இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அந்த ஆஸ்பத்திரியின் அவசர வார்டு பிரிவின் வெளியே நின்று அழுது கொண்டிருந்தது அந்த டாக்டரின் குடும்பம்.
“டாக்டருக்கு இப்படி ஒரு நோய் வருமென்று யார் எதிர்பார்த்தார்கள்” என்று டாக்டர் சந்திரசேகரைப் பார்க்க வந்திருந்த நண்பர் ராஜகோபால் அருகில் நின்றவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.
கொஞ்சம் நேரத்தில் அந்த இடம் பதட்டமாகிவிட, டாக்டர்.சந்திர சேகரின் மருமகன் நீதிபதி குமணராசன் வந்து சேர “இவ்வளவு நாள் நீங்கள் இந்த மருத்துவமனையிலேயே வைத்திருந்ததே தப்பு. இப்போது அழுது என்ன பிரயோஜனம்?
ஒரு வாரத்திற்கு முன்னாலேயே நான் அமெரிக்காவிற்கு கொண்டு போய் அவருக்கு நல்ல டிரீட்மெண்ட் கொடுக்கலாமென்றேன். நீங்கள் தான் மறுத்துவிட்டீர்கள்” வாசலில் நின்ற மாமியார் செல்வ லட்சுமியிடம் கோபப்பட்டார் குமணராசன்.
“இங்கே என்றால் எல்லோரும் அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் ….” கரகரத்த குரலில் அழுதுகொண்டே சொன்னாள் மாமியார் செல்வ லட்சுமி.
“எல்லோரும் பக்கத்திலேயிருந்து பார்த்துக் கொண்டதின் லட்சணம் அவருடைய உயிரைப்பற்றி யாருக்கும் கவலை இல்லை..கொஞ்சமாவது காய்ச்சல் குறைந்திருக்கிறதா..”
”குறையவில்லை” தலையை அங்குமிங்கும் அசைத்தாள். மாமியார்.
“ நல்ல வேளை இந்த விமானத்திலாவது அனுப்புவதற்கு வசதி கிடைத்தது. நீங்கள் மட்டும் கூடப் போகிறீர்கள். குவைத்திலிருந்து வேறு விமானத்தில் உங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பார்கள். அங்கே உங்களை வரவேற்பதற்கும், ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்கும் என் நண்பர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று சொல்லி விட்டு வேகமாக மருத்துவமனையின் நிர்வாகியான பெரிய டாக்டரை பார்க்க கிளம்பினார் குமணராசன்..
டாக்டரின் இளைய மகள் சில்வியா கண்கள் சிவக்க “அப்பாவின் நிலைமை இப்படியாகி விட்டதே. அப்பாவிடம் என்னவெல்லாம் சொல்ல நினைத்திருந்தோம்’ என்று எண்ணிக் கொண்டே திரும்பிப் பார்த்த போது சகாயராஜ் கீழேயிருந்து வேகமாக மாடியேறி வந்துக்கொண்டடிருப்பதை கவனித்தவள் கொஞ்சம் பதட்டமானாள்.
’இவன் ஏன் இங்கு வந்தான். அப்பா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதை நான் இவனிடம் சொல்லவில்லையே.? ஏற்கனவே ஒருமுறை வீட்டிற்கு வந்து அப்பாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு போனது காணாதா. ஏன் இங்கு வந்தான்..அவருக்குத் தெரிந்தால் கடித்துக்குதறி விடுவார்கள் பேசாமல் போகச் சொல்லி விடலாம்’ என்று எண்ணியவாறு படிக்கட்டின் அருகில் வந்தவள் சகாயராஜ் மேலேறி வந்ததும,. அவனைத் தனியாக இழுத்துக்கொண்டு ஒரு ஒதுக்குப் புறமாக வந்தாள்
”இங்கே ஏன் வந்தாய்?”
”என் வருங்கால மாமனாரைப் பார்த்துவிட்டு வரலாமென்று தான்”
”மண்ணாங்கட்டி ஏற்கனவே நம்ம செட்டப் படி நீ எங்க வீட்டிற்கு வந்தாய்.. அப்பா உன்னை செமையாகத் திட்டி அனுப்பிட்டாங்க இந்த நேரத்திலே நீ அந்தப் பக்கம் வந்தே என் அம்மா,அக்கா,தம்பி எல்லோரும் உனக்கு சரியான டோஸ் கொடுத்து விடுவார்கள்.”
அதற்குத்தான் முன் யோசனையோடு உன் அப்பாவிற்கு உதவி செய்ய நானும் அமெரிக்காப் போகிறேன் நான் செய்கிற உதவியிலேயே மயங்கிப் போய் அப்படியே என்னை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்வார்கள்.”
”சும்மாயிரு! இந்த ஊரிலே ஒழுங்காக ஒரு வேலைக்குப் போக துப்பில்லை, அமெரிக்கா போகப்போகிறாராம். அதெற்கெல்லாம் உனக்கு காசு ஏது ராஜா?”
அவன் அவளிடம் ஏதோ இரகசியமாய் சொல்ல, அப்படியே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனவள் “ராஜ் உன்னைக் காதலித்ததே தப்போ என்று தோன்றுகிறது. என் அப்பா பெரிய டாக்டர், எஞ்சினியர், கலெக்டர்னு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
நீ அவரோடு அமெரிக்க ஆஸ்பத்திரியில் இருந்து நர்ஸிங் பாயாக உதவி செய்தால், கூட கொஞ்சம் சீப்பாகி விடுவாய். வேறு ஏதாவது நல்ல வேலைக்கு போக முயற்சி செய்” என்றாள் சில்வியா.
”நீ வேண்டுமானால் பார். நான் செய்யும் உதவிகளை உணர்ந்து உன் அம்மாவும் அப்பாவும் எனக்கு உன்னைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறார்கள்”
”நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாய். ஒழுங்காக இந்த ஒரு வருடத்தில் “கம்ப்யூட்டர் முடித்திருந்தால் இந்த ஊரிலேயே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கும்.”
”எனக்கும் கம்ப்யூட்டருக்கும் ஒத்து வர மாட்டேங்கிறது சில்வியா”
”சே! இப்படி ஒரு மக்கைப் போய் காதலித்தேன் பார்” என்று தலையில் அடித்துக்கொண்ட போது “சில்வியா எங்கே?” என்ற குரல் கேட்க, சரி சரி எப்படியாவது போய் ஒரு பூங்கொத்தும், சீக்கிரம் குணமடைய ஒரு வாழ்த்து அட்டையும் வாங்கிவிட்டு வந்துவிடு’ என்று ஓடினாள் சில்வியா.
குமணராசன் “எங்கே போய் விட்டாய் சில்வியா? உன் அம்மாவை கொஞ்சம் தேற்று! நான் மாமாவை விமானத் தளத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
”சரி அத்தான்”
”அங்கே யாரோடு பேசிக்கொண்டிருந்தாய்… அந்தப் பையன் சகாயராஜ் மாதிரி….”…என்று இழுத்தார்.
”இல்லை அத்தான் அப்பாவின் நண்பர் மகன் ஒருவர் அப்பாவை பார்க்க வந்திருந்தார் அவர் தான் என்னோடு பேசிக்கொண்டிருந்தார்”
”இனி அந்தப் பிச்சைக்காரப் பயல் சகாயராஜோடு தொடர்பு எதுவும் வைத்துக்கொள்ளாதே. அது உனக்கும் நல்லதல்ல. நம் குடும்பத்திற்கும் நல்லதல்ல”
சில்வியா ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள் ”’சரி சரி போய் உன் அம்ம்மாவிற்கு ஆறுதல் சொல் அவர்கள் அழுது கொண்டீருக்கிறார்கள்” என்று சொல்லி விட்டு மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றார் குமணராசன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings