in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 26) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்

கழையிடை ஏறிய சாறும்

பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் – தென்னை

நல்கிய குளிரிள நீரும்

இனியன என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர் !

-பாவேந்தர் பாரதிதாசன்

இந்த பாடலை படிக்கும் பொழுது உடலெங்கும் இனிமை சுரக்கும். இயற்கையாய் கிடைக்கும் இனியவைகளான நன்கு பழுத்த பலாவின் சுவை, முற்றிய செங்கரும்பில் உள்ள சாறு, தேனீக்கள் இயற்கையான மரங்களில் இருந்து சேமித்து வைத்திருக்கும் தேன், பாகில் ஊறவைத்த பலகாரத்தின் சுவையை, பசுவில் இருந்து பெறப்பட்ட தூய்மையான பால், புதிதாக பெறப்பட்ட குளிர்ந்த இளநீரின் இனிமை ஆகியவற்றை கூறி இவ்வளவும் இருக்கிறது எனினும் தமிழ் இவையெல்லாவற்றிற்கும் மேல் இனிமையானது அதை என்னுயிர் என்பேன் என்கிறார் பாரதிதாசன்.

இந்த பாடலைப் படித்தே கிறங்கியிருந்த எனக்கு இன்னும் சில குறிப்புகளை படிக்கப் படிக்க இன்னும் சிலிர்த்தது.

காய்ச்சுப் பாகிடை ஏறிய ருசி என்று தான் முதலில் பாடலை எழுதியிருக்கிறார். ருசி வடசொல் என்று ஒருவர் கூற அந்த இடத்தில் ‘சுவை’ என்ற தனித் தமிழ்ச் சொல்லை மாற்றினார் என்கிறது வரலாறு.

இன்னொன்றையும் அறிந்தேன் 1960களுக்கு முன் அ என்றால் அணில் என்று இருந்ததாம். பாரதிதாசன் தான் அம்மாவை விட சிறந்த தமிழ் சொல் உண்டோ. அதனால் அ – அம்மா என்று மாற்ற வலியுறுத்தியுள்ளார். அவரால் தான் நாம் இன்று அ என்றால் அம்மா என்கிறோம்.

இப்படி சுவாரஸ்யமான விஷயங்கள் எதிர்பாராத புத்தகத்தில் படிக்க நிகழும். இவையெல்லாம் படிக்கவும் உணரவும் எவ்வளவு நன்றாக இருக்கின்றன. சில நேரம் என்ன படிப்பது என்று தேடித்தேடி படித்தாலும் ஒன்றும் சுவைப்பதில்லை. சில நேரம் தானாகக் கிடைப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.

கர்ப்ப காலத்தில் என்ன புத்தகம் படிப்பது?

ஒரு சிலரிடம் கேட்கும் பொழுதும் இணையத்தில் பார்க்கும் பொழுதும் கர்ப்ப காலத்தில் என்ன நடக்கிறது என்பது போன்ற பல புத்தகங்கள் உள்ளது அதை படிக்க சிபாரிசு செய்தனர்.

குழந்தை பிறப்பிற்கு முன் ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருந்தால் கர்ப்பத்திற்கு திட்டமிடலாம் எப்படி இருந்தால் உடல் நிலையை சரி செய்துவிட்டு கர்ப்பத்திற்கு முயற்சிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும். பிரசவம் எப்படி நடக்கும் இதையெல்லாம் விவரிக்க பல புத்தகங்கள் வந்துவிட்டன. ஆனால் எனக்கு இந்த புத்தகத்தை படிக்க இஷ்டமில்லை.

அதிக எடை அல்லது வேறு சில ஹார்மோன் பிரச்சனைகளோடு கர்ப்பம் உண்டாகி விட்டால் அதற்கும் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியையும் கவனிக்க வேண்டும். இரத்தசோகையோடு கர்ப்பமடைந்தால் இரத்தம் ஏற்ற மிகவும் சிரமமாக இருக்கும். அதனால் கர்ப்பத்திற்கு திட்டமிடும் முன் உடம்பில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அறிந்து கொண்டு திட்டமிடச் சொல்கிறார்கள். இதையெல்லாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

என் விஷயத்தில் இதையெல்லாம் நான் முன்னே அறிந்திருக்கவில்லை. உடல் சுறுசுறுப்பாக இருந்தது. ஆரோக்கியமான உடல் இயக்கம் மாதவிடாய் சுழற்சி இருந்தது. மனம் ஆசைப்பட்டது கர்ப்பம் தரித்தேன். 

விழிப்புணர்வு தேவைதான். ஏன் கர்ப்பமாக இருக்கும் பொழுது கால்கள் வீங்கிகின்றன. உப்பை குறைத்துக் கொண்டால் வீக்கம் குறையும். இதெல்லாம் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் தான். ஒவ்வொருவர் கர்ப்பமும் ஒவ்வொரு தனித்தன்மை உடையது. ஒருவருக்கு நடப்பது இன்னொருவருக்கு நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் நடக்கும் இப்படித்தான் நடக்கும் என்றும் சொல்லிவிட முடியாது.

இதில் பல அதிசயங்கள் நிறைந்துள்ளன. அதன் முடிச்சுகளை பொறுமையாக ஒவ்வொன்றாக அவிழ்த்து பார்ப்பது தான் சுவாரஸ்யமே. அதனால் அந்த வகை புத்தகங்களை இப்போதைக்கு எனக்கு படிக்கத் தோன்றவில்லை.

நிச்சயம் இந்த பெற வேண்டியது அவசியம். இப்போதைக்கு மனம் சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்ள ஆசை. பின் இவற்றை படித்துக் கொள்ளலாம்.

சரி, வேறென்ன புத்தகம் படிக்கலாம்?

பொதுவாக இதைப்பற்றி ஆராயும் பொழுது பலர் என்னிடம் கூறியது சுந்தர காண்டம் படி என்று.

ஏன் சுந்தர காண்டம்?

சீதையின் துயர் தீர்த்த காண்டம். அனுமாரின் அறிவுக் கூர்மையையும் ஆற்றலையும் வீர தீரச் செயல்களையும் சொல்வன்மையும் விளக்கும் காண்டம். அதனால் இந்த புத்தகத்தை படிக்கும்பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையும் பல நற்குணங்களை பெரும் என்று நம்பிக்கையில் பரிந்துரைகின்றனர்.

பள்ளியில் இருந்தே இராமாயண கதைகள் புத்தகத்தில் வருகின்றன. ‘கண்டேன் சீதையை’ பாடலையும் படுத்திருக்கிறோம். இருந்தும் அந்த காண்டம் முழுவதையும் கர்ப்ப காலத்தில் படிப்பது நல்லது தானே. நானும் அந்த புத்தகத்தை குறித்து வைத்துக் கொண்டேன்.

அறிவுச் சார்ந்த கதைகள் படிக்கலாம். தெனாலிராமன் கதைகள், அக்பர் பீர்பால் கதைகள், பஞ்சத்தந்திர கதைகள். சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் திறன்பேசியில் நேரம் செலவழிப்பதற்கு இம்மாதிரி கதைகள் அறிவை தீட்டப் பயன்பெறும்.

ஆங்கில புத்தகங்களில் ஊக்கமளிக்கும் மோட்டிவேஷனல் புத்தகங்கள் உள்ளன. அது கூட இந்த சமயத்தில் படிக்க நன்றாக இருக்கும்.

ஆன்மீக புத்தகங்கள் படிக்கலாம். எண்ணம் இறைவன் மீது செல்லும். மனம் அமைதியுறும் மகிழ்ச்சி பெருகும்.

வரலாற்று புதினங்கள் படிக்கலாம். பொன்னியின் செல்வன் போன்ற நாவல்கள் படிக்கலாம்.

செல்வா கேட்டதும் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் புத்தகத்தைப் பற்றி கூறினேன். இன்னும் கூட நல்ல நாவல்கள் பல உள்ளன. ஆனால் காதல் காமம் திகல் இல்லாத தனி நாவலாக இருப்பதை கண்டுபிடிப்பது சிரமம்.

இன்னும் கூட நிறைய நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. தேட வேண்டும்.

சிந்தனைக்குள் மூழ்கியிருந்த சமயத்தில் ராதாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கேட்க ஆவலானேன்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 25) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 27) – ரேவதி பாலாஜி