in ,

பைந்தமிழ் (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பைந்தமிழுக்கு இந்த ஆடி வந்தால் முப்பது முடியப் போகிறது. ஆனால் எத்தனையோ வரன்கள் வந்து பார்த்துவிட்டு போயும் ஒன்றும் சரியாக அமையவில்லை.

கலர் குறைவு, அல்லது வயது அதிகம் அல்லது உயரம் அதிகம் என்று எதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக்கழித்து விடுகிறார்கள்.

முன்பெல்லாம் அவள், ‘ நாம் ஏன் கருப்பாக பிறந்தோம்… ‘ என்று தன்னையே வெறுத்ததுண்டு. நாளாக நாளாக சகிப்புத் தன்மை தானாக வந்து  ஒட்டிக் கொண்டது.

பைந்தமிழுக்கு ஆறு வயது இருக்கும்போதே அவளது அம்மா இறந்து போனாள். அதற்குப் பிறகு கண்ணுசாமிதான் அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கினார்.  ஆரம்பத்தில் அவருக்கு எந்த பயமும் தெரியவில்ல. ஆனால் அவர்கள் பெரிய மனுஷிகளாக ஆக ஆக அவரை பயம் வந்து பற்றிக்கொண்டது,  இவர்கள் எல்லோரையும் எப்படி நல்லபடியாக கரையேற்றப் போகிறோமோ என்று.

எல்லோருக்கும் மூத்தவள் பைந்தமிழ். பி.எஸ்.ஸி முடித்திருக்கிறாள். கருப்பு கலர். நல்ல உயரம். அப்பா மாதிரி. வயதோ முப்பத்திரெண்டு முடிந்து விட்டது.

இரண்டாமவள் செந்தமிழ். பி காம் முடித்திருக்கிறாள். மாநிறம். ஆனால் கொஞ்சம் குட்டை. அம்மா மாதிரி. வயதும் முப்பது தொடப் போகிறாள்.

கடைக் குட்டி முத்தமிழ். பி.ஏ. படித்திருக்கிறாள். மாநிறம், அவளது அம்மா வழி பாட்டி மாதிரி.  இருபத்தெட்டு வயது ஆகிவிட்டது.

எல்லோருக்கும் மூத்தவள் என்பதால் பைந்தமிழ் தன் தங்கைகளை அக்காவுக்கு அக்காவாக, அம்மாவுக்கு அம்மாவாக பார்த்துக் கொண்டாள்.  அதன் காரணாமாகவே  கண்ணுசாமிக்கு  மூத்த மகள் மேல் கொஞ்சம் கூடுதல் பாசம் உண்டு. படித்த, வேலையில் உள்ள ஒரு  ஒரு வரன் மட்டும் அமைந்துவிட்டால் பைந்தமிழை கல்யாணம் செய்து கொடுத்து விடலாம் என்று பார்க்கிறார். தரகர் தங்கசாமியும் சலிக்காமல் ஜாதகங்களைக் கொண்டு வந்து காட்டிக்கொண்டேதான் இருக்கிறார். ஆனால் எல்லாம் இழுத்துக்கொண்டே போகிறது.

xxxxxxxxxx

முதலில் ஒரு வரன் கொண்டு வந்தார் தரகர். வரனுக்கு வயது முப்பத்து நான்கு. ஒரு ப்ரைவேட் கம்பெனியில் உத்தியோகம். முப்பதினாயிரம் சம்பளம். அப்பா, அம்மா, ஒரு தம்பி. மற்றபடி பிக்கல் பிடுங்கல் எதுவுமில்லை. மாப்பிள்ளையும் கருப்பு கலர்தான் என்பதால் கலர் ஒரு பிரச்சினையாக இருக்காது என்று சொல்லியிருந்தார் தரகர்.  

ஆனால் பெண்ணைப் பார்த்துவிட்டுப் போய், இரண்டாவது பெண்ணைக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி அனுப்பியிருந்தார்கள் அவர்கள். சரியான கோபம் கண்ணுசாமிக்கு.  அதனால், அடுத்த தடவை யாராவது பெண்பார்க்க வரும்போது, செந்தமிழை பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது என்று தனக்குள் நினைத்துக் கொண்டார்.

அதற்கப்புறம் வந்த மாப்பிள்ளையோ, ‘ மாப்பிள்ளையை விட பெண் கொஞ்சம் உயரமானவள், கலரும் கொஞ்சம் குறைவுதான்… ‘ என்று சொல்லி விட்டிருந்தார்கள்.

இப்படியே ஏழெட்டு வரன்கள் தள்ளி தள்ளி போய்க்கொண்டே இருந்தன. பொறுத்துப் பொறுத்து பார்த்த பைந்தமிழ், தனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம், தங்கைகளுக்கு முதலில் கல்யாணம் செய்து வைத்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம், என்னால் அவர்களது வாழக்கை வீணாவதை நான் விரும்பவில்லை என்று சொல்லி விட்டாள். கண்ணுசாமிக்கு அவள் சொன்னதை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை, மறுத்துப் பேசவும் முடியவில்லை. காரணம் மற்ற பெண்களுக்குமே கல்யாண வயது தாண்டிக்கொண்டிருக்கிறதே.

ஆனாலும், மூத்தவள் இருக்க இளையவள்களுக்கு கல்யாணம் செய்வது சரியாக இருக்குமா என்று யோசித்தபடி பைந்தமிழுக்கு ரொம்பவும் தீவிரமாய் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். கொஞ்சம் முன்னுக்குப் பின் இருந்தாலும் பார்க்கலாம் என்றுதான் பார்த்தார், அப்புறமும் எதுவும் சரியாக அமையவேயில்லை.

கடைசியில் பைந்தமிழ் சொன்னபடியே செந்தமிழுக்கும் முத்தமிழுக்கும்  மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார். சொல்லிவைத்தார்போல, மடமடவென ஏழெட்டு மாதங்களில் செந்தமிழுக்கும் முத்தமிழுக்கும் கல்யாணம் முடிந்தே போனது.

xxxxxxxxxxxxx

அடுத்து ஆறேழு மாதங்கள் தரகரைப் பிடிக்க முடியவில்லை. எங்கே போனார், என்ன ஆனார் என்றும் புரியவில்லை. திடீரென்று ஒருநாள் டாக்ஸியில் வந்து இறங்கினார் தரகர் தமிழரசன். தான் ஒரு டாக்ஸி வாங்கியிருப்பதாயும் அது நன்றாக ஓடிக்க கொண்டிருப்பதாயும் சொன்னார். வெளியே போய் தன் டாக்ஸியையும் காண்பித்தார் அவர்.

ஏற்கனவே அவர் ஒரு பங்களாவில் கார் டிரைவராக இருந்து கொண்டேதான் தரகு வேலையும் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். அவர்கள் திடீரென்று அமெரிக்காவில் இருக்கும் தங்களது மகனுடன் போய் சேர்ந்துவிட்டதால் டிரைவர் வேலை பறிபோய் இப்போது சொந்தக் கார் வாங்கி டாக்ஷியாக ஒட்ட ஆரம்பித்திருக்கிறார். 

‘ சந்தோஷம் தமிழரசன், நல்லாயிருங்க… ’ என்று வாழ்த்தினார் கண்ணுசாமி.

அன்றே மூன்று ஜாதகங்களையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார் அவர். எல்லோருக்குமே வயது நாற்பதுக்கு சமீபமாக இருந்தது. அதில் இரண்டு பேர் சொந்தத் தொழில் பண்ணுகிறவர்கள். பார்த்த மாத்திரத்திலேயே வேண்டாம் என்று விட்டார் கண்ணுசாமி.  

தனியார் வேலையாகவே இருந்தாலும் மாதம் முடியும்போது கையில் சுளையாய் சம்பளம் வந்துவிடுமே என்பது அவர் கணக்கு. அத்துடன் பைந்தமிழுக்கும் முப்பத்து மூன்று தானே ஆகிறது. முப்பத்தைந்து முப்பத்தாறு வயதில் வரன் கொண்டு வரக்கூடாதா என்று அவரை செல்லமாக கடிந்துகொண்டார் அவர்.

xxxxxxxxxxxxx

ஒரு நாள் தயங்கித் தயங்கி அப்பாவிடம் வந்தாள் தங்கப்பொன்னு.

‘ அப்பா, எனக்கும் முப்பத்து மூணு முடிஞ்சு முப்பத்திநாலு ஆரம்பிக்கப் போவுது. நீங்க முப்பத்தாறு வயசுல மாப்பிள்ளை தேடறதெல்லாம் நடக்காத காரியம்பா. அதே மாதிரி வேலையில இருக்கற மாதிரி பையனாத்தான் வேணும்னு ஏன் பார்க்கறீங்க… சொந்தமா பிசினெஸ் பன்றவங்கலாம் கல்யாணமே பண்ணிக்கக் கூடாதா. தமிழரசன் அங்கிளை பாருங்க, டிரைவர் வேலை போயிடுச்சேன்னு சோர்ந்து போயிட்டாரா என்ன, உடனே சொந்த டாக்ஸி வாங்கி ஓட்டலை…? ‘ என்றாள்.

சட்டென எங்கோ பொறி தட்டினமாதிரி இருந்தது கண்ணுசாமிக்கு.  தமிழரசன் நான்கு வருடங்களாக பழகுகிறார். எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லை. முப்பத்தேழு வயதாகிறது அவருக்கு. இன்னும் கல்யாணமும் பண்ணிக்கொள்ளவில்லை. டாக்ஷி ஒட்டிக் கொண்டு சொந்த காலில் நிற்கிறார். தரகு வேலையையும் விடாமல் பார்க்கிறார்…  யோசித்தபடி மகளை உற்றுப்பார்த்தார்.

பைந்தமிழ் தெளிவான குரலில் சொன்னாள், ‘ ஆமாப்பா… எனக்கும் அவரை பிடித்திருக்கிறது. அவரும் என்கிட்டே அன்பாத்தான் பழகறார்.  அவர்கிட்டே பேசிப் பாருங்களேன்… அவர் மனசுல அப்படி ஒரு அபிப்பிராயம் இருந்தாலும் இருக்கலாம்… யார் கண்டது… ‘ என்றாள்.

யோசித்தார் கண்ணுசாமி. புகைப்பழக்கம் கிடையாது, குடிப்பழக்கம், பாக்கு வெத்திலை போடுவதில்லை. வாய் சுத்தம், கை சுத்தம்… யோசித்துப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவரை வீட்டிற்கே அழைத்தார்.

‘தமிழரசன், டாக்சிக்கு சொந்தக் காரராகிட்டீங்க.. வருமானத்துக்கும் ஒன்னும் குறைவில்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையில செட்டில் ஆகிவிட வேண்டியதுதானே. ஏன் இன்னும் தனிமரமாவே நிற்கிறீங்க… ‘ என்று பொடிவைத்து பேசினார் கண்ணுசாமி.

சிரித்தார் தமிழரசன். ‘ எனக்கும் ஆசைத்தான். ஆனா வயசு முப்பத்தெட்டு தாண்டிடுச்சே… இனிமே யார் பொண்ணு தருவா…  ‘ என்றார்.

‘ ஏன்… நான் தாரேன்…. ‘ என்றார் கண்ணுசாமி.

பைந்தமிழின் கல்யாணம் இன்று காலையில்தான் நடந்து முடிந்தது.

எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஏனிந்த கொலை வெறி (பகுதி 6) – சுஶ்ரீ

    தாயல்ல சேய் நீ ❤ (அத்தியாயம் 1) – தி. வள்ளி, திருநெல்வேலி