2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“நாராயண!! நாராயண !!”
நாரதர் குரல் காதில் விழ, கைலாயத்தில் பார்வதிதேவி குதுகலமடைந்தாள்.
சிவபெருமான் எப்போதும் போல் தியானத்தில் இருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் நந்தவனத்தில் உலவிக் கொண்டிருந்த பார்வதி தேவியின் காதில்தான் நாரதர் குரல் விழுந்தது.
நாரதர் மூன்று உலகங்களையும் சுற்றி வருபவர். அதனால் அவர் வந்தால், நிறைய சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்லுவார் என்பதால், தேவி அவர் வரவை ஆவலாய் எதிர்நோக்கலானாள்.
“நாரதரே வாரும்! நலமாக உள்ளீரா?”
“நலமே தாயே! வணங்குகிறேன்!! மூவுலகிலும் அனைவரும் நலமே”
“அது சரி உன் குரல் கேட்டும், நீ இங்கு வரத் தாமதமாக காரணம் யாது நாரதா?
“தாயே வழியில் நம் இளம் குமரன் முருகனைப் பார்த்தேன்… பேசிக்கொண்டிருந்தேன்… அதுதான் தாமதத்திற்குக் காரணம். மன்னியுங்கள் தேவி!”
“ஓ!!முருகனைப் பார்த்தாயா?”
“பார்த்தது மட்டுமில்லை தாயே! கையில் ஒரு கருவி வைத்திருந்தேன். அது தனக்கு வேண்டுமெனக் கேட்டார். கொடுத்துவிட்டேன்.”
“விளங்கவில்லையே! நீ என்ன கருவி வைத்திருந்தாய் நாரதா? அதை எங்கிருந்து கொண்டு வந்தாய்? விவரமாகச் சொல்”
“அது ஒரு பெரிய கதை தேவி! நான் மூவுலகங்களையும் வழக்கம் போல் சுற்றி வந்து கொண்டிருந்தேன், அப்போது எமலோகத்தில் ஒரே அமளி துமளி.”
“என்ன நடந்தது? எவரையேனும் தவறுதலாக எமதூதர்கள் பற்றி வந்து விட்டனரா? எமன் தர்மராஜன் ஆயிற்றே தவறு பண்ணமாட்டானே!”
“ஆமாம் தாயே! அவர்கள் தவறான அவனை பற்றி வரவில்லை, அவன் விதி முடிவு சரியானதே! ஆனால், அவனைப் பற்றி வரும் போது தவறுதலாக அவன் கையில் உள்ள கருவியையும் சேர்த்து எடுத்து வந்துவிட்டனர். அவனும் அந்த கருவியை பிரிய மறுத்தான்.”
“அப்படி என்ன விசேஷ கருவி நாரதா ?”
“அது என்னவோ ‘ஸ்மார்ட்போன்’ என்று சொல்கிறார்கள் தேவி. அக்கருவி உருவில் சிறியதாய், அழகாய், இருக்கிறது. ஒளியை உமிழ்கிறது. இன்னிசை இசைக்கிறது. ஏதேதோ பேசுகிறது.”
“நீ சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே நாரதா! ஒரு சிறிய கருவியில் இத்தனை சக்தியா? பூவுலகில் மனிதர்கள் அதீத சக்தி படைத்தவர்கள் ஆகிவிட்டார்களா? சரி மேலே சொல்”
“அதிசயமான கருவிதான் தேவி! அதை அதிகம் பயன்படுத்தியதாலேயே, மூளை வெடித்து செத்திருப்பான் போல அந்த நரன் .அப்படி இருந்தும், அதை பிரிய மறுத்து சண்டையிட்டான். எமதர்மராஜனுக்கு கடும்கோபம். அந்த நேரம் பார்த்து நான் அங்கு போய்ச் சேர, அதை பிடுங்கி, என்னிடம் கொடுத்து, தலையை சுற்றி எறிந்து விடச் சொன்னான். நான் அங்கிருந்து கைலாயம் வரும் வழியில் ஒரு ஆர்வத்தில் அதைப் பார்த்துக் கொண்டிருந்த போதுதான், நம் இளம்பாலகன் முருகன் தென்பட்டார். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், அதை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்.”
“அடடா என்ன காரியம் பண்ணி விட்டாய் நாரதா! அந்த கருவியை ஏன் முருகனிடம் கொடுத்தாய்? அது எங்கே முருகன்?”
“தாயே! நான் தடுத்தும் கேளாமல், அவர் எமலோகம் சென்று அந்த நரனிடம் அந்தக் கருவியைப் பற்றி கேட்டு வர போயிருக்கிறார்.”
பார்வதி தேவியின் முகம் கோபத்தில் மாற, நாரதர் எங்கு தன்னை தேவி கோபப்பட்டு சபித்து விடுவாரோ என்று பயந்து நின்ற சமயம் பாலகன் முருகன் வந்து சேர்ந்தான்.
“அம்மா!! அம்மா!! இந்த கருவியை பாருங்களேன்” தன் கையில் இருந்த பெரிய அழகிய அலைபேசியை காண்பித்தான்.
புதல்வனை கண்ட தாயின் முகம் சந்திரன் உதிக்க, மலரும் அல்லி மலராய் மலர்ந்தது.
“குமரா!! நீ இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறாய். நான் எத்தனை தடவை தான் சொல்வது, என்னிடம் சொல்லாமல் நீ கயிலாயம் விட்டு நீங்கக் கூடாதென்று. இன்று நீ அதைக் கேட்காமல், எமலோகம் வரை சென்று வந்திருக்கிறாய்.”
அதை சட்டை பண்ணாத குமரன், “அம்மா! இதோ இதை பாருங்கள், இதை பூலோக வாசிகள் ‘ஸ்மார்ட்போன்’ என்று அழைக்கிறார்கள். இது எப்படி ஒளியை உமிழ்கிறது. பாடல் பாடுகிறது. இதில் இருக்கும் படங்களை பாருங்கள்… இவைதான் அந்த நரனின் குழந்தைகளின் படங்கள். இதோ பாருங்கள் அம்மா உங்கள் படம் தந்தையின் படம் கூட இருக்கின்றன. அது மட்டுமில்லாமல், இதில் நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றன. இவையெல்லாம் அந்த நரன் எனக்கு சொல்லிக் கொடுத்தான்.”
“அம்மா! நானும் இங்கு விளையாட ஆளில்லாமல் திண்டாடுகிறேன். அண்ணன் கணேசனும், எங்காவது ஞானம் தேடி போய் விடுகிறார். அப்பாவோ, எப்பவும் தியானத்திலேயே இருக்கிறார். நீங்களும் மலர் கொய்யவும், பூஜை செய்யவும், தந்தைக்கு உணவு சமைக்கவும், நேரத்தை செலவிடுகிறீர்கள். என்னோடு விளையாட இங்கு யாருமில்லையம்மா! இந்த கருவி இருந்தால் எனக்கு நன்றாக பொழுது போகுமம்மா! “
ஆர்வமாய் பேசும் மகனைப் பார்க்க பார்வதிக்கு மனம் இளகியது. பாவம் அவன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவனுடன் விளையாட அவனையொத்த பிள்ளைகள் கைலாயத்தில் இல்லை.
“சரி சரி வைத்துக்கொள்! உன் தந்தை தியானத்திலிருந்து எழுவதற்குள் நான் அவருக்கு உணவு சமைக்க வேண்டும்.பார்வதி அகல,
நாரதர் ‘இனி இருந்தால், இந்த பாலகன் நம்மை ஏதாவது வம்பில் மாட்டி விடுவான்’ என்று எண்ணியபடி அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்தார்.
“நாரதரே நில்லுங்கள்! போய்விடாதீர்கள்….எனக்கு ஒரு உதவி நீங்கள் செய்ய வேண்டும்.”
“குமரா!! தங்களுக்குத்தான் ஒரு விளையாட்டு பொருள் கிடைத்துவிட்டதே! இனி நான் எதற்கு? கிளம்புகிறேன். நாராயண!! நாராயண!!”
“சற்று பொறுங்கள் நாரதரே!! இந்த கருவி செயலிழக்காமல் இருக்க, ஒரு பெரிய கோபுரம் அமைக்கப்பட வேண்டுமாம். தாங்கள் தான் போய் தேவசிற்பியை அழைத்து வரவேண்டும்.”
“நாராயண!! நாராயண!! இந்த பாலகன் நம்மை விடமாட்டான்… இவன் கூறுவதை கேட்பதைத் தவிர வேறு வழியில்லை” என நினைத்தவாறே, தேவ சிற்பியை அழைத்துவரக் கிளம்பினார்.
தேவ சிற்பியும் பூவுலகில் உள்ளதுபோல் அலைபேசி கோபுரம் அமைத்து கொடுக்க…. முருகன் சந்தோஷமாக விளையாடத் தொடங்கினான்.
‘நல்லவேளை அண்ணன் கணேசன் இங்கில்லை. அவர் மட்டுமே இருந்திருந்தால் மாம்பழம் விஷயத்தில் நடந்தது போல ஏதாவது செய்து இந்த கருவியை கைப்பற்றி இருப்பார்’ என்று நினைத்துக்கொண்டான் குமரன்.
“முருகா! சாப்பிடவா….. குமரா! வேத பாராயணம் செய்யும் சமயம் வேதம் கற்க வா….கந்தா!ஆயுதப்பயிற்சி மேற்கொள்… “பார்வதிதேவி தன் பிள்ளையை ஒவ்வொரு வேலையையும் செய்ய வைப்பதற்குள் சோர்ந்தே போனாள். எந்நேரமும் கையில் அலைபேசி உடனிருக்க… அத்தனை வேலையும் நின்றுபோனது.
தியானம் கலைந்த எம்பெருமான் முருகனின் விளையாட்டு தளத்தை கண்டு அதிர்ந்து போனார்.
பார்வதியிடம், “தேவி இதென்ன அதிசயக் கருவி? முருகன் இப்படி மாறி விட்டான்…. இவன் இதில் மூழ்கிக் கிடப்பதால் வெளியே நடக்கும் விஷயங்கள் எதுவும் அவன் கவனத்திற்கு வரவே இல்லை. அசுரர்களின் அட்டகாசம் அதிகமாகி விட்டது …அசுரர்கள் தேவர்களை சிறைபிடித்து துன்புறுத்துகிறார்கள். அவர்களை காக்க வேண்டிய தேவசேனாதிபதி முருகனோ, இப்படி விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறான். இப்படி தெய்வக்குழந்தையே இக்கருவிக்கு அடிமையாகி கிடைக்கிறதென்றால்… பூலோகவாசிகள் என்னாவார்கள் என்று நினைத்தால் பயமாக உள்ளது. இக்கருவியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்தினால், நன்மை பயக்கும். அதுவன்றி அதிலேயே மூழ்கிப் போய்விட்டாலோ பூலோகவாசிகள் கதி என்னவாகும்? பல இன்னல்களுக்கு ஆளாவார்களே!”
“போதும் சுவாமி போதும்!! நீங்கள் பூலோகவாசிகளைப் பற்றி கவலைப்பட்டது. அவர்களுக்கு புத்தியிருந்தால் பிழைக்கட்டும்…. அல்லது எப்படியும் போகட்டும்….. நம் புதல்வனை முதலில் நாம் மீட்டெடுக்க வேண்டும்! நீங்கள் எப்போதும் தியானத்தில் அமர்ந்து விடுவதால், குடும்பத்தை கவனிக்க தவறி விட்டீர்கள்!”என்றாள் கோபமாக.
“பார்வதி! நீயும் பூலோக ஸ்திரீகளைப் போல, எதற்கும் கணவனையே குறை கூறுகிறாய். புத்திர பாசம் உன் கண்ணை மறைக்கிறது. ஏன் இந்த கருவியை முருகனிடம் கொடுத்தாய்? சிறு பிள்ளைகள் விளையாடும் பொருளாய் இதை கொடுக்கலாமா?”
“ஏதோ ஆசைப்படுகிறானே என்று கொடுத்தேன் எல்லாம் இந்த நாரதனால் வந்த வினை… வரட்டும் அவன்! என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.”
“கோபத்தின் உச்சியில் பார்வதி… “முருகா!” என உரத்த குரலில் அழைக்க முருகன் கையில் அலைபேசியுடன் ஆஜரானான்.
“முருகா நீ தேவசேனாதிபதி என்பது உனக்கு நினைவிருக்கிறதா? தேவர்கள் அசுரர்கள் பிடியில் அவதிப்படுகிறார்கள்… என்பதாவது தெரியுமா?”
“அம்மா அவர்கள் சற்று காலம் அசுர லோகத்தில் தான் இருக்கட்டுமே… அதனால் என்ன வந்து விடப் போகிறது?”
முருகன் பதிலால் பார்வதிதேவி ஸ்தம்பித்துப் போனாள்.கோபத்தின் உச்சிக்கே போய் விட்டாள்.
“முருகா! நீயா இப்படிப் பேசுகிறாய்? இல்லை! இல்லை! நீ பேசவில்லை…. உன் கையில் இருக்கும் இந்தக் கருவி உன்னை இப்படி பேச வைக்கிறது… இதோ இதற்கொரு முடிவு கட்டுகிறேன்… இனி இக்கணம் முதல், கைலாயம் முதல் பூலோகம் வரை அனைத்து அலைபேசியிளும் செயலிழந்து போகட்டும்… இனியாவது பிள்ளைகள் உருப்படட்டும்!” என முருகன் கையிலுள்ள அலைபேசியை வாங்கி தூக்கி எறிய, அது தபோவனத்தில் யாகம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் யாககுண்டத்தில் விழுந்து வெடித்தது.
முனிவர்கள் அலறியடித்துக் கொண்டு தலைதெறிக்க ஓடினர். உலகின் அத்தனை அலைபேசிகளும் தேவியின் சாபத்தால் செயலிழந்தன.
அலறியடித்துக் கொண்டு… வேர்க்க விறுவிறுக்க, எழுந்த நான் அவசர அவசரமாக செல்போனை ஆன் செய்ய… அதில் ஸ்மைலி பல்லைகாட்டிய போதுதான் எனக்கு உயிர் வந்தது…. அத்தனை யும் கனவென்று உணர்ந்து….😜😜😜
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings