2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ ஸார்… இங்கே ஒரு ஜெராக்ஸ் கடை இருக்குமே… ’
எதிரில் வந்துகொண்டிருந்த அவர், அந்தக் குரலைக் கேட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தார். கலைந்த முடி, கசங்கிய பேண்ட் சட்டை, மேலேறிய கண்கள், கையில் ஒரு அலுமினிய தடி, மறுகையில் ஒரு மஞ்சப்பை…
‘ ஓ… பார்வை இல்லாதவரா… ‘ என்று முனகிய அவர், ‘ அப்படியே இன்னும் பத்து ஸ்டெப் முன்னே போயி இடது எடுங்க. நேரா ஜெராக்ஸ் கடைதான்…’ என்றுவிட்டு போய்விட்டார்.
அவர் சொன்னது போல நடந்து போய் இடது எடுத்தான்.
‘ சார் ஜெராக்ஸ் கடைதானே இது… ’
‘ ஆமாங்க… என்ன வேணும் …’
குருடனின் பார்வையில் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரிக்கு ஒரு இருபது வயதிருக்க வேண்டும்.
‘ அம்மா… இந்த டிரைவிங் லைசன்ஸ் ஒரு ஜெராக்ஸ் போட்டுக்கொடுங்க…’
அந்தப் பெண் மேலும் கீழும் பார்த்துவிட்டு கேள்விக்குறியுடன் அதை வாங்கி ஜெராக்ஸ் போட்டு கொடுத்துவிட்டு ‘ ரெண்டு ரூபா கொடுங்க ‘ என்றாள்.
இவன் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தான். மீதி சில்லறைக் கொடுத்தாள் அவள். உடனே, ‘ அம்மா ரெண்டு ரூபாய்தானே இருக்கு…’ என்றான் அவன்.
சற்றே திகைத்தவளாய், ‘ சார் நான் மூணு ரூபா கொடுத்துருக்கேன்… நல்லா பாருங்க…’ என்றவள் கொஞ்சம் தடுமாறி, குரலையும் தாழ்த்தி, ‘ ஓ ஸாரி உங்களால பார்க்க முடியாதில்லை…’ கொடுங்க பார்க்கறேன்… ‘ என்றுவிட்டு அந்தக் காசை திருப்பி வாங்கியவள், ‘ ஸாரி, நான் ரெண்டு ரூபாய் காயின் ஒன்னும் ஒரு ஒரு ரூபா காயின் ஒன்னும்னு நினைச்சுக் கொடுத்துட்டேன் ஸார், ஸாரி, ரெண்டுமே ஒருரூபா காயின்தான் போல… வரவர எது ஒரு ரூபா காயின் எது ரெண்டு ரூபா காயின்னு வித்தியாசமே தெரியமாட்டேங்குது… ஸாரி… ‘ என்றுவிட்டு இப்போது மூன்று ரூபாய் சரியாகக் கொடுத்தாள்.
‘ பரவாயில்லைமா… சிலர் குருடன்தானே, வேணுமினே குறைச்சுத் தருவாங்க… ‘ என்றவன், ‘ தேங்க்ஸ்மா… ‘ என்றுவிட்டு திரும்பினான்.
‘ ஸார்… ’ என்றழைத்தவள் தடுமாறி, ‘ பரவாயில்ல ஸார்… போங்க…’ என்றாள்.
ஆனாலும் சட்டென நின்று திரும்பிய அவன் ‘ பரவால்ல கேளுங்கம்மா… என்னவோ கேட்க வந்தீங்களே… ’ என்று நிமிர்ந்தான்.
தயங்கியபடியே… ’ இல்ல, டிரைவிங் லைசன்ஸு… உங்களுக்கூ… ’ என்று இழுத்தாள்.
சிரித்தான்… ‘ நான் பிறவி குருடன் இல்லைம்மா… பாதிலதான் பார்வை போச்சு… ’ என்று சிரித்தான்.
‘ ஸாரி சார்…’ என்றாள்.
‘ நீங்க அஞ்சுதடவை ஸாரி சொல்லிட்டீங்க…’ என்று சிரித்துவிட்டு, ‘ அம்மா இங்கே பக்கத்துலயே ஒரு சலூன் இருக்குமே… ‘ என்றான்.
அந்தப் பெண்…’ நாலு கடைத் தள்ளி ஒரு சலூன் இருக்கு, போங்க… ‘ என்றவள், ‘ ஸார், நான் கொண்டுவந்து விடவா…’ என்றாள்.
சுதாரித்துக்கொண்ட இவன், ‘ நாலு கடைதானே, என்ன ஒரு நாற்பது அடி இருக்குமா… நானே போய்க்கிறேன்மா… தேங்க்ஸ்… ’ என்றபடி குச்சியை தட்டிக்கொண்டே மேலே நடந்தான்.
பாதி வழியில் ஒருவர் அவனது கையைப் பிடித்து பணத்தைத் திணித்தார்… திகைத்தான்… அது இருபது ரூபாய் என்று புரிந்தது.
xxxxxx
‘ ஸார் இங்கே சலூன்…?’
‘ சலூனேதான்… செருப்பை அங்கே விடவேண்டாம், அப்படியே உள்ளே வாங்க… தப்பில்லை… ’
பேசியவனின் வயது ஒரு இருபத்தைந்து இருக்கும் என்று நினைத்தபடி, கையை நீட்டிக்கொண்டே போய், நாற்காலியைப் பிடித்து உட்கார்ந்ததும் பக்கத்தில் தடியை வைத்தான். கடைப் பையன், ‘அண்ணே, கட்டிங்கா… இல்லே ஸேவிங்கா… இல்லே ரெண்டுமா… ’ என்றான்.
சிரித்துக் கொண்டே ‘ மூனு தம்பி …’ என்றான் இவன். உடனே, சிரித்தபடி… ’ ஓ… ஸாரி தம்பி, உன்னைக் குழப்பிட்டேனோ… வெயில்ல அலைஞ்சு தலை சூடேறிப் போச்சு… கொஞ்சம் ஆயில் மசாஜும் சேர்த்து பண்ணிவிடனும்…’ என்றான்.
‘ பண்ணிட்டாப் போச்சு…’ என்றவன் தொடர்ந்து, ‘ கட்டிங் எப்படி சார்… ’ என்றான்.
‘ ஒட்ட வெட்டுப்பா…’ என்றுவிட்டு, ‘ தம்பி பார்வை இல்லாதவன்தானேனு கன்னாபின்னான்னு வெட்டிடாதே… ’ என்றான் இவன்.
ஒருகணம் திகைத்து ‘ வாழ்வுதான்…’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்ட கடைப்பையன் அவனது தோளில் துணியை போட்டு பின்பக்கம் கிளிப் போட்டுவிட்டான்.
‘ தேங்க்ஸ்… தம்பி… ‘ என்றான் இவன்.
‘ எதுக்குண்ணே… ‘ என்றான் அவன்.
‘ பொன்னாடையைப் போர்த்தினியே… அதுக்கு… ‘ என்றான் இவன். சிரித்துக்கொண்டான் அவன்.
வேலை முடிந்து ‘ ஆச்சுண்ணே…’ என்றான் அவன்.
‘ எவ்ளோ தம்பி…’ என்றான் இவன்.
‘ இருநூறு ரூபா…’ என்றான் அவன்.
ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, மீதம் சில்லறையை வாங்கியவன், ‘ தம்பி… எவ்ளோ இருக்கு… ’ என்றான்.
‘ ஸார்… முன்னூறு இருக்கு …’ என்றான் அவன்.
கொஞ்சம் தயங்கி ‘ இல்லே, குருடன்தானேனு சிலர் என்கிட்டே விளயாடிடுவாங்க… அதான் கரெக்டா குடுத்தீயாப்பானு கேட்டு செக் பண்ணிக்கிட்டேன்… ’ என்று சிரித்தான் இவன்.
‘ உங்ககிட்டே ஏமாத்தி அந்த பாவத்தையும் நான் ஏன்ண்ணே சுமக்கனும்… ’ என்றான் அவன் கொஞ்சம் சீரியஸாக.
கதவைத் திறப்பதற்கு முன் நின்று, ‘ தம்பி…நீட்டா கட்பண்ணியிருக்கே தானே… ’ என்றான் இவன்.
‘ அண்ணே… வெட்டியிருக்கேண்ணே…வேணுமானா இங்கே இருக்க கண்ணாடில பாத்துக்கங்கண்ணே… ’ என்றான். உடனே தடுமாறி, ’ஸாரிண்ணே. நீங்க எப்படி பார்ப்பீங்க… ‘ என்றான் அவன்.
‘ பரவால்ல தம்பி…உன் பேச்சைக் கேட்டாலே நீ சரியாத்தான் பண்ணியிருப்பேன்னு தோனுது… சரி… இங்கே பஸ் ஸ்டாப் இருக்குமே… ’ என்று கேட்டான் இவன்..
கொஞ்சம் தயங்கியபடி…’ நீங்க எங்கே போகணும்…’ என்றான் கடைப் பையன்.
‘ மெயின்கார்டுகேட் போகணும், தம்பி…’ என்றான் இவன்.
‘ பக்கம்தான்… லெப்ட்லையே நடங்க… ஒரு ரெண்டு நிமிஷ நடைதான்… நானே கொண்டுவந்து விடவா…’
‘ பரவால்ல தம்பி…நான் நடந்துக்குவேன்…ரெண்டுநிமிஷ நடைதானே… என்ன ஒரு நூறு ஸ்டெப் வருமா… ’
மெய்மறந்து நின்றான் கடைப்பையன்.
xxxxxxx
‘ ஸார்…எட்டாம் நம்பர் பஸ் வந்தா கொஞ்சம் சொல்றீங்களா…’
‘ சரிங்க…’
‘ ஸாரி…நான் ஜென்ஸ்தான் பக்கத்துல நிக்கறாங்கன்னு நினைச்சேன்… லேடீஸா…பரவால எட்டாம் நம்பர் வரும்போது கொஞ்சம் சொல்லுங்கம்மா… ’
‘ நான் அம்மா இல்லை… காலேஜ் ஸ்டூடன்ட்… சரி, நீங்க எங்கே போகணும்…’
‘ சத்திரம் பஸ்ஸ்டாண்டுமா… தங்கையைக் கூட அம்மான்னு கூப்பிடலாம்மா… ’
‘ சரி.. சரி… ‘ என்றாள் நெற்றியில் அடித்துக்கொண்டு.
மோவாயைத் தடவிக்கொண்டு நின்றுகொண்டிருந்தவனிடம் ஒரு பெரியம்மா அவனது கையைப் பிடித்து ‘ இந்தாப்பா ‘ என்று பணத்தைத் திணித்தார்… ஒருகணம் திகைத்து ஆனால் வாங்கிக்கொண்டான். அது பத்து ரூபாய் என்று புரிந்தது. பஸ் வந்ததும் அந்தப் பெண் சொல்ல, இவன் ஏறிக்கொண்டான்… சத்திரம் வந்ததும் இறங்கிக் கொண்டான்.
எதிரே வந்தவன், அதிர்ச்சியுடன், ‘ டேய், குமாரு… என்னடா இது கோலம்… ’ என்றான். அப்போதுதான் சட்டென கண்களை விரித்துப் பார்த்தான் குமார்.
‘ மகேஷ்…நீயா…’ என்றான் இவன்.
‘ ஆமா…இதென்ன வேஷம்… ’ என்றான் அவன்.
‘ ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன்டா. கதைப்படி என் ஹீரோ ஒரு குருடன்… அதான் குருடனோட பார்வைல இந்த உலகம் எப்படியிருக்கும், அவனை எப்படி நடத்துவாங்கனு தெரிஞ்சுக்கறதுக்காக குருடன்மாதிரி ஒரு ஒருமணிநேரம் அலைஞ்சேன்… பிராக்டிகலா எழுதனுமே… தலைப்பென்ன தெரியுமா… “குருடன் குமார்…“ என்றுவிட்டு சிரித்தபடி ‘இதுலே என்ன ஒரு கூத்துனா, வழில ரெண்டு பேரு பிச்சை வேற போட்டாங்க… முப்பது ரூபா தேறிச்சு…‘ என்றவன் பணத்தை எடுத்துக் காட்டிவிட்டு, ‘ சரி வா இந்தப் பணத்துல டீ சாப்பிடலாம் ‘ என்றபடி தடியை ஊன்றாமல், ஆனால் தோழனின் தோள்மேல் கைப்போட்டபடி நடந்தான்… கதாசிரியர் குமார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings