in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 3) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

கல்பனாவின் தலையிலும் சுடிதரிலும் கைகளிலும் பூண்டு, மஷ்ரூம், கருவேப்பிலை போன்றவை அங்கங்கே ஒட்டிக் கொண்டிருந்தன. அங்கேயிருந்த ஆளுயர கண்ணாடியில் தன்னைப் பார்த்த கல்பனாவிற்கு ஏனோ சிரிப்புத் தான் வந்தது.

“சிரிக்கிறாய் பார், இப்போது தான் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து வந்தது போல் இருக்கிறது” என்று சத்யாவும் கூட சேர்ந்து சிரித்தாள்.

சத்யா ஓடிச்சென்று அவளுடைய புத்தம் புது சுடிதர் ஒன்றை எடுத்துகொடுத்து, ஒரு டவலையும் அவள் தோள் மேல் போட்டாள். “பாத்ரூமில் போய் குளித்து விட்டு வா. குழாயைத் திறந்தாலே வெந்நீர் வரும் போ” என்றாள்.

குளித்து விட்டு சத்யாவின் உடையில் வந்த கல்பனாவைப் பார்த்து வாயைப் பிளந்து நின்றாள் லட்சுமி. தலை குளித்து ஹேர் ட்ரையர் போட்டிருக்கிறாள் போலும். சுருண்ட தலைமுடி நெற்றியில் அழகாக விளையாடியது. வெளேரென்ற அவள் முகம் வெந்நீரில் குளித்து விட்டு வந்ததால் தாமரை போல் சிவந்திருந்தது. முகத்தை சரியாகத் துடைக்காமல் தண்ணீர் துளிகள் முத்துக்களாய் பளபளத்தன.

“என்னம்மா, கல்பனாவை அப்படிப் பார்க்கிறாய். ஆஹா, என்ன அழகு எத்தனை அழகு என்று பாடப் போகிறாயா?” என்றாள் சத்யா கிண்டலாக.

அப்போது அங்கு வந்த அவள் அண்ணி கீதா, ‘காளான் சூப் அபிஷேகமல்லவா, அது தான் இன்னும் அழகாகத் தெரிகிறாள்” என்றாள் ஒரு குரோதமான சிரிப்புடன்.

“ஏன் நீங்களும் தான் காளான் சூப்பில் குளித்துப் பாருங்களேன். இன்னும் அழகாகி விடுவீர்கள்” என்றாள் சத்யா கிண்டலுடன்.

“குடும்பமே பைத்தியம். பைத்தியங்களோடு பேசினால் நம்மை முட்டாளாக்கி விடுவார்கள்” உதட்டைச் சுழித்து , தோளைக் குலுக்கிக் கொண்டு வெளயேறினாள் கீதா.

“உன் அண்ணிக்கு உன் சின்ன அண்ணாவைப் பிடிக்காதா?” என கல்பனா கேட்க

“அவளுக்கு என் பெரிய அண்ணாவையும் இந்த வீட்டின் சொத்துக்களையும் தவிர வேறு யாரையும் பிடிக்காது” என்றாள் சத்யா.

“உன் பெரிய அண்ணா எப்படி?” என கல்பனா கேட்க

“இது என்ன கேள்வி? அண்ணி எவ்வழி, அண்ணா அவ்வழி. கல்பனா, உனக்கு இன்னும் உலகம் புரியவில்லை. ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகும் வரை தான் அண்ணா தம்பி உறவு எல்லாம். திருமணத்திற்குப் பிறகு பங்காளிகள் தான். வீடு குருக்ஷேத்திரம் தான்” என்றாள் சத்யா.

அடுத்த நாள் கல்பனா, தன் அலுவலக அறையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள். விஜயாவும் கோர்ட்டில் இருந்து வந்து, வீட்டினுள் சென்று ஏதோ சாப்பிட்டு விட்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்.

“கல்பனா, நடந்தது எல்லாம் கேள்விப்பட்டேன். ஐயாம் சாரி. என் தம்பிக்காக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவன் எப்போது அந்த குடிப்பழக்கத்தை விட்டு மீண்டு வரப் போகிறான் என்று தெரியவில்லை” என்றாள் நீண்ட பெருமூச்சுடன்.

“நீங்கள் ஒன்றும் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் மேடம். எனக்கு ஒன்றும் கோபமோ வருத்தமோ இல்லை. அவர் நன்றாகப் படித்து ஒரு டாக்டர். ஏதோ போறாத நேரம், எல்லாம் சரியாகி விடும்” என்றாள் கல்பனா வேதாந்தி போல.

அவளை உற்றுப் பார்த்த விஜயா, “பாட்டியம்மா தான் பேச்சில்” என்றவள் மனம் விட்டு சிரித்தாள். ‘உம்’ என்று பெருமூச்சு விட்ட விஜயா, ஒரு கோப்பை எடுத்து அதில் தீவிரமாக ஆழ்ந்து விட்டாள்.

 பிறகு கல்பனாவை அழைத்து அந்த பைலைக் கொடுத்தாள். “இது ஒரு கொலை கேஸ் சம்பந்தப்பட்ட பைல். எல்லா சாட்சிகளும் என் கட்சிக்காரருக்கு எதிராகத்தான் இருக்கிறது. ஆனால் அவரோ நிரபராதி என்று சாதிக்கிறார். அவர் பெயர் ரமேஷ். அவர் உண்மைதான் பேசுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அதை நிரூபிப்பது எப்படி என்று தான் புரியவில்லை.  நீ இதைப் படித்துப் பார். ஒரு துப்பறியும் கதை போல் இருக்கும். நீ என்ன நினைக்கிறாய் என்று காரணங்களோடு எழுது, பிறகு பார்க்கலாம்” என்றாள்.

அந்தக் கோப்பினை அமைதியாகப் படித்தாள். அதிலிருந்து விஜயாவின் கட்சிக்காரர் ரமேஷ், சரியான குடிகாரன் என்று தெரிந்தது. அவன் பணக்காரத் தந்தையின் முதல் மனைவியின் மகன். இரண்டாவது மனைவியாலும், அவர் மகனாலும் முற்றிலும் வெறுக்கப்பட்டவர். தந்தையாலும் புறக்கணிக்கப் பட்டவர். இதில் ஆஸ்துமா தொல்லை வேறு.

எல்லோருடைய வெறுப்பில் வளர்ந்ததுமல்லாமல், உடல்நலக் குறைவாலும் கொஞ்சம் பலஹீனமாகத்தான் இருப்பார். ஆனால் அவர் தந்தையோ மனைவியின் கவனிப்பாலும், பணவசதியாலும் நல்ல பலமாக இருப்பதாகத் தெரிந்தது. வயதும் ஒன்றும் அதிகமில்லை. எப்போது பார்த்தாலும் பணத்திற்காக, ரமேஷிற்கு அவன் தந்தையுடன் சண்டைதான்.

இரண்டாவது மனைவியும் மகனும் திருவிழாவிற்காக அருகில் உள்ள தங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தார்கள். சமையல்காரம்மா, அப்பாவிற்கும் பிள்ளைக்கும் வேண்டிய சாப்பாட்டைத் தயாரித்து, அப்பாவிற்குக் டைனிங் ஹாலிலும், ரமேஷிற்கு மட்டும் மாடியில் உள்ள அவன் அறையில் வைத்து விடுவாள்.

அன்று இரவும் அப்படித்தான். இரவு உணவை சாப்பிட்டு விட்டுத் தன்னிலை மயங்கும் அளவிற்கு குடித்திருக்கிறான் ரமேஷ்.

கீழே ஹாலில் அவன் தந்தை கத்தியால் உடம்பின் பல இடங்களில் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அடுத்த நாள் காலை சமையல்காரி தன் கையில் உள்ள ஒரு மாற்றுச் சாவியால் திறந்து உள்ளே போய் திறந்து பார்த்து அதிர்ந்து தான் போனாள். உடனே கத்திக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ள எல்லோரையும் கூட்டி விட்டாள்.

வந்தவர்களில் ஒருவர் போலீஸுக்குப் போன் செய்ய, காவல்துறை வீட்டின் மாடியில் குடித்து விட்டுத் தன்னிலை மறந்து புரண்டு கொண்டிருந்த ரமேஷைக் கைது செய்தது.

இந்த கேஸைப் படித்து விட்டு கல்பனாவிற்கு ஒன்றும் புரியவில்லை. பூட்டிய வீட்டில் ரமேஷ் மட்டும் தான் இருக்கிறான். அவனைத் தவிர வேறு யார் உள்ளே நுழைய முடியும்? அப்படியென்றால் அவன் தந்தையைக் கொன்றது யார்? யோசித்து யோசித்துப் பார்த்து தலையை பால் பாயின்ட் பென்னால் கிளறிக் கொண்டிருந்தாள்.

அப்போது, “ஸாரி மேடம், என்னை மன்னிப்பீர்களா?” என்று கேட்டுக் கொண்டு கௌதம் அவள் எதிரில் வந்தமர்ந்தான்.

ஆனால் கல்பனாவிற்கிருந்த கோபத்தில் அவனை முறைத்து விட்டு மீண்டும் பால் பாயின்ட் பென்னால் தலையை லேசாகக் குத்தி யோசிக்கத் தொடங்கினாள்.

“ரொம்ப தலையைக் குத்தாதீர்கள், புண்ணாகி சீத்தலைச் சாத்தனார் என்று பெயர் வந்து விடும்” என்றான் சிரித்துக் கொண்டு. அதற்கும் பதில் பேசாமல், தன் ஹேண்ட் பேகை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

“ஹலோ மேடம்! சாரி கேட்டும் இப்படிக் கோபமாகப் போகலாமா? நான் செய்தது தவறு தான், சுயநினைவில்லாமல் இப்படி ஒரு தவறு செய்து விட்டேன். என்னை மன்னிக்கக் கூடாதா?” என்றான் கெஞ்சுதலாக.

அவனைக் கடுமையாக ஒரு பார்வைப் பார்த்து விட்டு, “நீங்கள் ஒரு டாக்டர். புகழ்பெற்ற ஒரு பெரிய லாயரின் மகன். நான் ஆப்டர்ஆல் ஒரு ஏழை கிளார்க். என்னிடம் போய் மன்னிப்பு கேட்க வைத்தது எது?  நீங்கள் சுயநினைவில்லாமல் செய்த ஒரு செயல் தானே!” என்றாள்.

“ஸாரி மேடம், நான் ஒரு மனவேதனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து வெளியே வர தவிக்கின்றேன்.  என் தோல்வியின் அடையாளம் தான் இந்த கெட்டுப் போன குடிப் பழக்கம்” என்றான் தலை குனிந்தவாறு. அவனைப் பார்த்தால் கல்பனாவிற்கு பரிதாபமாக இருந்தது.

“எனக்குத் தெரியும் டாக்டர் சார், சத்யா உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறாள். உங்களுக்கு மனதில் பட்ட பலமான அடிதான் இதற்குக் காரணம். மனதை மாற்றுவழியில் செலுத்தினால் நீங்கள் வலியிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் மனதின் வலியுடன் உடல் வலியும் சேர்ந்து கொள்ளும். நீங்களே பெரிய டாக்டர், உங்களுக்குத் தெரியாததி்ல்லை. நான் வீட்டிற்குப் போய் வருகிறேன் டாக்டர்” என்று எழுந்தாள்.

“என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் போனால் எப்படி? என்னை மன்னிப்பீர்களா?” என்றான் சிறு பையன் போல் இரண்டு கைகளையும் அகல விரித்து வழி மறித்தவாறு.

“தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம் டாக்டர்” என்றாள் மெல்லிய புன்முறுவலுடன்.

அன்று இரவு கல்பனாவிற்கு, விஜயா கொடுத்த ஃபைலைப் பற்றியே எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த ரமேஷின் தந்தையின் கொலையைப் பற்றியே மனம் நினைத்துக் கொண்டிருந்தது.

அந்த எண்ணத்தின் கூடவே கௌதம் சின்னப் பையன் போல் கைகளை நீட்டி வழி மறித்து மன்னிப்பு கேட்டதும் தோன்றியது. போதையெல்லாம் தெளிந்து குளித்து விட்டு அழகாக உடை அணிந்து ஒரு ராஜ்குமாரன் போல் இருந்தான். அடிக்கடி அவன் சிரித்த முகம் மனதில் ஓடியது.

கௌதமிற்கும் ஏறக்குறைய அதே நிலைதான். சூடான சூப் எங்கே முகத்தில் பட்டு விடுமோ என்று முகத்தை மூடிய வெள்ளை வெளேரென்ற கைகளும், சூடான சூப் பட்டு சிவந்த கைகளை எரிச்சல் தாங்காமல் எடுத்தபோது தண்ணீரில் தத்தளிக்கும் மீன்கள் போல் அவள் கண்கள் கண்ணீரில் மிதந்து நின்றதும் அவனால் மறக்கவே முடியவில்லை.

தாமரை போன்ற அவள் முகத்தை கைகளில் ஏந்தி, கண்களில் வழியும் கண்ணீரை தன் இதழ்களால் ஒற்றி எடுக்க வேண்டும் என்று மனம் விழைந்தது. மனம் திடுக்கிட்டு தன் நிலைக்கு வந்த கௌதமிற்கு, ‘தனக்கா இந்த மாதிரி எண்ணம்?’ என்று அதிர்ந்தான்.                                                    

கல்லூரிக்குப் பஸ் பிடித்துப் போக பஸ் ஸ்டேண்டில் அரை மணி நேரம் காத்திருந்தாள் கல்பனா. அவளை வேறு மாதிரி அசிங்கமாகப் பார்த்துக் கொண்டு நான்கு வாலிபர்கள் அங்கே வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். கல்பனா வாட்ச்சைப் பார்ப்பதும், ரோடைப் பார்ப்பதுமாக தவித்தவாறு நின்றிருந்தாள். ஒரு ஆட்டோவும் வரவில்லை. வரும் ஒன்றிரண்டு ஆட்டோவும் நிற்காமல் ஓடியது.

அப்போது ஒரு ஹோண்டா கார் வந்து உரசிக் கொண்டு நின்றது, காரிலிருந்து இறங்கி வந்தான் கௌதம்.

“ஹலோ, என்ன இங்கே நிற்கிறீர்கள்?” என்றான் கௌதம் கல்பனாவிடம்.

கல்பனா அவனை முறைத்தாள். “என்ன கேள்வி இது? பஸ் ஏறுவதற்கு பஸ் ஸ்டேண்டில் தானே நிற்க வேண்டும், ஏர்போர்ட்டிலா நிற்க முடியும்” என்றாள் கேலியாக.

“வராத பஸ்ஸிற்கு ஏன் பஸ் ஸ்டேண்டில் நிற்க வேண்டும்? நியூஸே பார்க்க மாட்டீர்களா?” என்றான் சிரித்தபடி.

“ஏன், என்ன நியூஸ்?”

“இன்னிக்கு ஏதோ ஒரு காரணத்திற்காக பஸ் ஸ்ட்ரைக். எவ்வளவு நேரம் நின்று கொண்டிருப்பீர்கள்? வாருங்கள் நான் கொண்டு போய் காலேஜில் விடுகிறேன். இப்போதே லேட்டாகி விட்டது” என்றான் அவசரப்படுத்தும் குரலில்.

“ஸ்ட்ரைக்கா?” என்றாள் நம்பாத குரலில்.

“ஆமாம், உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் சீக்கிரமாக வாருங்கள். நான் உங்கள் கல்லூரி வழியாகத்தான் போக வேண்டும்” என்றான்.

வேறு வழியில்லாமல் தயக்கத்துடன் அவன் காரில் ஏறினாள் கல்பனா. லொடலொடவென்று பேசிக் கொண்டு வந்தான் கௌதம்.

“கல்பனா ஏன் ரொம்ப அமைதியாக இருக்கிறீர்கள்? என்னோடு காரில் வரத் தயக்கமாக இருக்கிறதா?” என்றான்.

கல்பனாவிற்கு, அவன் கண்களில் என்னவோ குறும்பு கூத்தாடுவதாக தோன்றியது. காரின் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த அவன் வெண்மையான விரல்கள் அவள் கண்களை ஈர்த்தன.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கதவைத் தட்டும் சந்தர்ப்பம் (சிறுகதை) – முகில் தினகரன்

    தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை