட்டிட்டுப் போனாலும்…. அவளைக் காருக்குள்ளாரவே உட்கார வெச்சிட்டு… கதவை லாக் பண்ணிட்டு.. இவன் மட்டும் இறங்கிப் போயிட்டு வருவானாம்…. அப்படித்தான் இன்னிக்கும் கடை வீதில பொண்டாட்டிய காருக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப் போயிருக்கான்… திரும்பி வந்து திறந்தப்ப… லாக் பெயிலியராகி… .திறக்க முடியாமல் போயிட்டுது…”
டாக்டரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்து பேயறைந்தது போல் ஆக….
‘என்ன டாக்டர்… என்னாச்சு உங்களுக்கு… ஏன் உங்க முகம் திடீர்ன்னு என்னவோ போலிருக்கு…” தன் பேச்சை நிறுத்தி விட்டு நர்ஸ் கேட்டாள்.
‘ம்.ம்.ம்…. அது… வந்து… ம்ம்ம்… ஒண்ணுமில்லை… நீங்க சொல்லுங்க சிஸ்டர்” கண்ணாடி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்துப் பருகியவாறே சொன்னார் டாக்டர். அவர் கண்கள் கோவைப் பழமாய்ச் சிவந்து போயின.
‘ம்… அப்புறமென்ன?… கார்க் கதவைத் திறக்க ஆளுங்களை வரவழைத்து… மணிக் கணக்குல போராடி… ரெண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வழியாகத் திறந்த போது… உள்ளார அந்தப் பொண்ணு மூச்சுத் திணறி… மயக்கமாக் கெடந்திருக்கு… இங்க தூக்கிட்டு வந்திட்டாங்க…!… அந்தாளு எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ அவன் மனைவி பொழைச்சுக்கிட்டா..” நர்ஸ் சொல்லிக் கொண்டே போக,
சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருந்த டாக்டர் பரமசிவம் சட்டென்று எழுந்து தன் மொபைலை எடுத்து எண்களை அழுத்தினார்.
எதிர் முனையில் போன் எடுக்கப் படாததால் பதட்டமானவர், மீண்டுமொரு முறை முயற்சித்தார்.
அப்போதும் எடுக்கப்படாமல் போக, ‘சிஸ்டர்…. அவசரமா ஒரு சினன வேலை!… வீட்டு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்…” சொல்லும் போது அவர் முகம் பேயறைந்தது போல் மாறியிருக்க அந்த நர்ஸ் குழப்பமானாள்.
மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த டாக்டரின் கார், அந்த சிக்னலில் நின்றது.
கடந்து செல்லும் ஒரு கட்சிப் பேரணிக்காக நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட டாக்டர் பொறுமை இழந்தார். “ச்சை… இந்த நேரம் பார்த்துத்தான் இப்படியெல்லாம் ஆகணுமா?” அவரது கை அவரையுமறியாமல் ஸ்டீயரிங்கை ஓங்கி அடித்தது.
இருபத்து நிமிடங்களுக்குப் பிறகே சிக்னல் நீக்கப்பட்டது.
அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டையடைந்து பூட்டியிருந்த வீட்டுக் கதவை அவசரமாய்த் திறந்து வேக வேகமாய் உள்ளே ஓடிய டாக்டர் பரமசிவம் எதிரில் வந்த தன் மனைவி சிவகாமியை அதே வேகத்தில் ஆரத் தழுவிக் கொண்டு தழுதழுத்தார்.
‘ஏங்க.. என்னாச்சு உங்களுக்கு…. உடம்புக்கெல்லாம் நல்லாத்தானே இருக்கு?” பயந்து போய்க் கேட்டாள் அவள்.
‘என்னை மன்னிச்;சிடு சிவகாமி…. எனக்கு இன்னிக்குத்தான் புத்தி வந்திருக்கு…. இனிமே… இனிமே சத்தியமா உன்னை ஏ.சி.ரூமுக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப போக மாட்டேன் சிவகாமி…. என் மனசுல இருந்த சந்தேகப் பேய் செத்திடுச்சு சிவகாமி…” குரல் கமறியது.
தன் கணவரின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம் புரியாத சிவகாமி ஒருவித பிரமிப்புடன் அந்தத் தழுவலை இறுக்கிக் கொண்டாள். சந்தேகம் என்னும் மாயை மறைந்து சந்தோஷம் என்னும் தெய்வீகம் அங்கு மெல்ல மெல்ல வியாபிக்கத் துவங்கியது.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings