2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“அக்கா, எனக்கு ஐயாயிரம் ரூபாய் வேண்டும், இப்போதே வேண்டும்” என்றான் கௌதம் வற்புறுத்தலுடன்.
“டேய் நான் என்ன வங்கியா? திடீரென்று ஐந்தாயிரம் வேண்டுமென்றால் என்னிடம் ஏது?“ என்றாள் விஜயா.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது, இப்போதே வேண்டும்” என்று சின்னக் குழந்தை போல் அடம் பிடித்தான்.
“நீ எதற்குப் பணம் கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ வாங்கும் விஸ்கி பாட்டிலிற்கு எல்லாம் நான் பணம் தர மாட்டேன் போடா” என்றாள் விஜயா வெறுப்புடன்.
“அக்கா, இந்த வீட்டில் உன்னிடம் மட்டும் தான் அம்மாவிற்கு அடுத்த படி பேசுகிறேன். நீயும் என்னை வெறுத்தால் நான் என்ன செய்வேன்?” என்றான் கோபமாக.
மீண்டும் மீண்டும் அவளிடம் கெஞ்சினான். அவன் படும் கஷ்டம் விஜயாவால் தாளமுடியவில்லை. வேறு வழியில்லாமல் பீரோவைத் திறந்து ஐந்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தாள்.
“நீ நல்ல விஷயத்திற்கு கேட்டால் பணம் தரலாம். இப்படிக் கெட்டப் பழக்கத்திற்கு பணம் கொடுத்தால், நானே உன்னைக் கெடுப்பதாக என் மனசாட்சி உறுத்துகிறது” என்றாள்.
பணத்தை வாங்கிக் கொண்டு கல்பனாவை ஒரு பார்வை பார்த்து, “இது யாரக்கா, புது கிளார்க்கா?” என்றவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் விசில் அடித்துக் கொண்டு உள்ளே போய் விட்டான்.
கல்பனா வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில், அந்த வீட்டில் உள்ள எல்லோரையும் நன்கு புரிந்து கொண்டாள் கல்பனா.
சத்யாவின் அம்மா, மஞ்சளும், குங்குமமாய், பட்டுப்புடவையும், வைரத்தோடுமாய், சிரித்த முகத்துடன் மகாலட்சுமி போல் இருந்தாள். அவளைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போல் இருந்தது, அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
ஒரு நாள் சத்யா, அவள் அப்பா அட்வகேட் சந்துருவை அறிமுகப்படுத்தினாள். அவர் ஆறடி உயரத்தில் மிலிட்டரி ஆபீசர் போல் கம்பீரமாக இருந்தார்.
“கிரிமினல்களிடமிருந்தே கொள்ளையடிக்கும் கிரிமினல் லாயர்” என்றாள் சத்யா.
மகள் பேச்சை ரசித்த தந்தை ‘கலகல’வென்று சிரித்தார். கல்பனாவிடமும் மிகப் பிரியமாகப் பேசினார். ஆனால் அவர் பேச்சும் நடத்தையும் மற்றவர்களை ஒரு அடி தள்ளி வைத்தது.
அவளுடைய பெரிய அண்ணா கௌசிக்கையும், அவன் மனைவி கீதாவையும் அறிமுகப்படுத்தினாள். அவர்கள் சத்யாவை மதிக்கவேயில்லை. அவளுடைய அண்ணி போகிற போக்கில் கல்பனாவைப் பார்த்து ஏளனமாக ஒரு புன்னகை செய்து விட்டுப் போனாள்.
“என் சின்ன அண்ணாவைத் தவிர மற்ற எல்லோரையும் பார்த்து விட்டாய் அல்லவா? எல்லோரைப் பற்றியும் இரண்டு வரிகளில் விவரி” என்றாள் சத்யா கலகலவென்று சிரித்துக் கொண்டு.
“உன் சின்ன அண்ணாவைக் கூட ஒரு நாள் பார்த்தேன். அவர் உடையெல்லாம் பார்க்க ஒரு டாக்டர் போல் இருக்கிறார், ஆனால் பிஹேவியர் சரியாக இல்லையே” என்று இழுத்த கல்பனா, “எனக்கு அதைப் பற்றிக் கேட்க எந்த உரிமையும் இல்லை. இருந்தாலும் நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கும் போது அவர் மட்டும் ஏன் அப்படி?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
சத்யா சிறிது நேரம் அமைதியுடன் கூடவே நடந்தாள்.
”சொல்ல வேண்டாமென்றால் வேண்டாம். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விவாதிக்க எனக்கு என்ன உரிமை?” என்ற கல்பனா ஆறுதலாக சத்யாவின் கையைப் பிடித்து அழுத்தினாள்.
சத்யா அவளை உறுத்துப் பார்த்தாள்.
“அவனுடைய கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான், உனக்குத் தெரிவதால் ஒன்றும் நஷ்டமில்லை” என்றாள் சத்யா.
அவள் குரலில் உள்ள வருத்தம் கல்பனாவின் புருவத்தை நெளிய வைத்தது. “ரொம்ப வருத்தமாக இருந்தால் சொல்ல வேண்டாம் சத்யா, வேறு ஏதாவது பேசலாம்” என்றாள் .
“இல்லை, நீ என் அண்ணா கௌதமைப் பற்றித் தெரிந்து கொள்வது நல்லது தான். எங்கள் எல்லோரையும் விட சின்ன அண்ணா கௌதம் தான் மிகவும் நல்லவன். மிகவும் கெட்டிக்காரன். அவன் வாங்கிய அதிக மதிப்பெண்களால் கவர்ன்மென்ட் கோட்டாவில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இங்கே எம்.எஸ். நியூராலஜி முடித்தவுடன் அப்பா அவனை லண்டன் அனுப்பி எப்.ஆர்.ஸி.எஸ். படிக்க வைத்தார்.
அங்கே அவன் எலிஸா என்ற பெண்ணைக் காதலித்தான். இருவரும் ஒருவரை ஒருவர் உயிராக்க் காதலித்தனர். அந்தப் பெண் ஒரு ரோட் ஆக்ஸிடென்டில் இறந்து விட்டாள். அத்தோடு அண்ணா அங்கிருந்த வேலையை உதறிவிட்டு வந்து விட்டான். கொஞ்ச நாட்கள் பித்துப் பிடித்தாற் போல் இருந்தான்.
யாரோடும் பேச மாட்டான். அப்போது தான் அப்பா, அவன் மனமாறுதலுக்காக ஒரு சிறிய மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார். ஆனால் கௌதம் அதற்குக் கூட ஒழுங்காகப் போவதில்லை. அப்பா வேறு இரண்டு டாக்டர்களையும் வேலைக்கு வைத்திருக்கிறார். அவர்கள் உதவியோடு அப்பா தான் அந்த மருத்துவமனை நிர்வாகமும் பார்த்துக் கொள்கிறார். இது தான் என் சின்ன அண்ணா” என்று முடித்தாள் சத்யா.
ஆச்சர்யத்துடன் கேட்ட கல்பனா பெருமூச்சு விட்டாள்.
“பணம் மட்டும் இருந்தால் போதும், வாழ்க்கையில் எந்தக் கஷ்டமும் இருக்காதென்று நினைத்தேன். பணக்கஷ்டமோ இல்லை மனக்கஷ்டமோ, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் போலிருக்கிறது” என்றாள்.
விஜயாவிற்கு நிறைய கட்சிக்கார்ர்கள். அவள் வாதத் திறமையால், வழக்கு முடிவதற்கு முன்பே சிலர் முழுப் பணத்தையும் டிமாண்ட் டிராப்டாகவோ, அல்லது ரொக்கமாகவோ கொடுத்து விடுவார்கள். யாரிடமும் ‘செக்’ மட்டும் வாங்க மாட்டாள்.
இப்போதெல்லாம் விஜயாவின் இரும்புப் பெட்டி சாவி கல்பனாவிடம் தான். தினம் விஜயாவிடம் கணக்கு கொடுத்து விட்டு அவர்கள் காரை எடுத்துக் கொண்டு போய் வங்கியில் மொத்தப் பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவாள்.
தினமும் வேலை நிறையவே இருந்தது. அதனால் லட்சுமி அவளுக்கு சாப்பிட அல்லது குடிப்பதற்கென்று ஏதாவது அடிக்கடி கொடுத்துக் கொண்டே இருப்பாள். கல்பனா மறுத்தாலும் தொந்தரவு செய்து அவளே வந்து கொடுத்து விட்டுப் போவாள்.
அவள் தயக்கத்தைக் கண்டு, “இதெற்கெல்லாம் அக்கா சம்பளத்தில் பிடித்துக் கொள்வாள் என்று கல்பனா பயப்படுகிறாள் அம்மா” என்று சத்யா கூட கேலி செய்தாள்.
அன்று அப்படித்தான் விஜயா, கோர்ட்டிலிருந்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது. கல்பனா அன்று கலெக்ட் ஆன ரொக்கம், டி.டி. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, டிரைவரை காரை எடுக்கச் சொல்லி விட்டு வங்கிக்குக் கிளம்பினாள்.
அந்த நேரத்தில் கௌதம் நல்ல போதையில் வந்து எதிரில் அமர்ந்தான். கல்பனாவிற்கு ‘திக்’கென்று இருந்தது. ‘என்ன?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“இந்தாம்மா கிளார்க், எனக்கு ஒரு ஐந்தாயிரம் ரூபாய் அவசரமாக வேண்டும் எடு” என்றான் சிகரட்டை ஊதியபடி.
“சாரி ஸார்… வக்கீல் மேடம் உங்களுக்குப் பணம் எதுவும் கொடுக்கும்படி சொல்லவில்லை. இது அவர்கள் பணம், அவர்கள் அனுமதி இல்லாமல் என்னால் தர முடியாது” என்றாள் கண்டிப்புடன்.
சிகரெட் நாற்றமும், குடித்திருந்த சரக்கின் நாற்றமும் பொறுக்க முடியாமல் முகத்தை வேறு சுளித்தாள் கல்பனா.
பணம் கேட்டு எப்படி விஜயாவிடம் வாதம் செய்வானோ அப்படியே கல்பனாவிடமும் அதிகாரமாக வற்புறுத்தினான். நன்கு குடித்திருந்ததால் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்தான். இதனால் கல்பனாவிற்கு கோபம் தான் வந்தது.
“உங்களுக்கு ஒருமுறை சொன்னால் புரியாதா? நிதானத்தில் இருந்தால் தானே புரியும், என்ன நாற்றம்” என்றாள் எரிச்சலாக.
அந்த நேரத்தில் லட்சுமி, ஒரு தட்டில், பீங்கான் கப்பில், ஆவி பறக்க ஏதோ எடுத்து வந்தாள். “கல்பனா, இந்த மஷ்ரும் சூப்பைக் குடித்து விட்டு எப்படி இருக்கிறதென்று சொல்” என்றாள் தட்டை கல்பனாவை நோக்கி நீட்டியபடி.
கௌதம் அவனுக்கு வந்த கோபத்தில், “இவளை வைக்கும் இடத்தில் வைக்காமல் ஆளாளுக்குக் கொஞ்சுகிறீர்கள். அந்தத் திமிரு தான் இவளுக்கு” என்று கத்தி விட்டு அந்த ‘ட்ரே’வை வேகமாகத் தட்டி விட்டான். கொதிக்கக் கொதிக்க மொத்த சூப்பும் கல்பனாவின் மேலே அபிஷேகம். அந்த சூட்டின் எரிச்சல் தாங்காமல் கல்பனா ‘ஆ’வென்று அலறினாள்.
“அடப்பாவி, இப்படி செய்து விட்டாயே” என லட்சுமி போட்ட கூச்சலில் வீடு மொத்தமும் கூடி விட்டது. தன்னையறியாமல் முகத்தின் மேல் சூடான சூப் படாமல் இருக்க இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக் கொண்டாள் கல்பனா.
அதனால் கை முழுவதும் சூடு பட்டு தந்தம் போன்ற அவள் வெண்ணிறக் கைகள் சிவந்து விட்டன. எரிச்சல் தாங்காமல் முகத்தை மூடியிருந்த கைகளை மெதுவாக எடுத்தாள்.
நல்லவேளையாக கொப்புளம் ஆகவில்லை. ஆனாலும் வலி தாங்காமல் கலங்கிய அவள் முகத்தில் அலைந்த அந்த விழிகள், தண்ணீரில் மிதக்கும் மீன்களைப் போல் இங்கும் அங்கும் அலைந்தன.
அதுவரை போதையில் இருந்த கௌதம், வலியால் துடித்த அந்த முகத்தையும், கண்ணீர் ததும்ப அலைபாயும் கண்களையும் பார்த்து நிலைகுலைந்து விட்டான். அவன் செயலுக்கு அவனே பயந்து போனான்.
அங்கிருந்த சத்யாவின் அண்ணி, “பைத்தியங்கள் வீட்டில் இருந்தால் இப்படித்தான் நடக்கும்” என்றாள்.
எந்த ஒரு சந்தர்ப்பத்தையும், அவளுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ‘பக்கா வில்லி’ கேரக்டர் போல் இருக்கிறதென்று நினைத்துக் கொண்டாள் கல்பனா. சத்யா அவள் அருகில் வந்து ஆதரவாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.
வேறு யாரும் கௌதமைப் பற்றித் தவறாக எதுவும் பேசக் கூடாதென்று, “தவறு என் மேல் தான், அவர் மனம் புண்படும்படி நான் பேசியிருக்கக் கூடாது“என்று வருத்தத்துடன் கூறிய கல்பனா, கௌதமைப் பார்த்து “ஸாரி ஸார்” என்றாள்.
சத்யா ஒன்றும் சொல்லாமல் தலையில் அடித்துக் கொண்டு கல்பனாவைக் கையைப் பிடித்து மாடியில் உள்ள தன் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
(தொடரும்)
GIPHY App Key not set. Please check settings