இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
சங்கர் அய்யர்
மதுரை பட்ணத்துல உத்யோகம், அன்பும் ஆதரவுமான மனைவி வேதநாயகி, ஆசை ஆசையாய் வளர்க்கும் எங்க இளவரசி அலமேலுன்ற சுசீலா. மீனாட்சி பட்டிணத்துக்கு ஒரு முறை வந்தாலே புண்யம், அங்கேயே இருந்து வாழ்க்கை நடத்தறதுக்கு எவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும்.
கவர்மென்ட் உத்யோகம், அதிகம் சம்பாத்யம் இல்லைன்னாலும் போறுமான அளவு வருமானம். சரஸ்வதி ஸ்டோர்னு ஒரு தொடர் குடியிருப்புல அளவான சைஸ்ல ஜாகை, பக்கத்துலயே குழந்தைக்கு ஸ்கூல், அழகான அனுமார் கோவில், வைகை ஆறு வேற என்ன வேணும்.முதல்ல கும்மோணத்துல இருந்தோம்.
இப்ப ஒரு 6 வருஷமாதான் மதுரை. இந்த ஆறு வருஷத்துல குழந்தைதான் எப்படி வளர்ந்துட்டா. அவளோட வளர்ச்சி சந்தோஷமா இருந்தாலும் கொஞ்சம் பயமாவும் இருந்தது.
வேதா இப்பவே நச்சரிக்க ஆரம்பிச்சிட்டா, “ஏன்னா உங்க பொண்ணு திமுதிமுனு வளர்ந்துண்டே போறா, 11 வது வந்துட்டாளே இப்பவே வரன் பாருங்கோ”
“அவ இன்னும் குழந்தைடி, இந்த காலத்துல 16,17 வயசுக்கு யாராவது கல்யாணம் பண்ணுவாளோ, அவளுக்கு பாத்திமா காலேஜ்ல டிகிரி பண்ணணும்னு ஆசை, படிக்கட்டும்”
“என்னமோ பண்ணுங்கோ அவ பேச்சுக்கெல்லாம் டான்ஸ் ஆடிண்டு, பக்கத்துல கீழ்பாலம் தாண்டினா மீனாட்சி காலேஜ், அதை விட்டு பாத்திமாலே படிப்பேன்னு குதிக்கறா நீங்களும் தலையாட்டறேள்”
“இத்தனை நாளா உன் பேச்சுக்குதானேடி வேதா டான்ஸ் ஆடறேன், உனக்கு வயசானதே தெரியல்லைடி அதே 18ல இருக்கே கும்னு”
வேதா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிண்டு, “ஐய்யே போறுமே சமத்து, ரொம்ப வழியாம வேலையை பாருங்கோ. ஆ ஊன்னா ஏதாவது சொல்லிண்டு ஒட்டிக்கறது”
“ஆமா குட்டி வெளில போயிருக்காளா, வர ஒரு மணி நேரமாவது ஆகுமோன்னோ”
“அவ வர நேரம்தான், நன்னா அலையாம சந்தை வரை போய் வாரத்துக்கு காய் கறி வாங்கிண்டு வாங்கோ. மறக்காம 2 தேங்கா, கருவப்பிலை கொத்தமல்லி வாங்கிண்டு வாங்கோ, தள்ளிப் போங்கோ கிட்ட வரப்படாது இப்ப”
சிரிச்சிண்டே ரெண்டு பெரிய துணிப்பையை எடுத்துண்டு சந்தைக்கு கிளம்பினேன். சைக்கிளை திண்ணைல இருந்து இறக்கி பையை மாட்டிண்டு கிளம்பறப்ப, சோமு எதுத்தாப்பல மறைச்சிண்டு நின்னான்.
சரி ஏதோ வம்புனு தெரியும். சோமுவும் எங்க ஆபீஸ்தான், எங்க ஸ்டோர்லயே கடைசி வரிசைல கிணத்த ஒட்டின போர்ஷன், குழந்தைகள் இல்லை புருஷன் பொண்டாட்டி மட்டும்தான். சரியான ஜோடி, ஊர் வம்பு உளக்குல அளக்கறதுன்னுவாங்களே அப்படி.
“என்ன சார் எப்படி இருக்கீங்க, பொண்ணு என்ன காலேஜ்லயா படிக்கறா, ஸ்மார்ட்டா இருக்காளே”
எனக்கு கொஞ்சம் வயத்தை கலக்கற மாதிரி இருந்தது, எதுக்கு இந்த தடியன் வழி மறைச்சு இதை கேக்கணும், இருந்தாலும் சிரிச்சிண்டே, “இல்லையே 11th படிக்கறா”
“ஓ ஸ்கூல் கேர்ல்தானா, ஜாக்கிரதையா இருமைய்யா, காலம் கெட்டுக் கிடக்கு”
“என்ன சோமு எதுக்கு இந்த எச்சரிக்கை எனக்கு?”
“நான் ஊர் வம்பு பேசற ஆள் இல்லைனு உமக்கே தெரியும், ஏதோ கூட வேலை பாக்கறதால ஒரு கரிசனம் அவ்வளவுதான்.”
“என்னனு சுத்தி வளைக்காம சொல்லும்” என் முகம் இறுகி கருத்ததை அவன் பாத்திருப்பான்.
“பெரிசா ஒண்ணுமில்லை ஓய் நேத்து பெரிய கடை வீதிக்கு போயிட்டு சைக்கிள்ல வந்துண்டிருந்தேனா, பழைய சொக்கநாதர் கோவிலாண்டை நின்னு சிரிச்சு பேசிண்டிருந்ததுகள்”
“சுத்தி வளைக்காம விஷயத்துக்கு வாரும் ஓய்”
“அது வந்து, சைக்கிள்ல வந்ததாலே அவ்வளவு சரியா கவனிக்கலை, உங்க போர்ஷனுக்கு எதுத்தாப்பல ஒரு, அம்மா, பையன் குடியிருக்காளே அந்தப் பையன் ஶ்ரீதரோ என்னமோ பேரு. பழைய சொக்கநாதர் கோவில் முகணைல அவன் ஒரு பொண்ணு கையை பிடிச்சிண்டு சிரிச்சு பேசிண்டிருந்தான்”
“அதை அவன் அம்மாகிட்ட போய் சொல்லும்”
“அந்த பொண்ணு உங்க பொண்ணு மாதிரி தெரிஞ்சதாலே உம்மை வார்ண் பண்ணறேன், எங்கே போறேள் சந்தைக்கா? இளங்கொட்டை சல்லிசா குவிச்சு வச்சிருக்கான், பால்கூட்டு பண்ணினா சூப்பரா இருக்கும்”
என் மனசை கலக்கிட்டு அந்த படுபாவி சோமு சீட்டி அடிச்சிண்டே உள்ளே போறான்.
உடனே வீட்டுக்கு திரும்ப நினைச்சேன், ஆனா மனசை கல்லாக்கிண்டு சந்தைக்கு போனேன்.
திரும்ப வந்து காய்கறி பையை எறியாத குறையா கீழே போட்டேன், சுசீலா ஒரு டம்ளர் ஜலம் கொண்டு வந்து நீட்டினா. அதை வாங்கறப்ப அவ முகத்தை பாத்தேன், இதுவா அப்படி பண்ணும், பால் வடியற முகம் ஆச்சே.
நேரடியாவே கேட்டேன், ”ஏம்மா இது உண்மையா சொல்லு, எதுத்த போர்ஷன் ஶ்ரீதர் பையனோட உன்னை பாத்ததா சோமு மாமா சொன்னாரே”
அவ இந்த நேரடி விசாரணை எதிர்பாக்கலை, “இல்லைப்பா, ஆமாம்ப்பா அவன்தான்ப்பா” அழ ஆரம்பித்தாள்.
கிணத்தடியில் அந்த பையனை பாத்தேன். அவன் நல்ல பையனாதான் தெரிஞ்சான் அவனை எங்க போர்ஷனுக்கு கூட்டிட்டு வந்து திட்டலை, புரியற மாதிரி. புத்திமதி சொன்னேன், என் பொண்ணுக்கும்.
ரொம்ப மாசமா தயங்கிட்டிருந்த பிரமோஷனோட வந்த விழுப்புரம் டிரானஸ்பரை அடுத்த நாளே ஒப்புக் கொண்டேன். பொண்ணை அங்கேயே காலேஜ்ல சேத்தாச்சு. அடுத்த 6 மாசத்துல திண்டுக்கல் டிரான்ஸ்பர், இதை தட்ட முடியலை. சுசீலாவை ஹாஸ்டல்ல சேத்துட்டு நாங்க திண்டுக்கல்.
நாலு வருஷம் ஓடினது தெரியலை, சுசீ டிகிரி முடிச்சாச்சு. சர்வீஸ் கமிஷன் எழுதச் சொன்னேன் அவ M.Sc படிக்கணும்ன்றா
வேதா முதல்ல வரன் பாருங்கோ கல்யாணம் பண்ணின்டு எம்மெஸ்சியோ, ஐஏஎஸ், ஏபிசி எல்லாம் படிக்கட்டும்ன்றா. வேதா பேச்சுக்கு மறு பேச்சுண்டா, இதோ ஜாதகம், ஃபோட்டோ தரகர் வாங்கிண்டு போயிட்டான். சுசீலாவோ நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்றா.
அந்த தரகன், அஞ்சே நாள்ல “சரியான ஜாதகம் கிடைச்சிடுத்து மாமா, பையன் மதுரை ஸ்டேட் பாங்க்ல ஆபீசர், லட்சணமா இருக்கான். ஜாதகம் அமோகமா இருக்கு, புதன்கிழமை பாக்க வரேன்றா.”
வேதா பின்னால இருந்து என்னை எங்கே பேச விட்டா, “புதன்கிழமை 3 மணிக்கு மேல வரச் சொல்லுங்கோ குழந்தைகளுக்கு பிடிச்சிருந்தா இந்த தை மாசத்திலயே முகூர்த்தம் வச்சிக்கலாம்”.
பையன் விவரம் ஃபோட்டோ பாத்தேன், சிரிப்பும் ஆச்சரியமும் சேந்து வந்தது. நாம என்னதான் தடுத்தாலும் தெய்வ சித்தத்தை மாத்த முடியுமோ. பகவான் ஏற்கனவே இன்னார்க்கு இன்னார்தான்னு போட்ட முடிச்சை அவிழ்க்க நாம யார். சஸ்பென்சா இருக்கட்டும்னு நான் விவரத்தை வேதாவிடமோ, சுசியிடமோ பகிர்ந்துக்கலை.
சுசீக்கு கல்யாணம்கற பேச்சே பிடிக்கலை, நான்தான் “சும்மா பாக்கத்தான் வரா, உனக்கு பிடிக்கலைன்னா, வேண்டாம்னுட்டு போறோம் அவ்வளவுதானே. இந்த சாக்குல நாம பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடலாம் சரியா, உன் அம்மா திருப்திக்காக ஒரு சின்ன நாடகம்னு வச்சிக்கோயேன்”.
திண்டுக்கல், நாகல் நகர்ல EB காலனிக்கு முன்னாலயே பெரிய பிளாட்ல, முளைக்கும் அந்த தனித் தனி வீடுகள்ல ஒண்ணு காலைல இருந்தே கலகலப்பா இருந்தது.ஒரு 2000 ச.அடி பிளாட்ல 950 ச.அடில வீடு கிரவுண்ட், முதல் மாடி, மொட்டை மாடி, சிக்கனமான அழகிய வீடு, சுத்தி காம்பவுண்ட் சுவர் முன்னால ரெண்டு வளர்ந்து வரும் மாமரம்..
பின்புறம் கொஞ்சம் பூச் செடிகள், முருங்கை மரம், ரெண்டு வாழை மரம். சுசீக்கு அந்த தன் மாடி ரூம்ல இருந்து தோட்டத்தை பாக்க பிடிக்கும்., சின்ன பால்கனில இருந்து தெருவை பாக்த்த மாதிரி உக்காந்து புஸ்தகம் படிக்க பிடிக்கும்.
தனியே அங்கே உக்காரும் போது சில சமயம் மதுரை, அந்த ஶ்ரீதர் பையன் ஞாபகம் வரும், ஆனா அது முடிஞ்ச கதை,முறிந்த கிளை, மனதுக்குள் புதைந்த இனிய கனவு.
இன்னிக்கு இந்த வீடு படு கலகலப்பா இருந்தது, அக்கம் பக்கம் இருந்த ரெண்டு மூணு குடும்பம் மத்யானத்துக்கு மேல இங்கேதான். ஒருவேளை இந்த புதிய குடியிருப்புகளில், ஒரு பெரிய விசேஷம் இன்னும் யார் வீட்டிலும் வரவில்லை அதனாலயோ. சரியா மூணரை மணிக்கு அந்த குட்டிக் கார் அந்த வீட்டு வாசலில் வந்து நின்றது.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings