in ,

பசுமரத்தாணிகள் (சிறுகதை) – முகில் தினகரன்

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

                 சமையலறைக்குள் வேணி என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள்.  அவள் திட்டுக்கள் அத்தனையும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்த என் காதுகளில் அட்சரம் பிசகாமல் அப்படியே வந்து விழுந்தன. “படிச்ச மனுஷன்… பெரிய ஆபீசர் உத்தியோகம் வேற பார்க்கறீங்க… இப்படியா பச்சை பச்சையாய் கெட்ட வார்த்தைகள் பேசுவாங்க?… வெளித் தோற்றத்துல மட்டும் டீஸண்ட்டா இருந்தாப் பத்தாதுங்க… வாய்ப் பேச்சிலேயும் அந்த டீஸன்ஸி இருக்கணும்!”

            யோசித்துப் பார்த்தேன்.  இவள் சொல்வதெல்லாம் உண்மைதான். ஏன் என்னால் அதை மட்டும் கண்ட்ரோல் பண்ணவே முடிய மாட்டேங்குது?… சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஒரு செகண்ட்ல டென்ஷனாகி… வாய்க்கு வந்தபடி திட்டிடறேன்!… அப்புறம்தான் சூழ்நிலையைப் பற்றியே யோசிக்கறேன்!… உதாரணத்துக்குச் சொல்லணும்ன்னா…. டூ வீலர்ல போகும் போது எவனாவது கார்க்காரனோ… ஆட்டோக்காரனோ… சட்டுன்னு உள்ளார பூந்தானுகன்னா என்னையே அறியாம  “டக்”குன்னு பச்சை பச்சையாய்த் திட்டிடுவேன்!… அதே மாதிரிதான் பல இடங்களிலும்..!… ம்ம்.. என்ன பண்ணலாம்?… எப்படி இதை மாத்தலாம்?”

             “அடேய் கண்ணா!… இது இன்னிக்கு நேத்திக்கு வந்த பழக்கமில்லைப்பா… காலேஜ்ல படிக்கற காலத்திலிருந்தே வந்த வழக்கம்!… எப்படி திடீர்ன்னு மாத்த முடியும்?…” மனதின் வேறொரு மூலையிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

             “அதுவும் சரிதான்!… காலேஜ் பீரியட்ல இருந்தே… நான் இப்படித்தானே?…. ஒரு தடவை தெரியாத்தனமா குறுக்க போன ஒரு பால்காரனைத் திட்டப் போய், அவன் பதிலுக்கு நான் கேள்விப்படாத வார்த்தைகளையெல்லாம் கொட்டித் தீர்த்தானே?…. அப்பவாவது திருந்தியிருக்கணும்!… அல்லது ஒரு தடவை பெட்ரோல் பங்குல எனக்குப் பின்னாடி வந்துட்டு எனக்கு முன்னாடி பெட்ரோல் போட நுழைஞ்ச ஒரு காலேஜ் பையனைத் திட்டி… அவன் தன் சகாக்களுடன் வந்து என்னைய தர்ம சாத்து சாத்திட்டுப் போனானே?.. அப்பவாவது திருந்தியிருக்கணும்!… ப்ச்… திருந்தலையே!…. அது இப்ப இந்த ஸ்டேட்டஸுக்கு  வந்தப்புறமும்  விடாம  ஒட்டிக்கிட்டேயிருக்கு!”

             சமையலறையிலிருந்து வெளியே வந்த வேணி, என்னை முறைப்பாய்ப் பார்க்க,

             “வந்து…. நான் கூட அந்தப் பழக்கத்தை மாத்திக்கணும்னுதான் நினைக்கறேன் வேணி!… பட்… முடிய மாட்டேங்குதே!… இட்ஸ் பியாண்ட் மை கண்ட்ரோல்!” நான் சீரியஸாகிச் சொல்ல,

             “சரி… சரி… விடுங்க!… இன்னிக்கு இல்லேன்னாலும்… என்னிக்காவது ஒரு நாள் அது மாறாமலா போயிடும்?… அப்படி மாறும் போது மாறட்டும்!” என்றவள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “பாபு எங்கே?” கேட்டாள்.

             “தெரியலையே!… வெளிய போர்ட்டிகோவுலதான் விளையாடிட்டிருந்தான்!”

              “அட… என்னங்க நீங்க?” அதற்கும் என்னைத் திட்டி விட்டு, “பாபூ…பாபூ!” என்று அழைத்தபடி போர்ட்டிகோவிற்குப் போனவள்,  இரண்டே நிமிடத்தில் பாபுவுடன் திரும்பி வந்தாள்.  “த பாருடா… இங்கியே இருக்கணும்… வெளியில போகக் கூடாது!… அப்பா இப்பக் கடைக்குப் போறாங்க… உன்னையும் கூட்டிட்டுப் போவாங்க!” என்றாள்.

             “ஹைய்யா!” என்றபடி அவன் என்னருகே வந்து அமர்ந்து கொள்ள,  வேணியும் என்னிடம் வந்து, “ஏங்க… கொஞ்சம் கடை வரைக்கும் போயி… நாலு முட்டை மட்டும் வாங்கிட்டு  வந்திடுங்க!… ப்ளீஸ்!” என்றாள்.

             “சரி…சரி” என்றவாறே எழுந்து, “டேய்.. பாபு… வாடா… வாடா!” கத்திக் கொண்டே வாசலுக்குப் போனேன்.  என் பின்னாடியே ஓடி வந்தான் பாபு.  ஆக்டிவாவின் முன்புறம் அவனை நிற்க வைத்துக் கொண்டு கிளம்பினேன்.  சிறிது தூரம்தான் போயிருப்பேன், ஒரு கார்க்காரன் சரேலென்று குறுக்கே புகுந்து, அதே வேகத்தில் சென்று விட, நான் நிலை தடுமாறிச் சரிந்து…. அப்படியே  மெல்லச் சுதாரித்து… நின்றேன்.

            அதே நேரம், முன்புறம் நின்று கொண்டிருந்த பாபு சற்றும் யோசிக்காமல், “பட…பட”வென  கெட்ட  வார்த்தைகளை  சரமாரியாகப்  பொழிந்தான்.  ஆடிப் போனேன் நான். “டேய்… டேய்… நிறுத்துடா.. .நிறுத்துடா…”என்று நான் கத்தியபின் தான் அவன் தன் திட்டலை நிறுத்தினான்.

             “ஏன் டாடி?… யாராச்சும் இப்படிக் குறுக்கே வந்தா… இந்த மாதிரித்தானே கத்தணும் டாடி?… நீங்க  இப்படித்தானே டாடி கத்துவீங்க?”

            என்னால் பதிலே கூற முடியவில்லை.  “அது… வந்துடா…” திக்கித் திணறி சமாளித்தேன். “ஆஹா… இதுக்கு முன்னாடி இதே மாதிரி இவனை நிற்க வைத்துக் கொண்டு போகும் போது நான் திட்டியதையெல்லாம் பயல் அப்படியே மனப்பாடம் பண்ணி வெச்சிருக்கான் போலிருக்கு!” என்று உள்ளுக்குள்  நினைத்துக்  கொண்டு வீட்டிற்கு வந்ததும் வேணியிடம் நடந்ததை அப்படியே சொன்னேன்.  அவள் வழக்கம் போல் என்னைத்தான் திட்டினாள்.

             அடுத்த வாரத்தில் ஒரு நாள், மாலை ஆபீஸிலிருந்து வீட்டிற்கு வந்தவன், பாபு அழுது கொண்டிருப்பதைப் பார்த்து, “ஏண்டா?… என்னாச்சு?” கேட்டேன்.  அவன் வாய் திறந்து பதில் சொல்லாமல், கையை நீட்டி சமையலறையைக் காட்டினான்

            “ஓ… அம்மா திட்டினாளா?… அவளுக்கு வேற வேலையே இல்லை… ஒண்ணு என்னைத் திட்டுவா… இல்லை…உன்னைத் திட்டுவா!…. அதுதான் அவளோட பொழுது போக்கே!”

            நான் சொல்லி முடிக்கவில்லை, சமையலறையிலிருந்து வேக, வேகமாய் வெளியே வந்தாள் வேணி.  “த பாருங்க!… ஒண்ணு நீங்க திருந்துங்க!… இல்லை உங்க பையனைத் திருத்துங்க!…. இல்லேன்னா… விஷயம் எல்லை மீறிப் போய்… ஒரு பெரிய சிக்கல்ல கொண்டு போய் விட்டுடும்!”

             “ஹலோ… மேடம்!… எதுவானலும் கொஞ்சம் புரியற மாதிரி… தெளிவாச் சொல்லுங்க மேடம்!” கேஷுவலாகக் கேட்டேன்.

             “உங்க மகனை இன்னிக்கு ஸ்கூல்ல இருந்து துரத்தி விட்டுட்டாங்க!.. நாளைக்கு பேரண்ட்ஸைக் கூட்டிட்டு வந்து டி.சி.வாங்கிட்டுப் போகச் சொல்லி… எழுதிக் குடுத்து  அனுப்பியிருக்காங்க!”

             “ஏனாம்?… அப்படியென்ன தப்பு செஞ்சிடுச்சு இந்தப் பிஞ்சு?” கோபமானேன்.

             “பிஞ்சல்ல இது!… பிஞ்சுல பழுத்தது” “படக்”கென்று சொன்னாள் வேணி.

             “ஏய்…ஏய்!… என்னது?..நீயே நம்ம பையனைப் பத்தி இப்படிப் பேசலாமா?”

             “பேசாம என்ன பண்ணச் சொல்றீங்க?… ஸ்கூல்ல மிஸ் எதுக்கோ திட்டியிருக்காங்க!.. பதிலுக்கு இவனும் கெட்டக் கெட்ட வார்த்தைகளாலே பச்சை பச்சையாய்த் திருப்பித் திட்டியிருக்கான்!… அந்த மிஸ் அழுதிட்டே போய் ஹெச்.எம்.கிட்ட ரிப்போர்ட்  பண்ணியிருக்காங்க!… ஹெச்.எம்.இவனைக்  கூப்பிட்டுக் கேட்டதுக்கு… “எங்கப்பா இப்படித்தான் பேசுவார்!… நானும் அப்படித்தான் பேசுவேன்!”ன்னு சொன்னானாம்!”

             “அடப்பாவி… கவிழ்த்திட்டானே!” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

             “ம்ம்… உங்களை வரச் சொல்லியிருக்காங்க.. போங்க… போயி… டி.சி.யை வாங்கிட்டு வாங்க!… ஃபிரேம்  போட்டு  மாட்டி வைக்கலாம்!”

             என்னால் எதையுமே பேச முடியவில்லை.  தலையில் கை வைத்தபடி சோபாவில் அமர்ந்தேன்.  வாடிப் போன என் முகத்தைக் கண்டு வருத்தத்தில் ஆழ்ந்த வேணி, மெல்ல என்னருகே வந்து, “இங்க பாருங்க!… இந்த வயசுல ஒவ்வொரு குழந்தைகளுக்கும் அவங்க அப்பாதான் ஹீரோ!… அப்பா எதைச் செய்தாலும் அதை ஹீரோயிஸமா நெனச்சு ரசிப்பாங்க… அதையே தாங்களும் செய்யணும்னு நினைப்பாங்க!… உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கங்க!… நம்ம வீட்டுக்கு நாலு வீடு தள்ளியிருக்கற ஆடிட்டர் மகன்கிட்ட ஸ்கூல்ல டீச்சர் கேட்டிருக்காங்க!… “பெரியவனாகி நீ என்ன சாதிக்கணும்னு ஆசைப்படறே?ன்னு..அதுக்கு அவன் “நான் சீக்கிரம் பெரியவனாகி எங்கப்பா மாதிரி

ஸ்டைலா சிகரெட் குடிக்கணும்!னு…சொல்லியிருக்கான்!… “அடப்பாவி என்னடா இப்படிச் சொல்றே?”ன்னு டீச்சர் திருப்பிக் கேட்டதுக்கு, “மிஸ்… எங்கப்பா ஸ்டைலா உட்கார்ந்துக்கிட்டு… ஸ்டைலா சிகரெட் குடிக்கறதைப் பார்த்தா ரொம்ப அழகா இருக்கும் மிஸ்!… அதுக்காகவே… நான் சீக்கிரம் பெரிசாகி… அதே மாதிரி ஸ்டைலா சிகரெட் குடிக்கணும் மிஸ்!” ன்னு சொல்றானாம்!… பாருங்க  அந்தப்  பிஞ்சு மனசுல எவ்வளவு ஆழமா அந்த விஷ வித்து விழுந்திருக்குன்னு!… அதனால நாமதாங்க நம்மைச் செறிவு படுத்திக்கிட்டு… அதுகளை நெறிப்படுத்தணும்!… இல்லேன்னா… பசுமரத்தாணி போல சில ஆகாத  விஷயங்கள்  அதுக  மனசுல  “பச்சக்”குன்னு ஒட்டிக்கும்!”

          என் தவறை உணர்ந்த நான், தலையை மேலும் கீழும் ஆட்ட, “கவலைப்படாதீங்க!… நாளைக்கு நானே ஸ்கூலுக்குப் போயி… அவங்களைச் சமாதானப்படுத்தி… எந்த நடவடிக்கையும் எடுக்காத மாதிரிப் பண்ணிடறேன்!… போதுமா?”

       “சரி” என்று நான் சொல்லும் போது காலிங் பெல் ஒலிக்க, எழுந்து போய்ப் பார்த்து விட்டு வந்த வேணியிடம் கேட்டேன்.  “யாரு வேணி?”

       “யாருமில்லைங்க” என்றாள்.

        “என்னது?… யாருமில்லையா?… காலிங் பெல் அடிச்சுதே?”

       “ஆமாங்க…. அடிச்சிது!… இது தெனமும் நடக்கிற கூத்துத்தான்!… யாரோ பக்கத்து வீட்டுப் பச்ங்க விளையாட்டுக்கு அடிச்சிட்டு ஓடிடுவானுக!”

     சுள்ளென்று கோபம் என் மூக்கின் நுனியில் வந்தமர, “எவண்டா?… எவண்டா அவன்?” கோபாவேஷத்துடன் எழுந்தவன், வேணியின் உருட்டுக்கட்டை விழிகளைப் பார்த்து அப்படியே அமர்ந்தேன்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

                                          (முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தவிக்க ஒரு தாய் (சிறுகதை) – முகில் தினகரன்

    ஊமை மனம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி