இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
என் ஒய்புக்கு இப்ப இருந்தே பயம். “வயத்தை கலக்கறதேன்னா, எத்தனை பேர் ஏரோப்பிளேன்ல வருவா? ஒரு 50 பேராவது இருப்பாளா. திருவிழா ஊர்ல கொள்ளை போறப்ப, குடைராட்டிணம் கூட ஏறினதில்லை, வத்சலா மாமி நவராத்ரிக்கு அழைக்கறா அஞ்சு வருஷமா நீலாங்கரை பில்டிங்ல 8 வது மாடி, கேட்டாலே கிறுகிறுன்றதே எப்படி போறது.”
“ போடி பைத்தியம் ஃபாரின் போற இன்டர்நேஷனல் பிளைட்ல 450, 500 பேர் போலாம்.பயமே கிடையாது ஜாலியா காலை நீட்டி சினிமா தியேட்டர்ல உக்காரறோமே அது மாதிரி உக்காந்து சினிமா பாத்துண்டே போகலாம்.” நான் என்னமோ மாசம் ஒரு பாரின் டிரிப் போன மாதிரி அளந்து விட்டேன். எனக்கே உள்ளூர பயம்தான்.
ராணிமேரி கல்லூரிக்கு பக்கத்துல இருக்கு அந்த ஆபீஸ். ஓ இங்கிலாந்து போகணும்னா இப்ப இருந்தே ராணி கிட்ட போகணுமா.
செவ்வாக் கிழமை காத்தாலை நாலு மணிக்கே எந்திருந்து குளிச்சாச்சு ரெண்டு பேரும். பெருமாளை கீழே விழுந்து மூணு தடவை நமஸ்காரம் பண்ணியாச்சு.
இட்லி ஊத்தி , மிளகாப் பொடி நல்லெண்ணைல தோச்சு டப்பால எடுத்துண்டு போலாம்னு அம்புஜம் சொன்னா.
“சே சே இங்லாண்டு போறவா இட்லி சாப்பிடுவாளோ, பக்கத்துலயே பர்கர் கிங்ல, பர்கர் சூப்பரா கிடைக்கும்”
“ஐய்யே கேக்கறப்பவே ஏதோ ஆள் பேர் மாதிரின்னா இருக்கு அதை எப்படி சாப்பிடறது”
“பயப் படாதே ஹோட்டல் சங்கீதா கூட பக்கத்துல இருக்கு”
“ஆ,ஊ ன்னா உங்களுக்கு ஹோட்டல் தீனி வேணும்.என் சமையல் எப்ப பிடிச்சிருக்கு உங்களுக்கு. உங்க அக்கா ஆத்துக்கு போனா நாக்கை சுழட்டிண்டு திம்பேள்.”
“அம்மா பரதேவதா ஆரம்பிக்காதே இப்ப, இட்லி புளி சாதம், தயிர்சாதம்னு எல்லாம் கட்டு உக்காந்து சாப்பிட்டிட்டு வருவோம்”
“எனக்கென்ன உங்க பணம், எப்படி வேணா செலவளிங்கோ நானும் கஷ்டப்படாம சங்கீதால சாப்பிடறேன் கிளம்புங்கோ போலாம்”
“இப்பதாண்டி ஆறு மணி, 8 மணிக்கு கிளம்பினா போறும்”
ஒரு வழியா அந்த ஆபீசுக்கு 8.30க்கே போய் சேந்தோம்.எங்களுக்கு முன்னாலயே ஒரு இருபது பேர் வாசல்ல காத்துண்டிருந்தா.செக்யூரிடில இருந்தவர் அப்பாயினட்மென்ட் லெட்டர்ல டைம் பாத்து உள்ளே அனுப்பிண்டிருந்தார்.
எங்க டைம் 9 சின்ன சிரிப்போட 15 நிமிஷம் காத்திருக்கச் சொன்னார். சின்ன காத்திருப்புக்கு பின்னே உள்ளே போனா முதல்ல செக்யூரிடி செக்ன்ற பேர்ல உடம்பெல்லாம் ஏதோ குச்சியை வச்சு கிச்சு கிச்சு பண்ணினான்.ஒரு வழியா உள்ளே போனோம்.
அங்கே ரெயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூம் மாதிரி கொத்து கொத்தா ஸ்டீல் சேர்.முக்கா வாசி சேர்ல ஒரு டென்ஷனோட ஆண்கள், நகையெல்லாம் சரியா மேச் ஆறதா டிரெஸ்குனு செக் பண்ணிண்டு பெண்கள், அலட்சியமாக கால் மேல கால் போட்டுண்டு பல தடவை விசா வாங்கின பெரிசுகள் ,பல் செட்டை அடிக்கடி அமுக்கி விட்டுண்டு கூட வந்த பாட்டிகள், கவலையே இல்லாமல் சந்தோஷமாய் சேர்கள் மேல ஏறி குதிக்கிற ரெண்டு குர…இல்லை வால் குழந்தைகள்.
நான் என் ரெண்டு ஃபோல்டரையும் முன்னால டேபிள் போட்டு உக்காந்திருந்த ஒரு சூட் கோட் போட்ட ஆசாமியிடம் கொடுத்தேன், அவர் அலட்சியமா ஒரு திருப்பு எல்லா பேப்பரையும் பாத்துட்டு கம்ப்யூட்ர்ல ஏதோ டைப் அடிச்சு பக்கத்துல இருந்த பிரின்டரிலிருந்து சரக்னு ஒரு சீட்டை உருவி 42 னு சொல்லி கைல கொடுத்தார்.இல்லை சார் 53ன்னேன். அவர் ஒரு மாதிரியா என்னைப் பாத்து டோக்கன் நம்பர் 42 உங்க ஏஜ் சொல்லலை. உங்க நம்பர் மானிட்டர்ல வரப்ப கவுன்டருக்கு போங்க.
போய் ஒரு நல்ல இடமா செலக்ட் பண்ணி உக்காந்தோம், ஏசியோட இதமான குளிர் ஏகாந்தமா கண்ணை சொருகியது.அம்புஜம் திடீர்னு விலாலா குத்தினப்ப பதறிப் போய் எழுந்தேன், என்ன என்னடி ஆச்சுனு.40 நம்பர் சிவப்புல மினுக்கறது பாருங்கோ, அடுத்து நம்ம நம்பர் வந்துடும்னு சொல்றப்பவே , டோக்கன் நம்பர் 42 கவன்டர் நம்பர் 3 னு அனவ்ன்ஸ்மென்டோட மானிட்டர்ல 42 சிவப்பா மினுக்கியது. அவசரமா 3ம் நம்பர் கவுன்டருக்கு போனேன்.
மாதுரி திட்சித் மாதிரி ஒரு பொண்ணு அழகா சிரிச்சா.இந்த வீட்டு டாகுமென்ட், FD certificate அப்லோடு பண்ணிட்டு உங்க கைல கொடுத்துடலாம் சார். அதுக்கு தனியா ஃபீஸ் கட்டிடுங்க. உங்க பேப்பர்சை எங்க மெசேஜ் வந்தவுடனே நீங்களே கலெக்ட் பண்ணலாம், இல்லைன்னா பத்திரமா நாங்க கூரியர்ல அனுப்பிடுவோம்னா.
பரவாயில்லையே நமக்கு அலைச்சலில்லை சரி அனுப்புங்கன்னேன். 6 மன்த் விசா போதுமா இல்லை 2 இயர்ஸ்,5 இயர்ஸ் ஆப்ஷன் இருக்குன்னா.அதுக்கு மேல்கொண்டு 15,000, 25000 கார்ட்ல கூட பே பண்ணலாம்னா.
எனக்கு ஒரு மாசம் போறும்னேன். சிரிச்சிண்டே மினிமம் 6 மாசம் சார்னு,ஏதேதோ டைப் பண்ணி பிரின்ட் எடுத்து கைல கொடுக்கறதுக்கு முன்னால ருபீஸ் டூ தவுசன்ட் பிளீஸ்னா.
பையன் எல்லாம் கட்டிட்டேன்னானே எதுக்கு 2000 ரூபான்னேன்.அப்லோடிங் டாகுமென்ட்ஸ் 1000 ருபீஸ், கூரியர் ஃபார் 2 டாகுமென்ட் 1000 ருபீஸ்ன்றா. பஸ்ல வந்து வாங்கிண்டு போனா 28 ரூபால முடிஞ்சிருக்கும்.
வழியில்லாம 2000 ரூபா கட்டினேன். போய் வெயிட் பண்ணுங்க, பிங்கர் பிரின்ட், ஃபோட்டோ எடுக்க (பயோமெட்ரிக்)கூப்பிடுவாங்க, இந்த ஃபோல்டரை அவங்க கிட்ட கொடுங்க, ஆல் தி பெஸ்ட்னு அழகா சிரிச்சு அனுப்பிட்டா.
அடுத்த 10 நிமிஷத்துல ஒத்தொருத்தரா ரெண்டு பேரையும் கூப்டு ரேகையெல்லாம் பதிஞ்சிண்டாங்க ஏதோ மெஷின்ல. கொஞ்சமா சிரிச்சு தலையை வலது பக்கம் திருப்பு, இல்லை இடது பக்கம்னு கிட்டத்தட்ட சுளுக்காற வரை பண்ணி ஃபோட்டோ எடுத்து ஃபோல்டரை வாங்கி வச்சிண்டா.
3 வாரத்துல பேப்பர்ஸ் வீட்டிக்கு வரும்னா. விசா பாஸ்பொர்ட்ல ஸ்டாம்ப் ஆகி வருமானு கேட்டேன். அது யு.கே. எம்பசி கைல இருக்கு நாங்க ஜஸ்ட் ஏஜன்ட்தான்றா.
“வாடி அம்புஜம் ஹோட்டல் சங்கீதா நடை தூரம்தான்”
“உங்களுக்கு விசாவை விட சங்கீதால ரவாதோசையும், சாம்பார் வடையும்தான் முக்கியம் தெரியாதா என்ன”
“அப்ப காபி”
“சரி அலையாம நடங்கோ”
ஆச்சு இப்ப விசா எப்ப வரும்னு காத்திட்டிருக்கேன். வந்து லண்டன் போனா அதை எழுதறேன் ஓகேயா.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings