இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வீட்டிற்கு மூத்த மருமகள். அடுத்த நாள் பொங்கல் என்பதால் மொத்த வேலையும் தன் தலையில் தான். வீட்டை சுத்தம் செய்து முடித்துவிட்டு அரிசியும் உளுந்தும் சிறிது வெந்தயமும் ஊற வைத்தாயிற்று. பண்டிகைக்கு தானே இட்லி சுட முடியும். இட்லிக்கு மாவு அரைத்து முடிக்கவே பொழுது போயிற்று.
அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து முடித்து வாசல் தெளித்து கோலமிட்டு உள்ளே வர மணி ஏழு ஆனது. வயிற்றில் வலி ஏற்பட்டது. எட்டு மாத கர்ப்பிணியாக இத்தனையும் செய்தால். தமிழ் மாதத்திற்கு தை பிறக்க ஒன்பது மாதம் பிறந்தது. எட்டு மாதம் தானே ஆகிறது பிரசவ வலியாக இருக்காது என ஒரு புறம் மனம் சொன்னாலும் வலி மிகவும் அதிகமானதில் பயம் ஏற்பட்டது.
கீழே உட்கார முயன்று குனியும் பொழுது ஏதோ உடைந்து அடியில் நீர் வழிந்தது. பாவாடை நனைந்தது.
பயந்த கணவர் எதிர்வீட்டு பாட்டியிடம் சென்று சொல்ல, “பனிக்குடம் உடைந்திருக்கும் சீக்கிரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று சொல்ல அங்கு போன ஒரு மணி நேரத்தில் சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவியினியாள்”
‘ஆம் தை 1 பொங்கல் அன்று காலையில் இப்படித்தான் நான் பிறந்தேனாம்’ அடிக்கடி அம்மா சொல்லுவார்.
வேகமாக வண்டியில் வந்த ஆதி என்னிடம் வந்து கூறினார் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை.
“தேங்க்ஸ் ஆதி.. அதுக்காக இந்நேரம் வந்தியா.. கால் பண்ணி சொல்லக் கூடாதா”
“பரவால்ல.. இங்கதான வீடு.. அடுத்த பர்த்டேக்கு நம்ம பாப்பாவோட இருப்போம்”
“ஆமா ஆதி..”
“ஹாப்பி பர்த்டே அக்கா” பக்கத்தில் இருந்த சித்தி பெண்ணும் கூறினாள்.
சித்தியும் அம்மாவும் ஆதியின் அருகே வந்து வீட்டிற்குள் வரச் சொன்னார்கள்.
“இல்ல அத்தை நேரம் ஆச்சு.. நான் போய்ட்டு காலையில சீக்கிரமா ரெடியாகி வந்தட்றேன்”
“பாத்திங்களா மாமாக்கு தான் கவி பிறந்தநாள் நியாபகம் இருக்கு.. முதல்ல விஷ் பண்ணிற்காரு”
“என் பொண்ணு பிறந்தநாள் மறக்குமா.. கோலம் போட்டதுல மணி தெரில.. மாமா பன்னெண்டு மணி பாத்து வாழ்த்திருக்காரு.. எனக்கு விடிஞ்சா தான் இவ பிறந்தநாள்ளு”
“ஆமா.. இவ பிறந்தநாள மறக்க முடியுமா.. பண்டிகைலயே பெத்துருக்கமா.. அதுக்கு தனியா இதுக்கு தனியா புதுத்துணி எடுக்க தேவையில்ல” என்று அமுதினி கூறவும் எல்லோரும் சிரித்தனர்.
சிறிது நேரத்தில் ஆதி கிளம்பினார்.
இதற்கு முன் இத்தனை முறை கேட்டதில்லை இந்த முறை அம்மாவிடம் நான் எப்படி பிறந்தேன் என்று கேட்டேன். ‘பொங்கல் அன்று வீட்டு வேலைகள் செய்து பனிக்குடம் உடைந்து மருத்துவமனைக்கு செல்ல உடனே நான் பிறந்து விட்டேன்’ என்றார்.
“தை தான் ஒன்பது மாசம்.. பண்டிகைல அம்மா வீட்டுக்கு போய்ட்டு பிரசவம் முடிஞ்சி வரதா இருந்தது. அம்மா வீட்டுக்கே போகல.. குடுத்த தேதிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே பொறந்துட்ட”
“நீ எதுக்கு மாசமா இருக்கப்பா எல்லா வேலையும் செஞ்ச..”
“அப்போ மாசமா இருந்தாலும் எப்போவும் போல எல்லா வேலையும் செய்வாங்க.. இப்போ தான் ரொம்ப தாங்குறாங்க.. எந்த வேலையும் செய்ய மாட்டிக்குறாங்க..”
“நான் பொறக்கும் போது உனக்கு வலியா இருந்ததா”
“நீ சீக்கிரமே பொறந்துட்ட.. கொஞ்ச நேரம் தான் வலி இருந்தது.. அமுதினிக்கு தான் ரொம்ப சிரமப்பட்டேன். ஹாஸ்பிடல் போய் ஒரு நாள் இருந்து முடியாம வீட்டுக்கு வந்துட்டேன். மறுபடியும் ரொம்ப வலி பிடிச்சுப் போனேன்.. அங்க போய் எவ்ளோ நேரம் கழிச்சி பொறந்தா”
“அப்போவே அம்மாவ கஷ்டப்படுத்தி வந்துருக்கியே.. நான் எவ்ளோ ஈசியா வந்துருக்கேன்”
“உனக்கு அவசரம் முன்னாடியே வந்துட்ட.. நான் பொறுமையா வளந்து பெருசா வந்திருக்கேன்..”
“ரெண்டு பேரும் சண்டை போடாம போய் வேலைய பாருங்க..” அம்மா சிரித்துக் கொண்டே அறிவுரை கூறிவிட்டுச் சென்றார். கலர் பொடி டப்பாக்களை எடுத்து வந்து உள்ளே வைக்கத் தொடங்கினார்.
நாங்களும் அம்மாவிற்கு உதவினோம். கோலம் நன்றாக வந்திருந்தது. அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
சித்தியின் கோலத்தையும் முடிக்க உதவி செய்ப் போனோம். கோலம் போடுவது போல் அமர்ந்திருக்கும் விதமாய் சித்தப்பா எல்லோரையும் சேர்த்து புகைப்படம் எடுத்தார். இருளில் கோலத்தின் வண்ணம் முகத்தில் பட்டு முகம் பிரகாசித்தது.
எல்லாம் முடிந்து வீட்டிக்குள் வந்து படுக்க மணி ஒன்று ஆனது.
திருமணத்திற்கு முன் நானும் தங்கையும் தனி அறையில் படுத்துக் கொள்வோம். திருமணத்திற்குப் பின் எப்பொழுதாவது அம்மா வீட்டிற்கு வருவதால் ஹாலில் அனைவரும் சேர்ந்தே உறங்குவோம்.
ஹாலில் படுத்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டு கண்களை மூடினேன். தூக்கம் வரவில்லை மாறாக பல சிந்தனைகள் எழுந்தன.
அம்மா பிரசவம் பற்றி சொல்லும் பொழுது அவ்வளவு கடினமாகத் தெரியவில்லை. ஆனால் தோழி ஒருத்திக்கு போன மாதம் குழந்தை பிறந்தது. தேதி முடியும் வரை காத்திருந்து வலி வராமல் மருத்துவமனையில் சேர்ந்து வலிக்கு ஊசி போட்டு வலி வரவைத்து இரண்டு நாட்கள் காத்திருந்து அவளால் வலி தாங்க முடியாமல் கடைசி நேரத்தில் ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்துள்ளனர். இத்தனைக்கும் அவள் எவ்வளவு வேலை செய்தால் கர்ப்பமாக இருக்கும் பொழுது.
இன்னொரு தோழிக்கு மூன்றாவது மாத ஸ்கேனில் ‘ப்ளசென்டா லோ லையிங்’ அதாவது தொப்புள் கொடி கீழே இறங்கியுள்ளது எந்த வேலையும் செய்யக் கூடாது என்று கூறியதில் வீட்டில் படுத்தே இருக்கிறாள்.
அந்த காலத்தில் என் அம்மா இந்த ஸ்கேன் எல்லாம் பார்க்காமல் எப்பொழுதும் போல் எல்லா வேலைகளையும் செய்து நன்றாகத்தானே குழந்தைகளை பெற்றுள்ளனர். இப்பொழுது ஏன் எப்படி?
அதுவும் எங்கள் பாட்டி காலத்தில் வீட்டிலேயே தான் பிரசவம் நடந்துள்ளது. என் அம்மா வீட்டிலே தான் பிறந்திருக்கிறார். அரிவாள்மனையில் தொப்புள் கொடியை அறுத்துள்ளனர். படி தாண்டும் பொழுது பிறந்த குழந்தையாம் எங்கள் பெரியம்மா.
அவ்வளவு சுலபமாக இருந்ததால் தான் ஏழு எட்டு குழந்தைகள் கூட பெற்றுக் கொண்டார்களோ.
பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் இப்பொழுது சாப்பிடுகிறோம். அதில் இல்லாத சத்து அப்பொழுது என்ன சாப்பிட்டார்கள் அவர்களுக்கு எப்படி அவ்வளவு வலிமை.
கடைசி மூன்று தலைமுறைகளில் உணவு முறை வாழ்க்கை முறையில் இவ்வளவு வித்தியாசங்களா!
பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்த நல்லவைகளை மாற்றிவிட்டோமா!
என் வயிற்றில் இருக்கும் குழந்தையை எப்படி நான் ஆரோக்கியமாக பெற்று எடுக்கப் போகிறேன். பிரசவ வலி எப்படி இருக்கப் போகிறது. எனக்கு ஏதாவது ஆகி விடுமோ.
ஏதேதோ குழப்பங்கள் பயங்கள் எழுந்தன. கண்களில் இருந்து நீர் வழிந்தது.
யாரும் பார்க்கும் முன் கண்களை துடைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து போர்வையை போர்த்த முயன்ற பொழுது அம்மா என்னையும் என் கண்ணில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரையும் பார்த்துத் திகைத்தார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings