in ,

இட்லி கடை இந்திராணி (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

யிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுதாள், கண்ணாத்தா. சுப்பம்மாவுக்கோ, ஏன்டா இவளிடம் வந்து தகவலைச் சொன்னோம் என்பது போலாகிவிட்டது.

‘அண்ணன் மணிமாறனுக்கு பால் ஊத்திக்கிட்டு இருக்காங்களாம்… எப்போ வேணாலும் உசிரி பிரிஞ்சுடுமாம். ஆளு வரும்க்கா தகவல் சொல்ல…  ‘ இதுதான் அவள் சொன்ன தகவல்.

‘வேண்டாம்…வேண்டாம்னு அடியா அடிச்சிக்கிட்டேன்…கேட்டானா இந்த மனுஷன்… இப்போ நா எப்படி அவ வீட்டுலே போயி தாலியை அறுப்பேன்…’  தலையிலடித்துக் கொண்டு அழுதாள் கண்ணாத்தா.

மாடுகளுக்கு தொட்டியில் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த மருதை அந்கிருந்தே கோபத்துடன் கத்தினான். ‘ இந்தா… பேசாம கிடம்மா… போய்ச் சேரட்டும் அந்த ஆளு, நமக்கு செலவு மிச்சம்னு பேசாம கிடப்பியா… அதா உட்டுப்புட்டு தலையில அடிச்சிக்கிட்டு அழுவுறியே…’

சேதி சொல்ல வந்த சுப்பம்மா அவனை சமாதானப்படுத்த முயன்றாள்.

‘தம்பி அப்படியில்லைப்பா… ஊரறிய தாலி கட்டிய பெண்டாட்டி உங்க அம்மா. முச்சந்தியில வச்சு அவங்க தாலி அறுத்தே ஆகணும்.  அவர் பெத்த பையன் நீ. அவருக்கு கொள்ளி போட்டேயாகனும். உன் கடமை அது. அம்மா சொல்றமாதிரி தான் எனக்கும் இருக்கு,  அவ வீட்டுல போயி எப்படி கடைசிகாரியம் பண்றதுன்னு…’ என்றவள், ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு,  ‘ எனக்கென்னவோ,  உங்கப்பா உடம்பை இங்க கொண்டு வந்து வச்சி கடைசி காரியம் பண்றதுதான் நல்லதுன்னு படுதுப்பா… என்ன பண்ணலாம்னு யோசிப்பா… ’ என்றாள் மருதையைப் பார்த்து..

எரிச்சல் அடைந்த மருதை,  ‘ஏன் அத்தை… நீ வேறே… ஒரு வருஷமா ரெண்டு வருஷமா… பத்து வருஷமா அந்தாள் அவ ஊட்டுலேயேத்தானே கிடந்தாரு… அவ்ளோ மயக்கம் அந்தம்மா மேல… எத்தனை தடவை நான் போயி கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தேன்… எத்தனை தடவை எங்கம்மா போயி கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்துச்சு… மனுஷன் அசைஞ்சுக் குடுக்கலையே… இப்போ செத்துப் போனதுக்கப்புறம் இங்கே கொண்டு வந்து வச்சுக் கொண்டாடச் சொல்றியா… போ… போ…’ என்றபடி மாடுகளை இழுத்துக்கொண்டு தொழுவத்தை நோக்கி நடந்தான் அவன்.

திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தாள் சுப்பம்மா.  கண்ணாத்தாவோ வாசற்படியில் உட்கார்ந்து அழுவதும் மூக்கைச் சிந்துவதுமாக இருந்தாள்.

வீட்டுக்கு கிளம்பலாம் என்று எண்ணியபடி  மெல்ல எழுந்த சுப்பம்மா. ‘அக்கா… அழாம இருக்கா… உசிரை இழுத்துப் பிடிச்சு வைக்க யாரால முடியும்…?  இப்போவோ… சாயங்காலாமோ… முடிஞ்சுடும்… கடைசி காரியத்தையாவது நாம அலம்பலா பண்ண வேண்டாமா… பூந்தேர் கட்டி, வானவேடிக்கையோட காட்டுக்கு கொண்டுபோய் சேர்த்தா தானே நமக்கும் ஒரு கவுரவம், ஒரு மரியாதை… அதுவுமில்லாம அது நம்ம கடமையும் இல்லையா…? அக்கா, நீங்க எதற்கும், நம்ம மணியக்காரரைப் போயி ஒரு தடவை பாருங்கக்கா… அவர் ஏதாவது பண்ணுவாரு. எனக்கென்னமோ அண்ணன் உடம்பை இங்கே கொண்டு வந்து காரியத்தை பார்க்கறதுதான் சரியாயிருக்குமோன்னு மனசுல படுது. இல்லேனா பின்னால காலம்பூரா நாலு பேரு நாலுவிதமா பேசிக்கிட்டே இருப்பாங்கல்ல… நாம அதுக்கு வழிபண்ணி விடலாமா… நான் வர்றேன்க்கா… ’ என்றுவிட்டு வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்து போனாள் அவள்.

XXXXXXX

த்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் பிழைப்புத் தேடி வந்தவள்தான் அந்த இட்லிகடை இந்திராணி. பெரிய பெரிய சைஸ்களில் சுடச்சுட இட்லி சுட்டு விற்க ஆரம்பித்தாள்.

வீட்டில் எப்போதாவது இட்லி தோசை செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வெளியே தினமும் இட்லியும் தோசையும் சட்னி குருமாவுடன் வகைவகையாய் கிடைக்க ஆரம்பித்தவுடன் எல்லோரும் அவளது கடைக்கு ஓட ஆரம்பித்தார்கள். அதிலும் ஆண்பிள்ளைகள்தான் அதிகம். அதற்கு, அவளது முகமும், உடல்வாகும், கலரும் கூட ஒரு காரணமே.

முதலில் ஓலைக் குடிசை போட்டுக் கொண்டு முன்புறம் தாழ்வாரம் இறக்கி, கடை நடத்தியவள் நாளடைவில், புறம்போக்கில் ஒரு மண்சுவர் கட்டி, கூரை போட்டுக் கொண்டாள்.  வீட்டுக்கு முன்னாடியே கடையையும் போட்டுகொண்டாள்.

எப்போதாவது ஆசைப்பட்டு அவளது கடையிலிருந்து இட்லி வாங்கி வரச் சொல்லி கண்ணாத்தாவும் கூட சாப்பிட்டிருக்கிறாள்… நாம் சமைத்து சாப்பிடுவதை விட அடுத்தவர் சமைத்துப் போட்டால் ருசியாகத்தானே இருக்கும்.  

மனைவிக்காக இட்லி வாங்கிவர போன மணிமாறன் காலப்போக்கில் தன்னிஷ்டத்திற்கு அதுவும் அடிக்கடியும் போக ஆரம்பித்தார். போதாக் குறைக்கு இட்லிகடைக்குப் பக்கத்திலேயே ஒரு சாராயக் கடையும் வந்து சேர, இந்திராணி கடையில் கூட்டம் அலைமோதியது. மருதை கூட ஒருநாள் அவனது அப்பாவை அங்கே வைத்து பார்த்துவிட்டு வந்து அம்மாவிடம் வருத்தப்பட்டுச் சொன்னான். 

‘அம்மா, அப்பனை அந்த இட்லி கடைக்காரி வீட்டில பார்த்தேன்மா.  சாராயத்தைப் போட்டுக்கிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டு இருந்தாரு… இனிமே நீ அவரை இட்லி வாங்கிட்டு வா, சட்னி வாங்கிட்டு வான்னு அங்கேயெல்லாம் அனுப்பாதே… அவளும் அவ மூஞ்சியும். பார்க்கும்போதே பத்திக்கிட்டு வருது… ரொம்ப ஆசைப் பட்டா வீட்டுல அரிசி ஊறவச்சி ஆட்டி சுட்டுத் தின்னு… இல்லே உனக்கு புருஷன் இல்லேன்னு ஆகிடும் சொல்லிப்புட்டேன்… ’

போகப் போக மணிமாறன் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்தார். பிறகு வாரத்துக்கு ஒருநாள் மட்டும் வந்தார். கேள்வி கேட்கும்போது ஏதேதோ உளறினார்.  அவரின் பொய்த்தனத்தை புரிந்து கொண்டாள் கண்ணாத்தா.

முதலில் கெஞ்சினாள். ‘ பாருங்க…விடலைப் பையன் வீட்டில இருக்கான்.  உங்க வயசுக்கு இதெல்லாம் நல்லாயில்லை. பின்னால நமக்கு யார் பொண்ணு கொடுப்பா. பேசாம இங்கேயே விழுந்து கிடங்க… நான் இட்லி தோசைக்கு ஆசைப்பட்டதுதான் தப்பா போச்சு போல இருக்கு… இனிமே அங்கே போகாதீங்க… நானே வகை வகையா சுட்டுப் போடறேன்…’

அப்புறம் ஒரு வாரம் பத்து நாள் தங்கிவிட்டு ஒருநாள் வந்தார்.  இப்போது கண்ணாத்தா மிஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.

‘இனிமே நீ அங்கே போயி தங்குனா… நானும் என் பையனும் தூக்கு மாட்டிக்கிட்டு செத்துப் போயிடுவோம்…. சொல்லிப்புட்டேன்… அப்புறம் என் பொண்டாட்டி, புள்ளைன்னு சொந்தம் கொண்டாடிக்கிட்டு இங்கே வரக்கூடாது. ஊரு ஜனங்க எங்களை அனாதை பொணமா எரிச்சிட்டுப் போகட்டும்…’

சத்தம் போட்டு கத்திகொண்டே கண்ணீரையும் சிந்தினாள், மூக்கையும் சிந்தினாள் அவள். அவருக்கோ மதுபோதையும் மாதுபோதையும் சேர்ந்து  தலைக்குள் ஏறிப்போய் அவள் சொன்னது எதுவும் காதுகளுக்குள் ஏறவில்லை. அவரும் வாய் திறக்கவேயில்லை.

பின்னால் முழுதாக அங்கேயே தங்கிவிட்டது தனிக்கதை.

கண்ணாத்தா ஒரு முடிவுடன் அந்த வீட்டுக்கு தானாகவே போனாள். கட்டிலில் போதையில் படுத்திருந்தார் அவர். அருகில் போய் கெஞ்சிப் பார்த்தாள், கொஞ்சிப் பார்த்தாள். முடியாதபோது  மிஞ்சியும் பார்த்தாள். ஒன்றும் நடக்கவில்லை. அங்கே இருந்தவர்களில் சிலர் வெளிப்படவே சிரித்துக் கொண்டனர். அவமானமாக இருந்தது கண்ணாத்தாவுக்கு.

பிறகு மருதையும் போனான். அவனுக்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.  இரண்டு மூன்று முறை இருவரும் மாறி மாறிப் போய் பார்த்தார்கள்.  ஒரு பிரயோஜனமும் இல்லை.

ஊர் ஜனங்கள் வந்து அவரைப்பற்றி சொல்லும்போதெல்லாம் கோபம் வந்தது, அழுகை வந்தது.  பின்னால் வெறுப்புதான் வந்தது கண்ணாத்தாவுக்கு. 

வெறுப்புத்தட்ட ஆரம்பித்ததும், ‘அந்தாளைப் பத்தி என்கிட்டே வந்து இனிமே யாரும் எதுவும்  சொல்ல வேண்டாம்… எங்க வீட்டுல நாங்க ரெண்டு பேருதான்… நான் என் புள்ளை… மத்தவங்க எல்லாம் செத்துப் போய்ட்டாங்க….’ என்று அழுதாள் கண்ணாத்தா.

அந்த நேரம் பார்த்து, சைக்கிளில் வேகவேகமாக பறந்துவந்த ஒரு ஆள், இறங்கியும் இறங்காததுமாக மூச்சிறைத்தபடி, ‘அம்மா… அம்மா…  ஐய்யா செத்துப் போய்ட்டாருங்க… அக்கா உங்களாண்ட சொல்லிட்டு வரச் சொல்லிச்சு… ’ என்றான்.

செய்தி கேட்டவுடன் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழவாரம்பித்து விட்டாள், கண்ணாத்தா. இழவு சொல்ல வந்த ஆள் செய்வதறியாது திகைத்துப் போய் நின்றுகொண்டிருந்தான்.

ஓடிவந்த மருதை அவளை சமாதானப் படுத்த முயன்றான்.  மகனையும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதாள். சிலநிமிடங்களில் அழுது முடித்து முகத்தைத் துடைத்துக் கொண்டவள் மகனைப்பார்த்து, ‘ரெங்கனுக்கு பணத்தைக் கொடு… ‘ என்றாள். இழவு சொல்லி வருபவனுக்கு பணம் கொடுப்பது நடைமுறை.

வேஷ்டியை உயர்த்தி உள் டிரவுஷரில் இருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து ரெங்கனிடம் கொடுத்துவிட்டு, ‘நீ, சேதி சொல்லியாச்சுனு மட்டும் போயி சொல்லு போ… மத்தபடி வாய் திறக்க வேண்டாம்… ‘ என்று சொல்லி அவனை அனுப்பினான்.

கண்ணாத்தாள் தலையை அள்ளி முடிந்து கொண்டு மடமடவென்று நடக்க ஆரம்பித்தாள். நேரே மணியக்காரர் வீட்டில் போய்தான் நின்றாள்.

‘அண்ணே…உடனே பொணத்தை எங்க வீட்டுக்கு கொண்டு வந்து போடணும்… அதுக்கு ஒரு வழி சொல்லுங்க… ’ என்றாள்.

அவருக்கும் இவள் வீட்டு கதை தெரியும்.  தனது பண்ணையில் வேலை செய்யும் ஒரு ஆளைவிட்டு, இந்திராணியை போய் அழைத்து வரச் சொன்னார்… கொஞ்ச நேரத்தில் அவளும் வந்து சேர்ந்தாள்.  மருதையும் வந்து சேர்ந்தான். கொஞ்ச நேரத்தில் மெல்ல மெல்ல கூட்டமும் கூடியது.

‘பாரம்மா… இத்தனை காலமா மணிமாறன் உன்னையே தஞ்சம்னு கிடந்தான்… என்ன காரணமோ கன்றாவியோ… இப்போ அதையெல்லாம் விட்டுடுவோம்… இப்போ விஷயம் என்னன்னா… இப்போ அவன் செத்துப்போய்ட்டான்… இப்போ உடம்பு உனக்குச் சொந்தமில்லை. அது ஊரறிய தாலி கட்டின அவன் பொண்டாட்டி இதோ கண்ணாத்தாவுக்குக்குத் தான் சொந்தம். அவன் பெத்த மகனுக்குத்தான் சொந்தம்.   இப்போ ஆளுங்க வருவாங்க… உடம்பை தூக்கிட்டு வந்துடுவாங்க… நீ எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணாம் ஒதுங்கிக்கனும்… அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்… ’ என்றார் இந்திராணியைப் பார்த்து.

அவர் சொல்லிமுடிக்கும் வரை பொறுமையாய் கேட்டுக்கொண்டிருந்த இந்திராணி உடனே மறுத்து அழுகையும் ஆட்டமுமாய் ஆடினாள்.  

‘ஐயா… உங்கமேல நான் மாரியாதை வச்சிருக்கேன்…அதே போல அவரு மேலயும் என் உசிரையே வச்சிருந்தேன்… நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டு புள்ளைக்குட்டி பெத்துக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பேன்… ஆனா அவரு என்னை அப்படி செஞ்சுக்க விடலை. விரட்டி விரட்டி என்னை தனக்கு சொந்தமாக்கிக்கிட்டார்… எனக்கும் புடிச்சிருந்தது, இடம் கொடுத்துட்டேன். மொத்தத்துல நான் அவருக்கு பொண்டாட்டியாத்தான் நடந்துக்கிட்டேன். தாலி கட்டாத பொண்டாட்டியா…  அதனால, அவர் சொத்துல எனக்கும் பங்கு வேணும்… பங்கைக் கொடுத்துட்டு பொணத்தை எடுத்துட்டுப் போகச் சொல்லுங்க…’

தலையை அள்ளி முடிந்து கொண்டு வெகுண்டெழுந்தாள் கண்ணாத்தா.  

‘என்னாடி உரிமைப் போட்டு அடிக்குது உனக்கு… அவர் எனக்குத்தான் ஊர் அறியத் தாலி கட்டினார்… உனக்கில்லை… உன்னை வப்பாட்டியா வச்சிருந்தார் அவ்ளோதான்… ’ என்றபடி ஓடிப்போய் இந்திராணியைப் பிடித்து தள்ளிவிட்டாள்.

ஓடிப் போய் கண்ணாத்தாவை இழுத்துப் பிடித்துக் கொண்டார் மணியக்காரர். அங்கே கூடியிருந்த மற்றவர்களும் சத்தம் போட்டனர்.

‘பாரம்மா…பெரியவர் பேசிக்கிட்டிருக்காரில்ல. அவதான் பைத்தியக்காரி மாதிரி பெசரான்னா நீயும் அவளுக்கு சரிக்குச் சமமா சண்டைக்கு போகலாமா… பேசிப் பைசல் பண்ணுவாங்க… கொஞ்சம் பொறுமையா உட்கார்… ஆவேசப் படாதே… ’ என்றனர்.

துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்ட மணியக்காரர்… சத்தம் போட்டார். ’ பாரம்மா… பச்சையா சொல்லனும்னா நீ அவருக்கு வைப்பாட்டி… அவ்ளோதான்… நீ கோர்டுக்கே போனாலும் உனக்கு ஒன்னும் கிடைக்காது… ரெண்டாவது நீ கட்டியிருக்கற வீடு பொறம்போக்குல இருக்கு… நான் பஞ்சாயத்துல புகார் கொடுத்தேன்னா உடனே வந்து புல்டோஸரை விட்டு இடிச்சுத் தள்ளிட்டு போய்டுவாங்க… நீ அப்புறம் நடுரோட்டுக்கு வந்துடுவே.  மணியக்காரன் நான் சொல்றேன், மரியாதையா ஒதுங்கிக்க… அவ்வளவு தான் சொல்லுவேன்… பொட்டச்சியா போயிட்டே… அதனால பொழைச்சு போ… நீ அங்கேயே தங்கிக்க, இட்லி கடை நடத்திக்க… ஆனா பொணம் இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணாத்தா வூட்டுக்கு வந்து சேரணும்… சொல்லிப்புட்டேன்… நீமட்டும் குறுக்கால வந்தே… அப்புறம் என்னாவாகும்னு நான் சொலமாட்டேன்…’

xxxxxx

மாட்டு வண்டியில் மணிமாறனின் உடல் கண்ணாத்தாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தது.

இந்திராணிடம், ‘சாவு வீட்டுக்கு வரக்கூடாது.  மீறினால் போலீஸ் வரும் ‘ என்றும் மிரட்டி வைத்திருந்தார்கள். அவள் அழுதபடி எல்லைப்பாறையில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவளுக்குத் தெரியும், அந்தப் பாறை வழியாகத்தான் பிணம் சுடுகாட்டுக்கு போகுமென்ன்று.   

ஊருக்குள் டாக்சி வைத்து மைக்கில் செய்தி சொன்னார்கள். ஊரே படையெடுத்து வந்தது. நிற்க இடமில்லை. பறை அடித்தார்கள். சங்கு ஊதினார்கள். பாடை கட்டினார்கள். மணிமாறனைக் குளிப்பாட்டி புது வேஷ்டி சட்டை போட்டு தலைப்பாகை கட்டி பெஞ்சில் உட்கார வைத்தார்கள்.

மருதைக்கு இயற்கை உபாதை வந்து வீட்டுக்குப் பின்பக்கம் போனான். அங்கே, வைக்கோல் போர் ஓரமாய் குத்துக்காலிட்டு குனிந்து உட்கார்ந்திருந்த இந்திராணியைப் பார்த்து திகைத்தான்.  அவள் குலுங்கி குலுங்கி அழுவதும் புரிந்தது.

எல்லைப் பாறையில் உட்கார்ந்திருக்கிறாள் என்றுதான் முதலில் அவனுக்கு சேதி சொல்லியிருந்தார்கள். பாடை கொண்டுபோகிற வழியில் ஆர்ப்பாட்டம் எதுவும் பண்ணினாலும் பண்ணுவாள் என்று பயம் வேறு உண்டாக்கியிருந்தார்கள். ஆனால் அவளோ இப்போது எப்படியோ வீட்டுக்குப் பின்பக்கம் வந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.

யோசித்தான். மனது கனத்து. கண்கள் கசிந்தன. அப்படியே திரும்பிவிட்டான். வீட்டுக்குள் போனான். வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன் நேரே மணியக்காரரிடம் போனான்.

‘மாமோவ்… சட்டப்படி பார்த்தா அந்தம்மாவுக்கு எங்க சொத்து மேல எந்த உரிமையும் கிடையாதுதான்… ஆனாலும் என் மனசு கேட்கலை… ஒரு மனிதாபிமான அடிப்படைல…’ என்று சொல்லிக்கொண்டே தன் வேஷ்டி மடிப்பிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தான். மணியக்காரரும் ஊர்க்காரர்களும் திகைப்புடனும் ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

‘அந்தம்மாவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்துடலாம்னு இருக்கேன். எங்கப்பா இதுவரை அந்தம்மாகிட்ட எவ்வளவு பணத்தைக் கொண்டு போய் கொட்டினாரோ தெரியாது.. ஆனாலும் அவர் சாகாம இருந்திருந்தா இன்னும் எவ்வளவோ கொட்டியிருப்பார். அதனால… ’

சொல்லிக்கொண்டே பொட்டலத்தை அவிழ்த்தான். ‘இதுல ஒரு லட்சம் இருக்கு. அந்தம்மாக்கிட்டே கொடுத்துடுங்க… பொழைச்சுப் போகட்டும்… ஆனா இதுக்கப்புறம் எங்ககிட்டே சொத்து கித்துன்னு எதையும் கேட்டு வரக்கூடாது. இனிமே அவங்க யாரோ… நாங்க யாரோ… அவங்களோடது தப்பான உறவேயானாலும், எல்லாம் எங்க அப்பாவோடவே போயிடுச்சு… அவ்வளவுதான்… வெட்டி விட்டுடுங்க….’

ஊரே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.  ஆள் ஆளுக்கு முணுமுணுத்துக் கொண்டார்கள். சிலர், ‘மருதைக்கு மனசு பெருசப்பா… ‘ என்றனர். மணியக்காரர் ஒரு ஆளை விட்டு இந்திராணியை அழைத்து வரச் சொன்னார்.

ஓடி வந்த அவள் மூக்கைச் சிந்திக்கொண்டு நின்றாள். ஊர் ஜனங்கள் பார்த்துக் கொண்டிருக்க, மணியக்காரர் விஷயத்தைச் சொன்னார். அழ ஆரம்பித்தாள். அழட்டும் என்று எல்லோரும் அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பிறகு திடீரென்று சேலைத்தலைப்பை விரித்து, ‘போடுங்கய்யா…’  என்றாள். பணத்தை வாங்கி அப்படியே எடுத்து இடுப்பில் செருகிகொண்டவள், அவரையும் ஊர்ஜனங்களையும் பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டாள். கண்களைத் துடைத்துக் கொண்டு மடமடவென திரும்பினாள்.

அக்னிச்சட்டியுடன் மருதை முன்னே போக, கண்ணாத்தா அழுது ஆர்ப்பரித்து பின்தொடர மணிமாறனின் இறுதி யாத்திரை புறப்பட்டது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 7) – சுஶ்ரீ

    புது யுக்தி (சிறுகதை) – அர்ஜுனன்.S