இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இதுவரை :
கர்ப்பகால நீரிழிவு நோயை சாப்பாட்டின் மூலம் சரி செய்ய நினைக்கும் கவியினியாள் என்ன முயற்சி எடுத்தாள் எடுக்கும் முயற்சி வென்றதா என்பதை பார்ப்போம்.
இனி :
கருப்பரிசியை நேற்று இரவு ஊற வைத்தேன். காலையில் எழுந்ததும் அதை அரைத்து சீரகம் மிளகு சேர்த்து நன்கு கொதிவிட்டு இரண்டு டம்ளர் பருகினேன்.
இட்லியும் குழம்பும் அலுவலகத்திற்குச் சென்று பதினொரு மணிக்குச் சாப்பிட எடுத்துக் கொண்டேன். மறுபடியும் மதியம் இரண்டு மணிக்கு கொஞ்சம் சாதமும் பொரியலும். பிரித்துப் பிரித்து சாப்பிட அறிவுறித்தி இருக்கிறார்கள். அதற்காக இந்த ஏற்பாடு.
சாதம் என்றால் வெறும் வெள்ளை அரிசி இல்லை. ஒரு நாள் அரிசி என்றால் ஒரு நாள் தினையரிசி , வரகரிசி குதிரைவாலி அரிசி இப்படி மாறி மாறி சாப்பிட முயற்சி செய்தேன்.
இரவு உணவை சீக்கிரம் முடித்து விட்டு சிறிது நேரம் மொட்டை மாடியில் நடைபயணம் மேற்கொண்டோம்.
இரவில் அருந்தும் பாலில் துளி கூட சக்கரை இல்லாமல் குடித்தேன்.
முதல்முறை குடிக்கும் பொழுது குமட்டல் ஏற்பட்டது. பின் அடுத்த நாள் குடிக்கும் பொழுது அதனுடைய தன்மை பிடிக்க ஆரம்பித்தது. மூன்றாம் நாள் பாலின் தூய ருசி இதுதான் என புரிந்தது.
எனக்கு அந்த சுவை பிடித்துப் போனது. வெறும் பாலே இவ்வளவு நன்றாக இருக்கிறதே இதில் வெள்ளை சக்கரை போட்டு சுவை கூட்ட யார் பழக்கி விட்டார்கள்.
எல்லா அரிசி வகையும் சாப்பிட வழக்கமாக்கினேன். குழம்புடன் சாப்பிட வெள்ளை அரிசியின் சுவை தூக்கலாக இருக்கும். மற்ற தினை வகைகள் சற்று மந்தமாக இருந்தது. அதற்காக மோசம் என்று கூறிவிட முடியாது. எல்லாம் பழகப் பழக சரியாகி விடும்.
மூன்று நான்கு நாட்கள் நல்லபடியாக சென்றன. பின் ஒவ்வொரு வேளைக்கும் நானே மெனக்கெட்டு செய்வது கடினமாக இருந்தது.
வேலைகள் அதிகம் செய்வதினாலும் சுகர் குறையும் தான். எனினும் அலுவலகத்தையும் வீட்டு வேலைகளையும் சரி வர செய்து முடிக்க முடியவில்லை. ஆதிக்கும் அலுவலக வேலை இருந்தது. காலை நேரத்தில் உதவுவார். மற்ற நேரத்தில் எதிர்பார்க்க முடியவில்லை.
பழங்கள் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு காய்கறிகள் கீரைகள் நிறைய சாப்பிட்டேன். விட்டுவிடாமல் செய்ய வேண்டும் என்று இழுத்து பிடித்து தொடர்ச்சியாக முயன்றேன்.
ஐந்தாம் நாள் அலுவலகத்தில் தோழர் ஒருவருக்கு பிறந்தநாள் என்று கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
எனக்கும் ஒரு துண்டு வெட்டிக் கொடுத்தார்கள். ஒரு மனது வேண்டாம் என்கிறது இன்னொரு மனது வேண்டும் என்கிறது. இரண்டுக்கும் மத்தியில் போராட முடியாமல் கேக்கை கை நீட்டி வாங்கினேன்.
முதல் வாய் வைத்தேன். இயல்பாகவே எனக்கு கேக் அந்த அளவிற்கு பிடிக்காது. இத்தனை நாட்கள் சரியாக இனிப்பு உண்ணாமல் இருந்ததில் இன்று நாவில் இனிப்பு பட்டதும் என்னவோ போல் ஆனேன். முழு துண்டையும் சாப்பிட்டேன்.
பின் வருத்தப்படவும் செய்தேன். நான்கு ஐந்து நாட்களாக சரியாக எல்லாம் சென்று கொண்டு இருந்ததே. இப்பொழுது மீண்டும் இப்படி சாப்பிடுகிறேனே. இந்த ஒருமுறை மட்டும் இனி சரியாக கடைபிடிப்போம் என மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.
அடுத்த நாள் உணவு இடைவேளையில் என்னுடன் மதியும் இன்னும் இரண்டு தோழிகளும் சாப்பிட அமர்ந்தார்கள்.
மதி விடுதியில் தங்கி வேலைக்கு வந்து செல்கிறாள். ஒரு சில நாட்களில் கடைகளில் வாங்கி வந்து உண்பாள் ஒரு சில நாட்களில் கேன்டீன் சென்று சாப்பிடுவாள் ஒரு சில நாட்களில் ஆர்டர் செய்து உண்பாள்.
இன்று அவளும் இன்னொரு தோழியும் சேர்ந்து நிறைய உணவுகள் ஆர்டர் செய்து இருந்தார்கள்.
வொயிட் சாஸ் பாஸ்தா, ஃப்ரைட் ரைஸ், மஞ்சுரியன் ஆகியவை வந்திருந்தன. மேஜை மீதி வைத்து விட்டு என்னையும் எடுத்துக் கொள்ள வற்புறுத்தினாள்.
பாஸ்தா பிடிக்காது. மீதி இரண்டு சுவையும் நாக்கில் ஒட்டிய சுவை. எடுக்காமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் எடுத்து சாப்பிட்டேன். இதை சாப்பிட்டால் சுகர் ஏறுமே. சுகர் மட்டுமா இதை சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லதா. இன்றோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
என் நேரம், என்னை அடுத்த நாளும் வம்பிற்கு இழுத்தார்கள்.
பீட்சாவை ஆர்டர் செய்துவிட்டு சாப்பிடக் கூப்பிட்டார்கள். நான் கடைசியாக பீட்சா சாப்பிட்டு ஒரு வருடம் இருக்கும். அதை பார்த்ததும் ஒரு துண்டு எடுத்து சாப்பிட தோன்றியது. பேக்கரி பொருட்கள் மாவு பொருட்கள் சாப்பிடக் கூடாதென நினைத்தேனே.
“வேணாம் நீங்க சாப்டுங்க” அவர்களிடம் சொல்லியும் பார்த்தேன்.
“மாசமா இருக்க உன்னை விட்டுட்டு எப்படி நாங்க சாப்பட்றது”
“வேணாம் மதி”
“ஒரு பீஸ் எடுத்துக்கோ கவி” சூழலுக்காக எடுத்தேன்.
ஒரு துண்டு சாப்பிட்டேன். அவ்வளவாக பிடிக்கவில்லை எனினும் ஒரு துண்டு வயிற்றுக்குள் சென்று விட்டது.
எது சாப்பிட வேண்டும் எது சாப்பிடக் கூடாது என்று நாம் ஒரு முடிவுக்கு வந்தால் நம் சூழல் இன்னொரு முடிவில் இருக்கிறது. தெருவில் வந்து நின்றாலே எதையாவது வாங்கி உண்ண வைத்து விடுகிறார்கள்.
சுற்றி இருப்போரின் உணவு முறை வெவ்வேறாக இருக்கிறது. இது நல்லது அது கெட்டது என நாம் கூறினால் அம்பி ஆகி விடுகிறோம்.
சிறு வயதில் இருந்தே சாப்பிடும் உணவில் இருக்கும் தீமையை இன்று கண்டுபிடித்துச் சொல்கிறார்கள் அப்படியென்றால் இத்தனை வருடங்கலாக சாப்பிட்டு விட்டோமே அதற்கு யார் காரணம். எதாவது ஒரு பிரச்சனை வந்தால் தான் ஒவ்வொன்றாக வெளி வரும்.
இப்பொழுது என் பிரச்சனை எனக்கு இருக்கும் கர்ப்பகால நீரிழிவு நோயை குணப்படுத்த வேண்டும். ஆதியிடம் உணவில் சரி செய்து காட்டுகிறேன் என்று உறுதி கூறியிருக்கிறேன். நடக்குமா!!!
மனதிற்குள் இப்படி பல சிந்தனைகளோடு அலுவலகத்தில் அமர்ந்திருக்க அலுவலக நண்பர் ஒருவர் அருகில் வந்தார்.
“எங்க ஊருல பண்டிகைன்னு அம்மா ஸ்வீட் செஞ்சாங்க.. எடுத்துக்கோங்க” என்றவர் பல வண்ண இனிப்புகளை என்னிடம் நீட்டினார்.
மனதிற்குள் நடிகர் வடிவேலு குரல் கேட்டது.
‘சோதிக்காதிங்கடா என்னைய சோதிக்காதிங்க’
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings