எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“அங்க உட்கார்ந்துட்டு ஜன்னலில் என்னடா வேடிக்கை?.. தடிமாடு மாதிரி வளர்ந்திருக்கே!… ஆனா பத்துப் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை” கோபியின் அப்பா வழக்கம் போல் கத்தலை ஆரம்பிக்க, திரும்பி அவரை முறைத்தான் அவன்.
“க்கும்… என்னை முறைச்சு என்ன ஆகப் போகுது?… இந்த முறைப்பையெல்லாம் படிப்புல காட்டி இருக்கணும்”. சட்டையைக் கழற்று ஹேங்கரில் மாட்டியபடியே சொன்னார் அவர்.
சுயமரியாதை பாதிக்கப்பட, “இப்ப என் படிப்பில் என்ன குறைஞ்சிடுச்சு?… நான் என்ன பெயில் ஆயிட்டேனா?… பாஸ்தானே பண்ணியிருக்கேன்?… எங்க ஸ்கூல்ல இருபத்தியேழு பேரு ஃபெயிலாகியிருக்காங்க!… நான் அப்படி ஆனேனா?” கோபி அடக்க மாட்டாமல் கொதித்தான்.
”அடடா… படிப்பாளி பாஸ் பண்ணிக் கிழிச்சிட்டார்!….. வெறுமனே பாஸ் பண்ணி என்ன பண்றது?.. காலேஜ்ல சேர்ற அளவுக்கு மார்க் எடுக்கலையே?”. நக்கலாய்ப் பேசினார் தந்தை.
“அப்பா… சும்மா பேசாதீங்கப்பா… அறுபத்திமூணு பர்ஸண்டேஜ் வாங்கி இருக்கேன்?… தெரிஞ்சுக்கங்க” பெருமையாய்ச் சொன்னான் கோபி.
“பெரிய அறுபத்திமூணு பர்ஸண்டேஜ்… அங்க போய்ப் பாரு அவனவன் தொண்ணூறு… தொண்ணூத்தியஞ்சு… பர்ஸண்டேஜ் வெச்சுக்கிட்டு அலையுறானுக அட்மிஷனுக்கு”.
அவர் பேச்சிலிருந்த யதார்த்த உண்மையைப் புரிந்து கொண்ட கோபி, மேற்கொண்டு பேச முடியாமல் அமைதி காக்க,
“அது சரி… உன் கூடவே சுத்திட்டு இருப்பானே ஒருத்தன்… தலை நெறையா முடி வளர்த்திக்கிட்டு… அவன் பேரு என்ன?… ஆங்… பாஸ்கர்!… அவன் என்னானான்?… பாஸாவது பண்ணினானா?… இல்லை அந்த இருபத்தியேழு பேர்ல ஒருத்தன் ஆயிட்டானா?”.
“அவனெல்லாம் பாஸ் பண்ணி காலேஜ்ல கூட சேர்ந்துட்டான்” சோகமாய் சொன்னான் கோபி.
“என்னது?… காலேஜ்ல சேர்ந்துட்டானா?… பரவாயில்லையே!… எத்தனை பர்ஸன்ட் வாங்கினான் அவன்?” நம்ப முடியாமல் கேட்டார்.
“ஐம்பத்தியஞ்சு பர்ஸண்ட்”
.
“என்னது வெறும் ஐம்பத்தியஞ்சு பர்ஸண்ட்டா?… அப்புறம் எப்படி காலேஜ்ல சேர்ந்தான்?.. எம்.எல்.ஏ., எம்.பி. ரெக்கமண்டேஷன் ஏதாவது புடிச்சிட்டானா?…. இல்லை பெரிய தொகையை டொனேஷனாக் குடுத்திட்டானா?.” முகத்தைச் சுருக்கிக் கொண்டு கேட்டார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை… அவன் ஸ்கூல்ல பெரிய கிரிக்கெட் பிளேயர்!.. டிஸ்ட்ரிக்ட் லெவல்… ஸ்டேட் லெவல்… அப்படின்னு விளையாடி நிறைய சர்டிபிகேட்களும், கோப்பைகளும் வாங்கிக் குவிச்சிருக்கான்!.. அதனால ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல அவனுக்கு சீட்டு கொடுத்துட்டாங்க!… சும்மாவல்ல ரெண்டு மூணு காலேஜ் அவனுக்கு வந்து சீட் குடுத்திச்சு”.
வீட்டின் புழற்கடைப் பக்கம் சென்று முகத்தைக் கழுவி விட்டு, துண்டால் துடைத்துக் கொண்டே வந்த தந்தை, சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தார்.
திடீரென்று, “ஹும் அவனாவது தேவலை!… ஏதோ ஒண்ணுல இல்லேனாலும்… இன்னொண்ணுல சாதிக்கிறான்!… நீ படிப்புலதான் மக்கு… அட்லீஸ்ட் ஸ்போர்ட்ஸ்லயாவது வளர்ந்து இருக்கிறியா?.. அதுவும் கிடையாது!.. அவன் கூடத்தானே சுற்றித் திரிஞ்சே… அவனை மாதிரி ஏதாச்சும் பண்ணியிருக்கலாமல்ல?… தண்டம்…தண்டம்!” என்று தலையிலடித்துக் கொண்டார்.
நொந்து போனான் கோபி.
அவன் மனசு அப்படியே ஒரு ஐந்து வருடம் பின்னோக்கிச் சென்று, அன்றொரு நாள் நடந்ததை நினைத்துப் பார்த்தது.
அப்போது கோபியும் இதே பாஸ்கரும் எட்டாம் கிளாஸ் ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் மாலை இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்த இருவரையும் கோபியின் தந்தை வாசலிலேயே மடக்கினார்.
“நில்லுங்கடா… எங்கடா போய் சுத்திட்டு வர்றீங்க?” தடிமனான வார்த்தைகள் தங்கு தடையின்றி வந்து விழுந்தன.
“வந்து… கிரிக்கெட் விளையாடிட்டு வர்றோம்ப்பா” கோபி நடுங்கியபடி சொன்னான்.
”ஆமாம்… இவன் டெண்டூல்கர்… அவன் விராட் கோலி!… இவனுகதான் போய் இந்தியாவுக்காக விளையாடி உலக கோப்பையைத் தட்டிட்டு வரப் போறானுக…!.. த பாருடா… இன்னியோட சரி!… இனிமேல் கிரிக்கெட் விளையாடப் போறேன்… டோர்னமெண்ட்ல கலந்துக்கப் போறேன்”ன்னு சொல்லிட்டு தெரு சுத்தப் போனே….?. கால்ல சூடு போட்டுடுவேன்!… ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு!” என்று கத்தியவர் அந்த பாஸ்கர் பக்கம் திரும்பி, “என்னடா இன்னும் முழிச்சுக்கிட்டு நிக்கறே?… ஓடிப் போயிடு… இனிமே இந்தப் பக்கம் வந்தே…?… அவனுக்கு சூடு போட்ட அதே கொள்ளிக் கட்டைல உனக்கும் சூடு போட்டுடுவேன்”
சிட்டாய்ப் பறந்தான் பாஸ்கர். அவன் சென்றதும், சன்னக் குரலில் தந்தையிடம் சொன்னான், “அப்பா எனக்கு ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்ப்பா!… என்னைக் கிரிக்கெட் விளையாட விடுங்கப்பா!… நிச்சயமா நான் பெரிய ஆளா வருவேன்ப்பா… ஸ்கூல்ல எங்க பி.டி.மாஸ்டர் கூட என்னோட பௌலிங்கைப் பார்த்துப் பாராட்டியிருக்கார்”
“உதைப்பேன் ராஸ்கல்!… பி.டி.மாஸ்டர் சொன்னதை மட்டும் சொல்றியே?… உங்க கணக்கு மாஸ்டர் என்ன சொன்னார் அன்னிக்கு?… அதை மறந்திட்டியா?… நீ ஒண்ணாம் நெம்பர் மக்கு”ன்னு என் முன்னாடியே சொல்றார்!” என்றவர் வேகமாக நடந்து சென்று அவன் கையில் இருந்த பந்து, மட்டை எல்லாவற்றையும் பிடுங்கி அவன் கண்ணெதிரிலேயே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்த,
“அப்பா…. அப்பா” கதறினான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டியது. நெருப்பில் பந்து மட்டையோடு சேர்ந்து அவனது ஸ்போர்ட்ஸ் ஆர்வமும் கருகிப் போனது.
நினைவின் ஓட்டத்தை நிகழ்காலத்திற்குத் திருப்பிய கோபி தன் தந்தையைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“என்னடா… நான் சீரியஸாப் பேசிட்டிருக்கேன் நீ பாட்டுக்கு சிரிக்கறே?…” கண்களைப் பெரிதாக்கிக் கொண்டு அவர் உச்சஸ்தாயில் கத்த,
“உங்களைப் பார்த்தா சிரிப்புத்தான்ப்பா வருது” சொல்லி விட்டு சிரித்த முகத்துடன் அவன் அங்கிருந்து நகர, வாயடைத்துப் போனார் தந்தை.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings