இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மனதில் இருந்து தான் கொண்டாட்டங்கள் பிறக்கின்றன. வெளி உலகம் எவ்வளவு கொண்டாட்டமாக இருந்தாலும் கதவை மூடிக்கொண்டு உள்ளே அமர்ந்து விட்டால் எதையும் அனுபவிக்க முடியாது.
அப்படியே கதவை திறந்து பார்த்தாலும் மனதில் ஈடுபாடு இருந்தால் தான் உண்மையான மகிழ்ச்சியை உணர முடியும்.
என்ன இருந்தாலும் பண்டிகைகளின் சாரம் இப்பொழுது குறைந்து வருவதும் உண்மை தான்.
தீபாவளிக்கும் பிறந்தநாளிற்கும் மட்டும் புதுத்துணி எடுத்த சமயத்தில் தீபாவளி எப்பொழுது வரும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பாட்டி வீட்டிலேயே இனிப்புகளும் முறுக்கும் செய்த பொழுது எப்பொழுது தீபாவளி வரும் என்று ஏக்கமாக இருந்தது.
எப்பொழுது வேண்டுமானாலும் புதுத்துணி எடுத்துக்கொள்ளலாம் எப்பொழுது வேண்டுமானாலும் கடைகளில் இனிப்பு வாங்கி உண்ணலாம் என்றான பின் தீபாவளியும் எல்லா நாட்களை போன்று ஒரு சாதாரண நாள் ஆகிப் போனது.
தெருவில் பொங்கல் பானையில் பொங்கல் வைத்தவரை பொங்கல் பண்டிகை இன்னும் இனிப்பாக இருந்தது.
சில வருடங்களாக நாங்களும் பெரிதாக பொங்கல் கொண்டாடவில்லை. அதுவும் குக்கரில் பொங்கல் வைத்த கதையெல்லாம் உண்டு.
போனமுறை தான் எனக்கு தலை பொங்கல் என்பதால் சூரிய பொங்கல் வைக்க அறிவுறுத்தினார்கள்.
அதிகாலையில் நேரமாக எழுந்து ஐந்து மணிக்கே குளித்து முடித்து அம்மா வீட்டின் மொட்டை மாடியில் பானையில் பொங்கல் வைத்து சூரியன் உதித்ததும் கரும்பு மஞ்சக் கொம்பு வைத்து படைத்தோம்.
அதேப்போல் இந்த முறையும் செய்ய வேண்டி அம்மாவிடம் கேட்டேன்.
“புள்ளத்தாச்சி ஆசைப்பட்றா மொட்டை மாடில பொங்கல் வெச்சிரலாம்” என்று அப்பாவும் கூற வீட்டை சுத்தம் செய்து வேண்டிய பொருட்களை வாங்கி வந்தார் அப்பா.
பொங்கல் வைக்க சில செங்கற்களை எடுத்து வந்து மேலே தயார் செய்து வைத்தார். விறகு குச்சிகளையும் கொட்டங்குச்சிகளையும் சேகரித்து கொண்டு வந்தார்.
இந்த முறை பொங்கலை தவலையில் வைக்கப் போவதாக அம்மா கூற தங்கை அமுதினி பாத்திரத்தை கழுவி சுத்தம் செய்து வைத்தாள்.
அம்மாவும் முந்தைய நாளே தேவையான பொருட்களை தயார் செய்து கொண்டார்.
வெல்லம் உடைத்து வைத்துக் கொண்டார். முந்திரி மற்றும் நெய்யை வாங்கி வந்தார். சுக்கு ஏலக்காயை இடித்து வைத்துக் கொண்டார்.
இடித்த மணம் வீடு முழுவதும் சூழ அப்பொழுதே எங்கள் வீட்டிற்கு பொங்கல் வந்துவிட்ட ஆனந்தம் பிறந்தது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை ஈடுபாட்டுடன் செய்வதில் தானே பண்டிகைகளின் உற்சாகம் நிறைந்து உள்ளது.
நானும் ஆதியும் கலர் பொடி வாங்கச் சென்றோம். இந்த நான்கு நாட்களும் தெரு முழுக்க கோலங்களால் நிரம்பி வழியும் நாமும் ஒரு கை பார்க்க வேண்டாமா!
பொதுவாக அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவது தான் நம் மரபு. இப்பொழுது இரவிலேயே கோலம் போட்டுவிட்டு உறங்கச் செல்கின்றனர்.
எங்களுக்கும் அதிகாலையில் எழுந்து பொங்கல் வைக்க வேண்டும் என்பதால் இரவிலேயே கோலம் போடத் தொடங்கினோம்.
எங்கள் தெருவிலேயே தான் தாத்தா வீடு சித்தப்பா வீடு எல்லாம் உள்ளன. சித்தி, தங்கைகளுடன் கோலம் போடுவது உற்சாகமாக இருக்கும்.
ஒன்பது மணிக்கு இரவு உணவு முடித்துவிட்டு வெளியே வந்தேன். ஓரிரு வீடுகளில் வாசல் தெளித்து கோலமிட தயாராக இருந்தனர்.
அமுதினி எங்கள் வாசலை பெருக்கி நீர் தெளித்தாள். அதற்குள் அம்மாவும் உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்.
“என்ன கோலம் போட்றதுனு போன்ல பாத்தியா அமுது”
“பாத்துருக்கேன் மா.. இரு மேலாவ வரஞ்சி பாத்து சொல்றேன்”
“கவி நீ வந்து பால் குடி.. பவுடர் கலக்கவா”
“வேணாம் மா”
“ப்ரோட்டீன் பவுடர் குடிக்கலன்னா மாமாட்ட சொல்லுவேன்டி” அம்மாவிற்கு பயந்து கொள்ளாத என்னை ஆதியின் பெயர் சொல்லி பயமுறுத்தினாள் அமுதினி
அதுவும் உண்மை தான், அவரின் குழந்தையின் நலத்திற்காக நான் பயந்து தானே ஆக வேண்டும்.
“நான் இன்னிக்கு நிறைய ப்ரோட்டீன் சாப்பாட்டுலேயே ஏத்திக்கிட்டேன் டி”
“அதெல்லாம் பேசாத.. கொஞ்சம் குடி”
“உங்களுக்கு அந்த பவுடர் குடிச்சா தான் நிம்மதி.. ம்மா ஒரு அரை டம்ளர் குடும்மா”
நான் குடித்து முடித்து தயாராகி வருவதற்குள் என்ன கோலம் போடப் போகிறோம் என்பதை முடிவு செய்து சால்க்பீஸில் வரைந்து வைத்திருந்தாள் அமுதினி.
மயில் அதன் தோகைக்குள் பொங்கல் பானையும் கரும்பும் வரைந்திருந்தாள். சின்ன கோலம் போல் தான் தெரிகிறது. ஆனால் இதற்கே வண்ணம் அடித்து முடிப்பதற்குள் வெகு நேரமாகிவிடும்.
இரண்டு சித்திகளும் தங்கைகளும் வெளியில் வந்தனர். ஏற்கனவே அலைபேசியில் வாழ்த்துச் சொல்லியிருந்தனர். என்னைப் பார்த்ததும் என்னிடம் விரைந்து வந்தனர்.
“கவியினியாள் எப்போ வந்த”
“ஒரு வாரம் ஆச்சு சித்தி”
“அம்மா சொன்னாங்க ஊருல தான் இருக்கேன்னு.. அம்மா வீட்டுக்கு எப்போ வந்த”
“காலைல வந்தேன் சித்தி”
“உடம்பு பரவாலையா.. எத்தனை மாசம் ஆச்சு”
“மூணு முடிஞ்சிருச்சு.. நாலாவது மாசம் நடந்துட்டு இருக்கு”
“பரவால்ல.. இனிமே நல்லா சாப்டணும்.. உடம்பே இன்னும் வரலையே”
“இனிமே தேத்திடலாம் சித்தி”
“வாந்திலாம் பரவாலையா”
“பரவால்ல.. அப்பப்ப தான் இருக்கு சித்தி”
“பனியா இருக்கு.. தலைக்கு துணி கட்டிக்கோ கவியினியாள்”
“சரிங்க சித்தி” அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக உள்ளே சென்று தலைக்குத் துணி கட்டிக் கொண்டு வந்தேன்.
அதற்குள் சித்தியும் கோலம் போடத் தொடங்கினார்.
சிறிது நேரம் எங்கள் கோலத்தில் வண்ணமடித்து விட்டு நானும் அமுதினியும் சித்தி கோலத்திற்கு வண்ணமடிக்கச் சென்றோம். மீதியை அம்மா பார்த்துக்கொண்டார்.
என்னால் வெகு நேரம் குனிந்து நிமிர்ந்து வண்ணம் அடிக்க முடியவில்லை. மண்டியிட்டும் பார்த்தேன்.
“என்னால முடில.. நான் வாக்கிங் போய்ட்டு வரேன்”
“முடிலனா போடாத.. போய் தூங்கு போ” சித்தியும் அம்மாவும் கூறினர்.
“அவ சும்மாவே ஓபி அடிப்பா.. இப்போ மாசமா வேற இருக்க.. செய்யவா போறா” நக்கலாக கூறினாள் அமுதினி. எல்லோரும் சிரித்தனர் நான் உட்பட.
“போடி.. போய் மொதல்ல நீ போட்ட கோலத்தை முடி” பதிலுக்குக் கூறிவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
நானும் சித்தி பெண்ணும் தெருவிலேயே நடந்தோம். இந்தத் தெரு இரண்டு நாட்கள் முன் இருண்டு இருந்தது. இந்நேரத்தில் வெளியே வருவதற்கே பயமாக இருக்கும். ஆனால் இன்று இவ்வளவு வண்ணமயமாக இருக்கிறதே. அதுதான் பண்டிகைகளின் மகிமை. அதை நாம் தொலைத்து விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
எல்லோர் வீட்டு கோலங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டே நடந்தேன். அப்பொழுது எங்கள் பின்னே ஒரு இருசக்கர வாகனம் வேகமாக வந்தது. திரும்பிப் பார்த்தேன் ஆதி தான் வந்தார். என் அருகே வந்து வண்டியை நிறுத்திவிட்டு கூறினார்.
“இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவி”
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings