in , ,

தாயல்ல சேய் நீ ❤ (நிறைவுப் பகுதி) – தி. வள்ளி, திருநெல்வேலி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

காலையில் அம்மாவை எழுப்பும்போது தான் பார்த்தாள் படுக்கையிலேயே பார்வதி சிறுநீர் கழித்திருந்தாள்…

எழுந்தவள் பதறிப்போய் “அய்யய்யோ என்ன சங்கீதா.. நான் இப்படி பண்ணிட்டேன்.. படுக்கையிலேயே பாத்ரூம் போயிட்டேனே …” என்று குற்ற உணர்வில் தவித்தாள்.

“இதுக்கு ஏன்மா பதறுர… இது ஒன்னும் பெரிய விஷயமில்ல. நீ இப்படி உட்காரு..” என்று அம்மாவுக்கு சேலையை எடுத்துக் கொடுத்து மாத்த சொல்லிவிட்டு, படுக்கையை விரிப்பை எல்லாம் மாற்றி சுத்தப்படுத்தினாள்.

“சங்கீதா நான் உன்னை ரொம்ப கஷ்டப் படுத்துகிறேன்டி …பாவம் நீ ரம்யா கூப்பிட்டதுக்குக் கூட போகாம எனக்காக தானே கஷ்டப்படுகிற” என்று அழுத பார்வதியை சமாதானப்படுத்தி அணைத்துக் கொண்டாள் சங்கீதா. 

அதற்கப்புறம் தினமும் இரவு குழந்தை போல பாத்ரூம் கொண்டு போய் விட்டு படுக்க வைப்பாள் ..அப்படியும் சில நேரம் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால், பொறுமையாக அவளை சுத்தப்படுத்தி அந்த இடத்தையும் சுத்தப் படுத்துவாள்.

நாட்கள் போக போக அம்மாவை கவனிப்பது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. குளிக்க.. சேலை கட்ட என அவள் வேலைகளை அவள் செய்வதற்கே சிரமப்பட ஆரம்பித்தாள். அதற்கே சங்கீதா உதவி செய்ய வேண்டியதாய் இருந்தது. பகலில் லட்சுமி இருக்கும் வரை அவள் கொஞ்சம் பார்த்துக் கொள்வாள்.

ஒரு கம்பீரமான ஆசிரியராக உலா வந்தவள் இந்த நோயினால் பரிதாபமாக மாறிப் போனது சங்கீதாவின் மனதை ரொம்பவே வருத்தப்படுத்தியது.

தினமும் போராட்டம், கவலை, மனச்சோர்வு, எல்லாம் சேர்ந்து சங்கீதாவுக்கு ஒரு உடல் அசதியை கொடுத்தது. தனக்கு நிச்சயம் ஒரு மாறுதல் தேவை என்று தோன்றியது.

அப்போது தான் ரம்யா வீட்டிற்கு போனால் என்ன என்ற எண்ணம் வந்தது . ரம்யாவின் புருஷன் சந்தர் அன்பான பையன். பிள்ளைகளோடு போய் இருந்தால், நிச்சயம் அம்மாவுக்கும், தனக்கும் அது ஒரு மாறுதலாக இருக்கும் என்ற நினைப்பு தோன்றியது.

பார்வதியும், ரம்யாவையும், குழந்தைகளையும் பார்க்க ஆர்வமாக இருப்பது தெரிந்ததும், மறுநாளே ஒரு கார் ஏற்பாடு பண்ணி ரம்யா வீட்டிற்கு வந்தார்கள். இடம் மாறுதல் இருவருக்குமே ஒரு பெரிய ஆறுதலாக இருந்தது.

ரம்யாவின் குழந்தைகள் ஏற்கனவே பெரியாச்சி ..பெரியாச்சி.. என்று பார்வதியிடம் உயிராக இருப்பார்கள். அவளிடம் கதை கேட்பது கேட்பதில் அலாதி பிரியம் அவர்களுக்கு. சங்கீதாவே ஆச்சரியப்படும்படி பார்வதி ரொம்ப தெளிவாக இருந்தாள். பிள்ளைகளுடன் தாயம் விளையாடினாள்.

சங்கீதாவுக்கு அந்த மாறுதலை பார்க்க சந்தோஷமாக இருந்தது, தான் கிளம்பி வந்தது சரிதான் என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டு கொண்டாள்.

ஆனால் ரம்யாவுக்கு அவர்கள் இருவரின் வருகையும் சுத்தமாக பிடிக்கவில்லை. குழந்தைகளையும் பார்வதியுடன் விளையாட அனுமதிக்க மறுத்தாள்.

ஆச்சியால் பிள்ளைகளுக்கு ஏதாவது கெடுதல் நேருமோ என்று அவள் பயப்படுவது புரிந்ததும் சங்கீதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது .குழந்தை போல் மாறிவிட்ட பார்வதியை ரம்யா ஒதுக்குவது சங்கீதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் தான் பார்வதி பாத்ரூமை தன்னை அறியாமல் அசிங்கம் பண்ண ரம்யா அதை பெரிய விஷயமாக்கி கத்தி சண்டை போட்டாள்.

“ஏன் ரம்யா ஆச்சியை இப்படி நடத்துற அவங்க எவ்வளவு உதவி செஞ்சிருக்காங்க ..” சந்தர் கூற…

“உங்களுக்கு அதெல்லாம் தெரியாது..இவங்க ரெண்டு பேரும் வரவில்லைன்னு இப்ப யார் இங்க அழுதா? வரணும்னா அம்மா மட்டும் வர வேண்டியதுதானே? ஆச்சியை எதுக்கு இப்படி கூட்டிட்டு வர்றா “

“நீ பேசறது சரி இல்ல ரம்யா.. அவங்க ஆச்சிய இந்த நிலைமைல எப்படி தனியா யார் பொறுப்பிலையாவது விட்டுட்டு வருவாங்க? ரெண்டு பேரும் நமக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்காங்க…”

“அதுக்காக இப்படியா? ஒன்னு நமக்கு உதவி செய்யனும்.. உதவி செய்யலைன்னா உபத்திரமாகவாவது இல்லாம இருக்கனும் “

“சரி சரி… விடு அவங்க காதுல விழுந்திடப் போகுது…அத்தை மனசு வருத்தப்படும் ” சந்தர் நினைத்தது போல ரம்யா பேசிய அந்த வார்த்தைகள் சங்கீதாவின் காதில் விழத்தான் செய்தது.

இருந்தாலும் பேசியது தன் பெண், மனம் வருத்தப்படுவதை தவிர என்ன செய்ய முடியும்? மருமகன் கேட்டாலாவது அர்த்தம் இருக்குது ..பெத்த பெண்ணே இப்படி பேசும் போது என்னத்த சொல்ல என்று நினைத்துக் கொண்டாள்.

ஆனால் அதிலிருந்து அம்மாவை கவனமாக பார்த்துக் கொண்டாள். வந்தது வந்தாகி விட்டது, இனி ஊருக்கு போகும் வரை தங்களால் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று நினைத்தாள் சங்கீதா.

ஆனால் எல்லாம் நினைத்தபடியா நடக்கிறது? ஏற்கனவே குமறிக் கொண்டிருந்த சங்கீதாவின் மனம் வெடித்து சிதறுமாறு மறுநாள் ரம்யா நடந்து கொண்டாள்.

இன்று மாலை ரம்யாவின் சிநேகிதிகள் வந்திருந்தனர். பார்வதி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் ..சரி எல்லோரும் இருக்கிறார்களே என்று சங்கீதா காய்கறி வாங்க அப்பார்ட்மெண்ட் கீழே உள்ள காய்கறி கடைக்கு கூடையுடன் கிளம்பினாள்.

மடமடவென காய்கறிகளை வாங்கிக் கொண்டு வேகமாக வீடு திரும்பினாள்..வாசலில் செருப்பை கழட்டி விட்டு உள்ளே நுழையும் போது அவள் கண்ட காட்சி ….

பார்வதி முந்தானை சேலை நழுவியது கூட தெரியாமல் நின்றிருந்தாள். உள்ளேயிருந்து வந்த சந்துரு அவள் உடையை சரி பண்ணி, அவளை மெதுவாக கூட்டிக்கொண்டு போய் ரூமில் விட்டான்.

ரம்யாவின் சினேகிதி “யார் இந்த அம்மா ரம்யா? “என்று கிசுகிசுத்தாள். 

ரம்யா “இவங்க கிராமத்துல தூரத்து சொந்தம். கொஞ்சம் மெண்டல்” என்று சொல்ல எல்லோரும் சிரித்தனர். கொதித்துப் போனாள் சங்கீதா.

விறுவிறுவென ஹாலுக்கு வந்தவள், “சே.. நீங்களெல்லாம் பெண்கள் தானா? ஒரு வயசானவ அதுவும் தன்ன மறந்து, தன்னுடைய உடை நழுவினது கூட தெரியாமல் நிக்கிறாள்.. அதப் பாத்து கேலி பண்ணி சிரிக்கிறீங்களே…வெக்கமா இல்லையா உங்களுக்கெல்லாம். ஒரு அம்மா இல்லாம நீங்க எல்லாம் வானத்திலிருந்தா குதிச்சீங்க? ஒரு ஆணுக்கு இருக்கிற பொறுமையும், தன்மையும், கூட உங்ககிட்ட இல்லையே..இப்ப சொல்றேன் கேட்டுக்கோங்க ..அவ யாரோ இல்லை.. என் அம்மா.. என்னை பெத்த அம்மா…இன்னைக்கு எங்க அம்மாவுக்கு வந்த பிரச்சனை, நாளைக்கு உங்க அம்மாவுக்கு வந்தாலும் இப்படித்தான் கேலி பண்ணி சிரிப்பீங்களா? 

ரம்யா ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ.. அவ உன்னை தூக்கி வளத்தவ.. ஆயிரம் சிரமங்களுக்கிடையே என்னை வளர்த்து ஆளாக்கியவள். இன்னைக்கு அவ நிலைமை உங்களுக்கு கேலியா இருக்கலாம். வாழ்க்கையில யாருக்கு எது வேண்டுமானாலும் எப்பவும் நடக்கலாம் …வாழ்க்கையில போராடி ஜெயிச்சு, என்னை வளர்த்திருக்கா. அவளுடைய மன உறுதில நூத்துல ஒரு பங்கு உங்ககிட்ட எல்லாம் இருக்குமா?

உன் வாழ்க்கை ரம்யமாய் இருக்கனும் தான் “ரம்யா” ன்னு உனக்கு பெயர் வச்சா.. உன் வாழ்க்கையும் ரம்யமாத் தான் இருக்குது. ஆனால் மனசு தான் குப்பை… வெளியில் இருந்து வந்த பையன்கிட்ட இருக்கிற அன்பும், பாசமும் கூட சொந்த குடும்பத்தை சேர்ந்த ஒருத்திகிட்ட இல்லையே. இன்னைக்கு ராத்திரி மட்டும் பொறுத்துக்கோ. நாளைக்கு காலையில நான் இங்கிருந்து கிளம்பிடுவேன்” என்றாள் சங்கீதா.

அவளுடைய கோப கர்ஜனையை எதிர்பாராத ரம்யாவும், அவள் சிநேகிதிகளும், விக்கித்துப் போனார்கள்.

மறுநாள் காலை சொன்னது போல் கிளம்பி விட்டாள். சந்தர் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை.

“தம்பி என்ன மன்னிச்சிடுங்க.. உங்கள உங்க அம்மா பண்பாடோட வளர்த்திருக்காங்க. பெரியவங்கள மதிக்க கத்துக் கொடுத்திருக்காங்க. ஆனால் நான் என் பொண்ண சரியா வளர்க்கலைன்னு நினைக்கிறேன் ..எது எப்படியோ அவ உங்களையும் பிள்ளைகளையும் பாத்துக்கிட்டா சரிதான்…என் அம்மாவை நான் பார்த்துக்குவேன்”

“இல்லை… அத்தை நீங்க ரம்யா சொன்னதெல்லாம் பெருசா நினைக்காதீங்க.. நீங்களும் ஆச்சியும் இங்கேயே இருங்க” என்றான் சந்தர்

“இல்ல தம்பி.. என்ன போக விடுங்க… ரம்யாவுக்கு நான் செய்ற கடமை எல்லாம் செஞ்சுட்டேன் நானும் அம்மாவும் அவ குழந்தைகளை வளர்த்து விட்டுட்டோம். இனி அவளுக்கு எங்க உதவி தேவை இல்லை.

அவ வேணா வெறுக்கலாம்.. ஆனா எனக்கு எங்கம்மா முக்கியம் . என் அம்மாவை என்ன விட யாரும் புரிஞ்சுக்க முடியாது. அவள் எனக்காகவே வாழ்ந்தவள். என்னுடைய கண் முன்னாடியே எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சவள்.

இனி அவளுக்கு ஒரு நிம்மதியான கடைசி காலம் வேண்டும். எனக்காக வாழ்ந்த அம்மாவுக்காக தான் என் வாழ்க்கை இனிமேல் இருக்கும். இனி நான் அவளுக்காகவே வாழ்வேன்” என்றபடி, தன் தாயை.. இல்லை இல்லை சேயாக மாறிப்போன தன் தாயை… அணைத்தபடி காரில் ஏறினாள் சங்கீதா.

அவள் கண்களில் தெரிந்த உறுதி மனதை அசைக்க, சந்தர் அவள் முடிவுக்கு தலைவணங்கி, கண்ணீருடன் கையசைத்தான்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 6) – தி. வள்ளி, திருநெல்வேலி

    கருப்புருவம் (சிறுகதை) – சஞ்சிதா பாலாஜி