இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வாழ்க்கை என்பது கொடராட்டினம் மாதிரின்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க… யாருடைய வாழ்க்கை எப்ப உச்சத்தை தொடும் யாரு கீழ விழுவாங்கன்னு நமக்கு தெரியவா செய்யும்? அது பிரம்ம ரகசியம் அல்லவா ?
குருவிக்கூடு மாதிரி சந்தோஷமாக இருந்த அந்த வீட்டின் மகிழ்ச்சி வாழ்க்கையில் விழுந்த இடியால் ஒரு நிமிடத்தில் காணாமல் போனது ..
விழுந்த இடி சும்மா விழவில்லை.. பார்வதியின் பொட்டையும் பூவையும் சேர்த்துக் கொண்டு போனது. ஆம் காலையில் வேலைக்குப் போன கதிரேசன் மாலை பிணமாக தான் வீடு வந்து சேர்ந்தான். வேகமாய் வந்த லாரி, அவன் பைக்கில் மோதி, அவனை இரத்த சகதியாய் விழுங்கிக் கொண்டது .
செய்தி கேட்டு பார்வதியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மற்றும் கதிரேசன் குடும்பத்தினர் என அனைவரும் வந்து சேர்ந்தனர்.
கதிரேசன் குடும்பத்தினர் நடந்த எல்லாவற்றிற்கும் காரணமாக பார்வதியை குற்றம் கூறினர்… கதிரேசன் அம்மா பார்வதியை சபிக்கத்தான் செய்தாள் ..வாயில் வந்தபடி தூற்றினாள்.. அவள் பேச்சை அங்கிருந்தவர்களாலேயே காது கொடுத்து கேட்க முடியவில்லை …இருந்தாலும் அந்த சாவு வீட்டில் அவளை தடுப்பார் யாரும் இல்லை. ஏற்கனவே அதிர்ந்து போயிருந்த பார்வதி, மாமியார் பேச்சை கேட்டதும் முழுக்கவே நொறுங்கிப் போனாள்..
“இவளோட துரதிர்ஷ்டம் தான் நல்லா இருந்த என் பிள்ளையை கொண்டு போயிடுச்சு..என் பிள்ளையை முழுசா முழுங்கிட்டா ..தாலிய கழட்டி உரியில வைக்கிறதுக்குன்னே எம்புள்ளைய கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பா போல .இவளுக்கு இன்னொரு புருஷன் கிடைப்பான்.. இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம் ..எனக்கு இன்னொரு பிள்ளை கிடைப்பானா?”
காதுகளை பொத்திக் கொண்டாள் பார்வதி .ஒன்றும் புரியாமல் அழுது கொண்டிருந்த மகள் சங்கீதாவை அணைத்துக் கொண்டாள்.
“அழாதடா உனக்கு நான் இருக்கேன்.. உன்ன நல்லபடியா வளர்த்து உங்கப்பா இருந்தா எப்படி உனக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பாரோ அப்படி நான் செய்வேன்” என்றாள் மனஉறுதியோடு..
“பாரு… துணிச்சல் புடிச்சவ எப்படி பேசுறா.. புருஷன பறி கொடுத்த துக்கம் கொஞ்சமாவது இருந்தா தானே?”
புழுதி வாரி இறைத்து தூத்திவிட்டு அவர்கள் வீட்டுக்கு கிளம்பிப் போய் விட்டார்கள் கதிரேசன் வீட்டு ஆட்கள்.
பார்வதியின் அப்பா, அம்மா.. மகளை அந்த தனி வீட்டில் இருக்க வேண்டாம் என்று தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .. நடந்த எல்லாவற்றையும் பார்த்து மிரண்டு போயிருந்த ஐந்து வயது மகள் சங்கீதாவை அணைத்துக் கொண்டாள் பார்வதி …
“அம்மா அப்பா இனிமே வரவே மாட்டாரா” என்று தேம்பிய மகளை
“அப்பா எங்கேயும் போகல நம்ம கூடத்தான் இருக்கார்.. என் வடிவத்தில் இருக்காரு..” என்று ஆறுதல் கூறி தேற்றினாள்.
மகளை தேற்றினாலும் எட்டு வருட இன்பமான மணவாழ்க்கை மனதில் மணக்க, அதிலிருந்து வெளியே வர முடியாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள் பார்வதி …
மகள் இன்னும் நொறுங்கிப் போவாள் என்று வெள்ளைச் சேலை உடுத்தாமல் இள நிற சேலையே அணிந்து கொண்டாள்.. இவ்வளவுதான் அவள் அண்ணி ஆனந்தி ஆடித் தீர்த்தாள்..
“புருஷனை வாரிக் கொடுத்துட்டு பவுசா கலர் சேலையக் கட்டிக்கிட்டிருக்கா.. இது எந்த ஊரு நியாயம்.. இதை கேக்குறதுக்கு யாரும் இல்லையா? இவ இப்படி இருக்க போய்தான் கதிரேசன் வீட்டு ஆட்கள் இவள தூத்திட்டுப் போனாங்க “
பார்வதி எந்த உணர்ச்சியையும் காண்பிக்காமல் கல்லாய் நின்றாள்.. “அண்ணி உங்களுக்கு மட்டுமில்ல இந்த வீட்ல இருக்குற எல்லாருக்குமே சொல்றேன் கேட்டுக்கோங்க …என் புருஷனோட நான் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு நிறைவானதுன்னு எனக்குத் தெரியும். அதை உங்களுக்கு நான் நிரூபிக்கனும்னு அவசியமில்ல.. நான் இப்படித்தான் இருப்பேன். என் கெட்டநேரம் என் புருஷன் போய் சேர்ந்துட்டார். அதுக்காக நான் முடங்கினா என் பொண்ணோட வாழ்க்கையும் முடங்கிடும் .. இனி என் வாழ்க்கை என் மகள் தான். அவளுக்கு எது பிடிக்குதோ அதை தான் செய்வேன். அவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்குவதுதான் என் குறிக்கோள் …அப்புறம் நான் பாதியில நிறுத்தின என்னோட படிப்ப தொடரப் போறேன் …” என்று ஆணித்தரமாக, அழுத்தமாகக் கூறினாள்.
சங்கீதா நடக்கும் எல்லாவற்றையும், மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்..ஆனந்தி வார்த்தைகளால் பார்வதியை குத்தி கிழித்தாள்.காதில் கேட்க முடியாத அளவு அசிங்கமாக பேசினாள். மருமகளை அடக்க முடியாமல் பார்வதியின் அப்பாவும், அம்மாவும் தவித்தனர். எதையும் பார்வதி சட்டை பண்ணவில்லை அடுத்து வந்த நாட்களில் தான் பாதியில் நிறுத்திய படிப்பை திரும்ப படிக்க ஆரம்பித்தாள்.
காலையில் காலேஜ் போய் விட்டு வந்து, சாயங்கால வகுப்பில் இந்தி படிக்க, இந்தி கிளாஸ் சேர்ந்த போது ..வீட்டில் பூகம்பமே வெடித்தது.
“தாலியறுத்தவ வீட்டோட முடங்கிக் கிடக்காம படிக்கிறேன், இந்தி கத்துக்குறேன்னு கூத்தடிக்கிறா.. இத தட்டிக் கேக்க இந்த வீட்ல யாருக்கும் துப்பில்ல பொம்பளைன்னா ஒரு அடக்க ஒடுக்கம் வேணாமா… இவ பெத்த மகளையும் பாட்டு கத்துக்க அனுப்புறா.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. இவளப் பாத்து இவ மகளும் கூத்தடிக்கப் போறா…”
மருமகள் பேசுவதை தாங்க முடியாத பார்வதியின் அம்மா, “ஏம்மா என் மகளே மனகஷ்டத்துல இருக்குறா, நீயும் சேர்ந்து அவளை இப்படி வார்த்தையாலேயே காயப்படுத்தறியே… நீ ஒரு பொண்ணு தானே.. இன்னொரு பொண்ணோட கஷ்டம் உனக்கு புரிய வேணாமா.. நம்மள விட்டா அவளுக்கு வேற யாரு ஆதரவு?”
“வேணாம் அத்த… அனாவசியமா உங்க மகளுக்கு பரிஞ்சு பேசாதீங்க.. உங்களுக்கும், மாமாவுக்கும் பெத்த கடமைன்னு சோறு போடுறோம்… இதுகளுக்கும் செலவு பண்ணனும்னு எங்களுக்கு என்ன தலையெழுத்தா ..எங்க பிள்ளைகளுக்கும் நல்லது கெட்டது செய்ய பணம் வேணாமா?”
அதன் பிறகு அண்ணியின் வாயை அடைக்க, வீட்டு வாடகைப் பணம், வயல் வரும்படியை அப்படியே அண்ணனிடம் கொடுத்து விடுவாள். பி.ஏ மற்றும் பி.எட் முடிக்கும் வரை அப்பா வீட்டிலேயே இருந்தாள்.
அத்தை, அம்மாவை வார்த்தைகளால் குத்தி கிழித்தது இன்னும் சங்கீதாவின் ஞாபகத்தில் இருந்தது. பார்வதி வாயை திறக்காமல், எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சங்கீதாவை வளர்ப்பதிலேயே கவனமாக இருந்தாள்.
பார்வதி பி.எட் முடித்ததும், ஒரு பள்ளியில் நல்ல வேலை கிடைத்தது. அதற்குள் சங்கீதாவும் கொஞ்சம் வளர்ந்து விட்டாள். நல்ல குரல் வளம் இருக்க, சங்கீதாவுக்கு பாட்டும் இயல்பாகவே நன்றாக வந்தது . தன் கணவனின் ஆசைப்படி மகள் தன் இனிய குரலில் பாடும்போது தன்னை மறந்து கணவன் நினைவில் மூழ்கிப் போவாள்.
சங்கீதாவுக்கு அப்பா ஞாபகம் வராமல் தானே அவளுக்கு ஒரு தந்தையாகவும் இருந்து எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டாள்.
பள்ளியில் ஆசிரியையாக வேலைக்குப் போக ஆரம்பித்த பார்வதி ஒரு நாள், அண்ணனிடம், “அண்ணா இத்தனை நாள் நீ உன் வீட்டில் வைச்சு என்னையும், சங்கீதாவையும் பாத்துகிட்ட.. அதுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். இப்ப அவளும் ஓரளவு வளர்ந்துட்டா.. நானும் வேலைக்குப் போறேன், என் சொந்தக் காலில் நிற்கிறேன் …அதனால நான் புருஷனோட வாழ்ந்த என் சொந்த வீட்டுக்குப் போறேன்..இனியும் நான் உங்களை கஷ்டப்படுத்த விரும்பல .என் வாழ்க்கைய நான் பாத்துக்குவேன்” என்று சொல்லிவிட்டு அப்பா, அம்மா எவ்வளவோ தடுத்தும் கேளாமல் தன் வீட்டிற்கு வந்தாள்.
சங்கீதா வளர வளர, அம்மாவின் மனஉறுதி அவளுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அம்மா மேல் மிகப்பெரிய மதிப்பை உண்டு பண்ணியது. யார் விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல் பார்வதி ஒரு இரும்பு பெண்ணாகவே மாறிப் போனாள்.
அத்துடன் நிற்காமல் எம்.ஏ. தபாலில் படித்து நல்ல மதிப்பெண் பெற்றாள்.அதனால் ஊரின் பெரிய பள்ளியில் நல்ல சம்பளத்தில் ஆசிரியர் வேலை கிடைக்க.. அந்தப் பள்ளியிலேயே சங்கீதாவையும் சேர்த்தாள்.
டீச்சர் வேலையுடன், மாலையில் இந்தி டியூஷன் வீட்டிலேயே எடுக்க ஆரம்பித்தாள். அப்பா, அம்மா அவ்வப்போது வந்து போனாலும் யார் உதவியும் எதிர்பார்க்காமல், சங்கீதாவை நன்றாக படிக்க வைத்து ஆளாக்கினாள்.
தன் கணவன் ஆசைப்படி அவளை சங்கீதமும் நன்றாக கற்றுக் கொள்ள செய்தாள். மேடை… கச்சேரி.. என்று போகவிட்டாலும், பள்ளி, கல்லூரி விழாக்களில் பாடும் அளவு திறமைசாலியாக இருந்தாள் சங்கீதா.
சங்கீதாவும் படிப்பை முடித்து ..வங்கியில் நல்ல வேலை கிடைக்க…வேலைக்குப் போக ஆரம்பித்தாள் . திருமண வயதை எட்ட …வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது…
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings