இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தெய்வானை அம்மாள் பெண்கள் கல்லூரி , விழுப்பரத்தில் ஒரு பெயர் பெற்ற பெண்கள் கல்லாரி நான் அங்கு சேர்ந்த போது எனக்கு பிடிக்கவே இல்லை மதுரை பாத்திமா காலேஜ்ல படிக்க ஆசையுடன் காத்திருந்த என்னை இங்கு சேத்துட்டாங்களேனு அப்பா மேல கோபமா வந்தது என் கூட படிச்ச உமாவும், சீதாவும் பாதிமால படிக்கிறாங்க, அப்பப்ப பீத்தமா பீத்தி இன்லண்ட் லெட்டர் போடறாங்க.
இப்ப நான் ஹாஸ்டல்ல இருக்கேன், இங்கே வந்த 6 மாசத்துலயே அப்பா திரும்ப டிரான்ஸ்பர்ல திண்டுக்கல் போயாச்சு, என்னை ஹாஸ்டல்ல சேத்துட்டு.எவ்வளவு ஜாலியா இருந்தேன் மதுரை ஸ்கூல்ல படிக்கறப்ப, மனசுல ஒரு களங்கம் இல்லாம.
ஏன் என் லைப்ல இந்த ஶ்ரீதர் வரணும், மனசெல்லாம் ரணமாகி இப்ப தவிக்கணும். கிட்டத்தட்ட 4 வருஷம் ஆச்சு என்னால மறக்க முடியலை. ஒரு வேளை இப்ப அவன் நல்ல வேலை, கல்யாணம் கூட ஆயிருக்கலாம், என்னை மறந்திருப்பான், நான்தான் மடச்சி, இன்னும் அந்த பழைய நாட்களை மனசுல இருந்து இறக்கி வைக்க தெரியாம தவிக்கறேன்.
ஸ்டெல்லா சொல்றா அவ கல்யாணமெல்லாம் பண்ணிக்க மாட்டாளாம், சர்ச்சுல சிஸ்டரா போயி ஏசுவுக்கு சேவை பண்ணுவாளாம் (ஒரு வேளை அவளுக்கும் என்னை மாதிரி காதல் பிராப்ளமோ என்னவோ) நம்ம இந்து மதத்துலயும் இந்த மாதிரி சிஸ்டரா போற ஏற்பாடு இருந்தா என்னை மாதிரி நிறைய பெண்களுக்கு உதவியா இருக்கும்.
இன்னும் ஒரே மாசம் என் பட்டப்படிப்பு முடிஞ்சுடும், மேற்கொண்டு படிக்கறதா என்ன, அப்பாதான் முடிவு பண்ணணும், என் கைல என்ன இருக்கு,சரி பாப்போம் இனி மேலும் என் சோகக்கதையை புலம்பி உங்களையும் கஷ்டப்படுத்த விரும்பலை, பைபை.
மீண்டும் ஶ்ரீதர்
அம்மா தினம் நச்சரிக்கறா இப்பதான் நன்னா சம்பாறிக்கறே, நல்ல வசதியான வீடும் வந்தாச்சு, நிறைய நல்ல வரன் தேடி வறது பாரு இந்த சமயநல்லூர் பொண்ணு ரொம்ப நன்னா இருக்கா சுந்தர் ஃபோட்டோ கொடுத்துட்டு போனான். (சுந்தர் ஒரு கல்யாண புரோக்கர் 6 மாசமா அம்மாகிட்ட காட்ட ஃபோட்டோக்களை தூக்கிண்டு வரார்).
என்னோட லக்கோ என்னவோ தெரியலை நான் பட்டப்படிப்பு முடிச்சவுடனேயே எனக்கு ஸ்டேட்பேங்க் வேலை கிடைச்சது அதுவும் மதுரை மெயின் பிரான்ச்ல போஸ்டிங். பாத்திருக்கிங்களா எங்க ஆபீசை மதுரைல, டி.வி.எஸ் ஆபீசை ஒட்டி ஜங்ஷனுக்கு எதுத்தாப்பல.
இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிச்சது. முதல்லேயெல்லாம் அந்த சரஸ்வதி ஸ்டோர், கல்பனா தியேட்டர் வசன சத்தம், அந்தப் பொண்ணு சுசீலா இதெல்லாம் அடிக்கடி ஞாபகம் வரும். அந்த பொண்ணுதான் கண்காணாம எங்கேயோ போயிட்டாளே.
இப்ப கொஞ்சம் வசதியான தனி வீடு ஆரப்பாளயத்துல. எதுத்தாப்பல வைகை ஆறு, எப்பவும் பசங்க மணல்ல கிரிக்கெட் விளையாடறதை பாக்கலாம்.
தண்ணியா? அது திடீர்னு எப்பவாவது கரை புரண்டு ஓடும் ஒரு 4 நாளைக்கு. அப்பறம் வழக்கம் போல பசங்க கிரிக்கெட், ஊத்து தோண்டி தண்ணி எடுக்கும் தாய்மார்கள்.பைக் வாங்கிட்டேன் அதுலதான் ஆபீஸ் போறேன்.
போனமாசம் ஒரு வேலையா திண்டுக்கல் பிரான்ச் போனப்ப, நான் மேனேஜரோட கேபின்ல உக்காந்திருந்தேன். அப்ப அவரை வெளில பாத்தேன், அதுதான் எனக்கு பெரிசா அட்வைஸ் பண்ணின அந்த புண்ணியவான் சங்கரைய்யர்.
என் மனசுக்குள்ளே ஒரு பளிச், சுசீலாவும் இங்கேதான் இருப்பா அப்ப. எழுந்து போய் பேசினா என்ன, சேரை விட்டு எழுந்தப்ப, பிரான்ச் மேனேஜர், ”என்ன ஶ்ரீதர் உக்காருங்க இந்த ஸ்டேட்மென்ட்லதான் ஏதோ மிஸ்ஸிங்” ஃபைலை என் பக்கம் நீட்டினார். அதை அடெண்ட் பண்ணிட்டு வெளியே வந்தா சுசிலாவோட அப்பா மிஸ்ஸிங்.
எங்க மேலவெளி வீதி பேங்குக்கு எதிர் பக்கம் பிளாட்பாரத்தை தொங்கினாப்பல ஒரு பெட்டிக்கடை. முன்னால கண்ணாடி பாட்டில்கள்ல சதுர சதுரமா கடலை மிட்டாய், தேன் மிட்டாய், எள்ளுருண்டை, அதிரசம்னு அழகா வச்சிருப்பான்.
ஒரு எவர்சில்வர் தட்டு ஒரு டபரா மாதிரி ஏதோ ஒண்ணு மேல வச்சு அழகா பச்னு வெத்தலையை தாமரைப் பூ போல அடுக்கி வச்சிருப்பான் .ஒரு சணல் கயறை துணி காயப்போடற கொடி மாதிரி கட்டி அதுல குமுதம், கல்கண்டு, ஆனந்த விகடன், ராணி, குங்குமம் பத்திரிகைகள் ஊசலாடும்.
ஒரு பக்கம் அறிஞர் அண்ணாத்துரை மதுரை விஜயம், பம்பாயில் வெள்ளம்னு தினசரிகளின் போஸ்டர்கள் தொங்கும். கடைப் பையன் சேகருக்கு பின் பக்கம் சிகரெட் டப்பாக்கள, புகையிலை பாக்கெட்கள்.
நான், மத்யானம் அம்மா கட்டிக் கொடுத்த சாதத்தை சாப்பிட்டுட்டு அந்த கடை வாசல்ல நின்னாலே சேகர் ஒரு வில்ஸ் பில்டரை எடுத்து நீட்டுவான். பக்கத்துலயே ஒரு மண்ணெண்ணை விளக்கு, காலி சிகரெட் பெட்டியை நீளவாக்குல துண்டு துண்டா கட் பண்ணி டப்பால இருக்கும். ஒண்ணை எடுத்து எரியற விளக்குல பத்த வச்சு காத்துல அணையாம பக்குவமா மூடின கைக்குள்ளே சிகரட்டை பத்த வைக்கறது ஒரு கலை.
சிகரட் கடைசி பப் இழுத்துட்டு அந்த கடோசித் துண்டை சுழட்டி சுண்டி விடணும். அப்பறம் அந்த கண்ணாடி பாட்டில்லை ஒண்ணை திறந்து ஒரு கடலை மிட்டாயோ, சில சமயம் ஒரு அதிரசமோ, முடியலை இன்னும்.
கடைசியா ஒரு ரோஜா பாக்கு பொட்டலம், சேகரை கணக்குல ஏத்த சொல்லிட்டு பாக்கை சுவைச்சிட்டே நிதானமா ரோடை கிராஸ் பண்ணி பேங்க்ல நுழைஞ்சா சாயந்தரம் வரை ஃபைல்தான்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings