in ,

உன் கதையில்… என் கதை – (சிறுகதை) முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

       வீட்டின் முன் வந்து நின்ற ஆட்டோவிலிருந்து மகள் ஜெயந்தி மட்டும் தனியாக இறங்குவதைப் பார்த்து அதிர்ந்தாள் லட்சுமி.

      “என்னது?… இவள் மட்டும் தனியா வந்திருக்கா?.. மாப்பிள்ளை கூட சண்டை கிண்டை போட்டுட்டு வந்துட்டாளோ?… இவர் வேற இந்த நேரம் பார்த்து வீட்டுல இல்லை” மனசு தவித்தது.

     ஆட்டோவை அனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்த ஜெயந்தி, கையில் இருந்த சூட்கேஸை “தொப்”பென்று சோபாவின் மேல் வீசி எறிந்து விட்டு, நேரே உள்ளறைக்குச் சென்று படுக்கையில் குப்புற விழுந்து குலுங்கிக் குலுங்கி அழலானாள்.

      “போச்சுடா… நாம நெனச்சது சரிதான் போலிருக்கு… இவ சண்டை போட்டுட்டுத்தான் கிளம்பி வந்திருக்கா… இப்ப என்ன பண்றது?… சரி சமாளிப்போம்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட லட்சுமி மெல்ல மகள் இருக்கும் அறைக்குள் சென்றாள்.

       கட்டிலருகே சென்று, படுக்கையில் அமர்ந்து அவள் தலையை ஆதரவாகத் தடவி, “என்ன ஜெயந்தி?… என்ன நடந்தது?… ஏன் மாப்பிள்ளை வரலை?” கேட்டாள்.

     வேகமாய்த் தலை நிமிர்ந்த ஜெயந்தியின் கண்களில் கண்ணீர்க் குற்றாலம்.

     “அம்மா…. அவரு சரியில்லைம்மா!… அவங்க எல்லோருமாய்ச் சேர்ந்து நம்ம நல்லா ஏமாத்திட்டாங்கம்மா!”.

     அதைக் கேட்ட லட்சுமி சற்றும் கோபப்படாமல், தன் நிலையில் எந்த வித மாற்றத்தையும் காட்டாமல், “அப்படியா?… சரி… எதை வெச்சு அப்படிச் சொல்றே?…. கல்யாணமாகி இந்த நாலு மாசத்திலேயே நீ அவரைப் பற்றி முழுசும் புரிஞ்சுகிட்டியா?…எப்பவும் அவசரப்பட்டு எதையும் பேசி விடக் கூடாது ஜெயந்தி!… அப்புறம் கொட்டி விட்ட வார்த்தைகளுக்காய் பின்னாடி வருத்தப்பட வேண்டியிருக்கும்!” வார்த்தைகளை அளந்து பேசினாள்.

     “அம்மா!… அவரு கல்யாணத்துக்கு முந்தி வேற யாரோ ஒரு பெண்ணை தீவிரமாய்க் காதலிச்சிருக்கார்!”.

     லட்சுமி அதிர்ந்து போனாள். ஆனாலும் தன் அதிர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “யாரு… யாருடி சொன்னது உனக்கு இப்படியெல்லாம்?” கேட்டாள்.

      “அவரே… அவரே அவர் வாயால் சொன்னார்!… ஜாதி பிரச்சனையாம்… ரெண்டு பேர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பாம்…. வீணா பிரச்சினைகளை ஏற்படுத்திக்கிட்டு வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட வேண்டாம்னு இவங்களே இவங்களுக்குள்ளார பேசித் தீர்மானிச்சுட்டு பிரிஞ்சிட்டாங்களாம்!… காதலை தியாகம் பண்ணிட்டாங்களாம்!… வெட்கமில்லாமல் வெளிய வேற சொல்றார்!”.

     ”அவ்வளவுதானே?… இதுல நீ வருத்தப்பட என்ன இருக்கு?” சர்வ சாதாரணமாய்க் கேட்டாள் லட்சுமி..

      “என்னம்மா நீ இப்படி பேசுறே?… மனசுக்குள்ளார அவளை வெச்சுகிட்டு…. என் கூட குடித்தனம் பண்ணிட்டிருக்கார்!…இது சரியா?… நியாயமா?… வெறும் கடமைக்காக தாம்பத்தியமா?” சொல்லி விட்டு இன்னும் கொஞ்சம் அழுகையை கூட்டிக் கொண்டாள் ஜெயந்தி.

“உஷ்… அழுவாதே ஜெயந்தி!… உனக்கு அவர் எதிலாவது ஏதாவது குறை வச்சிருக்காரா?.. சொல்லு… நல்லா யோசிச்சுச் சொல்லு!… ஏதாவது குறை வச்சிருக்காரா?… ஆசைப்பட்டுக் கேட்டதை வாங்கித் தரலையா?… வெளிஅ தெருவுக்குக் கூட்டிட்டுப் போகலையா?… பேசும் போது கடுப்பாப் பேசறாரா?… கோபப்படறாரா?”

      “இல்லை… நீ சொன்ன எதுவுமே இல்லை!… எனக்கு எந்த குறையும் வைக்கல!… கேட்டதை வாங்கித் தர்றார்… அன்பொழுகப் பேசறார்… ஒத்துக்கிறேன்!… ஆனாலும் ஏதோ செயற்கைததனமா  செய்யற மாதிரித்தான் தோணுது!… ரெண்டு பேரும் வாழ்ற வாழ்க்கையே செயற்கைத்தனமா வாழுற மாதிரித்தான் இருக்கு!” அழுதழுது அவள் முகமே வீங்கி விட்டது.

     சில நிமிடங்கள் அமைதியாயிருந்த லட்சுமி, தன் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி லேசாகச் சிரித்தார்.

      “என்னம்மா சிரிக்கறே?…. என்னைச் பார்த்தா உனக்கு சிரிப்பாயிருக்கா?…  ஏம்மா… நீயும்… அப்பாவும் எத்தனை அன்னியோன்யமா.. எப்படி அன்பா… ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் குடுத்து ஒற்றுமையா வாழ்ந்தீங்க?… நானே பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன்!… ஆனா… என் வாழ்க்கைதான் இப்படி வீணாப் போயிடுச்சு!” இடது கையால் மூக்கை சிந்தினாள் ஜெயந்தி.

     வேகமாய் எழுந்த லட்சுமி, “ஜெயந்தி…. கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு… என் பின்னாடி வா” என்று கூறி விட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.

     அங்கிருந்த பழைய இரும்பு பெட்டியைத் திறந்து துணிகளுக்கு அடியிலிருந்து பழுப்பேறிப் போன ஒரு கவரிலிருந்து,  பழுப்பேறிப் போன ஒரு போட்டோவை எடுத்து மகளிடம் கொடுத்தாள்.

     வாங்கிப் பார்த்து நெற்றி சுருக்கிய ஜெயந்தி, “யாரும்மா இது அப்பா கூட நிக்கறது?… உன்னை மாதிரித் தெரியலையே… வேற யாரோ மாதிரியல்ல இருக்கு!…. நீ இல்லையா?” எதுவும் புரியாமல் கேட்டாள்.

      “அது நான் இல்லையடி!… உங்க அப்பாவோட பழைய காதலி!” என்றாள் லட்சுமி எங்கோ பார்த்தபடி.

      “என்னம்மா சொல்றே?”.

      “ஏண்டி…. என்னமோ உன் புருஷன் கல்யாணத்துக்கு முன்னாடி யாரையோ காதலிச்சிருக்காரு… அதனால் இனி அவர் கூடக் குடித்தனம் பண்ண முடியாது!ன்னு திரும்பி வந்துட்டியே?… இதுக்கு என்னடி பதில் சொல்றே?”. தலையை இடப்புறமாய்ச் சாய்த்துக் கொண்டு கேட்டாள் லட்சுமி.

      “அம்மா… கொஞ்சம் விவரமா சொல்லும்மா” பற்களைக் கடித்துக் கொண்டு எரிச்சலுடன் கேட்டாள் ஜெயந்தி.

      “ஜெயந்தி… உங்கப்பாவும் கல்யாணத்துக்கு முன்னாடி… அவங்க பண்ணையில வேலை செஞ்ச… இந்தப் பொண்ணை உசுருக்குசுராய்க் காதலிச்சிருக்காரு!… பாவம்… அது வேற ஜாதிப் பொண்ணு… ஊர்க்காரங்க விஷயம் தெரிஞ்சு அந்த பொண்ணையும்… அவ குடும்பத்தையுமே ஊரை விட்டே துரத்தி விட்டுட்டாங்க!… இவரு பாவம் சின்ன வயசாச்சா… ஊரை எதிர்த்து எதுவுமே பண்ண முடியல!… துடியாய்த் துடிச்சிருக்காரு!… பாவம், கடைசில பெரியவங்களாப் பார்த்துக் கட்டி வெச்ச என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்டாரு!”.

     “இந்தப் போட்டோ… எப்படி உன் கைல…?”

     “அவங்க ஊர்த் திருவிழாவில்… இரண்டும் சேர்ந்து எடுத்திருக்குதுக!… அவரே தான் சொல்லி என்கிட்ட கொடுத்தார்”.

      “அதுக்கப்புறமும் எப்படிம்மா நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு ஒத்துமையா வாழ்ந்தீங்க?”.

     “அதுதாண்டி பக்குவம்ங்கிறது!… வாலிப வயசுல ஏற்படற காதலெல்லாம் வெற்றி அடையறது  இல்லைடி!… அதுக்காக அந்த தோல்வியையே பெருசா நினைச்சுக்கிட்டு… மீதி வாழ்க்கையையும் வீண் அடிச்சுக்கிறது பைத்தியக்காரத்தனம்!… இன்னொரு பெண்ணைக் காதலிச்சாரு என்கிறதுனால நம்ம மேல அவருக்கு காதல் வராதுன்னு ஏண்டி நினைக்கிறே?… நீதாண்டி அந்தப் பழைய காதல் திரும்பி உன்மேலே பாயற மாதிரிப் பக்குவமா நடந்துக்கணும்!… நீ வேணா சாயந்திரம் உங்க அப்பா வந்தார்ன்னா அவர்கிட்டக் கேளு… அந்த பழைய காதல் கதையை சுத்தமா மறந்தே போயிருப்பார்.. எதனால…? எல்லாம் என்னோட நடத்தையாலதான்!… போடி… போய் உன் புருஷன் மனசுல இருந்து அவளைத் தூக்கி வீசிட்டு… நீ உட்காருவதற்கான முயற்சிகள்ல ஈடுபடுடி!… எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம்… மூளையை மட்டுமே பயன்படுத்துவதுதான்… கூடவே கொஞ்சம் மனதையும் பயன்படுத்தினால் தெளிவு நிச்சயம் கிடைக்கும்”.

     அம்மா ஆணித்தரமாகப் பேசியதில் ஒரு நியாயம் இருப்பதாகப் பட்டது ஜெயந்திக்கு.

     சோபாவின் மேல் வீசிய சூட்கேஸை பட்டென்று எடுத்துக் கொண்டு வேகமாக வெளியேறினாள் புருஷன் வீட்டை நோக்கி.

     அவள் போகட்டும் என்று வழி விட்டு ஒதுங்கி நின்று கொண்டாள் லட்சுமி.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அப்பாவுக்கோர் அதிர்ச்சி வைத்தியம் – (சிறுகதை) – முகில் தினகரன்

    அடுத்தவங்க அழுதா மனசு தாங்காது – (சிறுகதை) முகில் தினகரன்