2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ அதென்னவோ தெரியலை… செமெஸ்டர் லீவு விட்டதிலேர்ந்து இந்தப் பையன் வீடே தங்கறதில்லை. இப்போ கூட உப்புமாவை காக்கா கொத்தறமாதிரி கொத்தித் தின்னுட்டு ஓடறான்… எங்கே போறான்… என்ன பண்றான்னு ஒன்னும் புரியலை… அவன் பிரண்டு ஒருத்தன் டைப்பிங் கத்துக்கப் போறானாம்… அவனமாதிரி இவனும் ஏதாவது டைப்பு கத்துக்கிட்டாலாவது டிகிரி முடிச்ச உடனே வேலை வாங்க ஏதுவா இருக்கும்… இப்படி தண்டமா ஊரை சுத்திக்கிட்டு அலையறான்… இன்னிக்கு வரட்டும்… ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்….’ – செல்லம்மாள்.
‘ என்னோட ஏஞ்சல் வேலைக்கு வர்றதுக்குள்ளே ஓடி வந்துடுவேன்… ஜெராக்ஸ் கடைலதான் வேலை பண்ணுது. சுவரில்லாத சித்திரங்கள் சுதாகருக்கு கிடைச்ச மாதிரி எதிர்லயே ஒரு டைலர் கடை வாய்ச்சிருக்கு. கிளாஸ்மேட் ராஜாவோட மாமாவோட கடைதான். காலைல வந்து உட்கார்ந்தா… எதிர் கடையை லுக் விட்டுக்கிட்டே இருப்பேன்… நம்ம ஏஞ்சல் டைப்பிங் பண்ணுது… அது தமிழ் டைப்பிங்கா இங்க்லீஷ் டைப்பிங்கானு தெரியலை… ஏஞ்சல்ங்கறது நாம வச்சப் பேரு. அதுக்கு உண்மையிலேயே என்ன பேர்னெல்லாம் தெரியாது… வருவோம்… சைட் அடிப்போம்… பசி வரும்போது சாப்பிடப் போயிடுவோம்… திரும்பி வந்து மறுபடி லுக்கு… சாயங்காலம் ஆறு மணிக்கு ஏஞ்சல் கிளம்பிடும்… நானும் கிளம்பிடுவேன். மாமாவுக்கு விஷயம் தெரியும்… ஆனாலும் கண்டுக்க மாட்டாரு… நமக்கும் டைப்பிங் தெரிஞ்சிருந்தா அந்தக் கடைலயே வேலை வாங்கிட்டு நம்மாளுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து எல்.ஓ.வி.இ. னு டைப் பண்ணிக்கிட்டே இருந்திருப்பேன்… ‘ – ராஜேந்திரன்
‘ எதிர்ல இருக்கற டைய்லர் கடைல இருந்து பத்து நாளா ஒருத்தன் லுக் உட்டுட்டே இருக்கான்… ஆனா அவன் யாரை லுக் விடுறான் என்ன விசயம்னுதான் தெரியலை… நான் ஜெராக்ஸ் போடறேன்… ஜீவா டைப்பிங் பண்றா… சுமியும் டைப்பிங் பண்றா… ராதா எடுபிடி வேலை பண்றா… அவன் யாருக்கு ரூட் உடறான்னே தெரிய மாட்டேங்குது… ஒரு நாளைக்கு மெல்ல போயி… தம்பி… உனக்கு யார் வேணும்னு கேட்கனும்… ஒருவேளை நம்மளைத்தான் ரூட் உடறான்னா நமக்கு ரீசார்ஜ் பண்றது, மொபெட்டுக்கு பெட்ரோல் போடறதுக்கெல்லாம் அவனை யூஸ் பண்ணிக்கலாம்… ‘ – தேவி
‘ வீட்டுக்கு வந்தா ஒரே கரைச்சல்… ஏன்டா மொபெட்டை எடுத்துக்கிட்டு இப்படி தண்டமா ஊர் சுத்தறேன்னு… இதுல காலைல டைப்பிங் கிளாஸ்க்கு போயேன்டானு அட்வைஸ் வேற… பார்ப்போம்… அம்மா சொன்னமாதிரி டைப்பிங் கத்துக்கிட்டாகூட அதே ஜெராக்ஸ் கடைல வேலை வாங்கிடலாம். முதல்ல ஒரு லவ் லெட்டர் எழுதணும்… நம்ம ஆளு பார்க்க சின்ன வயசு நயன்தாரா மாதிரி அதான் பாஸ் அய்யா படத்துல வருமே அப்படி இருக்கும். நல்லா வர்ணிச்சு ஒரு லெட்டர் எழுதி மெல்ல அந்தப் பொண்ணுக்கிட்ட கொடுக்கணும். மாட்டுதானு பாப்போம்… ‘ – ராஜேந்திரன்
‘ எல்லாத்துக்கும் ராதாதான் டீ வாங்கிட்டு வருவா.. இன்னிக்கு நான் வாங்கிட்டு வர்றேன்டின்னு சொல்லிட்டு எதிர்வரிசைல இருக்கற பேக்கரிக்கு போயிட வேண்டியதுதான்… மெல்ல அந்தப் பையனைக் கூப்பிட்டு போட்டு வாங்கிட வேண்டியதுதான்… யாரை ரூட் விடுறான்னு… ஒருவேளை நம்மளை டாவடிக்கரான்னா… நமக்கு செலவு மிச்சம்… பார்ப்போம்… ராதா பிளாஸ்க்கை எடுத்ததும் பிடுங்கிக்கிட்டு நகர்ந்துட்டேன்… ‘– தேவி.
‘‘ மாமா சொன்னார்… ‘ ராஜா, உன் கூட படிக்கற பையன் டெய்லி வந்து நம்மக் கடைல உட்கார்ந்துட்டு எதிர் கடையையே பார்த்துக்கிட்டு இருக்காறான்டா… இந்த வயசுல இதெல்லாம் வர்றது சகஜம்தான்… ஆனா நாளைக்கு ஏதாவது ஏடாகூடமாகி நம்ம கடைக்கு பிரச்சினை பண்ணிடப்போறாணுவ… நீ கொஞ்சம் அவனுக்கு அட்வைஸ் பண்ணேன் ‘ னு.. விசாரிச்சா கதையே வேறமாதிரி ஆகிடுச்சு… ராஜேந்திரன் அந்த டைப்பிங் பண்ற பொண்ணைத்தான் விரும்பியிருக்கான்… அதுவும் சின்னவயசு நயன் கணக்குலதான் இருக்குது… ஆனா பாவம் அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சாம்… அங்கே ஜெராக்ஸ் போடற தேவின்னு ஒரு பொண்ணுமூலமா தெரிஞ்சிருக்கு. நம்ம மச்சான் ஒருதலைக் காதல் மாதிரி ஆகிட்டு சுத்தறான்…காதல் படத்து பரத் மாதிரி ஞஞஞஞனு மண்டைய பிச்சிக்கிட்டு அலையாம இருந்தா சரி… ’ – ராஜா
‘ ச்சே… ‘ வடபோச்சே ’ ன்றமாதிரி ஆச்சு நம்ம கதை… நம்ம ஆளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சாம்… அந்தப் பொண்ணு சொல்லித்தான் தெரிஞ்சுது. நாம கொஞ்சம் முந்தியிருந்திருக்கணும்… பார்த்துக்கிட்டே இருந்திருக்கக் கூடாது. இப்போ ஜாகையை மாத்திட்டேன் பாஸ்… இது வேறொரு ஜெராக்ஸ் கடை.. இங்கே ரெண்டு பொண்ணுங்க இருக்கு… எதிர்ல ஒரு டீ கடை… யாரோட கடையோ தெரியாது. டீ குடிக்கறது, பேப்பர் படிக்கறது. இடையில இடையில லுக்கும் விட்டுக்கறது… சண்டைக் கோழில வர்ற மீரா ஜாஸ்மின் கணக்கா இருக்குது நம்ம புது ஆளு… இந்தத் தடவை லெட்டர்லாம் இல்லை… நேரா மீட் பண்ணிடவேண்டியதுதான்… வீட்டுக்குப் போயிட்டு எப்படி பேசறதுன்னு ஒத்திகை பாரத்துடனும்… ‘ – ராஜேந்திரன்
‘ அன்னிக்கு டீ கடைல அந்தப் பையனைப் பார்த்தேன்… நான் ஜெராக்ஸ் கடைல வேலை பண்றப்போ எதிர் டைலர் கடைல இருந்துக்கிட்டு லுக் விட்டுட்டே இருப்பானே… தேவி மூலமாத்தான் விஷயம் தெரிஞ்சுது அவன் நம்மைதான் ரூட் விட்டிட்டு இருந்திருக்காங்கறது… எனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சா… நானும் என் வீட்டுக்காரரும் கோவிலுக்கு போயிட்டு திரும்பற வழில டீ குடிச்சிக்க இறங்குனா அவன் அங்கே இருக்கான்.. வீட்டுக்காரருக்கு தெரியாம நைஸா பேச்சு குடுத்தேன். தயங்கி தயங்கி பேசுனான்… இப்போ அந்த டைலர் கடைப் பக்கம் போறதே இல்லியாம்… என் கழுத்துல கிடந்த புது மஞ்ச சரடையே அடிக்கடி பார்த்தான்… நாம கட்டியிருக்க வேண்டிய சரடுனு ஒரு கற்பனை ஏதும் ஒடுச்சோ என்னவோ… ஆனா.. ஸாரிங்கனு அடிக்கடி சொன்னான். கடைசில ஹாப்பி மேரிடு லைப் மேடம்னான். நானும் சில்லறைய வாங்கிட்டு கிளம்பிட்டேன்…’ – சுமித்ரா
‘ தெரிஞ்சு போச்சு…. அவன் நம்மளைதான் ரூட் விடறான்னு…. சுந்தரி கூட சொன்னா… இவன் ஏதோ புதுசா இருக்கான்… முன்னே பின்னே பார்த்ததில்லை… காலைல வந்துடுவான்… விடாம பார்த்துக்கிட்டே இருப்பான். சுந்தரி சொன்னா… நான் கிளம்பின உடனே அவனும் கிளம்பிடுவானாம்… அதான் இன்னிக்கு கடையை விட்டு கிளம்பும்போது சைக்கிளை தள்ளிக்கிட்டே எதிர் கடைக்குப் போயி டீ குடிக்கறா மாதிரி மெல்ல பேச்சு குடுத்தேன்… எடுத்ததுமே செம அட்டாக்தான்… அட்டாக்னா அடி இல்லை… ‘ ஏன்ம்பா உனக்கு கல்யாணம் ஆனவங்க யாரு… ஆகாதவங்க யாருன்னு தெரியாதா… நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்… என்னையே ரூட் விட்டுக்கிட்டிருக்கேனு சொன்னேன்… பாவம் அவன் என் கழுத்தையும் நெத்தியையும் காலையும் மாறி மாறி பார்த்தான்… நான் கல்யாணம் ஆனவளான்னு செக் பண்றதுக்காக பார்த்திருப்பானோ என்னவோ தெரியலை… வீட்டுக்குப் போயிட்டு சுந்தரிக்கு போன் போட்டு சிரிசிரின்னு சிரிச்சேன்… கடைசில அவ கேட்டா, ‘ ஏன்டி, கல்யாணம் ஆகிடிச்சுன்னு பொய் சொன்னே ‘ னு. காலேஜ் படிக்கறவனை லவ் பண்ணி என்னடி பிரயோஜனம்…. எங்கேயாவது ஜாப்ல இருக்கறவனா இருந்தா செட்டில் ஆகிடலாம்னேன்… மறுநாள்லேர்ந்து அவனை அந்த டீ கடைப் பக்கமே காணலை…ராத்திரி அக்காக்கிட்டேயும் சொல்லிட்டேன். ‘ – மாதவி
‘ புட்டுக்கிச்சு பாஸ், ரெண்டாவதும் புட்டுக்கிச்சு… என்னன்னே தெரியலை… நமக்கு கல்யாணமான கேஸாவே மாட்டுது… அப்படியும் அவளை உத்து உத்து பார்த்தேன்… கல்யானமனதுக்கான எந்த அடையாளமுமே தெரியலை. எது எப்படியோ… இப்போ அந்த டீ கடைப் பக்கம் போறதையே நிறுத்திட்டேன் பாஸ்… அடுத்த வாரம் காலேஜ் திறக்கப் போவுது… அப்புறம்தான் யோசிச்சேன்… இன்னும் ஒரு வாரம் இருக்கில்லே… அதுக்குள்ளே வேற ஆளு ஏதும் சிக்குமானு தேடிக்கிட்டு இருக்கேன் பாஸ்…’ – ராஜேந்திரன்
‘ ராத்திரி மாதவி சொன்னா, டீ கடையில் இருந்து அவளுக்கு ஒருத்தன் ரூட் விட்டுக்கிட்டிருந்தானாம். இவ கல்யாணம் ஆகிடுச்சுனு புருடா விட்டாளாம். இப்போ அவன் அந்தப் பக்கம் வர்றதே இல்லையாம். ஆளு எப்படி இருப்பான்னு கேட்டேன். அவனுக்கேத் தெரியாம அவனை போட்டோ எடுத்திருந்திருக்கா. மொபைல்ல காட்டினா. ஐயோ… எனக்கு ரூட் விட்ட அதே பையன். இப்போ என் தங்கைக்கும் ரூட் விட்டிருக்கான் பாருங்க… கடவுளே…சிரிக்கறதா… அழுவறதா.. இல்லை கோபப் படறதான்னு… ஒன்னும் புரியலை….– சுமித்ரா
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings