எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இதிலே முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தானா..? இல்லை நானா? அதை நீங்கள் முடிவு செய்யுங்க” திவ்யா கையிலிருந்த குழந்தைகளுக்கு பாலூட்டி முடித்து விட்டு முந்தானையால் அதன் உதட்டைத் துடைத்து தொட்டிலில் போட்டு தூங்க வைத்தாள்.
“திவ்யா… என்ன இப்படியொரு குண்டைத் தூக்கிப் போடுகிறாய்?” டி.வி.யை அணைத்து விட்டு அவள் அருகில் வந்தான் கதிரேசன்.
“வசந்த் தூங்குகிறான். மெதுவாகப் பேசுங்கள்” என்றாள். உதட்டில் கை வைத்துக் கொண்டே.
தொண்டையை செருமிக்கொண்டு “ஓ.கே…” என்று அவளை இழுத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தான். சோபாவில் அமரச் சொல்லி விட்டு “சொல்லு” என்றான்.
ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான். “உடனே சிகரெட்டை ஆரம்பிச்சாச்சா. அந்தச் சனியனைத் தூக்கித் தூரப்போடுங்கன்னு சொல்லி எத்தனை நாளாச்சு? குழந்தை பிறந்த பிறகு வீட்டிலே சிகரெட் பிடிக்ககூடாது என்றேனே?”
“சரி….சரி! இந்த ஒண்ணுதான்! நான் கேட்டதற்கு பதில் சொல்லு”
“என்ன பதில்?”
“திவ்யா, நீ வேலையை விட்டு விட்டு வீட்டிலே இருந்தால் குழந்தையைக் கவனித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.”
“இரண்டு பேரும் வேலைக்குப் போன பிறகே வீடு கட்ட வாங்கிய கடன், கார் கடன், ஊருக்கு போன செலவு என்று மிச்சமில்லாமல் ஓடுகிறது. நான் வேலைக்கு போவதை நிறுத்தினால் அப்புறம் உங்கள் ஒற்றை வருமானத்தில் எப்படி…? இப்போது குழந்தை செலவுகள் வேறு வந்து விட்டது.”
“சரி.. அதற்காக வசந்தை சரியாக கவனிக்காமல் வளர்த்தால் எப்படி இருக்கும்… யோசித்துப் பார்? எத்தனை முறை சொல்லி இருக்கிறேன். என் அப்பாவும் அம்மாவும் பணியாற்றியதால்… என் குழந்தைப் பருவம் என் தாத்தா பாட்டியோடு ஆகிவிட்டது. எவ்வளவுதான் அம்மாவும், அப்பாவும் என்னை ஆசையோடு எடுத்தாலும் ம்கூம் பாசமில்லாமல் வளர்ந்த உணர்வில் தான் வளர்ந்தேன். அந்த மாதிரி நம் வசந்திற்கு ஒரு நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காத்தான் என் சம்பளத்தோடு நம் வாழ்க்கையை சுருக்கிக் கொள்ளலாம்னு நினைக்கிறேன். கொஞ்சம் யோசித்துப்பாரு.”
“எதைச் சுருக்கிக் கொள்ளச் சொல்கிறீர்கள்? நீங்களும் நானும் நல்ல சம்பளம் வாங்கியும் ஒரு எல்.ஐ.சி. கட்ட முடியாமல் .. ஒரு சிறிய சேமிப்புக்கு முடியாமல் திண்டாடிக்கொண்டு இருக்கிறோம். அது கூடவா புரியாமல் இருக்கிறீர்கள்?”
“சரி.. இருவரும் வேலைக்குப் போவதால் இருக்கும் பிரச்சினையும் புரிகிறதல்லவா?”
“நான் இப்போது வேலையை விட்டு விட்டு கொஞ்சநாள் கழித்து திரும்ப வேலைக்குப் போகலாம். வசந்த் ஒரளவு வளர்ந்து விடுவான். ஆனால் நான் கம்ப்யூட்டர் வளர்ச்சியைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் போய்விடுவேன். அப்போது ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் தான் வேலை கிடைக்கும். நான் வேலையை விட்டுவிட்டு வசந்திற்காக வீட்டில் இருப்பது, அவனுடைய வருங்காலத்தையே நாம் பாழாக்குவது போல தான் எனக்குப் படுகிறது.”
“என்ன தான் சொல்கிறாய் திவ்யா?” கைகளைச் சுட்ட சிகரெட்டைக் கீழே போட்டு மிதித்தான்.
“நாம் திருமணம் செய்து கொண்ட போது நீங்கள் சொன்னது ஞாபகம் இருக்கிறதா? கணவனும், மனைவியும் ஓடும் நதியும் ஒய்யார நாணலும் போன்றவர்கள் என்று.”
“அம்.. அதற்கென்ன இப்போது..?”
“வெள்ளம் வேகமாக வரும்போது நாணல் வளைந்து கொடுக்க வேண்டும். அதே நேரம்… அந்த நதியும் நாணலின் வருத்தங்களை உணர வேண்டு.” என்றாள் திவ்யா.
“என்ன புதிர் போடுகிறாய்?”
அடுத்த சிகரெட்டை எடுத்தவனின் கையிலிருந்து அதைப் பிடுங்கி குப்பையில் போட்டு விட்டு “கதிர் உங்கள் கனவே வியாபாரம் செய்வதுதான். எப்படியும் கூடிய சீக்கிரம் வேலையை விட்டு விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால், நாம் வசந்தைக் கவனித்துக் கொள்ள ஒரு ஆளை வீட்டோடு வைத்துக் கொள்ளலாம்.” என்று இழுத்தாள்.
“மொத்தத்தில் நான் வேலையை விட்டு விட்டு வசந்தைக் கவனிக்க வேண்டும் என்கிறாய்” கொஞ்சம் எரிச்சலோடு கேட்டான்.
“அப்படியில்லை. நான் இப்போது வேலையை விட்டால் பாதிக்கும். நீங்க அடுத்த ஆண்டு வேலையை விட்டு விட்டு வியாபாரம் செய்யப் போவதை இப்போதே செய்யுங்கள். அத்தோடு வசந்தையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.”
அதைக்கேட்டு பெருமூச்சு விட்ட கதிர் “நீ சொல்வதும் சரிதான். அப்பா அம்மா இருவரில் யாராவது ஒருவரின் கவனிப்பு இருந்தால் குழந்தைக்கு நன்றாக இருக்கும். யோசித்துச் சொல்கிறேன்” என்றான்.
“நீங்கள் யோசித்தாலே சரி என்றுதான் சொல்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று எழுந்தவள் அவனது நெற்றியில் நேசமாய் முத்தமிட்டாள்.
எழுத்தாளர் இரஜகை நிலவன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings