இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
கே.கே. நகர் வீட்டு மொட்டை மாடியில் தன் ஜட்டி, பனியன், கிழிந்த கைலியை துவைத்து கயிற்று கொடியில் காயப் போட்டிட்டிருந்த வினீத்துக்கு அப்ப வந்தது அந்த ஃபோன்.
தன் கையடக்க பட்டன் ஃபோன் ஹீனஸ்வரத்தில் முனகியதை கேட்ட வினீத், எப்படியாவது ஒரு நல்ல மொபைல் வாங்கிடணும்னு நினைத்துக் கொண்டே ஃபோனை எடுத்தான்.
இவன்கூட சான்ஸ் தேடி அலையும் சந்திரன்தான், “டேய் என்னடா பண்றே புது டைரக்டர் ராஜமாணிக்கம் சார் உன்னை தேடறார்டா, அடுத்த படம் பண்றார் அதுல ஒரு சின்ன வேஷமாவது உனக்கு கிடைக்கும், பரணி ஸ்டுடியோல இப்ப இருக்கார் ஓடு சீக்கிரம், எனக்கும் காமெடி டிராக்ல ஒரு போர்ஷன் கொடுக்கறேன்னார், 4 நாள் ஷூட்னா கூட ஒரு 20k தேறும்” சந்தோஷமாய் சொன்னான் சந்திரன்.
அடுத்த 20 வது நிமிஷத்தில், பரணி ஸ்டுடியோ வாச்மேனோட மன்றாடிக் கொண்டிருந்தான் வினீத்.அதற்குள் தூரத்தில் நின்று மூன்று பேர்களுடன் பேசிக் கொண்டிருந்த ராஜமாணிக்கம் இவர்களை கவனித்து விட்டார்.
அங்கிருந்தே சைகையில் உள்ளே வா என கை ஆட்டினார். வாச்மேன் சரி போ, சார் கூப்பிடறார்னு அனுப்பி வைத்தான்.பாதி ஓட்டமாக டைரக்டரை அணுகினான் வினீத்.
“என்னய்யா டூப் ஆக்டர், ரெண்டு நாளா தேடறேன் எங்கே போனே”
வினீத் முனகல் குரலில்“ இல்லை சார் இங்கேதான் …..”
“சரி,இப்ப என் அடுத்த படம் இந்த வெள்ளிக்கிழமை பூஜை நீ வேற எந்த படத்துலயாவது வேலை செய்றயா”
“இல்லை சார் சும்மாதான் இருக்கேன், வில்லன் கூட வர ரோல், காமெடியன் கூட வர ஆள் , இல்லை ஹீரோவுக்கு டூப் எதுவானாலும் செய்றேன் சார்.”
“இந்தா என் கார்டு, என் வடபழனி ஆபீசுக்கு நாளைக்கு காலைல 9 மணிக்கு வந்துடு”
“சரி சார் ரொம்ப தேங்க்ஸ் சார், கரெக்டா 9 மணிக்கு வரேன் சார்”
ரோல் கிடைச்சா குறைஞ்சது ரெண்டு மூணு மாசமாவது சாப்பாட்டுக் கவலை இல்லை நடிகரின் அசிஸ்டண்டுக்கு அசிஸ்டண்ட்னு சம்பளம் இல்லாத வேலை வேண்டாம்.
மறுநாள் 8 மணிக்குள்ளே குளிச்சு சுத்தபத்தமா இருக்கற 4 சட்டைல தேயாத சட்டை, ஜீன்ஸ் பேண்ட், பாண்டி பஜார்ல வாங்கின கூலிங் கிளாஸ் சகிதம் முதல்ல வடபழனி கோவில், அப்பறம் ராஜமாணிக்கத்தோட ஒரு வீட்டு முதல் மாடில இருந்த 10×10 ஆபீஸ் ரூம் (பாவம் அவரும் வளற டைம் வேணுமே).9 மணிக்கு அவர் வர வரை வெயிட்டிங்.
சரியா 9 மணிக்கு அவர் வந்தார், “என்னப்பா வினீத் குமார் ரொம்ப நேரமா வெயிட் பண்றயா? 9 மணிக்குதானே கூப்பிட்டேன்.”
“இல்லை சார், கோவிலுக்கு வந்துட்டு அப்படியே வந்தேன்”
“ஓ தெய்வ நம்பிக்கையெல்லாம் இருக்கா? இருக்கும், இருக்கும் கைல காசு வர வரை.”
“அப்படி இல்லை சின்ன வயசுல இருந்தே நம்பிக்கை உண்டு சார்”
“சரி டிபன் சாப்ட்டயா?”
“இல்லை மத்யானம் ஒரேடியா லன்ச் சாப்பிடுவேன்”
“அடப்பாவி பட்னியோட எப்படி தயாரிப்பாளருக்கு ஸ்டண்ட் பண்ணி காட்டுவே. இப்ப தயாரிப்பாளரோட கார் வருமே, இரு” ஃபோன் பண்ணி யாரிடமோ பேசினார், ஐந்தே நிமிஷத்தில் டிபன் அறைக்கே வந்தது. “சாப்பிடு முதல்ல”
கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, டிபன் பொட்டலத்தை காலி செய்தான் வினீத்
“சரி வா இப்ப தயாரிப்பாளர் வீட்டுக்கு போலாம், உன் ஸ்டில் ஃபோட்டோ ஆல்பம் ஏதாவது இருக்கா”
“அதெல்லாம் ஒண்ணும் தயார் பண்ணலை சார், நடிப்பு இல்லைன்னாலும், கதை வசனம் கூட எழுதுவேன் சார், எப்படியும் வாய்ப்பு கொடுங்க. பாட்டெல்லாம் கூட எழுதியிருக்கேன் சார்”
ராஜமாணிக்கம் சிரித்துக் கொண்டே, “சரி வா பாப்போம் என் கைல என்ன இருக்கு பணம் போடற தயாரிப்பாளர் ஒத்துக்கிட்டா வேலை கிடைக்கும் புறப்படு போலாம்”
தயாரிப்பாளரின் கார் இவர்களை சுமந்து நுங்கம்பாக்கத்தில் ஒரு பங்களா போர்டிகோவில் நுழைந்தது. பரந்து விரிந்த ஹாலில் கப்பலாய் விரிந்த சோபாவில் அமர்ந்து ஏதோ சினிமா சம்பந்தமான ஆங்கில ஜர்னலை புரட்டிக் கொண்டிருந்தார், அருணாசலம் செட்டியார்.
இவர்களை பார்த்ததும், “வாய்யா ராஜா, இவன்தான் நீ சொன்ன பையனா? பாக்க சரிதான், நல்லா பண்ணுவானா? சல்லிசா பணம் கேப்பானா எப்படி”
“ஏய் வினீத் முதலாளிக்கு நடிச்சு காட்டுய்யா ஏதாவது“
செட்டியார், “அதெல்லாம் எனக்கு வேண்டாம்யா, அவர் கிட்ட வேலை வாங்கறது உன் திறமை, எனக்கு என் பணம் வட்டியோட வந்தா போதும்”
“அதெல்லாம் ஜமாய்ச்சிடலாம் முதலாளி, 4 மாசத்துல படம் ரிலீஸ், வசூலுக்கு நான் காரண்டி”
“தம்பி உன் பேர் என்னப்பா, ஒரு படம் ஹிட்டானா தலைல ஏறாமா இருப்பயா, இவளைப் போடு அவளைப் போடுனு வரக் கூடாது 3 படத்துக்கு ஒப்பந்தம் போடணும் இன்னிக்கே, நடுவுல ஓடினே சந்தி சிரிக்க வச்சிருவேன், சரிதானே ராஜா?”
டைரக்டர், “அதெல்லாம் பயம் வேண்டாம் நல்ல பையன்”
வினீத்துக்கு ஒண்ணும் புரியலை ராஜமாணிக்கத்தை திகைப்புடன் பாத்தான்.
ராஜமாணிக்கம், “என்ன வினீத் முளிக்கறே, நம்ம படத்துல ஹீரோ நீதான், ஒப்பந்தம் போடதான் முதலாளி கிட்ட வந்திருக்கோம்.”
செட்டியார், “ஆமாம்யா மூணு படம், மூணு வருஷ காண்ட்ராக்ட்.வேற வேலை பண்ணக் கூடாது நடுவுல சம்பளம் ஏத்தி கேக்கக் கூடாது, இவளைப் போடு அவளைப் போடுனு கேட்டு வரக் கூடாது.நானோ,டைரக்டரோதான் மத்த நடிகர்களை தேர்வு செய்வோம். சரின்னா ஒப்பந்தம் இப்பவே என்ன சொல்றே”
வினீத் முழுதும் புரியாமல் ராஜமாணிக்கத்தை பாத்தான்.
ராஜமாணிக்கம், ”சரின்னு சொல்லுய்யா நல்ல நேரம் முடியறதுக்குள்ளே ஒப்பந்தம் போடலாம்.”
வினீத், “அதில்லை நான் படம் முழுவதும் ஹீரோவுக்கு டூப்பா?”
டைரக்டர் சிரித்தார், “இல்லை ஹீரோவே நீதான், சம்பளம், 30, 40, 50 சரியா, கூப்ட உடனே ஸ்பாட்டுக்கு வரணும்”
வினீத்துக்கு புரியலை முப்பதாயிரம் சம்பளமா நமக்கானு திகைச்சு போனான், 40,50 ன்னாரே அது என்ன.
இப்ப ஒரு உதவியாளர் எங்கிருந்தோ கட்டு ஸ்டாம்ப் பேப்பர்களுடன் வந்தார். வினீத் பக்கம் அமர்ந்து படித்துக் காட்டினார், முதப் படம் சம்பளம் 30 லட்சம். ரெண்டாவது 40 லட்சம் மூணாவது படத்துக்கு 50 லட்சம்.
மயக்கம் போடாத குறை வினீத்துக்கு. லட்சங்களா, எனக்கா, என திகைப்பிலிருந்து வெளி வர முடியலை.
ஒரு வக்கீல் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அட்வான்ஸ் 10 லட்சம் ரொக்கமாக சூட் கேசில் உதவியாளர் அவன் கையில கொடுத்த போது வினீத்தோட கைகள் நடுங்கினது உண்மை.
ராஜமாணிக்கம் கை குலுக்கி வாழ்த்தினார் வினீத் அவர் காலிலும், செட்டியார் காலிலும் விழுந்தான். “நல்லா முன்னுக்கு வா, வளர்ச்சி, கர்வம் தலைக்கு ஏறாம கட்டுப்பாடா இரு” செட்டியார் வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
கூடவே வந்த ராஜ மாணிக்கம், வினீத்குமார் பெயரில் ஒரு நல்ல பேங்கில் கணக்கு தொடங்கி பணத்தை போட உதவினார். கூடவே புத்திமதிகள் சொன்னார், “உன்கிட்ட திறமை இருக்கு உன் திறமைகளை ஒரு கட்டமைப்பில் கொண்டு வந்து நடிகனாக்குவது என் பொறுப்பு. ஆனால் வெற்றிக்குப் பின் தலைக்கனம் பிடிக்க விடாதே கீழே தள்ளி விடும் ஒரேடியா. அம்மாவை இங்கேயே கூட்டிட்டு வா, ஒரு வீடு லீஸ் கொடுத்து எடு ஒரே வருஷத்துல சொந்த வீடு வாங்கிடலாம், ஆல் தி பெஸ்ட்.”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings