எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
காலை நேர நடைபயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, சபாபதியின் கண்கள் அவரையும் அறியாமல் எதிர்வீட்டைப் பார்த்தது. இன்றும் வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
‘என்னாச்சு தியாகுவுக்கு? ரெண்டு நாளா நான் வாக்கிங்க் முடிச்சு வரதுக்குள்ள ஆஃபீஸ் கிளம்பிடறானா? எப்பவும் இந்த நேரத்துக்குத் தானே கிளம்புவான். இந்த மூணு நாளா அவனைப் பார்க்கவே முடியலையே.’
தனியாகப் புலம்பிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார் 68 வயது சபாபதி. நடந்து வந்த களைப்பு நீங்க, சற்று நேரம் ஃபேன் காற்றில் உட்கார்ந்தார். ஆனாலும் அவர் மனம் முழுவதும் எதிர்வீட்டுத் தியாகு பற்றிய சிந்தனையிலேயே இருந்தது.
“என்னங்க, ரொம்ப தீவிரமா யோசனை? என்ன விஷயம்,” கேட்டுக் கொண்டே அவர் மனைவி சிவகாமி வந்தார்.
“சிவகாமி, நம்ம எதிர்வீட்டு தியாகு ஏதாவது சொன்னானா? மூணு நாளா அவனைப் பார்க்க முடியலையே.”
“தெரியலையே, வேலைக்குப் போகற பையன். ஏதாவது வேலையா சீக்கிரம் கிளம்பிப் போறானோ என்னவோ. இல்லை ஊருக்குக்கூட போயிருக்கலாம்.”
“ஊருக்குப் போற மாதிரி எதுவும் சொல்லலையே. சொல்லாம கொள்ளாம ஊருக்குப் போயிடுவானா?”
“இதுல என்னங்க இருக்கு? அவன் நமக்கு சொந்தமா பந்தமா? ஏதோ எதிர்வீட்ல இருக்கற பையன். திடீர்னு ஊருக்குப் போக வேண்டி வந்திருக்கலாம்.”
“என்ன சிவகாமி இப்படிச் சொல்லிட்டே? தினமும் நான் காலையில் வாக்கிங் முடிச்சிட்டு வரும்போது அவன் ஆஃபீஸ் கிளம்புவான். அப்போ எனக்கு குட்மார்னிங் சொல்லிட்டு, என்கிட்ட தினமும் பேசுவான். அங்கிள் நல்லா இருக்கீங்களா? டெய்லி வாக்கிங் எல்லாம் போய் செம ஃபிட்டா இருக்கீங்க சூப்பர் அப்படின்னு அவ்வளவு நல்லாப் பேசுவான்.
இப்ப மூணு நாளா அவனைப் பார்க்கவே இல்லை. கதவுல பூட்டு போட்டிருக்கு. சீக்கிரம் ஆஃபீஸ் கிளம்பிப் போறதா இருந்தா என்கிட்ட சொல்லியிருக்கலாம் இல்ல. அதே மாதிரி ஊருக்குப் போறதுனாலும் நம்மகிட்ட சொல்ல வேண்டாமா?
இந்தக் காலத்துப் பசங்களுக்குக் கொஞ்சம்கூட பொறுப்பே இல்ல. டெய்லி அந்த அங்கிளைப் பார்த்துப் பேசுவோமே, அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும், இல்லேன்னா எதிர்பார்த்து ஏமாந்து போயிடுவாரு அப்படின்னு கூடவா தெரியாது. எல்லாப் பசங்களும் பொறுப்பில்லாம இருக்காங்க.”
“இப்ப என்னத்துக்கு இவ்வளவு வார்த்தைகளை விடறீங்க? யார் பெத்த புள்ளையோ, உங்களைப் பார்க்கும் போது ஆசையா நாலு வார்த்தை பேசினான். அதுக்காக அவனை இப்படியா பேசுவீங்க?”
“ஏதோ நான்தான் தப்பு பண்ண மாதிரி என்கிட்ட பேசற நீ? வாக்கிங் முடிச்சு வந்ததும் நம்ம வீட்டு வாசலைக்கூட பார்க்க மாட்டேன். என்னை அறியாம என்னோட கண் அவன் வீட்டு வாசலைத்தான் பார்க்குது. ஆனா பூட்டுதான் தொங்கிட்டிருக்கு. அது எனக்கு எவ்ளோ மனசு வருத்தத்தைத் தரும். அக்கறையா, அன்பா விசாரிக்கற பையன், நான் இப்படி வருத்தப்படுவேன்னு யோசிக்க மாட்டானா? இந்தத் தலைமுறை எல்லாமே இப்படித்தான். நம்ம தலைமுறையில் இப்படியா இருந்தோம்? ஒரு வார்த்தை நம்மகிட்ட சொல்லணும்னு இந்தத் தலைமுறைப் பசங்களுக்குத் தோணவே மாட்டேங்குது.”
அதற்குமேல் தன் கணவரிடம் என்ன விளக்கம் சொல்வது என்று தெரியாமல் சிவகாமி தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். அடுத்த இரண்டு நாட்களும் அதேபோல் சபாபதி காலையில் வரும்போது வாசலில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. மிகவும் வெறுத்துப் போனார் சபாபதி.
“பொறுப்பில்லாத பசங்க. ஏதோ பெத்தவங்களை எல்லாம் விட்டுட்டு தனியாக வந்து தங்கி வேலை பார்த்துட்டு இருக்கானேன்னு அவன் மேல பாசமா இருந்தேன். ஆத்திர அவசரத்துக்கு அவனுக்கு சாப்பிடறதுக்கெல்லாம் கூட நீ செஞ்சு கொடுத்தே.
இப்படி சொல்லாம கொள்ளாம ஊருக்குக் கிளம்பிப் போவானா? இந்த வாரம் முழுக்க அவனைப் பார்க்கவே இல்லை. பூட்டுதான் தொங்குது. சாயங்காலம் கூட பார்த்தேன் வீட்ல லைட்கூட எரியல. அப்போ ஊருக்குப் போயிருக்கான்னு தானே அர்த்தம்.
ஒரு வார்த்தை நம்மகிட்ட சொல்லிட்டுப் போனா என்ன? பெரியவங்களை மதிக்கத் தெரியல. நான்தான் எல்லார் மேலேயும் ரொம்ப அக்கறை எடுத்துக்கறேன். என் மேலதான் தப்புன்னு கோவம் வருது.”
“காலைல வாக்கிங் போயிட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சதுல இருந்து அந்தப் பையனை இப்படி வறுத்தெடுக்கறீங்க? அவன் எதுக்கு உங்ககிட்ட சொல்லிட்டுப் போகணும்னு எதிர்பார்க்கறீங்க?”
“சொல்லிட்டுப் போகணும்னு எதிர்பார்க்கல. ஆனா சொல்லிட்டுப் போனா தப்பில்லைன்னு சொல்றேன். பெரியவங்களுக்கு என்ன மரியாதை அப்புறம்? எவ்வளவு நாள் நீ பண்ற டிபன் எல்லாம் அவனுக்குக் கொடுத்து அவனைப் பார்த்துகிட்டோம்.”
“எப்பப் பாரு உங்களுக்கே எல்லாரும் முன்னுரிமை கொடுக்கணும். உங்களை மதிக்கணும். அப்படி மட்டும்தான் யோசிக்கறீங்க. அவனுக்கு என்ன பிரச்சனையோ? வாசல்ல பூட்டு தொங்கறதைப் பார்த்துட்டு அந்தப் பையனை ஒரு வாரமா ஏதோ ஒண்ணு சொல்லிட்டே இருக்கீங்க. தினமும் உங்ககிட்ட ஆசையா பேசினதுக்கு அவனுக்குக் கிடைச்ச பரிசு இதுதான்.”
“ஆமா, நீ எப்பவும் என்னைத்தான் தப்பு சொல்லுவே. மத்தவங்க பண்ற தப்பு எல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவே தெரியாது. இந்த மாதிரி சொல்லி சொல்லித்தானே நம்ம பசங்களையே என்கிட்ட இருந்து பிரிச்சே.”
“பெத்த பசங்களை அப்பாகிட்ட இருந்து பிரிக்கறதுக்கு எனக்கு என்ன பைத்தியமா? எப்பவுமே மத்தவங்களைத்தான் நீங்க தப்பா சொல்றீங்க. உங்க மேல என்ன தப்பு இருக்குன்னு யோசிக்கறதே இல்லை.”
“பாத்தியா, திரும்பவும் என் மேலதான் தப்பு சொல்றே.”
“சரி விடுங்க, இதுக்கு மேல நான் பேசினா சண்டைதான் பெருசாகும்.”
இளைய தலைமுறையின் போக்கைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. கோபம்தான் வந்தது சபாபதிக்கு. மறுபடியும் மறுபடியும் எதிர்வீட்டு தியாகு தன்னிடம் சொல்லாமல் ஊருக்குப் போனது கோபத்தையும், அவன்மேல் அதிருப்தியையும் தந்தது. வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் பூட்டைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ அவருக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது.
சனிக்கிழமை மாலை சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் சபாபதி. வாசலில் கேட்ட குரல் அவர் கவனத்தைத் திசை திருப்பியது. தியாகு வாசலில் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் சபாபதிக்கு மனதுக்குள் ஒருவித பாசம் பொங்கியது. ஆனாலும் அதைத் தள்ளிவிட்டு கோபம்தான் முன்னால் வந்து நின்றது.
வாயைத் திறந்து அவர் திட்ட ஆரம்பிக்கும் முன் தியாகுவே பேசிக்கொண்டு வந்தான்.
“என்ன அங்கிள், எப்படி இருக்கீங்க? ஒரு வாரமா உங்களைப் பார்க்க முடியல. அதான் இன்னைக்கு வீட்டுக்கே வந்துட்டேன். சாரி அங்கிள்.”
“எதுக்குப்பா சாரி. நீங்க எல்லாம் இந்தத் தலைமுறை. எங்களை மாதிரி வயசானவங்களை எல்லாம் பார்த்துப் பேச உங்களுக்கு எங்கே நேரம் கிடைக்குது? நாங்க எல்லாம் எதுக்கும் உதவாதவங்க தானே.”
“எதுக்கு அங்கிள் இப்போ இப்படிப் பேசறீங்க? உங்களைப் பார்க்கத்தானே நானே ஆசையா வந்திருக்கேன்.”
“ஒரு வாரமா எங்கே போனே? ஊருக்குப் போறதா இருந்தா சொல்லிட்டுப் போகக்கூட உனக்குத் தெரியுதா? வீட்டு வாசல்ல பூட்டுதான் தொங்கிட்டிருக்கு.”
“ஒரு வாரமா நான் ஊருக்கெல்லாம் போகல அங்கிள். திடீர்னு இந்த வாரம் நைட் ஷிஃப்ட் போட்டுட்டாங்க. அதனால நைட் ஷிஃப்ட் போயிட்டு காலைல ஏழு மணிக்குத்தான் வரேன். வந்ததும் படுத்துத் தூங்கிடுவேன். வாசலில் யாராவது வந்து பெல் அடிச்சுகிட்டே இருக்காங்க. என்னால தூங்க முடியறதில்ல. அதனாலத்தான் வெளில பூட்டு போட்டுட்டா வீட்ல நான் இல்லைன்னு நினைச்சு யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க இல்லையா, அதான் பூட்டை வெளிப்பக்கமாக பூட்டிட்டு உள்ளே தூங்கிட்டிருந்தேன். சரி, ஒரு வாரமா உங்களையும் ஆன்ட்டியையும் பார்த்து பேசவே இல்லை. அதனாலத்தான் இப்போ வீட்டுக்கு வந்தேன். தப்பா நினைச்சுக்காதீங்க அங்கிள்.”
அதன்பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பிச் சென்றான் தியாகு. சபாபதி பேச்சற்று உட்கார்ந்திருந்தார். சிவகாமி தன் கணவரை பொருள் பொதிந்த ஒரு பார்வையால் தாக்க, நிலைகுலைந்து போனார் சபாபதி.
“நான்தான் அவசரப்பட்டு தப்பா நினைச்சுட்டேன் சிவகாமி.”
“இதைத்தானே நான் ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன். ஆனா ஒரு வாரமா அந்தப் பையனை என்னெல்லாம் பேச்சு பேசினீங்க. அவனோட கஷ்டம் என்னன்னு உங்களுக்கு யோசிக்கவே தோணல. உங்களைப்பத்தி மட்டும்தான் யோசிச்சீங்க. இந்த மாதிரி அவசரப்பட்டு நீங்க பேசறதாலத்தான் உறவுகள் நம்மளைவிட்டு ஒதுங்கிப் போறாங்க.
நம்ம பெரிய பையனும், மருமகளும் நம்மகூட இல்லாததுக்குக் காரணமே அதுதானே. அப்படி ஒரு அடி வாங்கின பிறகும் நீங்க மாறவே இல்லை. உங்களுக்கே எல்லாரும் மரியாதை கொடுக்கணும், உங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கணும் அப்படின்னு உங்களைப்பத்தி மட்டுமே யோசிக்கிறீங்க.
அந்தமாதிரி யோசிச்சு அவசரத்துல வார்த்தைகளை விட்டுட்டு, அதுக்கப்புறம் அதை உணர்ந்து வருத்தப்பட்டு பிரயோசனமில்லை. நீங்க பேசினதெல்லாம் நல்லவேளை அந்தத் தியாகு காதுல விழல. அதனால அவன் வீடு தேடி வந்து பார்த்துட்டுப் போனான்.
ஆனா இதே மாதிரி நம்ம வீட்டு வாசல்ல பூட்டு தொங்கினதுக்கு நீங்க அவசரப்பட்டு நம்ம மருமகள்கிட்ட விட்ட வார்த்தைகளாலத் தானே, இன்னைக்கு இப்படி நாம மட்டும் தனியா இருக்கோம். நம்ம மகன் , மருமககிட்ட என்னன்னு சொல்லி புரிய வச்சு, மறுபடி வீட்டுக்கு வர வைக்கறது?
சாத்தியப்படாது இல்லையா. உடைஞ்ச கண்ணாடி ஒட்டுமா? ஒட்டாது. நமக்குப் பிடிச்சவங்க வீட்டு வாசலில் தொங்கற பூட்டு, உங்களுக்கு வருத்தத்தையும், கோவத்தையும் தர மாதிரிதானே நீங்க பேசற வார்த்தைகள் மத்தவங்களுக்கு வருத்தம் தரும்.
யோசிச்சுப் பாருங்க, உங்களோட வாய்க்கு முதல்ல பூட்டு போடுங்க. அப்பவாவது பேசறதுக்கு முன்னாடி கவனமா பேசற பழக்கம் வரட்டும். பேத்தியை ஸ்கூல்ல விட்டுட்டுத் திரும்பி வரப்போ, ஸ்கூட்டி ரிப்பேரானதால, மருமக வீட்டுக்கு வரத் தாமதமாயிருச்சு. நாம ஊர்ல இருந்து திரும்பி வந்து வீட்டு வாசல்ல காத்திருக்க வேண்டிய கட்டாயம். கதவுல தொங்கின பூட்டுக்காக மருமகளை என்னவெல்லாம் பேசினீங்க. வேணும்னே பண்றா, ஊர் சுத்திட்டு வரா அப்படி இப்படின்னு கொஞ்ச நஞ்சமாவா வார்த்தைகள் வந்துது?
இப்ப அவங்க தனியா போய்ட்டாங்க. வயசான காலத்துல நாம ரெண்டு பேரும் இப்படி சிரமப்பட வேண்டியிருக்கு. இனிமேலாவது வாய்க்கு, நீங்க பேசற வார்த்தைகளுக்கு பெரிய பூட்டா தொங்கவிடுங்க.”
உண்மை சுட்டதால் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தார் சபாபதி.
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings